விம்பம்

ஆசை இராசையா  Asai Rasiah 1946 – 2020

சுயபிரதிமை – தைலவர்ணம் 18 x 14 in 1998

ஈழத்து ஓவியர்கள்சார் பதிவுகள் வேற்றுமொழிகளிலும் பிரசுரமாவதை காணமுடிகிறது சமகாலங்களில்.  மேலும் தமிழ் ஓவியர்களது ஆவணங்கள் தேடப்படுகின்றன, பிரசுரமாகின்றன. அதன் தொடர்ச்சியாக ஓவியர் ஆசை இராசையாவின் விம்பம் என்ற தலைப்பிலான ஓவிய நூல் முக்கிய ஆவணமாகிறது. 

இலையுதிர் காலமொன்றில் பாரிசில் இரு ஆண்டுகளுக்கு முன் வார இறுதி நாளொன்றின் அதிகாலைநேரம் யன்னலை லேசாக திறந்தேன் குளிர்காற்றும் இளம் சூரியக்கதிர்களும் முகத்தில் விழுந்தன. அரேபிய கோப்பியருந்தியபடி கொழும்பில் இருந்து வெளிவரும் இணையதள ஆங்கில சஞ்சிகை ஒன்றின் வாசிப்பில் மூழ்கலானேன். ஓவியர் ஆசை இராசையா பற்றிய கட்டுரையும் பிரசுரித்திருந்தது அந்த இணைய சஞ்சிகை.  அவரது படைப்புலகம் சார்ந்த விவரணமும் ஓவியங்களும் புத்துயிரூட்டின. சாறா என்ற இஸ்லாமிய பெண்ணின் ஆங்கில கட்டுரை எனது ஓவியம் சார் தேடலுக்கு விருந்தானது. ஆர்வத்தில் கட்டுரையாளினியை இணையவழியூடாக தொடர்புகொண்டேன். உரையாடலில் இராசையாவின் படைப்புகள் சார்ந்து மேலும் தகவல்களையும், வெளியாகிய ஓவியரின் சுயசரிதை நூல் பற்றியும் உரையாடல் நீண்டது. அதனை பெறுவதற்க்கு மரிசா என்ற சிங்கள பெண்மணியின் தொடர்பும் கிடைத்தது. நூல் பற்றி இணைய செயலியினூடு இருவரும் சிங்கள மொழியில் உரையாடினோம். இராசையாவின் அரச ஓய்வூதியம் பெற்றுக்கொடுப்பதற்க்கு, மரிசா வடக்கிற்க்கும் தெற்கிற்க்கும் அலைந்து தேய்ந்து பயனளிக்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். தமிழ் சூழலில் நான்கைந்து தசாப்த்தங்களுக்கு மேலாக இயங்கிய படைப்பாளிகளின் சுயசரிதை நூல் வெளிவருவது கிரகணம் போன்றது. மிக அரிதாகவே காணமுடிகிறது.

