அரசுதரப்பின் நட்சத்திர சாட்சியத்தின் சோடனையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா அவர்கள்.
போப் துரை அந்த துரைபங்களாவில் தனியாகத்தான் இருந்திருக்கிறார். துரைச்சாணி 15 அல்லது 20 நாட்களுக்கு முன்னர்தான் துரையை விட்டுச்சென்றிருக்கிறார். இருவரும் இணைந்து வாழ்ந்ததாகத் தெரியவில்லை. போப் துரையின் மரணச்சடங்கிலும் துரைச்சாணி கலந்துகொள்ளவில்லை. போப் துரையின் மரணத்தின் பின் அத்துரைச்சாணி பங்களாவிற்கு வந்து சில துணிமணிகளை எடுத்துச்சென்றதாகத் தெரிகிறது.
மற்றபடி சமையல் அப்புவாக செபஸ்தியான் பெர்னாண்டஸ் என்ற 45 வயது நபரும், அவரது மகன் பிலிப் பெர்னாண்டோவும் பங்களாவில் வேலை செய்பவர்கள். கேரளாவில் கொல்லத்தைச் சேர்ந்த மலையாளிகள் அவர்கள். அவர்களுடன் பிச்சை என்றழைக்கப்படும் வீரமுத்து தோட்டக்காரனாக பங்களாவில் வேலைபார்க்கிறார்.
டென்னிஸ் விளையாடுவதற்காக எப்போதாவது கிளப்பிற்கு போவதைத்தவிர போப் துரை அதிகம் வெளியில் செல்வதில்லை. தோட்டம், வேலை, ஒழுங்கு, கண்டிப்பு என்று பழக்கப்பட்டவர்.
அன்று ஒன்பதாம் திகதி பக்கத்துத் தோட்டத்துரையின் அழைப்பின்பேரில் இரவு விருந்திற்குச் செல்வதென ஏற்பாடாகியிருந்தது. போப் துரை அன்று இரவுணவிற்கு வெளியில் செல்வதாக சமையல் அப்புவின் மகன் பிலிப்பிற்கு அன்று பிற்பகல் 4.00 மணியளவில்தான் துரை சொல்லியிருக்கிறார். அன்றைய தினம் பங்களாவில் மேசன்வேலை பார்க்க ஐயன் பெருமாள் வந்திருக்கிறார்.
ஐயன் பெருமாள், சமையல் அப்பு, அவரது மனைவி, மகன் பிலிப் ஆகியோர் பங்களாவிற்கு அருகிலுள்ள லயத்திலேயே வசிக்கிறார்கள்.
பங்களாவில் வேலையை முடித்துவிட்டு, லயத்திற்கு வந்த பிலிப் தனது அறையில் கிராமபோன் போட்டுக்கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார். ‘என்ன, சத்தமாயிருக்கிறது?’ என்று ஐயன் பெருமாள் பிலிப்பிடம் கேட்டிருக்கிறார். இந்தக் கேள்வியிலிருந்து பிலிப்பிடம் ஐயன் பெருமாள் தொடர்ந்து எழுப்பிய கேள்விகள் கொலைச் சம்பவத்தில் ஐயன் பெருமாளுக்கு தொடர்பு இருப்பதான வலுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
பங்களாவில் துரையின் இரவுணவைத் தயார்செய்துகொண்டிருக்க வேண்டியவன் இங்கே லயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்ற தொனியில், ‘துரை எங்கே?’, ‘வேலை பார்க்காமல் இங்கே என்ன கிராமபோன் கேட்டுக்கொண்டிருக்கிறாய்?’ என்ற ஐயன் பெருமாளின் கேள்விகளுக்கு, ‘துரை இரவு விருந்துக்கு வெளியில் போய்விட்டார்’ என்று பிலிப் பதில் சொல்லியிருக்கிறார். இந்தப் பதிலை அடுத்து, ‘எப்போது துரை பங்களாவிற்குத் திரும்பி வருவார்? என்று பிலிப்பிடம் ஐயன் பெருமாள் கேட்டதற்கு, தனக்குத் தெரியாது என்று பிலிப் பதில் சொல்லியிருக்கிறார்.
