மாற்றுத் திறனாளிகளுக்கான விசேட பஸ் சேவை ஆரம்பம்

இலங்கை பொதுப் போக்குவரத்துச் சேவையில் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், ‘எதிர்காலத்திற்கு அடிவைப்போம்’ எனும் தொனிப்பொருளில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய திட்டம் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு இணைந்து முன்னெடுக்கும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விசேட தேவையுடையோருக்காக வடிவமைக்கப்பட்ட ‘தாழ்தள” பஸ் சேவை நேற்று மாகும்புர போக்குவரத்து மையத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பயணிகள் பஸ் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளக் கூடிய “LMT GO” எனும் கைபேசி செயலியும் இதன் போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டம் நாட்டின் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்கதொரு முன்னெடுப்பு என்று குறிப்பிட்டார்.

சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர், பார்வைக் குறைபாடுள்ளோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதேவேளை, ஏனைய பயணிகளுக்கும் இது வசதியான பயணத்தை உறுதி செய்யும் என அவர் தெரிவித்தார்.

இவ்வருட இறுதிக்குள் இவ்வாறான 122 பஸ்கள் சேவையில் இணைக்கப் படவுள்ளமையுடன், கொழும்புக்கு வெளியே கண்டி, மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

மாகும்புரவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் மற்றும் மாகும்புரவிலிருந்து கடுவலை வரையிலும் பயணிக்கவுள்ள இந்தப் பஸ்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை போன்ற பிரதான சுகாதார மையங்களை உள்ளடக்கிய வகையில் இயங்கவுள்ளன.