ஓவிய நூல் ஆரம்பிப்பதற்க்கு முன்னரே முகநூல் வழியாக ஆசையுடன் உரையாடியிருந்தேன். நூல் ஆரம்ப பணியின்போது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் அனுப்பியிருந்தேன். யாழ் குடாநாட்டு வாழ்வியலில் ஆதரவுக்கும் சிரமங்களுக்கும் மத்தியில் ஆவண நூலின் பணி தொடர்வதாக கூறினார். முதுமையும் நோயும் வருத்துவதாகவும் தனது சிந்தனையின் வேகத்திற்க்கு உடலுறுப்புக்கள் வேகம்கொடுப்பதில்லை எனவும்  வருந்தினார். நூல் வெளிவந்ததும் சில நூல்களை பாரிசுக்கு கொள்முதல் செய்வதாக உறுதியளித்தேன். காலங்கள் கரைந்தோடின, நோயும் ஓவியனை வாட்டியது, அவருக்கும் எனக்குமான உரையாடலும் உறைந்தது. இதற்கிடையில் இலங்கை தமிழ் ஓவியை ஜெயலக்சுமியின் ஓவியங்கள் தாங்கிய ஆவண நூல் கைக்கெட்டியது. ஆனந்தத்தில், அப்பெண்மணியின் தைலவர்ண ஓவியங்களின் தேர்ச்சிபற்றி சென்ற உடல் சஞ்சிகையில் ஆவணப்படுத்தினேன். அக்கட்டுரையை ஆறுதலாக எழுதிமுடிக்கும்  இறுதி நாட்க்களின் சந்தோசத்தில் இருக்கையில், ஆசை இறந்த செய்தி காதுக்கெட்டியது. நம்பிக்கைக்குரிய ஈழத்து நிலக்காட்சி (landscape) ஓவியனும் விடைபெற்றான். ஒருகணம் ஓவியர் வான்கோ சிந்தனையில் ஊசலாடினார். ஆசை  வாழும்காலத்திலேயே தனது ஓவிய ஆவணநூலை வெளியிட்டது மனதிற்க்கு நிறைவைத்தந்தது. ஓவியன் ஒவியத்தைமட்டுமல்ல தனது அனுபவத்தையும் ஆவணப்படுத்திவிட்டான் அடுத்த தலைமுறையினருக்கு. ஒரு பூரண படைப்பாளி தனது பணியை செப்பனே செய்து மடிந்தான்.
பாரிசில் ஓவிய ஆர்வமுள்ள பத்து நண்பர்கள் ஒன்றிணைந்து இருப்பது நூல்களை வாங்குவதாக ஒப்புக்கொண்டோம். பாரிசுக்கு பத்து நூல்களும், மீதி பத்தை இலங்கையில் உள்ள வெவ்வேறு மாகாண நூலகங்களுக்கு அன்பளித்தோம். கோவிட் முடக்ககாரணமாக யாழிலிருந்து கொழும்பு கொடகேனா வருவதற்க்கே சிலமாதங்களாகின. சில ஆர்வலர்களின் உதவியுடன்  ஆடி அசைந்து  பாரிஸ் – லா சபேலில் உள்ள பலசரக்கு களஞ்சியத்திற்க்கு ஒருமாலைப்பொழுதில் வந்தடைந்தது. மொத்தமான காட் போட் பெட்டியை திறந்ததும் – ஓவிய நூலும் நூலுனுள் வைக்கப்பட்டிருந்த சிறிய நூல் அரங்கேற்ற கையேடும் கண்டு மனமகிந்தோம். அவரவர் கைகளுக்கு அதன் வெகுமானத்துடன் கையளித்தோம். கனதியான கனமான ஓர் அழகிய ஓவிய நூல் கையில் கிடைத்ததையிட்டு பூரிப்படைந்தோம். ஆரோக்கியமான பின்னூட்டங்களும் பேசப்பட்டது. தமிழ் ஓவியப்பரப்பில் சுயசரிதை நூல் A4 அளவில் பிறந்திருப்பது முன்னுதாரணமாகிறது.

ஆசை இராசையா – கனவுகளை  நிறங்களாய்க்கரைப்பவர்.
‘தேடலும் படைப்புலகமும்’ 1987ல் வெளியான ஓவிய தொகுப்பு நூலில் அரூபன் எழுதிய பதிவிலிருந்து சில பகுதி இங்கே;

மேற்கத்தியப்பாதிப்புக்களில் இருந்து தன்னை  பூரணமாகத் துண்டித்துக் கொள்ளாமல், பிரமிக்கச் செய்யும் கற்பனை உலகத்துக்குரியவர். கனவுகளை நிறங்களாகக்கரைத்துப் பூசியது போலத் தோற்றந்தருபவை இவரது நிலகாட்சி ஓவியங்கள். இதுவரை இருநூறுக்கும் கூடுதலாகக்கீறியுள்ளார். நிலக்காட்சிகளில் சதுப்பு நிலங்களும், பட்ட மரங்களும் பெருமளவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒளி, நிழல் பற்றிய இவரது பிரக்ஞை விசேஷமானது. பனைகளையும், பட்ட மரங்களையும் தாண்டிவரும் சூரியக் கதிர்கள், நிழல் விழுத்தும் விதம், ரெம்பிரான்டை(Rembrandt 1606 – 1669) ஞாபகப்படுத்துகிறது. நிறத்தெரிவிலும், பிரயோகத்திலும் மனசுக்குச் சுகமான அல்லது மனசில் சீராகப்படிகின்ற, ஏதோ ஒரு குணம் விரவிக்கிடக்கும். இதுதான் இராசையாவின் தூரிகையின் பிரதான பலம். இன்னும் நீர்வர்ணங்கொண்டு கீறிய சிறிய படங்களில் தூரிகை வெகு அநாயாசமாக அசைந்திருப்பது அருமையாகவிருக்கிறது.

