திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் திருக்கோவில்

அமைவிடம்:

திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் ஆண்டிப்பந்தலில் இருந்து கிழக்கே 2 கி.மீ தொலைவில் உள்ள திருப்பனையூர் எனுமூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

இத்தலம் தாலவனம், தளவனேசுவரம்இராஜேந்திர சோழப்பனையூர் எனப் பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்களை மிகுதியாக கொண்ட மணற்பாங்கான ஊர் என்பதால் இதற்கு .”தாலவனம் ”  என்ற பெயர் வந்தது.  தாளம் என்பதற்கு பனை என்ற பொருள். இக்கோவில் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

தலசிறப்புகள்:

மூலவர்: சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர்.

தாயார்: பெரிய நாயகி, பிருகந்நாயகி,

தலவிருட்சம்: பனைமரம்.


தீர்த்தமாக பராசர தீர்த்தமும், திருமகள் தீர்த்தமும் உள்ளன. மூலவர் சுயம்பு லிங்கமாகும். சம்பந்தர், சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம், சப்த ரிசிகள், பராசரமுனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

முற்காலச் சோழர்களில் மிகவும் புகழ் பெற்றவன் கரிகாலச் சோழன். இவன் சிறியவனாக இருக்கும்போது தாயாதிகளின் சூழ்ச்சியால் அவனது தந்தை கொல்லப்பட்டார். தந்தையை கொன்ற தாயாதிகள் கரிகாலனையும் கொன்று சோழ நாட்டைக் கைப்பற்ற முனைந்தபோது, அவனது தாய்மாமன் ‘இரும்பிடர்த் தலையார்’ என்னும் சங்கப் புலவர், பிறர் அறியாமல், குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பிவைத்தார்.

அரசி, தன் மகனுடன் இவ்வூருக்கு வந்து, இங்கு அமைந்துள்ள சௌந்தரேஸ்வரர் கோவிலில் அடைக்கலம் புகுந்து, இத்தலத்து விநாயகரிடம் முறையிட, விநாயகரின் துணையால் கரிகாலன் எட்டு ஆண்டுகள் இத்தலத்தில் பாதுகாப்பாக இருந்தான்.
பங்காளிகளுக்குப் பயந்து தன் தாயோடு இளவயதில் இவ்வூரில் தலைமறைவாகத் தங்கி வளர்ந்து வந்த கரிகால் சோழனுக்குத் துணையாய் இருந்து அருளி அவனைப் பேரரசனாக்கினார். கரிகாலச் சோழனுக்குத் துணையிருந்ததனால் இத்தல விநாயகர் ‘துணையிருந்த விநாயகர்’ என்னும் பெயர் பெற்றார்.

இக்கோவிலில் உள்ள சோமாஸ்கந்தர் திருமேனி புதுமையான அமைப்பாக – இடக்கையில் பழம் ஒன்றை ஏந்திய வண்ணம் இருப்பது ஒரு அரிய காட்சியாகும்.
பதவி உயர்வு, பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும், திருமணத்தடை நீங்க துர்க்கையையும் வழிபடுகிறார்கள்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்