வடக்கு மாகாண நிதி ஒரு சதம் கூட 2025 இல் திரும்பிச் செல்லவில்லை!

யாழில் ஆளுநர் வேதநாயகன் பெருமிதம்

தற்போதைய நிலையற்ற பூகோள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில்இ வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுப்பதற்காகவும், விலை அதிகரிப்பைக் கவனத்திற்கொண்டு அதற்கான புதிய பொறிமுறைகளைத் துரிதமாக உருவாக்கிச் செயற்படவுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இலங்கை தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட 21ஆவது வருடாந்த விருது வழங்கும் விழா, புதன் கிழமை (08.04.2026) மாலை யாழ்ப்பாணம், கொக்குவில் செல்வா பலஸில் நடைபெற்றது. ஆளுநர் நா.வேதநாயகன் இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சங்கத்தின் வருடாந்தச் சிறப்பு மலரான ‘நிர்மாணிகள்” சஞ்சிகையையும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், “நீங்கள் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான முக்கிய தூண்களாக விளங்குகிறீர்கள். தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாணம் மீதான விசேட கரிசனையால் நாம் விரைவாக மீண்டெழுந்து கொண்டிருக்கின்றோம். வளர்ச்சியின் இந்த முக்கியமான கட்டத்தை நாம் கடந்து செல்லும்போது, உங்களின் விடாமுயற்சியே திட்ட வரைபடங்களை நமது நிலப்பரப்பின் யதார்த்தமாக மாற்றுகின்றது.

நாம் வெளிப்புற அழுத்தங்களை எதிர்கொள்ளும் அதேவேளையில், நிர்மாணப் பணிகளின் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. இங்குள்ள ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் தேசிய நிர்மாணத் தரநிலைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தரம் என்பது ஒரு விருப்பத் தெரிவல்ல. அது உலகுக்கு நாம் வழங்கும் நமது முத்திரையாகும். அத்துடன், உங்களின் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானதாகும்.

“வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் நிதிதிரும்பிச் செல்கின்றது’ என்றஅரசியல் கோஷத்தை அண்மைக்காலமாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது எவ்வளவு தூரம் உண்மைக்கு மாறானது என்பதை உங்களுக்கு நன்கு தெரியும். 2025 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு சதம் கூடத் திரும்பிச் செல்லவில்லை என்பதை மாகாண ஆளுநராக இங்கு மிகுந்த பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வாறான ஓர் இலக்கை எங்களால் மாத்திரம் தனித்து அடைந்திருக்க முடியாது. உங்களின் ஒத்துழைப்புகள் உரிய நேரத்தில் கிடைத்தமையால்தான் அதனைச் சாதிக்க முடிந்தது. இந்த ஆண்டும் அதேபோன்று நீங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். உங்கள் சங்கத்தின் உறுப்பினர்களை அதற்காக ஊக்குவியுங்கள். அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளை வழங்குங்கள்.” – என்றார்.

இந்த நிகழ்வில் சிறந்த ஒப்பந்த தாரர்களுக்கான விருதுகளை ஆளுநர் வழங்கிக் கௌரவித்தார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநருடன், யாழ். மாவட்ட செயலாளர் எம்.பிரதீபன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல் சேவைகள்) ந.சுதாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.