போப் துரை இரவு விருந்துண்ண தோட்டத்தைவிட்டு வெளியில் சென்றிருக்கிறார் என்ற அரிய தகவல் ஐயன் பெருமாளுக்குத் தெரிந்து விட்டது என்ற தகவல் பொலிஸ் தரப்பிற்குத் தெரியவந்தபோது, ஐயன்பெருமாளை நோக்கிய பொலிஸின் பிடி இறுகத் தொடங்கியது. அதிலும் இக்கொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் எனக்கருதப்பட்ட முதலாம் எதிரியான வீராசாமியுடனும், இரண்டாவது எதிரியான வேலாயுதத்துடனும் கொலைச் சம்பவத்தின்போது ஐயன் பெருமாள் காணப்பட்டமை போன்ற சாட்சியங்கள் ஐயன் பெருமாளுக்கு எதிராக அமைந்தன.
மெய்யப்பனைத் தோட்டத்தைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டும், அவர் அத்துமீறித் தோட்டத்தில் இருப்பதற்கு எதிராக பொலிஸ் பிடியாணை பிறப்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார் போப் துரை. மெய்யப்பனைத் தேடி பொலிஸ் ஸ்டெலென்பேர்க் தோட்டத்திற்குச் சென்றபோது மெய்யப்பன் தோட்டத்தில் இல்லை. பொலிஸ் மெய்யப்பனைத் தேடித் தோட்டத்திற்கு வந்த தகவலைச் சொல்வதற்கு மெய்யப்பனைத் தேடி, கண்டிக்குப்போன வீராசாமி, வேலாயுதம், குப்புசாமி, ராசகவுண்டன் ஆகியோர் பொலிஸ் வலைக்குள் வந்தனர். வேலாயுதம் கொடுத்திருந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாரிமுத்து வேலு, ரெங்கசாமி ஆகியோரும் சந்தேகநபர்கள் பட்டியலுக்குள் வந்தனர்.
சந்தேகநபர்களைக் கைதுசெய்து வசதியான வாக்குமூலம் பெறுவதில் இன்ஸ்பெக்டர் எஸ்.பி.தோரதெனிய முழுமூச்சில் இறங்கியிருந்தார்.
‘முதலாம் எதிரியை (வீராசாமி) நான் ஒருபோதும் அடித்ததில்லை; அவருடைய காதைத் திருகியதுமில்லை; அவருடைய வயிற்றில் குத்தியதுமில்லை. என்னமாதிரி வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என்று நான் இரண்டாம் எதிரிக்கு (வேலாயுதம்) சொன்னதேயில்லை. நான் சொன்ன மாதிரி வாக்குமூலம் கொடுக்காவிட்டால் நீ தூக்குமேடைக்குத்தான் போக வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னதில்லை. அவரைச் சுட்டுக்கொன்றுவிடுவேன் என்றும் நான் அவரிடம் சொன்னதில்லை. வாக்குமூலம் கொடுத்தால் அவரை ஒரு சாட்சியமாக்குவேன் என்றுதான் கூறினேன். நான் சொன்னபடி வாக்குமூலம் தராவிட்டால் உன்னைத் தூக்குமேடைக்குத்தான் அனுப்புவேன் என்று நான் ஒருபோதும் ஐந்தாம் எதிரிக்கு (சின்ன முனியாண்டி) சொன்னதில்லை. ஒழுங்காய் வாக்குமூலம் கொடுக்காவிட்டால் உன்னை ஆற்றில் தூக்கி எறிவேன் என்றோ, பிறகு நீயாகவே ஆற்றில் குதித்துவிட்டாய் என்று நானே அறிக்கை எழுதிக்கொடுத்துவிடுவேன் என்றோ நான் அவரிடம் சொன்னதில்லை. நான் சொன்னபடி வாக்குமூலம் தந்தால் உன்னைப் போக விட்டுவிடுவேன் என்று நான் அவரிடம் சொன்னதில்லை. நான் அறிவுறுத்துகிறபடி வாக்குமூலம் தராவிட்டால் உன்னை தூக்குமேடைக்கு அனுப்புவேன் என்று நான் ஆறாவது எதிரிக்கு (மாரிமுத்து வேலு) சொன்னதில்லை. நான் சொன்னபடி செய்யாவிட்டால் உன்னைச் சுட்டு ஆற்றில் தூக்கிப்போட்டுவிட்டு, நீயாக ஆற்றில் குதித்துவிட்டாய் என்று அறிக்கை எழுதி அனுப்பிவிடுவேன் என்றும் நான் அவரிடம் கூறியதில்லை.’
