இலங்கையின் மீட்பு முயற்சிக்கு ரூ.1,000 கோடி திரட்டும் ஐ.நா.

கொழும்பு, டிசெம்பர் 12 ஐக்கிய நாடுகள் (ஐ. நா.) சபை, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்காளர்களுடன் இணைந்து இலங்கையின் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக அடுத்த 4 மாதங்களில் 3.53 கோடி அமெரிக்க டொலர்களை – சுமார் ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முயற்சி எடுத்துள்ளது என்று ஐ. நாவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிரான்சே தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற் கண்டவாறு கூறினார்.

அத்துடன், ‘டித்வா’ புயலால் நாடு முழுவதும் பெரும் அழிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஐ. நா. பேரிடர் முகாமைத்துவ நிலையத்துடன் இணைந்து ஏழு துறைகளை உள்ளடக்கிய ஒரு முன்னுரிமை பட்டியலைத் தயாரித்துள்ளது.

நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அரசாங்கம் தலைமை தாங்குகிறது. ஐ. நா. மற்றும் பிற உள்ளூர், சர்வதேச பங்காளிகள் பல துறைகளில் தமது ஆதரவை வழங்குவார்கள். இந்த முயற்சிக்கு அவூஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவூடன் ஐ. நா. ஏற்கனவே 95 இலட்சம் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் வரும் மாதங்களில் மேலும் 2.6 கோடி அமெரிக்க டொலர்களைத் திரட்ட முயற்சிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.