அமைவிடம்:
விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும்
அமைந்துள்ளது.



தலவரலாறு:
சுமார் 1200 வருடங்கள் பழமையான திருத்தலம். மகாகாளர் எனும் மகரிஷி சிவத்தல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிட்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிட்டை செய்யப்பட்டதால் இறைவனும் “மகாகாளநாதர்” என்ற பெயர் பெற்றார்.
கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் மழையில்லாமல் பயிர்கள் வாடுவதைக் கண்ட இந்நாட்டு சிற்றரசன் கடுவெளி சித்தரின் கடும் தவமே மழை இல்லாமைக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தைக் கலைக்க ஒரு தேவதாசி மாதுவை அனுப்பினான்.
தேவதாசியும் அவரது தவத்தைக் கலைத்தாள். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான். அரசனின் பேச்சைக் கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவப் பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் நல்ல மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர். கோவில் திருவிழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காற்சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை பார்த்த சித்தர் கோவில் விழாவில் நடன நிகழ்ச்சி தடைபடக் கூடாதென்றெண்ணி, அச்சிலம்பை எடுத்து நடனமாதின் காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை ஏளனம் செய்து நகைத்தனர். சித்தர் வெகுண்டு இறைவனை நோக்கிப் பாட, ஆலயத்திலுள்ள மூலலிங்கம் வெடித்து 3 பகுதிகளாக சிதறியது. இதையறிந்த அரசன் சித்தரிடம் மன்னிப்புக் கோரினான். சித்தர் மீண்டும் ஒரு பாட்டுப் பாட சிதறிய சிவலிங்கம் ஒன்று கூடியது. சிவலிங்கத்தை செப்புத்தகடு வேய்ந்து ஒன்றாக்கி அரசன் வழிபட்டான். அன்று முதல் இந்நாள் வரை சிவலிங்கம் செப்புத் தகட்டால் இணைக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
தலசிறப்புகள்:
இறைவர் – மாகாளேசுவரர்.
இறைவியார் – குயில்மொழிநாயகி, மதுரசுந்தரநாயகி
தல மரம் – புன்னை மரம்.
தீர்த்தமாக மாகாள தீர்த்தம் உள்ளது.
சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பத்தி உள்ளோர் எண்ணும் புகழ் கொள் இரும்பை மாகாளத்து நண்ணும் சிவயோகத்து நாட்டமே” என்று போற்றி உள்ளார்.
மூலவர் சுயம்புலிங்க வடிவில் மாகாளேசுவரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கியுள்ளார்,நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்தியூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் காட்சி அளிக்கிறார். சூரியனின் இந்த தரிசனம் விசேடமானது. இங்குள்ள இறைவனை வழிபடுவதால், பக்தர்களுக்கு இனிமையான பேச்சுத் திறன், கலைகளில் சிறப்பு மற்றும் அநீதியிலிருந்து விமோசனம் கிடைப்பதாக நம்பப்படுகிறது.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு. நாகரத்தினம் புஸ்பநாதன்