இந்தக் கொலைவழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்பட்ட அனைவரையும் கைது செய்து, அவர்களிடம் வாக்குமூலம் எடுத்த எஸ்.பி.தோரதெனிய என்ற பொலிஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் இது.
‘ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவரைப் பிடித்து, அவரை என்ன பண்ணியும் முறையாகவோ முறையில்லாமலோ குற்றவாளியாக்கி, உயர்மட்ட அதிகாரிகளின் பாராட்டைப்பெறுவதற்கு கீழ்மட்ட நிலையில் பொலிஸ் அதிகாரிகள் எதையும் செய்வார்கள். தோரதெனிய சாதாரண கான்ஸ்டபிளாக இருந்து, சார்ஜனாக பதவிபெற்று, பின் சப்-இன்ஸ்பெக்டராகி, இப்போது இன்ஸ்பெக்டராகி இருப்பவர். இந்த வழக்கில் வெற்றிபெற்று இன்னும் ஒரு பதக்கத்தைச் சூடிக்கொள்ள எதற்கும் தயாராயிருப்பவர்’ என்று தோரதெனியபற்றி நீதிமன்றத்தில் கூறுகிறார் வழக்கறிஞர் ஆர்.எல்.பெரேரா.
போப் துரையின்மீதான தாக்குதலில் முதல் எதிரியாகக் கருதப்பட்ட வீராசாமிக்கு எதிராக அமைந்த முதல் சான்று, தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவப்புநிறக் கைக்குட்டையின் ஒரு முனையில் பிணைக்கப்பட்டிருந்த கதவுச் சாவி, வீராசாமியின் காம்பிராக் கதவிற்குமட்டுமே சரியாக இருந்ததென்பதும், வேறெந்த காம்ராக் கதவுகளுக்கும் அது பொருந்தவில்லை என்றும் பொலிஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டது. இது வீராசாமிக்கு எதிரான இடச்சூழல் சான்றாக (circumstantial evidence) அரசுதரப்பால் முன்வைக்கப்பட்டது.
போப் துரையைத் தாக்கிப் போராடியவர்களில் வீராசாமியும் இருந்தார் என்று குப்புசாமி அளித்த வாக்குமூலமும், நிகழ்ச்சி நடந்த அந்த இரவுநேரத்தில் வீராசாமி அந்த இடத்தில் காணப்பட்டார் என்று வேறும் பல சாட்சியங்கள் அளித்தவாக்குமூலமும் வீராசாமிக்கு எதிராக அமைந்தன.
தாக்குதல் நடந்த இடத்தில் காணப்பட்ட தாயத்துக்கயிறு வேலாயுதம் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஒன்று என்றும், வேலாயுதத்தின் கழுத்தின் நடுப்பாகத்தில் காணப்பட்ட – ஒருநாட்பட்ட காயமானது, போப்துரையின்மீதான தாக்குதலின்போது நடைபெற்ற போராட்டத்தில், வேலாயுதத்தின் கழுத்தில் தொங்கிய தாயத்துக்கயிறு அழுத்தமாக இழுக்கப்பட்டதால் வந்த காயமென்றும் அரசுதரப்பில் கூறப்பட்டது.
