இடையாறு மருந்தீசர் திருக்கோவில்

அமைவிடம்:

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும், திருக்கோவிலூரிற்கு அருகிலும் உள்ள இடையாறு எனுமிடத்தில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

தென் பெண்ணையாறு, மலட்டாறு என்ற இரு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்ததால் இடையாறு என்ற பெயரைப் பெற்றது. இது தற்போது டி.இடையாறு என அழைக்கப்படுகிறது. ஒரு சமயம் கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசித்தார். அப்போது அவற்றை கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர் ஒட்டுக் கேட்டார். இதனால் சிவபெருமான், முனிவரை பூமியில் பிறக்கும்படி சாபமிட்டார். தன் தவறை உணர்ந்த முனிவர், ஈசனிடம் சாப விமோசனம் வேண்டி நின்றார். பூவுலகில் வேதவியாசருக்கு மகனாகப் பிறந்து, தென்பெண்ணையாற்றின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனைப் பூசித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற அவருக்கு வழிகாட்டினார். சுகப் பிரம்ம முனிவரும் அவ்வாறே இத்தலம் வந்து மருத மரத்தின் கீழ் தவமிருந்து சாப விமோசனம் பெற்றார்.

தலசிறப்புகள்:

மூலவர்: மருந்தீசர், கிருபாபுரீஸ்வரர். தாயார்: ஞானாம்பிகை, சிற்றிடைநாயகிதலவிருட்சம்:
மருதமரம், தீர்த்தமாக சிற்றிடை தீர்த்தம் (கிணறு)
அப்பர், சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம்.
மறைஞானசம்பந்தரின் அவதாரத் தலமாகும்.

அகத்தியரும் இத்தலத்தில் லிங்கம் அமைத்து வழிபட்டுள்ளார். ஆலயத்தின் பின்புறம் இந்த லிங்கம் அமைந்துள்ளது. இவரே அகத்தீசுவரர் என அழைக்கப்படுகின்றார். இங்கு அகத்தியருக்குச் சிலையும் உள்ளது. இத்தலத்திற்கு சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர், சாளுக்கியர் எனப் பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

எட்டாம் நூற்றாண்டில் ஒரிசா நாட்டு கஜபதி மன்னனது படையெடுப்பால் அழிக்கப்பட்டு 10 வருடங்கள் கழித்து சாளுவ நரசிம்ம மன்னர்களால் திரும்பவும் கட்டப்பட்ட கோவிலாகும். இதனை கி.பி.1471 ஆண்டுக் கல்வெட்டால் அறிய முடிகின்றது. இறைவன் வழிபாட்டிற்காக திரிபுவனச்சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் சில நிலவரிகளைத் தர ஆணையிட்டுள்ளான். மேற்கு நோக்கிய ஆலயம். இறைவன் ஒளி வீசும் திருமேனியராகக் காட்சிதருகின்றார். அன்னை திருமணக்கோலத்தில் மாலை மாற்றும் அமைப்புடன் காணப்படுகின்றார். இதனால் திருமண நாள் தள்ளிப் போகிறவர்கள் இத்தலம் வந்து இறைவன் மற்றும் இறைவிக்கு அபிசேகம் செய்து மாலைகள் சாத்தி வேண்டினால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்