நல்லூர் கந்தசுவாமி கோவில் பெருவிழா

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழாவுக்கான உத்தியோகபூர்வ அறிவித்தல் அடங்கிய பட்டோலை மற்றும் காளாஞ்சி, பாரம்பரிய முறைப்படி யாழ். மாநகர சபையிடம் நேற்றுக் கையளிக்கப்பட்டது.

இம்முறை நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஆவணி மாதம் 17ஆம் திகதி கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 தினங்கள் மகோற்சவம் நடைபெறவுள்ளன.

இதனை முன்னிட்டு, ஆலய சூழலைப் பராமரித்தல், மகோற்சவ காலங்களில் வருகை தரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் வீதித் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலின்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகுத்தல் போன்ற பணிகளை யாழ். மாநகர சபை மேற்கொள்ளவுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பாக, ஆலய சம்பிரதாயங்களின்படி நல்லூர் ஆலய கணக்காளரால் பெருவிழா பட்டோலை அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகர சபை முதல்வரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வையொட்டி, யாழ். மாநகர சபை வளாகம் முழுவதும் பாரம்பரிய முறைப்படி வாழை மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு,
மிகக் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.