அமைவிடம்:
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரிலிருந்து சுமார் 19 கி.மீ தொலைவிலும், திருநெல்லிக்காவலிலிருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ள திருத்தங்கூரில்
அமைந்துள்ளது.


தலவரலாறு:
ஒரு சமயம், உலகில் பிரளயம் ஏற்பட்டு பூவுலகம் முழுவதையும் கடல் நீர் மூழ்கடித்துக்கொண்டிருந்தது. இத்தலத்தில் விருப்பமாக எழுந்தருளியிருந்த உமாதேவி, சிவபெருமானிடம் தனக்கு மிகவும் விருப்பமானதும், அடியார்கள் நிரம்பியுள்ளதுமான இத்தலத்தை மட்டும் பிரளயம் விழுங்காமல் காத்தருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். சிவபெருமானும் உமையின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தின் பெருமையை உலகறியும் பொருட்டு காத்தருளினார். அதன்படி, உலகம் முழுக்க கடல் நீரால் கொள்ளப்பட்டும், இத்தலத்தில் மட்டும் தெளிந்த நீர் தேங்கி நின்றதால் இத்தலம் திருத்தேங்கூர் என்று பெயர் பெற்றது எனவும், தென்னை மரங்கள் நிறைந்து வளம் பெற்ற ஊர் என்பதால் தெங்கூர் என்று இத்தலத்துக்குப் பெயர் வந்தது எனவும் கூறுவர். அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
தலசிறப்புகள்:
மூலவர்: வெள்ளிமலைநாதர், ரஜதகிரீசுவரர்தாயார்: பெரியநாயகி, பிரகந்நாயகி.
தலவிருட்சம்: தென்னை. தீர்த்தமாக சிவகங்கை தீர்த்தமுள்ளது.
சம்பந்தர், அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம்.
அகலிகை, திருமகள், நவக்கிரகங்கள், அரிந்தமன் எனும் மன்னர் ஆகியோரால் வழிபடப்பட்டவர். உமையம்மைக்கு விருப்பமான தலம் என்பதையும், திருமகள் வந்து சிவபூசை செய்த தலம் என்பதையும் தெரிந்துகொண்ட நவக்கிரகங்கள், இத்தலத்துக்கும் வந்து தத்தம் பெயரால் ஆளுக்கொரு சிவலிங்கத்தை நிறுவி பூசித்துப் பலனடைந்தார்கள். கங்கை நதியில் நீராடுபவர்களின் பாவங்களைச் சுமந்து வாடிய கங்கை, அந்தப் பாவங்களை எல்லாம் போக்கிக்கொள்ள பூலோகத்தில் உள்ள பல தீர்த்தங்களில் மூழ்கி சிவபூசை செய்தாள். அப்படியும் பாவம் முழுவதும் போய்விடவில்லை.
இந்த நிலையில், இத்தலத்தின் சிறப்பைப் பற்றி அறிந்தாள், சிவபெருமானின் சடையை அலங்கரிக்கும் கங்காதேவி. திருத்தங்கூர் வந்து கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் நீராடி 48 செந்தாமரை மலர்களால் சிவனுக்குப் பூசை செய்தாள். கங்கைக்குக் காட்சி தந்த ஈசன், அவள் பாவங்களை எல்லாம் போக்கினார். மேலும், அவள் உருவாக்கிய தீர்த்தத்துக்கு சிவகங்கை தீர்த்தம் எனப் பெயரிட்டு, அதில் கங்கை எப்போதும் நிறைந்திருக்க அருளாசி புரிந்தார்.
இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை சூரிய உதயத்தில் சூரியனின் கிரணங்கள் இறைவனின் திருமேனியில் படுகிறது. இந்த சூரிய பூசையை சிறப்பாக இத்தலத்தில் கொண்டாடுகிறார்கள். சம்பந்தர் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ‘தெங்கூரில் வெள்ளியங்குன்றில் அமர்ந்த இறைவர்’ என்று இத்தலத்து இறைவனைக் குறிப்பிடுகிறார்ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர் மேல் பந்தமாக அமைந்த பாவங்கள் நீங்கும், முற்பிறவிகளில் நாம் செய்த பழவினைகளைத் தீர்த்து நல்நெறியையும் அருளையும் தருபவர், துன்பம் தரும் வலிய வினைகளைப் போக்கும் புண்ணியர் என்று இத்தலத்து இறைவனைக் குறிப்பிடுகிறார்
நவக்கிரக தோசங்கள் நீங்க, நமது பழவினைகள் நீக்க வல்லவர் இத்தல இறைவர் என்பது ஐதீகம் .
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்