கிளியனூர் அகத்தீசுவரர் திருக்கோவில்

அமைவிடம்:

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில் திண்டிவனத்தில் இருந்து  தென்கிழக்கே  18 கி.மீ,  புதுச்சேரியில் இருந்து  வடக்கே 24 கி.மீ.,  திருவண்ணாமலையில் இருந்து கிழக்கே  90 கி.மீ,  சென்னையில் இருந்து தெற்கே 140 கி.மீ  தொலைவில்  உள்ள கிளியனூரில் அமைந்துள்ளது.

தலவரலாறு:

அகத்தியர் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்ட தலம் என்பதால்  இறைவன் பெயர்  அகத்தீசுவரர்  என அழைக்கப்படுகிறது. (கல்வெட்டுகளில் அக்கினீசுவரர் என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.) ஆதிசேடன்  இறைவனை வணங்கி  வழிபட்டுப் பேறு பெற்றதாகத் தலவரலாறு  குறிப்பிடுகிறது.

தலசிறப்புகள்:

மூலவர் அகத்தீசுவரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. தலவிருட்சம் வன்னி மரம் . தீர்த்தமாக அக்கினித்தீர்த்தமுள்ளது,
சம்பந்தரால் பாடல்பெற்ற திருத்தலம்.

காளவ முனிவரின்  இரண்டு மகள்களின் பிணியினைத் தீர்த்து வைத்ததாலும், சுகப்பிரம்ம ரிசியின்  வயிற்று  வலி நீக்கியதாலும்,  இறைவன் பிணி தீர்க்கும்  நாயகனாகப் போற்றப்படுகிறார்.  பாலைய சுவாமிகள்,  சிதம்பர சுவாமிகள் வழிபட்ட கோவிலாகும்.

முற்காலச் சோழர் கோவில்  என்ற பெருமையையும்,  இலக்கியம் மற்றும் பழம்பெரும்  வரலாற்றுப்  புகழையும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது.  இதற்குச் சான்றாக  கிளியனூர்  மற்றும்  சுற்று  வட்டாரத்தில்  கிடைத்துள்ள  தொல்லியல்  பொருட்கள்  சான்றாக அமைந்துள்ளதுசிறுபாணாற்றுப்படை,  பெரும்பாணாற்றுப்படை,  புறநானூறு போன்ற சங்க இலக்கிய நூல்கள் இப்பகுதியில்  ஓய்மா நாடு என்றும்,  அதனை  நல்லியக்கோடன் என்ற மன்னன்  நல்லாட்சி  செய்ததையும் குறிப்பிடுகிறது.

முதலாம்  பராந்தகச் சோழன் ( கி.பி. 917) முதலாம்  இராஜேந்திர சோழன் (கி.பி. 1025),  முதலாம்  இராஜாதி இராஜன் ( கி.பி. 1046),  முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1073),  முதலாம் விக்கிரம சோழன் ( கி.பி. 1128)  மற்றும் விஜய நகர மன்னன் மல்லிகார்சுனன் (கி.பி. 1447) ஆகிய மன்னர்களின்  கல்வெட்டுகள் கோவில்  சுவர்களில் காணப்படுகின்றன. இத்தலம் வறுமை நீக்கும் தலமாகவும்,  எவ்வித நோய்களையும்  அறவே போக்கி நலம் அருளும்  தலமாகவும் விளங்குகிறது.   அதேபோல,  பெண்களால் ஏற்படும்  துன்பங்கள்  அனைத்தும் சரி  செய்து காக்கும்  கோவிலாகவும்  திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் கோவிலாகவும் விளங்குகின்றது.

சிவார்ப்பணம்

ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்