திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

5000 ஆண்டுகள் பழமையான தலம். ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?’ என கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூசித்த விடங்க லிங்கத்தைக் கேட்டார். தேவர்கள் மட்டுமே பூசிக்கத்தக்க அந்த லிங்கத்தை ஒரு மானிடனுக்குத் தர இந்திரனுக்கு மனம் வரவில்லை. தேவசிற்பியானமயனை வரவழைத்து, தான் வைத்திருப்பதைப்போலவே 6 லிங்கங்களை செய்து அவற்றைக் கொடுத்தான்.

முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டுபிடித்து விட்டார். வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான். அவற்றில், நிஜ லிங்கமே திருவாரூரில் உள்ளது. மற்றவை சுற்றியுள்ள கோவில்களில் உள்ளன.

இவை “சப்தவிடங்கத்தலங்கள்’ எனப்படுகின்றன. இக்கோவில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோவிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோவிலாக இருந்துள்ளது. சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய  செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது.

சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோவிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். மூன்றாம் குலோத்துங்கன் கீழக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார். அச்சுதப்ப நாயக்கர் வடக்கு ராஜ கோபுரத்தை கட்டுவித்தார்.

தலசிறப்புகள்:

மூலவர்: வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், மூலட்டானமுடையார், பூங்கோவில் புண்ணியனார்உற்சவர்:தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர்செவ்வந்தித் தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி.

தாயார்: அல்லியம்பூங்கோதை (நீலோத்பலாம்பாள்), கமலாம்பிகை.
தலவிருட்சம்: பாதிரி, தீர்த்தமாக கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம் உள்ளது. சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற இத்திருத்தலம், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் (மண்) தலமாகவும், சுயம்பு லிங்கமாகவும் உள்ளது. இத்தலம் அனைத்துத் திருமுறைகளிலும் பாடல்பெற்ற தலமாகவும், பன்னிரண்டு திருமுறைகளில் அதிகப் பாடல்களைப் பெற்ற தலமாகவும் உள்ளது. உலகிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.

திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும். சுந்தரர் “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் என்று இவ்வூரைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்”. இக்கோவிலில்தான், மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்கினார்.
மேலும், இது திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருவாரூர் கோவில் சிதம்பரம் நடராசர் கோவிலைவிட பழமையானது என்பதைக் குறிக்கும் வகையில், இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற சொல் குறிப்பிடப்படுவது இல்லை. மேலும், இதற்குச் சான்றாக அப்பர் “திருவாரூரில் கோவில் கொண்டது எந்நாளில்”? எனப் பாடிய 10 பாடல்களில் திருவாரூர் தில்லைக்கு முற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். திருவாசகத்தில் திருப்புலம்பல் என்ற பகுதி திருவாரூரில் பாடப்பெற்றதாகும்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். திருவாரூர் கோவில் அளவும், தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவிலில் சிவனுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் 
என்றும் சிவன் அழைக்கப்படுகிறார். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி அதன் தொன்மையை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு மிகப் பழமையானது.

பன்னிரண்டு திருமுறைகளில் “சிதம்பரம் நடராஜர் கோவிலை அடுத்து அதிகப் பாடல்களைப் பெற்ற சிறப்புடைய தலம் இதுவாகும்”. தண்டியடிகள், கழற்சிங்கர், செருத்துணையார், விறன் மிண்டர், நமிநந்தியடிகள் முதலிய நாயன்மார்களின் தொண்டுகள் பரிமளித்த பதி இதுவே. கமலை ஞானப்பிரகாசரும் இங்கிருந்தவரே
திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

சோழர்கள், பாண்டியர்கள், விசயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் ஆகியோரின் கல்வெட்டுகள் மொத்தம் 65 உள்ளன. இங்கே உள்ள சிவபெருமான் குருவாக இருந்து மக்களுக்கு நல்ல ஒழுக்கங்களை உபதேசித்த இடம் தான் இந்த திருவாரூர். இங்கே இந்த சிவனை வணங்கும் பக்தர்களுக்கு கல்வி ஞானத்தை வழங்குவார். நல்ல ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்த்தி வழங்குவர்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்