பிப்ரவரி 21
சர்வதேச தாய்மொழி தினம்

  • எம். ஏ. நுஃமான்
எம்.ஏ.நுஃமான் என்னும் தமிழறிஞர்: சில குறிப்புகள்.

தமிழ்மொழி எங்கள் தாய் மொழி
இந்த அரசியல் , சமூக, பண்பாட்டு , அடிப்படை உரிமையின் முக்கியத்துவத்தினையும் ,இதில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்பதை தெளிவாக உரைக்கும் பதிவு இது …

மொழி ஒரு சமூகத்தின் சமூக-பண்பாட்டு அரசியல் வாழ்வுடன் மிக நெருக்கமான உறவுகொண்டுள்ளது. கோட்பாட்டு மொழியியலாளர் வரையறுப்பதுபோல அது முற்றிலும் ஒரு தொடர்பாடல் ஊடகம் மட்டுமல்ல. அது ஒரு சமூகத்தின் தேசிய அல்லது இனத்துவ அல்லது பண்பாட்டு அடையாளமாகவும் மாறுகின்றது. அது மக்களை ஒன்றிணைக்கிறது, அதேபோல் பிரித்தும் வைக்கிறது. அது அவர்கள்மீது மேலாதிக்கம் செலுத்துகின்றது, அதுபோல் அவர்களைத் தன்மயமாக்குகின்றது. அது சமூக – அரசியல் எல்லைகளை நிர்ணயிக்கின்றது, அதனால், மோதல்களுக்கும் காரணமாகின்றது. மக்கள் தமது மொழி உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள், அதன் பொருட்டு உயிரையும் பலிகொடுக்கிறார்கள். அவர்கள் ஒரு மொழியை ஏற்றுக் கொள்கிறார்கள், அதுபோல் பிறிதொன்றை நிராகரிக்கின்றார்கள். மொழி இல்லாத எந்த ஒரு சமூகமும் உலகில் இல்லை. அவ்வகையில் மனித சமூகத்தில் மொழி ஒரு பெரும் பங்குவகிக்கிறது. சமூக வாழ்வில் அது பிரிக்கமுடியாத ஒரு அம்சமாகும்.

இன்று உலகில் சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு உண்டு. எனினும் இவற்றுள் நூறு மொழிகள்தான் உலக சனத்தொகையில் எண்பத்தைந்து வீதமான மக்களால் பேசப்படுகின்றன. மக்கள் தொகையைப் பொறுத்தவரை சீனம் இதில் முதல் இடத்திலும், ஆங்கிலம் மூன்றாவது இடத்திலும், அரபு ஐந்தாவது இடத்திலும், வங்காளம் ஏழாவது இடத்திலும், தமிழ் இருபதாவது இடத்திலும், சிங்களம் அறுபத்தி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

உலகின் மிகப் பெரும்பாலான மொழிகள் வளர்ச்சி அடையாத சிறுபான்மைச் சமூகங்களாலும், பழங்குடி மக்களாலும் பேசப்படுபவை. இவற்றுள் அநேக மொழிகள் எழுத்து வழக்கில் இல்லாதவை. உலக சனத்தொனையில் சுமார் 40 வீதமான மக்கள் தங்கள் தாய்மொழியில் கல்விபெறும் வாய்ப்பற்றவர்களாக உள்ளனர். அவர்களுடைய மொழிகளுக்கு வேறு சமூகப் பயன்பாடுகள் இன்மையால் அவை அழியும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளன. 42 வீதமான மொழிகள் இவ்வாறு அழியும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இரண்டு வாரத்துக்கு ஒருமொழி இவ்வாறு அழிந்துவருவதாகவும் கூறப்படுகின்றது.விரைவாக நடைபெற்றுவரும் பூகோளமயமாதல் காரணமாகவும், பின்காலனித்துவ நாடுகளில் மேலோங்கிவரும் இன, மத, மொழிப் பிரச்சினைகள்

காரணமாகவும் பெருந்தொகையான மக்களால் பேசப்படும் மொழிகள் கூட அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.

இந்தப் பின்னணியில்தான் சர்வதேச தாய்மொழி தினம் முக்கியத்துவம் பெறுகிறது.1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, பண்பாட்டு நிறுவனம் (யுனஸ்கோ) இதனைப் பிரகடனப்படுத்தியது. 2000 ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21 ஆம் திகதி உலகெங்கும் சர்வதேச தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மொழி, பண்பாட்டுப் பன்மைத்துவத்தையும் பல்மொழிச் சூழலையும் ஊக்கப்படுத்துவதும் அதன்மூலம் உலக மொழிகளைப் பேணிப் பாதுகாத்து மேம்படுத்துவதும் இதன் நோக்கம் எனலாம்.

