சுடரியின் நூல்கள் வெளியீடும் அறிமுகமும்

வவுனியா மாவட்ட மேலதிகப் காணிப் பதிவாளரும் பிரபல எழுத்தாளருமான சுடரி ( சிவகௌரி ) எழுதிய இரு நூல்களின் வெளியீடும் இரு நூல்களின் அறிமுகமும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 04.01.2026 அன்று காலை 10 மணியளவில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக…

  • பேராசிரியர் பால. சுகுமார் (ஓய்வு நிலை பீடாதிபதி, கிழக்குப் பல்கலைக்கழகம்)
  • எழுத்தாளர் மேமன் கவி
  • சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா (தலைவர் – கொழும்பு தமிழ்ச் சங்கம்)
  • திரு மதுசூதன் தமிழ்ச்சங்க இலக்கியக் குழுச் செயலாளர்

ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தமிழ்மொழி வாழ்த்தினை நூலாசிரியரின் மகன்களான சாத்விகன் , சத்யாங்கன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

நிகழ்வின் வரவேற்புரையினை வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கைச் செயலாளர் இந்திரா ஜெயபாரதி வழங்கி இருந்தார்.

இந்நிகழ்வினை தலைமை தாங்கி நடாத்திய கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் தலைமை உரையினை வழங்கி இருந்தார்

நூலாசிரியரின் தாயாரான திருமதி முத்துராஜா தனபாக்கியவதி அவர்கள் ஆசியுரையினை வழங்கினார்கள்

இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து சிறப்பித்த எழுத்தாளர் மேமன் கவி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்

நூலாசிரியரின் உனக்குள் உன்னைத் தேடு (கட்டுரை ) மற்றும் காதலாகி (கவிதை) ஆகிய இரு நூல்களை வெளியீடு செய்த விஜய் பதிப்பகத்தின் நிறுவுனர் திரு விஜய் அவர்களால் வெளியீட்டுரை நிகழ்த்தப்பட்டது

இதை தொடர்ந்து…

  • உனக்குள் உன்னைத் தேடு
  • காதலாகி ஆகிய இரு நூல்களின் வெளியீடும் இடம்பெற்றது

இந்நூலின் முதற்பிரதியினை அங்கு விருந்தினராக கலந்து சிறப்பித்த கிழக்கு பல்கலைக்கழக ஓய்வு நிலை பீடாதிபதி பேராசிரியர் பால சுகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

உனக்குள் உன்னைத் தேடு எனும் நூலிற்கான நயவுரையினை, நூலங்காடி நிறுவுனர் திரு சுப்பையா கேசவமூர்த்தி அவர்கள் வழங்கினார்.

காதலாகி எனும் கவிதை நூலிற்கான நயவுரையினை எழுத்தாளரும் கவிஞருமான றுக்‌ஷானா யஹியா வழங்கிச் சிறப்பித்தார்.

இதைத்தொடர்ந்து எழுத்தாளர் சுடரியால் ஏற்கனவே எழுதி வெளியீடு செய்யப்பட்ட பிரபஞ்ச பேரொளியே எனும் கவிதை நூலினதும் அவளுக்கென்று ஓர் உலகம் சிறுகதை நூலினதும் அறிமுகம் இடம்பெற்றது.

பிரபஞ்ச பேரொளியே எனும் நூலின் அறிமுக உரையினை பாணந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் மஸாஹிறா கனி அவர்கள் வழங்கினார்.

எழுத்தாளரின் மற்றைய நூலான அவளுக்கென்று ஓர் உலகம் எனும் சிறுகதை தொகுப்பிற்கான அறிமுக உரையினை ஓய்வு நிலை அதிபரான எழுத்தாளர் சந்திரசேகரம் மணிசேகரன் அவர்கள் வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து விருந்தினராக கலந்து கொண்ட கிழக்குப் பல்கலைக்கழக ஓய்வு நிலை பீடாதிபதி பேராசிரியர் பால. சுகுமார் அவர்களால் விருந்தினர் உரை நிகழ்த்தப் பட்டது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த நூலாசிரியரின் சகோதரியும் கிளிநொச்சி மாவட்டத்தின் கௌரவ மாவட்ட நீதிபதியுமான காயத்திரி சைலவன் அவர்களால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.

இறுதி நிகழ்வாக நூலாசிரியர் கௌரவிப்பு இடம்பெற்றது. விஜய் பதிப்பகம் சார்பாக விஜய் அவர்களாலும் , வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் இலங்கை கிளையின் உறுப்பினர்களாலும் நூலாசிரியருக்கான கௌரவம் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை வளரி பன்னாட்டு பெண் கவிஞர் பேரமைப்பின் கவிஞரும் பாடகியுமான அருந்தவம் அருணா அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.

நூலாசிரியரின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.