வேலாயுதத்தின் வேஷ்டியில் காணப்பட்ட ரத்தக்கறை மனித ரத்தக்கறை என்று அரசுதரப்பில் வாதிக்கப்பட்டபோது, அது அட்டைக்கடியால் ஏற்பட்ட ரத்தம் என்றும், வேஷ்டியில் ரத்தம் படிந்திருந்தமாதிரியைப் பார்த்தபோது, அது அட்டை கடித்ததால் ஏற்பட்ட ரத்தக்கறை என்றும் வேலாயுதம் தரப்பில் கூறப்பட்டது.
கொலைச்சம்பவம் நடந்த மறுநாள் இவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டார்கள் என்பதும் இவர்கள்மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
போப்துரை கொலைவழக்கு முதன்முதலில் 1941 ஜூன் 9ஆம் திகதி கம்பளை மாஜிஸ்ட்ரேட் திரு. ஐவர் டி சேரம் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அரசுதரப்பில் திரு ஓ.எல்.டி. கிரெட்சர் வழக்கைத் தாக்கல்செய்ய, அனைத்து சந்தேகநபர்களின் சார்பிலும் திரு சரித்த ரணசிங்க அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், திரு சி.எஸ்.பி. குமாரகுலசிங்க ஆஜரானார்.
‘இந்த வழக்கில் எனது கவனத்தை மிகவும் ஈர்க்கின்ற விடயம் ஒன்றே ஒன்றுதான், அதாவது இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்ற எல்லோரும், பொலிஸார் தம்மைக் கீழ்த்தரமாக நடத்தினார்கள் என்று தத்தமது சட்டரீதியான வாக்குமூலங்களில் கூறியிருக்கிறார்கள் என்பதும், நீதவான் முன்னிலையில் ஏற்கனவே குற்ற ஒப்புதல் செய்தவர்கள்கூடப் பொலிஸாரின் வற்புறுத்தலின்பேரில்தான் அவ்வாறு தமது குற்ற ஒப்புதலைக் கைவாங்கினார்கள் என்பதும்தான். அவர்கள் இவ்வாறு பின்னர் கைவாங்குவார்கள் என்பது, விசாரணை நடவடிக்கைகளின்போதும், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் தமக்கு வேண்டிய வழக்கறிஞர்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டபோதும், முன்னறிகுறியாகத் தெரிந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சி.ரணசிங்க அவர்கள் நீதவான் முன்னரான விசாரணையின்போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தம்மிச்சையாகவே தமது குற்ற ஒப்புதல்களைக் கைவாங்கியுள்ளார்கள் என்பதை நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இந்த வழக்கின் சூத்திரதாரியான வில்லன், சாத்தன் கங்காணிதான் என்ற குறிப்பு, ஆரம்ப விசாரணையின் எந்தக்கட்டத்திலும் தெரிவிக்கப்படவில்லை. சாத்தன் கங்காணி பற்றிய குறிப்பு, விளக்க நீதிபதியின் முன்னரான விளக்கத்தின்போதுதான் முதன்முதலாகத் தெரிவிக்கப்பட்டது; அதுவும் நீதவான் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் செய்த குற்ற ஒப்புதல்கள் சுயேச்சையாகவே செய்யப்பட்டனவென்றும், அதனால் அவை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவை என்றும் விளக்க நீதிபதி முடிவுசெய்த பின்னர்தான் தெரிவிக்கப்பட்டது’ என்று சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலங்கள் சுயேச்சையாக வழங்க்கப்பட்டன என்றும், அவை சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளத்தக்கன என்றும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோது, சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலங்களே அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டன.
