கடந்த டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று தானே இலங்கை வானொலி நூறாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த நிலையில் 59 வருடங்கள் நிறைவு என்பது எப்படி சாத்தியமாகும்? என பலரும் நினைக்கலாம்.
இலங்கையில் ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் கடந்து விட்டன என்பது உண்மைதான். ஒலிபரப்புச் சேவையுடன் இணைந்து தோற்றம் பெற்ற பெருமைக்கு உரிய இலங்கை வானொலி, நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது என்பதும் அனைவரும் அறிந்த விடயம்.

இதேவேளையில், ஒலிபரப்புச் சேவையின் வரலாற்றுப் பாதையைத் திரும்பிப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். 1925 டிசெம்பர் 16ஆம் திகதி ஆரம்பமான ஒலிபரப்புச் சேவை, ஆரம்பத்தில் ‘கொழும்பு வானொலி’ (Radio Colombo) என அழைக்கப்பட்டது.
தபாற், தந்தி திணைக்களத்தின் ஒரு பிரிவாக இயங்கி வந்த ஒலிபரப்புச் சேவை, தனியானதொரு திணைக்களமாக அமைக்கப்பட்டு அதன் நிர்வாகத்தின் கீழ் 1949 ஒக்ரோபர் முதலாம் திகதியில் இருந்து செயற்படத் தொடங்கிய போது ‘இலங்கை வானொலி’ (Radio Ceylon) என அழைக்கப்பட்டு வந்தது.
இலங்கையின் ஒலிபரப்புச் சேவையை புனரமைக்கும் வகையில் 1965 ஜூலை மாதம், அப்போதிருந்த பிரதமர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசால் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. பிரபல பத்திரிகையாளரான கேர்பட் ஹூலுகல தலைமையிலான இந்த விசாரணைக் குழுவில் வண. கெட்டிமுல்லே வஜிரபுத்தி தேரர்இ டி.பி. எல்லேபொலஇ எஸ். இராஜநாயகம், பி.
நிசங்க, ஏ. செய்யத் அஹமட் ஆகியோர் அங்கம் வகித்தார்கள். பலரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைய இலங்கை வானொலியை ஓர் அரச கூட்டுத்தாபனமாக மாற்றப்பட வேண்டும் என மேற்படி விசாரணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

இது தொடர்பான சட்டமூலம் 1966 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன், அது 1966 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கச் சட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதன்படி, 1967 ஜனவரி மாதம் 5 ஆம் திகதியன்று ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ உதயமானது. அன்றைய தினம், அப்போதிருந்த பிரதம மந்திரி டட்லி சேனநாயக்கா, ஒலிபரப்பு அமைச்சர் ஆர். பிரேமதாச ஆகியோரால் வைபவ ரீதியாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. கூட்டுத்தாபனத்தின் முதலாவது பணிப்பாளர் நாயகமாக நெவில் ஜயவீர நியமிக்கப்பட்டார்.
‘இலங்கை வானொலி’ என்ற பெயரில் இயங்கி வந்த ஒலிபரப்புச் சேவை, அதன் நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்துக்கமைய ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்’ என்று பெயர் சூட்டப்பட்டதன் ஆண்டு நிறைவு தினமே 2026.01.05 ஆகும்.
இலங்கையில் ஒலிபரப்புச் சேவையை முன்னெடுத்துச் செல்லும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், 2026.01.05 அன்று 59 வருடங்களை நிறைவு செய்து கொண்டு, 60 ஆவது வருடத்தில் கால்பதிக்கிறது என்பது ஒலிபரப்புத்துறை வரலாற்றில் மற்றுமொரு சிறப்பு நிகழ்வாக அமைகிறது.