

அமைவிடம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி எனுமூரில் அமைந்துள்ளது.
தலவரலாறு:
விநாயகப் பெருமான், கஜமுகாசுரனைக் கொன்ற போது, அசுரன் உடலினின்றும் பெருகிய ரத்தவெள்ளத்தால் இப்பகுதி முழுவதும் செந்நிறமானதலால் இத்தலம் செங்காடு, செங்காட்டங்குடி எனப் பெயர்பெற்றது என்று புராணங்களில் குறிப்பிடப்படுகிறது.
தலசிறப்புகள்:
மூலவர்: கணபதீசுவரர் சிவன், (உத்தராபதீசுவரர் பைரவர் உற்சவர்), ஆத்திவன நாதர், மந்திரபுரீசுவரர், பிரமபுரீசுவரர், பாஸ்கரபுரீசுவரர்,
தாயார்: சூளிகாம்பாள், திருக்குழலம்மை.
தலவிருட்சம்: ஆத்தி.
தீர்த்தமாக ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன, அவை சத்திய, சூரிய, அக்கினி, சந்திர, இந்திர, இயம, வருண, வாயு, சீராள தீர்த்தங்களாகும். சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்ற திருத்தலம். கி, பி. 642ல் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்த நரசிம்ம பல்லவன், சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து, அவர்கள் தலைநகர் வாதாபியைக் கைப்பற்றினார்.
அப்போது அவரின் தளபதி பரஞ்சோதி வாதாபியி லிருந்து கொண்டு வந்த கணபதி விக்ரகமே, இத்தலத்தில் வாதாபி கணபதி’’ என்ற பெயரில் தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறார். ஒட்டிய வயிறுடன் இந்த விநாயகர் காட்சி தருகிறார். சாளுக்கிய வெற்றிக்குப்பின் பல்லவ மன்னவரிடமிருந்து பரஞ்சோதியார் இறைப்பணி புரிய விடைபெற்றார். தமது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியினை அடைந்து, அங்கு கணபதீச்சரத்து இறைவனுக்கு "சிறு தொண்டர்" என்ற பெயர் பெற்று சிவத்தொண்டு புரிந்து வந்தார்.
சிறுதொண்டரின் சிவபக்தியை சோதிப்பதற்காக இறைவன், அடியவர் வேடத்தில் வந்து பிள்ளைக் கறி கேட்க, இறைவனுக்குத் தன் குழந்தையையே சமைத்துக் கொடுத்த சிறுதொண்ட நாயனார், அவரது மனைவி திருவெண்காட்டு நங்கை, குழந்தை சீராளன், பணிப்பெண் சந்தன நங்கை ஆகிய நால்வருக்கும் முக்தி அளித்தவர், இத்தல இறைவன். இக்கோவிலில் பேழையில் மரகதலிங்கம் வைக்கப்பட்டுள்ளது,
மற்றொரு சிறப்பு, முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன், முதலாம் ராஜாதிராஜன், முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோரின் ஆலயத் திருப்பணி மற்றும் நிவந்தங்களைக் குறிப்பிடுகிறது. கல்வெட்டுக்களில் செங்காடுடைய நாயனார், கணபதீச்சரமுடைய மகாதேவர், கணபதீசுவரமுடையார் என்று இறைவன் பெயரும்,மாணிக்க வளநாட்டு மருகல் நாட்டு திருச்செங்காட்டங்குடி’’ என்று தலத்தின் பெயரும் குறிப்பிடப்படுகிறது. இத் திருக்கோவில் வேளாக்குறிச்சி ஆதீனத்தின் கீழ் உள்ளது. கணபதிக்கு அருள்புரிந்த சிவபெருமான், ‘கணபதீசுவரர்’ என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இவரை வழிபடும் பக்தர்களின் அனைத்து தோசங்களும், நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
சிவார்ப்பணம்
ஆக்கம்: திரு நாகரத்தினம் புஸ்பநாதன்