பின்னர் இந்த வழக்கு கம்பளையிலிருந்து கொழும்பு பிரதான அசைஸ் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டு, நீதவான் சொயர்ஸ் அவர்களின் முன்னிலையில் 1941 டிசம்பர் முதலாந்திகதி விசாரணை ஆரம்பமானது.
10
கொழும்பில் இந்த வழக்கு விசாரணை ஆரம்பித்தபோது, கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்களுக்காக ஆஜரான திரு.ஆர்.எல்.பெரேரா சட்டமுக்கியத்துவம் வாய்ந்த வலிமையான வாதங்களை முன்வைத்தார்.
முதலாவது, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆறு நபர்களில், முதலாவது எதிரியான வீராசாமி, மூன்றாவது எதிரியான ஐயன் பெருமாள், நான்காவது எதிரியான ரெங்கசாமி ஆகியோரின் வழக்குகளைத் தனி வழக்காகவும், இரண்டாவது எதிரியான வேலாயுதம், ஐந்தாவது எதிரியான சின்ன முனியாண்டி, ஆறாவது எதிரியான மாரிமுத்து வேலு ஆகியோரின் வழக்குகளைத் தனியாகவும் விசாரணைசெய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் பெரேரா தனது வாதத்தை முன்வைத்தார்.
வேலாயுதம் (2ஆம் எதிரி), சின்ன முனியாண்டி (5ஆம் எதிரி), மாரிமுத்து வேலு (6ஆம் எதிரி) ஆகியோரின் வாக்குமூலங்கள், ஏனைய கைதிகளை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்தி, குற்றத்திற்குட்படுத்தும் ஆவணங்களாக அமைந்திருப்பதால் அவர்களின் வழக்குகளைத் தனி வழக்காக விசாரிக்க வேண்டும் என்பது பெரேரா அவர்களின் வாதம். மரணமுற்றவரைக் கொலைசெய்யும் பொதுவான நோக்கத்தின் அடிப்படையிலேயே குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஒன்றுசேர்ந்து செயற்பட்டுள்ளனர் என்றே இவர்கள் அனைவரின்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபர்கள்மீது எத்தகைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதென்பதைத் தீர்மானிக்கும் தகுதிகொண்டதாக அரசுதரப்பு விளங்குகிறது. கைதிகள் கூட்டாக விசாரணை செய்யப்பட வேண்டுமா? அல்லது தனித்தனியாக விசாரிக்கப்பட வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கும் விருப்புடை அதிகாரம் விசாரணைசெய்யும் நீதிமன்றுக்கு உண்டு என்று நீதவான் தனது நியாயத்தை முன்வைத்தார்.
கூட்டாக இந்த வழக்கினை விசாரணை செய்யும்போது, நீதி வழங்குவதில் தவறு இழைக்கப்படக்கூடுமா? என்பதையே நாம் கவனத்தில்கொள்ள வேண்டும் என்று நீதவான் கருத்துத் தெரிவித்தார்.
இதை விட 2ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகள் ஏனைய கைதிகளின்மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு, தங்களை இப்பழியிலிருந்து விடுவித்துக்கொள்ளும் நோக்கில் தங்களின் வாக்குமூலங்களை அளித்திருக்கவில்லை என்றும், 2ஆம் எதிரியின் வாக்குமூலம் பிற கைதிகளை இந்த வழக்கில் சம்பந்தப்படுத்துகிறது என்பதோடு, தன்னையுமே சேர்த்துச் சம்பந்தப்படுத்தியிருக்கிறார் என்பதையும், 5ஆம், 6ஆம் எதிரிகள் சம்பவம் நடந்த இடத்தில் தங்களின் பிரசன்னத்தைத் தாங்களே தங்களின் வாக்குமூலத்தில் கொண்டுவந்திருக்கிறார்கள் என்றும் நீதவான் எடுத்துக்கூறி, கூட்டாகவே இந்த வழக்கு விசாரணை செய்யப்படும் என்று அறிவுறுத்தினார்.