கற்பகம் – தைலவர்ணம் 24 x 18 in 2008


கொழும்பு நுண்கலைக்கல்லூரியில் பயிற்றப்பட்ட இரசையா கொழும்பு றோயல் கல்லூரியில் ஒவிய ஆசிரியரா இருந்தவர். இலங்கை முத்திரைப்பணியக ஓவியக் குழுவிலும் பணிபுரிந்தவர்.  இதுவரை ஒன்பது முத்திரைகளுக்கு படங்கீறியிருக்கிறார். 1968ல் Ceylon Cold Stores நிறுவனம் நடாத்திய அகில இலங்கை ஓவியப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். 1985ல் தன்னுடைய  37ஓவியங்கள் அடங்கிய தனிநபர் கண்காட்சி ஒன்றினையும் அச்சுவேலியில் நடாத்தியுள்ளார்.விம்பம் என்ற தலைப்பில் உருவான இந்நூல், ஆசையின் நாற்பத்தியைந்து வருட வரைதல் அனுபவத்தில் பிரதானமாக மூன்று வகையான ஓவிய பாணியில் இயங்கியதற்க்கான சான்றாக பேசுவோமேயானால். பிரதானமாக முக உருவ மற்றும் உருவ ஓவியங்கள், நிலக்காட்ச்சி ஓவியங்கள். உத்வேகம் தளும்பும் அப்சரஸ் பாணியிலான நடனமாடும் பெண் உருவ ஓவியங்களும் சமய ஓவியங்களும் சாந்தமான மெல்லிய கவர்ச்சியுடனும் தியான மனோபாவத்துடனும் பார்வையாளனை வாசிக்கம்செய்கிறது. நீர்வர்ண ஓவியங்களின் சூடான வர்ண தேர்வும் கோடுகளும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.  பரீட்ச்சார்த்தமாக மேலும் ஓவியங்ககளையும் காணலாம். சிகிரியா சுதை ஓவியங்கள் போன்ற அரை நிர்வாணமாக அல்லது கோவில் கோபுரங்களை அலங்கரிக்கும் புடைப்புச்சிற்பம்போன்ற நிர்வாண ஓவியங்களை கித்தானில் வரைவதற்கு நம் கலாச்சாரத்தில் அசாத்திய திறமை வேண்டும். இவரது படைப்புக்கள் தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பின் காலவரிசையில் இவரது ஓவியங்களை இலகுவாக வகைப்படுத்தலாம். இவ்வாறு பேசப்பட்டதாலேயே பிக்காஸோவின் நவீனஓவியங்கள் புரிதலுக்குள்ளாகின.  ஆசையின் படைப்புகளினூடு தனி மனித சுதந்திரம் கட்டவிழ்க்கப்படுகின்ற போதும் சில காரணிகள் முட்டுக்கடை. யாழ்ப்பாணத்து வாழ்வியல், யுத்தம், வணிகம் என்பன படைப்புலகத்தை வளர்த்துவிட மறுக்கிறது. படைப்பாளி தன்வாழ்வை படைப்பாக்கத்தில் முடுக்கி விடுவதென்பது இவ்வுலகில் சவாலான காரியம்.  இராசையா இதில் ஓரளவு வெற்றியும் கண்டார் என்றே கூறலாம். நூலைத்திறந்த்துமே ஓவிய விரிவுரையாளர் சரத் சந்திரஜீவாவின் ஆங்கில விமர்சனம், சுருக்கமான ஆசையின் சுயசரிதையோடு ஆரம்பிக்கிறது.

நெல் தூற்றல் – நீர்வர்ணம் 12 x 10 in 2007
தாய் மண்ணில் பொங்கல் – நீர்வர்ணம் 12 x 10 in 2007

ஆசை இராசையா – ஓவியனின் நவீன சுயத்தின் அடையாளம்
நூலினுள் கலாநிதி தா.சனாதனின் விமர்சத்தின் ஒரு பகுதி ;

