அமைவிடம்:
விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை கரையில் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து 3 கி.மீ கிழக்கில் திருமுண்டீச்சரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.


தலவரலாறு:
சிவபெருமானின் வாசல் காவலர்களான திண்டி, முண்டி ஆகிய இருவரும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர். முண்டி வழிபட்டதால் இத்தலம் ‘முண்டீச்சுரம்’ என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் திண்டி, முண்டி ஆகிய இருவருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டையாடுவதற்காக இப்பகுதிக்கு வந்தான். அப்போது இங்கு இருந்த ஒரு குளத்தில் விசித்திரமான தாமரை மலர் இருப்பதை கண்டான். உடனே அதை பறிக்க நினைத்த மன்னன், தன் பணியாட்களை அனுப்பி அந்த மலரை பறித்து வர கட்டளையிட்டான். ஆனால் எவ்வளவு முயன்றும் அவர்களால் அந்த மலரை பறிக்க முடியவில்லை. மலர் மெதுவாக குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது. எனவே மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட்டான். இதனால் தாமரை மலரில் இருந்து ரத்தம் கசிய ஆரம்பித்து குளம் முழுவதும் செந்நிறமாக மாறியது. இதைக் கண்டதும் மன்னன் மயங்கி விழுந்தான். மயக்கம் தெளிந்ததும் அந்த மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோவில் கட்டி லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். லிங்கத்தின்மீது மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் சுவாமி மீது தழும்பாக உள்ளது. இதனால் இறைவன் ‘முடீஸ்வரர்’ எனப்படுகிறார். இப்பெயரே கல்வெட்டில் ‘மவுலி கிராமம்’ என அழைக்கப்படுகிறது. மவுலி என்றால் ‘முடி’ அல்லது ‘கிரீடம்’ என்று பொருள்.
தலசிறப்புகள்:
மூலவர் – சிவலோகநாதர்,
தாயார் சவுந்தர்ய நாயகி, கானார் குழலி செல்வாம்பிகை என அழைக்கப்படுகிறார்.,
தலவிருட்சம் – வன்னி மரம், தீர்த்தமாக பிரம்ம தீர்த்தம் உள்ளது.
அப்பரால் பாடல்பெற்ற திருத்தலம்.
இறைவன் சிவலோகநாதரை பிரம்மா, இந்திரன் ஆகியோர் வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளனர். மூலவர் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். சிவபெருமான் சன்னிதிக்கும், அம்பாள் சன்னிதிக்கும் இடையில் முருகப்பெருமான் சோமாஸ்கந்தர் அமைப்பில் காட்சி தருகிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள சிவபெருமான், வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு பொக்களம் (திருநீற்றுப்பை) அளித்துள்ளார். இதன் காரணமாக இங்குள்ள ஈசனுக்கு ‘பொக்களம் கொடுத்த நாயனார்’ என்ற பெயரும் உண்டு. இக்கோவிலில் தட்சிணாமூர்த்தி இடப வாகனத்தின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.
இத்தலத்தில் உள்ள அம்பாளை வழிபாடு செய்து வந்தால் நடனத்திலும், இசையிலும் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கையாக உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிசேகம் செய்து, புது ஆடை சாத்தி வழிபடுகிறார்கள்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்