வவுனியாவில் 27 மில்லியன் ரூபா செலவில் புதிய வகுப்பறை

வட மாகாண பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ், வவுனியா – ஓமந்தை மத்திய கல்லுரியின் புதிய மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றுள்ளது.

கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் மற்றும் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் ஆகியோரின் தலைமையில் இந்த வேலைத்திட்டம் நடைபெற்றுள்ளது.

திறைசேரி அபிவிருத்தி நிதியம்

மாகாண திறைசேரி அபிவிருத்தி நிதியத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மாடிக் கட்டிடத்திற்காக முதற்கட்டமாக 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வருட காலப்பகுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓமந்தை மத்திய மகா வித்தியாலயத்தில் சுமார் 300 மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன், அவர்களுக்காக ஆய்வு கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் இதில் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டுள்ளனர்.