பிப்ரவரி 21 ஆம் திகதி இதற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் என்ன? இங்குதான் சர்வதேச தாய்மொழி தினப் பிரகடனத்தில் வங்காள தேசத்தின் முக்கியத்துவம் இருக்கிறது. சர்வதேச தாய்மொழி தினம் ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 21 ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என்ற பிரேரணையை வங்காள தேச அரசுதான் யுனஸ்கோவில் முன்மொழிந்தது. அது 1999 நவம்பரில் யுனஸ்கோவால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. பிப்ரவரி 21 வங்காளிகளின் மொழி உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய தினமாகும். இதைப் புரிந்துகொள்வதற்கு வங்க தேச வரலாறு பற்றிய ஒரு சிறு குறிப்பு அவசியமாகும்.

1947ல் இந்தியப் பிரிவினையின் போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு வங்காளம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டு கிழக்குப் பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. புவியியல்ரீதியில் கிழக்கு, மேற்குப் பாக்கிஸ்தான்களுக்கிடையே சுமார் 1700 கிலோ மீற்றர் இடைவெளியுண்டு. மேற்குப் பாகிஸ்தானைவிட கிழக்குப் பாகிஸ்தானில் சனத்தொகை அதிகம். மேற்குப் பாகிஸ்தானில் உருது பேசுவோர் பெரும்பான்மை. கிழக்குப் பாகிஸ்தானில் வங்காளி பேசுவோர் மிகப் பெரும்பான்மை. மதம் தவிர பிற எல்லாவகையிலும் வேறுபட்ட இரு பிராந்தியங்கள் அரசியல் ரீதியில் ஒன்றிணைக்கப்பட்டன. அதேவேளை மேற்குப் பாகிஸ்தான் கிழக்குப் பாகிஸ்தான் மீது ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கியது. வங்காளிகளின் மொழி உரிமையை மறுத்து 1948ல் உருது மொழி பாக்கிஸ்தானின் ஒரே தேசிய மொழியாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. வங்காளிகள் தங்கள் மொழி உரிமைக்காகப் போராடத் தொடங்கினர். 1952 பிப்ரவரி 21ல் டாக்கா பல்கலைக்கழக

மாணவர்களும் இலட்சக் கணக்கான பொதுமக்களும் மொழி உரிமைகோரி வீதியில் இறங்கினர். பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஐவர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். வங்காள தேசத்தின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக அது அமைந்தது. நீண்ட போராட்டத்தின் பின்னர் 1971ல் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து இந்தியாவின் துணையுடன் வங்காளதேசம் உருவானது வரலாறு.

பிப்ரவரி 21 வங்காள தேசத்தில் தேசிய விடுமுறை தினமாகும். இலட்சக் கணக்கான மக்கள் தங்கள் மொழி உரிமைக்காக உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூரும் நாள். மொழி உரிமை மனிதர்களுக்கு எவ்வளவ முக்கியமானது என்பதை நினைவூட்டும் நாள். வங்கதேசம் அதை சர்வதேச அளவில் முன்னெடுத்தது, எவ்வளவு சிறுபான்மையினராயினும் உலக மக்கள் அனைவருக்கும் மொழி உரிமை அடிப்பாடையானது, அது பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை வலியுறுத்துவதாகவும் இது அமைகின்றது.

இலங்கையில் வங்கதேச உயர் தூதரகம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து 2015 ஆம் ஆண்டுமுதல் சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடிவருகின்றது. கலை, இலக்கியப் போட்டிகள் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் கவனஈர்ப்பு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகின்றது. மொழி, பண்பாட்டுப் பன்மைத்துவம், எல்லோரையும் உள்ளீர்த்தல் என்பவற்றின் முக்கியத்துவத்தை முதன்மைப்படுத்துவது இதன் நோக்கமாகும். பல்வேறு மொழி, இனத்துவப் பாரம்பரியங்களைச் சேர்ந்த சிறுவர்களும் இளைஞர்களும் இதில் பங்குபெறுகின்றனர். தய்மொழி, மொழிகளின் சர்வதேசத் தன்மை என்பன பற்றிய அவர்களுடைய சிந்தனை, ஆக்குதிறன் என்பவற்றைத் தூண்டிவிடுதல் இதன் நோக்கமாகும்.

