மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் அதிகரித்தாலும், இலங்கையில் அடுத்த மாத இறுதிவரை தேவையான எரிபொருள் கையிருப்பில் உண்டு. அளவாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் குறித்த நிலைமையைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று ஊடகங்களுக்கு விளக்கமளித்த போதே இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தினால் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் குறிப்பிடத்தக்கதான தாக்கமேதும் ஏற்படவில்லை. ஆனாலும் வழக்கத்துக்கு மாறாக அளவுக்கதிகமாக எரிபொருளைக் கொள்வனவு செய்தவர்களாலும், பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபட்டவர்களாலும் கடந்த வாரங்களில் எரிபொருள் நுகர்வு 21 வீத்த்தினால் அதிகரித்தது.
இத்தகையதொரு நெருக்கடி நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே அரசாங்கம் QR முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக வியோகத்தில் சில
தடங்கல்கள் காணப்பட்டன.
அனைத்து வகையான சிக்கல்களும் தீர்க்கப்பட்டுள்ளன. இனிவரும் நாள்களில் QR முறைமை மூலமே எரிபொருள் விநியோகம் செய்யப்பட வேண்டும் என்று நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமம் சமரசத்துக்கு இடமின்றி இரத்துச் செய்யப்படும் என்று கூறினார்.
இதேவேளை, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எரிபொருள் வளங்குவதற்கான நிலையான தீர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், அதுவரை இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
