உள்ளூர் உற்பத்திகளை பாதுகாக்க புதிய சட்டம்

உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விலைகளை விடக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள நாலந்தா மற்றும் களுதேவல கைத்தொழில் பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் காலணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்ற பொருட்கள், விதிக்கப்பட்ட வரிகளையும் மீறி உள்ளூர் உற்பத்தி விலையை விடக் குறைவான விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பொருட்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவித்த அமைச்சர், இது குறித்து முறைப்பாடுகளை வழங்குமாறு கைத்தொழில் அதிபர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இவ்வாறான மோசடிகளைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தினால் மாத்திரம் செய்யக்கூடிய காரியமல்ல எனவும், உற்பத்தியாளர்கள் இது குறித்து விழிப்புடன் இருந்து முறையான புகார்களை முன்வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

உள்ளூர் கைத்தொழில் துறையினரைப் பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் புதிய சட்டக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் எனவும் இதன் போது அமைச்சர் உறுதி அளித்தார்.