நாவிதன்வெளி பிரதேச சபை ஏற்பாட்டில் பொங்கல் விழா!

அம்பாறை, ஜன. 29 நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் உழவர் திருநாளாம் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையில் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறுவடை நிகழ்வு, புதிர் எடுத்தல், நெல் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் வைக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளை பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் ஐ.எஸ்.ஏ.கமல் நெத்மினி ஆரம்பித்து வைத்தார். மேலும் உழவர் கண்காட்சியும், பாடசாலை மாணவர்களினால் தமிழரின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய நடனங்கள், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்று விழாவை சிறப்பித்தன.

விழாவில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு தமிழர் மாண்பை எடுத்தியம்பும் வகையில் நினைவுச் சின்னங்கள், நவதானியங்கள் அடங்கிய பொற்கிழிகள் வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

இத்தமிழர் பாரம்பரிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி, சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பிரதி பிரதம செயலாளர் மு. கோபாலரெத்தினம், முன்னாள் தவிசாளர்கள், நாவிதன்வெளி பிரதேச சபை உப தவிசாளர் கு. புவன ரூபன், பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.