ஜூரிமார்கள், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள சாட்சியங்களில் எவற்றை அனுமதிக்கலாம், எவற்றை அனுமதிக்க முடியாது என்று வேறுபடுத்திப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவார்கள் என்ற வாதத்தை நீதவான் நிராகரித்தார்.
வேலாயுதம் அளித்த வாக்குமூலம் ‘அதிகாரபலம் வாய்ந்த ஒருவரின் மருட்டுரையால்’ பெறப்பட்டிருக்கிறது என்ற முக்கியவாதம் குற்றவாளிகள் தரப்பில் வாதிக்கப்பட்டது.
போப்துரை கொலைசெய்யப்பட்ட ஸ்டெலென்பேர்க் தோட்டத்திலிருந்து பத்து மைல் தொலைவில் அமைந்திருக்கும் ப்ரோடொப்ட் (Frotoft) தோட்டக் கண்டக்டராகப் பணியாற்றும் ஆர்.ஜி.சந்தியாகு வழக்குவிசாரணையில் அளித்த வாக்குமூலம் இது: ‘கருப்பையா கணக்கப்பிள்ளையுடன் காலை 9.30 மணியளவில் மலைவேலைக்குப் போய்க்கொண்டிருக்கையில், தான் நடந்துபோய்க்கொண்டிருந்த பாதைக்குக்கீழ்ப் பாதையில் முன்பின் தெரியாத ஒருவர் காட்டுப்பக்கமாக நடந்துபோய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன். கணக்கப்பிள்ளையிடம் சொல்லி அந்த ஆளைக் கிட்டவரச் சொன்னேன். அவரும் எங்களுக்கருகில் வந்தார். அவரை அதற்குமுன் நான் கண்டதில்லை. எங்கிருந்து வருகிறீர்கள்? என்று அவரிடம் கேட்டபோது முல்லோயா தோட்டத்திலிருந்து வருவதாகவும், காட்டுக்கு அப்பாலிருக்கும் மேமலைத் தோட்டத்தில் தனது மாமனாரைப் பார்க்கப் போய்க்கொண்டிருப்பதாகவும் சொன்னார். மாமனாரின் பெயரைக் கேட்டபோது ‘ராமசாமி’ என்று சொன்னார். அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரில் நடுக்கம் தெரிவதையும் தொடர்ந்துபேசத் தடுமாறுவதையும் அவதானித்தேன். தனது பெயர் ‘ஆறுமுகம்’ என்றும் சொன்னார். அந்தநேரத்தில் கொலையாளிகள்பற்றி பொலிஸ் விடுத்திருந்த நோட்டீஸை பொக்கெட்டில் வைத்திருந்தேன். அவர் உடுத்திருந்த வேஷ்டியில் ரத்தக்கறை இருப்பதையும் அவதானித்தேன். நான் வைத்திருந்த நோட்டீஸை எடுத்துப்பார்த்தபோது, அதில் தேடப்படுபவர்பற்றித் தரப்பட்டிருந்த குறிப்புகள் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவரோடு ஒத்துப்போவதுபோல் தோன்றியதும், அவரது இடுப்பை ஒருகையாலும் மற்றக்கையால் அவர் தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, அந்தத் துண்டால் அவரது கைகளைச்சேர்த்துக் கட்டுமாறு கணக்கப்பிள்ளையிடம் சொன்னேன். பிறகு அவரை என்னுடன் எனது பங்களாவிற்கு கூட்டிச்சென்றேன். தன்னை விட்டுவிடுமாறு அவர் அப்போது தன்னிடம் கேட்டார். அவர் உண்மையைச் சொன்னால், தான் அவரை விட்டுவிடுவதாகச் சொன்னேன். போகும்வழியில் தனது பெயர் வேலாயுதம் என்றும், தான் ஸ்டெலென்பேர்க் தோட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் சொன்னார். சிறிதுதூரம் சென்றதும் போப் துரையைத் தாக்கினீர்களா? என்று கேட்டதற்கு, அவர் ‘ஆம்’ என்று பதிலளித்தார். ‘உண்மை சொன்னால் நான் விட்டுப்போடுவேன்’ என்று அவரிடம் சொன்னேன். பங்களாவிற்குக் கூட்டிச்சென்று போர்டிக்கோவில் தரையில் உட்காரச்சொல்லிவிட்டு தோட்டத்து கிளார்க்கிற்குப் போன்பண்ணிச் சொன்னேன். பிறகு ஆபிசிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அங்கிருந்து புசல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்து, இரண்டாவது எதிரியாக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.’