எனவே ஓவியன் என்ற அடையாளத்தை தாபிக்க தொடர்ந்து தக்கவைக்க இராசையா ஓவியங்களை விற்கமுடியாத சூழலிலும் தொடர்ந்து பல்வேறு பாணிகளில் படைக்கிறார். சுயவுரு வரைகிறார். மற்வர்களிருந்து வேறுபட்ட நடை உடை பாவணனயைப் பின்பற்றுகிறார். இந்த அடையாள ஆற்றுகையினூடு சமூகத்தின் பொது மனப்போக்கிற்கு எதிராக சவால் விடுகிறார் அதினின்று வேறுபடுகிறார். பொது நடுத்தரவர்க்க வகைப்பாடுகளுக்குள்ளும் கரைந்து போகாதபடி சமரசம் செய்து கொள்ளாமல் இந்த சுயத்தின் ஆற்றுகைகள் அவரைதாக்குப்பிடிக்க செய்கின்றன. இவற்றினூடு தனது அருந்தற்தன்மையை தக்கவைக்கிறார் இதுவே தனது படைப்புக்களுக்கான உரிய அங்கீகாரமோ அன்றி சந்தை வாய்ப்போ கிடைக்காத நிலையிலும் அவர் தொடர்ந்து இயங்குவதற்கான காரணமாகிறது. இங்கு சுய திருப்தியே முக்கியம். இன்று தன்னை பற்றிய இந்த நூலைத்தானே எழுதி வெளியிடல் என்பதும் இதன் தொடர்ச்சியே. ஓவியன் என்ற நவீன சுய அடையாளத்தின் கொண்டாட்டமே.

கைபுனைவனப்பு – தைலவர்ணம்  24×18 in 1980

தொடர்ச்சியான வரைத்தலே ஆசையின் தேடலையும் தேர்ச்சியையும் முன்னிறுத்துகிறது. தெற்கிலும் வடக்கிலும் வாழ்ந்த ஆசையின் சிந்தனைகளின் பெறுபேறு அதன் தொடர்ச்சி இலங்கை யுத்தம் – தாண்டி வர்ணங்களில் நீச்சலடிப்பதென்பது இலகுவா என்ன. ஓவிய விமர்சகர்களும் ஓவிய ஊடகங்களும் ஓவியம் சேகரிக்கும்  வாடிக்கையாளர்களும் இல்லாத பாலைவனத்தில் வாழ்ந்து வர்ணத்தில் மூழ்கி முத்தெடுப்பதென்பது  அசாத்தியமனா காரியமே. அதையும் மீறி கனதியான நூலொன்றையும்  அச்சிடுவதென்பதும் விசித்திரமே.  அப்பாலும் புரிந்து கொள்ளமுடியாத அதிநவீன ஓவியங்களை கித்தானில் வரைந்திடவில்லை இராசையா. ஓவியங்களையும் ஓவியனையும் புரிந்துகொள்ளலென்பது சுய இனத்தின் வரலாற்றையும் வாசிப்பினூடும் காண்பியநிகழ்வின் தரிசனத்தினூடும் புரிந்தோமேயொழிய, ஓடி ஒளியவேண்டியதில்லை. ஆசை தன்னூலில் 25.07.1983 காலை கிருலப்பனவிலிருந்து றோயல் கல்லூரிக்கு பேருந்தில் பயணிக்கும் போது திம்ரிக்கசாய சந்தியில் பார்த்த கசப்பான சம்பவத்தையும், இனக்கலவரம் தீவில் அரங்கேறியிருப்பதையும் பதிவுசெய்கிறார். தான் கற்ப்பித்த பாடசாலையில் அகதியாகி அதிபர் விஜே வீரசிங்கேயின்  உதவியுடன் தப்பித்து கப்பலில் யாழ் சென்றடைந்தார். ஆசை தன்வாழ்வின் பாலமாக அமைந்த ஆளுமைகளுக்கு கடமைப்பாட்டுடன் நன்றிபயில்கிறார். நுண்கலைப்பீடத்தின் ஆசான்களையும் ஞாபகமூட்டுகிறார். சக படைப்பாளிகளின் திறமைகளையும் மதித்து பெருமிதம் கொள்கிறார். 2010ம் ஆண்டு கலாபூசணம் விருது கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கில் இராசையாவிற்கு கையளிக்கப்பட்டது. நூலின் உள்ளடக்க தலைப்புகளாக – ஊற்றுக்கண், முகை, மொட்டு, பொது, மலர், துலங்கல், வண்ண முதலுரு, சுவடுகள், கடப்பாடு.

உடல் சஞ்சிகை

அரங்கியல் காலாண்டிதழ்

ஏப்ரல் – டிசம்பர் 2021

 ஆக்கம் V.P. வாசுகன்  www.vasuhan.com 

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *