வீரட்டேசுவரர் திருக்கோவில்

அமைவிடம்:

விழுப்புரம் மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருக்கோவிலூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

அந்தாகசூரனை அழிக்கும் பொருட்டு நடைபெற்ற போரில், சிவன் தன் கரத்தில் உள்ள கதையால் அந்தகனுடைய தலையில் அடிக்க அவன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டு பூமியில் விழுகிறது. ஒவ்வொரு துளி ரத்தத்திலிருந்தும் பல அசுரர்கள் உற்பத்தி ஆகி போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பார்வதி காளி சொரூபம் கொண்டு அந்தகனின் தலையிலிருந்து வெளிப்படும் ரத்தத்துளிகளை கபாலம் கொண்டு கையிலேந்தி அசுர உற்பத்தியை தடுக்கிறாள்.

வெளிப்பட்ட ரத்தங்கள் ரத்தக்கோடுகளாகி எட்டு திசையிலும் விழுந்து குறுக்கும் நெடுக்குமாக, 64 பாகங்களாக விழுகிறது. அந்த 64 இடத்தில் சிவன் தனது அருளால் 64 பைரவர்களை உற்பத்தி செய்து அங்கு இருக்க செய்கிறார். 64 பைரவ சக்திகளையும் உற்பத்தி செய்து அசுர உற்பத்தியை தடுத்து அசுரனை வதம் செய்து தேவர்களுக்கு அனுகிரகம் செய்து அஞ்ஞானத்தை நீக்கி நிஜ சொரூப மெய்ஞானத்தை அருளிய தலம்,
முருகனுக்கு ஏற்பட்ட பிரம்மகத்தி தோசம் நீங்க பூமியில் சிவபூசை செய்ய வேண்டினார். அம்பாள் எந்த இடம் என்று உணர்த்த .தன் கையிலிருந்த வேலை விழுத்திய இடமே திருக்கைவேலூர் என்று பெயர் பெற்று பின்நாளில் மருவி திருக்கோவிலூர் ஆனது.

தலசிறப்புகள்:

மூலவர்:     வீரட்டேசுவரர்
உற்சவர் :     அந்தகாசுர வத மூர்த்தி
அம்மன் :     பெரியநாயகி , சிவானந்த வல்லி
தலவிருட்சம்:   சரக்கொன்றை
தீர்த்தமாக:     தென்பெண்ணையுள்ளது.
சம்பந்தர். அப்பர், சுந்தரரால் பாடல்பெற்ற திருத்தலம்.

இத்தல இறைவனை முருகப்பெருமான், ராமர், பரசுராமர், கிருஷ்ணர், இந்திரன், காளி, எமன், காமதேனு, சூரியன், குரு, உரோமச முனிவர், கண்வ மகரிசி, மிருகண்டு முனிவர், பதஞ்சலி முனிவர், வியாக்ரபாதர், வாணாசுரன், ஆதிசேஷன், மன்மதன், குபேரன் ஆகியோர் வழிபட்டுள்ளனர், சுவாமி மூலஸ்தானத்தில் பைரவ சொரூபமாகவும் சுயம்புவாகமும்உள்ளார் .

சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம். அம்பாள் திரிபுர பைரவி உற்பத்தி தலம் இது. சப்த மாதாக்கள் உற்பத்தியான தலம் இது. 64 பைரவர்கள் 64 பைரவிகள் உற்பத்தியான தலம் இது.

இத்தலத்தில் பாரி வள்ளல் தன் மகள்களான அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவிலூரை ஆண்ட மன்னனுக்கு அவ்வையார் கபிலர் இருவரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணத்தை வைத்து அமைந்த பெயர்களே சுற்றுப்புற கிராமங்களின் பெயர்களாக இப்போதும் உள்ளன. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

நாயன்மார்களில் இருவரான மெய்ப்பொருள் நாயன்மார், நரசிங்க முனைய நாயனார் ஆகியோர் அவதரித்த ஊர் இது. தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய திருமுறை கண்ட சோழன் ராஜராஜ சோழனும் அவன் சகோதரன் ஆதித்ய கரிகாலனும் பிறந்த ஊர்…
திருக்கோவலூர் மேலூர், கீழையூர் என இரு பிரிவுகளாக உள்ளது. அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்றான வீரட்டேஸ்வரர் கோவில் கீழையூர்ப் பகுதியில் தெண்பெண்ணையாற்றின் கரையிலும் மேலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திரிவிக்ரமப் பெருமாள் வைணவ ஆலயமும் உள்ளன.

முதலாழ்வார்கள் மூவரும் ஓர் இடைகழியில் சந்தித்து, மாலவனின் பெருமையை அனுபவித்த திவ்ய தேசம். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் என்று சொல்லப்படும் முதல் மூன்று ஆழ்வார்களின் வரலாற்று நிகழ்ச்சி இடம் பெற்ற தலம் மத்வ சம்பிரதாயத்தின் ஆசிரியரான ரகூத்தம சுவாமிகளது பிருந்தாவனம் அமைந்த இடம் ஞானானந்தகிரி சுவாமிகளது தபோவனம் அமையப் பெற்ற திருத்தலம்.
சுந்தரர் வெள்ளை யானை மீதேறியும், அவரது தோழரான சேரமான் பெருமாள் நாயனார் குதிரை மீதேறியும் கைலாயம் செல்லும் போது ஒளவையாரையும் உடன் வருமாறு அழைத்தனர். ஒளவையார் தானும் கயிலை செல்ல எண்ணி அவசரமாக பூசை செய்ய, விநாயகர் காட்சி தந்து பொறுமையாகப் பூசை செய்யும் படியும், கயிலைக்கு தான் அழைத்துச் செல்வதாகவும் அருளினார்.

இத்தல கணபதியை வழிபட்டுக்கொண்டிருந்த ஒளவையார் வழிபாட்டைத் தொடர்ந்து “விநாயகர் அகவல் ” பாடி பூசையை முடித்தார். வழிபாடு முடிந்த பிறகு ஒளவையாரை தனது துதிக்கையால் சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரும் கயிலையை அடைவதற்கு முன்பு சேர்த்து விட்டார். இவ்வாறு ஒளவையைத் தூக்கிவிட்ட கணபதி இவரே என்பர். விநாயகர் சந்ந்திக்கு முன்புறம சுவரில் புடைப்புச் சிற்பமாக இந்த வரலாறு காணப்படுகிறது.

வாஸ்து சாந்தி (வீடு கட்டுதல்) எனப்படும் ஐதீகம் தோன்றியதற்கு காரணமான தலம் இது. கிரகப் பிரவேச காலங்களில் வீடு கட்டும் காலங்களிலும் இந்த 64 பைரவர்களுக்கு செய்வதையே, வாஸ்து பூசை என்கின்றனர்.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்