கண்டக்டர் சந்தியாகு அப்போது காக்கி உடை அணிந்திருந்ததால், வேலாயுதம் அவரை பொலிஸாக நினைத்திருக்கலாம். சந்தியாகு, வேலாயுதத்தைக் கைதுசெய்யும் அதிகாரம் கொண்டவரல்ல என்றும், உண்மையைச் சொன்னால் அவரை விட்டுவிடுவேன் என்று அவர் பசப்புரை செய்திருக்கிறார் என்றும் வழக்கறிஞரின் வாதம் அமைந்தது.
‘ஒருவருக்கெதிரான ஏதேனும் குற்றச்சாட்டுத் தொடர்பில் அவர் செய்கின்ற குற்ற ஒப்புதலானது, அதிகார பலம் வாய்ந்த ஒருவர் கூறுகின்ற மருட்டுரையால் அல்லது அச்சுறுத்தலால் அல்லது வாக்குறுதியினால் செய்யப்பட்டது என்றும், அல்லது அத்தகைய அதிகாரபலம் வாய்ந்த ஒருவரின் முன்னிலையிலும் அவருடைய அங்கீகாரத்துடனும் செய்யப்பட்டது என்றும், அத்தகைய குற்ற ஒப்புதலைச் செய்வதன்மூலம், தமக்கு ஏதேனும் அநுகூலம் ஏற்படுமென்று அல்லது அத்தகைய குற்ற ஒப்புதலைச் செய்வதன்மூலம் தமக்கெதிரான வழக்குத்தொடரில் தமக்கு வரக்கூடிய தீங்கினைத் தவிர்க்கலாம் என்று அவர் நியாயமாக எண்ணுவதற்கான ஏதுக்களை அத்தகைய மருட்டுரை, அச்சுறுத்தல் அல்லது வாக்குறுதி, குற்றஞ்சாட்டப்பட்டவருக்குக் கொடுப்பதற்குப் போதுமானவை என்றும் நீதிமன்றுக்குத் தோன்றினால், அத்தகைய குற்றஞ்சாட்டப்பட்டவரால் அளிக்கப்பட்ட குற்ற ஒப்புதல், குற்றவியல் நடவடிக்கைகளில் இயைபானதாகாது’ என்ற சட்டமூலம் எதிரித்தரப்பில் வலிமையாக ஆதாரப்படுத்தப்பட்டது.
சந்தேகநபர்கள்மீதான விசாரணை ஆரம்பமான பின்னரே, அவர்கள்மீதான குற்றச்சாட்டு என்ன என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும், அவ்வாறு இந்த வாக்குமூலங்கள் பெறப்படாததால், குற்றவழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வாக்குமூலங்கள் செல்லுபடியாகாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், சந்தேகநபர்கள் அளித்த வாக்குமூலங்கள் குற்றவழக்கு விசாரணைமுறைத் தொகுப்புச் சட்டத்திற்கு (Criminal Procedure Code) இயைபானதே என்று சட்ட முன்னுதாரணங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி, நீதவான் சொயர்ஸ் அவர்கள் அந்த வாக்குமூலங்களுக்கு சட்ட ஏற்புடைமையை உறுதி செய்தார்.
தொடரும்.