

அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள திருத்தேவூர் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
கோச்செங்கண்ணான் கட்டிய மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. குரு பகவான் இங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானை நெடுங்காலம் வழிபட்டு வந்தார். குருபகவானின் பக்திக்கு மகிழ்ந்த இறைவன் அவருக்குக் காட்சி தந்தார் அதைக் கண்டதும் இறைவனின் தாளில் விழுந்து வணங்கி வழிபட்டார் குரு பகவான். ஈசனும் மகிழ்வுடன் தேவர்களுக்குத் தலைவனாகவும், ஆசானகவும் இருக்கும் பதவியை அருளியதுடன், ‘தேவகுரு’ என்ற பட்டத்தையும் வழங்கினார். குருபகவானும், தனக்கு அருள் புரிந்ததுபோல் இங்கு வந்து தன்னை வணங்குபவர்களுக்கும் அருள் புரியவேண்டும் என்று வேண்டிக்கொண்டார். இறைவனும் அதற்கு இசைந்தார். குரு வழிபட்டு அருள் பெற்ற தலம் என்பதால் இத்தலம் ‘குரு தலம்’ என அழைக்கப்படுகிறது. இறைவன் ‘தேவகுரு நாதர்’ என்று அழைக்கப்படுகிறார்.
தலசிறப்புகள்:
மூலவர்: தேவபுரீசுவரர், தேவ குருநாதர், கதலிவனேசுவரர், தாயார்: தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தலவிருட்சம்: வெள்ளைவாழை.
தீர்த்தமாக தேவ ,வருண,கௌதம,மிருத, சஞ்சீவினி தீர்த்தங்களுள்ளன.
தலவிருட்சம், கல்லில் கனிதரும் வெள்வாழை. இதற்கு யாரும் தண்ணீர் ஊற்றுவது இல்லை. இத்தலத்து இறைவனை அனைத்துத் தேவர்களும் வந்து வழிபட்டதால் ‘தேவூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. வியாழன், இந்திரன், குபேரன், சூரியன், அனுமன், கௌதமர், அகல்யை மற்றும் பாண்டவர்களுக்குத் துணைபுரிந்த விராடன் தன் மகள் உத்திரையோடு வந்து இங்கு வழிபட்டுள்ளான். ஞானசம்பந்தர், நாவுக்கரசர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், வள்ளலார் போன்றோர் இத்தலத்து இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர் அருணாசலக்கவிராயர் அம்பிகையைப் போற்றிப் பாடியுள்ளார்.
சுவாமி சன்னிதிக்கும் அம்மன் சன்னதிக்கும் இடையே சுப்பிரமணியர் சன்னிதி உள்ளதனால் இத்தலம் சோமாஸ்கந்தத் தலமாக விளங்குகிறது. இறைவன் இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள விஷ்ணு துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். ஒரு கையில் சங்கு சக்கரமும் மறுகையில் மழுவும் கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். இவளை வணங்கினால் திருமணத் தடை, காரியத் தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி உண்டாகிறது, குபேரன் இத்தல இறைவனை, வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில், செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டான்.
அவனது பூசைக்கு மகிழ்ந்த சிவபெருமான், குபேரனுக்கு அவன் இழந்த சகல செல்வங்களுமான சங்கநிதி பதுமநிதியாகியன திரும்பிக் கிடைக்க வழி செய்ததாகப் புராணம் கூறுகிறது.
திருமணபாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் கல்வாழைக்குப் பூசை செய்கிறார்கள். திங்கள் கிழமைகளில், சந்திர ஓரையில் வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
பஞ்சம் ஏற்பட்டபோது கௌதமர் இங்கு வந்து தங்கி லிங்கம் அமைத்து வழிபட்டு, பொன்னும் பொருளும் பெற்றுப் பசி நீங்கியதாக வரலாறு சொல்கிறது.
சூரியன் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கோவில் ராஜகோபுரத்தின் முதல்நிலை மாடம் வழியாக வந்து தேவபுரீஸ்வரரின் மேனியைத் தழுவி சூரியன் வழிபடுகிறான். அன்று காலை சூரியன் இறைவனைத் தொழுவது காலை 7 1/2 மணிக்குள் நிகழ்கிறது. மகத நாட்டரசன் குலவவர்த்தனன் இத்தல இறைவனை வழிபட்டு அருள்பெற்றுப் பரி வேள்வியை நிறைவேற்றினான். இங்கு அம்பாளிடம் குழந்தைகளுக்கு அன்னப்பிராசனம் செய்தால் குழந்தைகள் நல்ல பேச்சாற்றல் பெறுவார்கள் என்பது ஐதீகம். ராகு-கேது தோச பரிகாரம் செய்யப்படுகிறது. கோவிலில் குருப்பெயர்ச்சி விழா, மகாலட்சுமி குபேரபூஜை வருடா வருடம் மாசித் திங்கள் பூரட்டாதி நட்சத்திரம் அன்று நடக்கிறது. அன்று குபேரன் அரூபமாக வந்து இறைவனை வணங்குவதாக ஐதீகம்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்