இவ்வாண்டு தாய் – தாய்மொழி – தாய்நாடு என்ற தொனிப்பொருளில் இளைஞர்களுக்கான கவிதை, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் பரிசு பெறுவோருக்கு பிப்ரவரி 21 ஆம் திகதி சுதந்திரச் சதுக்கத்தில் நடைபெற உள்ள சர்வதேச தாய்மொழி தின விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

யுனஸ்கோ இவ்வாண்டு சர்வதேச தாய்மொழி தினத்துக்கான தொனிப்பொருளாக பல்மொழிக் கல்விக்குத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் – சவால்களும் வாய்ப்புகளும் (Using Technology for Multi-lingual Learning: Challenges and Opportunities) என்பதைத் தெரிவுசெய்துள்ளது. சமமற்ற வளர்ச்சி பெற்றுள்ள இன்றைய உலகில் இது ஒரு முக்கிய ஆய்வுப் பொருளாகும். வளர்ச்சி அடைந்த நாடுகள் நவீன தொழில் நுட்பத்தை கல்வியில்,, குறிப்பாக மொழிக் கல்வியில்,, நீண்டகாலமாகப் பயன்படுத்திவருகின்றன. ஆனால், வளர்முக நாடுகளில் இது மிக அரிதாகும். இந்நாடுகளில் அதற்குரிய வாய்ப்பும் வளமும் மிகக் குறைவாகும். குறிப்பாகக், கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் 19 பெருந்தொற்றுக் காரணமாக வளர்முக நாடுகளில் கல்வி பொதுவாகவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யுனஸ்கோ வெளியிட்டுள்ள, 143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, உயர் வருமானம் உள்ள நாடுகளில் 96 வீதமானவை குறைந்த பட்டசம் ஒரு கல்வி நிலையிலாவது இணையவழித் தொலைக் கல்வி வாய்ப்புகளை வழங்கின. ஆனால் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 58 வீதம் மட்டுமே இந்த வாய்ப்பை வழங்கின. குறைந்த வருமானம் உடைய பெரும்பாலான நாடுகள் தொலைக்காட்சி (83%), வானொலி (85%) ஆகியவற்றையே பயன்படுத்தின. தொலைக் கல்வியைப் பயன்படுத்துவதற்குரிய திறன்களும் தயார்நிலையும் ஆசிரியர்களிடம் இல்லை. பெரும்பாலான மாணவர்களுக்குத் தேவையான கருவிகள், இணைய வசதி, கற்றல் உபகரணங்கள், தொலைக் கல்வியைத் தொடர உதவும் மனித உதவி என்பன இல்லை, மேலும் தொலைவழிக் கற்றல் கற்பித்தல் உபகரணங்கள், திட்டங்கள், உள்ளடக்கம் என்பன எப்போதும் மொழிவேறுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடியதாகவும் இல்லை என அந்த அறிக்கை மேலும் கூறுகின்றது.

இந்த யதார்த்தத்தை மாற்றுவதற்கு ஒவ்வொரு நாடும் முயற்சியெடுக்க வேண்டும். சர்வதேச தாய்மொழி தினம் இதுபற்றிய ஒரு கவன ஈர்ப்பை நம்மத்தியில் ஏற்படுத்தலாம். இலங்கை போன்ற ஒரு பல்லின, பல்மொழிச் சமூகத்தில் இக்கவன ஈர்ப்பு மிக அவசியமானது. சுதந்திரத்துக்குப் பிந்திய காலத்தில் நமது நாடு மொழி மேலாதிக்கத்தினால் ஆழமாகப் பிளவுண்டது. இன்னும் நாம் அதிலிருந்து முற்றிலும் மீளவில்லை. இன, மத, மொழி பேதமற்ற சமத்துவ இலங்கையை நோக்கிய ஒரு நீண்ட பயணத்தில் நாம் இருக்கிறோம். இந்த நீண்ட பாதையைக் குறுக்குவதற்குப் பல்மொழிக் கல்வியும் நமக்கு உதவக்கூடும்.

இலங்கை பலமொழி பேசும் ஒரு நாடு எனினும் இலங்கையின் மிகப் பெரும்பாலான மக்கள் ஒருமொழியாளர்களாகவே உள்ளனர். இந்நிலை மாறவேண்டுமானால் இலங்கையில் இருமொழி அல்லது மும்மொழிக் கல்வி கட்டாயமாக வேண்டும். தாய்மொழியோடு ஒரு தேசிய மொழியையும் அத்துடன் இணைப்பு மொழியாக ஆங்கிலத்தையும், முடிந்தால் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு வேற்று மொழிகளையும் கற்றல் பயனுடையது.

சுமார் பத்து ஆண்டுகளுக்குமுன் அன்று ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்கள் மும்மொழி இலங்கை (Trilingual Sri Lanka ) என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். பத்து ஆண்டுகளில் இலங்கைச் சமூகத்தை மும்மொழிபேசும் சமூகமாக மாற்றுவது அதன் நோக்கம். இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு மிக அவசியமான ஒரு திட்டம் அது. துரதிஷ்டவசமாக அது இடையில் கைவிடப்பட்டுவிட்டது. பல்மொழிப் பண்பாட்டை வலியுறுத்தும் சர்வதேசத் தாய்மொழி தினத்தில் இலங்கையில் மும்மொழிக் கல்வித் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒரு கோரிக்கையாக முன்வைக்கலாம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *