கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி

கார்த்திகேசு சிவத்தம்பி

மாமேதை காரல் மார்க்ஸ் இறந்தபோது, அவருடைய நண்பர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார்’ என்றாராம். தான் வாழ்ந்த காலம் முழுவதும் உலகின் முகத்தை மாற்றியமைக்கச் சிந்தித்துக் கொண்டிருந்தவர் காரல் மார்க்ஸ். எனவே தான் அவருடைய மரணத்தில் அவர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என்று என்று ஏங்கெல்ஸ் குறிப்பிட முடிந்தது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் இறந்தபோது, ‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார்’ என்று எழுதினார் கருணாநிதி. தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமமாகத் தன் காலடி பதித்து, ‘கடவுள் இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி’ என்று முழங்கினார் பெரியார். தனது இறுதிக் காலம் வரை ஓயாது பயணம் மேற்கொண்டிருந்த அம்மனிதன், தனது மரணத்துக்குப் பிறகு பயணப்பட முடியாது என்பதைத்தான் கருணாநிதி அப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். ‘தனது ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி’ – இப்படித்தான் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி மரணத்தைக் குறிப்பிடத் தோன்றுகிறது.

தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இன்றித் தொடர்ந்து ஆய்வுச் செயல்பாட்டில் இருந்தவர் கா.சிவத்தம்பி. தன் வாழ்நாளில் எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய சிவத்தம்பி, தமிழின் ஆய்வுப் பரப்பைத் தனது நூல்களின் மூலம் விரிவாக்கியவர்.

2000 ஆண்டில் தமிழக அரசு சிவத்தம்பிக்கு திரு.வி.க விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக் கொண்டு ஆற்றிய தமது உரையில், ‘சுவாமி விபுலானந்தர், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ, வையாபுரிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்’ என்று புத்தமித்திரனாரின் வீரசோழிய மரபில், தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான்; அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை.

1932 ஆம் ஆண்டு மே திங்கள் 10 ஆம் நாள் டி.பி.கார்த்திகேசு, வள்ளியம்மை இணையருக்கு மகனாகப் பிறந்தார் சிவத்தம்பி. பள்ளிப்படிப்பைத் தனது சொந்த ஊரான கரவெட்டியிலும் புகுமுக வகுப்பைக் கொழும்பு ஜாகிரா கல்லூரியிலும் பயின்றார். இளநிலைப் பட்டத்தை சிலோன் பல்கலைக் கழகத்தில் 1956 இலும் முதுகலைப் பட்டத்தை அதே பல்கலைக் கழகத்தில் 1963 இலும் பெற்றார். முனைவர் பட்ட ஆய்வினை பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வாளர் ஜார்ஜ் தாம்சன் வழிகாட்டுதலில் ‘பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம்’ என்ற தலைப்பில் நிறைவு செய்தார்.

இலங்கையில் வித்யோதயா பல்கலைக் கழகம், கிழக்குப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேராசிரியராகப் பணி புரிந்தார். சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக் கழகம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகிய தமிழகப் பல்கலைக் கழகங்களில் விருந்துநிலைப் பேராசிரியராகப் பணிசெய்தார். மலேயா, பின்லாந்து, அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து பல்கலைக் கழகங்களில் வருகை தரு பேராசிரியராகப் பணியாற்றினார்.

கா.சிவத்தம்பி தமிழியல் ஆய்வு உலகில், சிறப்பாகத் தமிழர்களின் இலக்கிய வரலாற்றுத் துறையில் சிறந்து விளங்கினார்.

தமிழில் இலக்கிய வரலாறு - நூலகம்

அவருடைய ‘தமிழில் இலக்கிய வரலாறு’ குறிப்பிடத்தக்க ஆய்வு நூல். இலக்கிய வரலாற்றை அதன் தோற்றம், வகைமை, அரசியல் பின்புலத்துடன் ஆராயும் நூல் அது. இலக்கிய விமர்சனத்துறையிலும் அவர் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார். சிறுகதை, நாவல், கவிதை என அவர் இத்துறையில் விரிவாகச் செயல்பட்டார். காலனியக் காலம் மற்றும் அதற்குப் பிந்தைய காலத்தின் வரலாறெழுதியலில் கா.சிவத்தம்பி மிக முக்கியமான பங்காற்றினார். தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி, திராவிடக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு, யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல் என்பது போன்ற பல நூல்களை எழுதினார்.

தமிழர்களின் பண்பாடு மற்றும் ஊடகச் செயல்பாடுகள் குறித்தும் மிக ஆழமான ஆய்வுகளைச் செய்தவர் அவர். நாவலும் வாழ்க்கையும், இலக்கணமும் சமூக உறவுகளும், தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும், தமிழ்ச் சமூகமும் அதன் சினிமாவும், தமிழ்ப் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பு, யாழ்ப்பாணத்தில் தொடர்பும் பண்பாடும், யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், தமிழ்ப் பண்பாட்டில் கிறித்தவம், தமிழ்ச் சமூகமும் அதன் பண்பாட்டு மீள் கண்டுபிடிப்பும் ஆகியன அவரது மிக முக்கியமான பண்பாட்டு ஆய்வு நூல்கள்.

மேற்குறித்த ஆய்வுத் துறை மட்டுமல்லாது தொடக்கம் முதலே நாடக ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தி வந்தார். சிவதம்பிக்கு முன்னதாக ஆய்வுக் களத்தில் பெரும் பேராசிரியர்களும் புலமைவாதிகளும் இருக்கவே செய்தனர். அவர்கள் கவனம் கொள்ளாத பல விடயங்களில் கவனம் செலுத்தியவர் கா.சிவத்தம்பி. இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழுள் அடக்கமென விதந்தோதப்பட்டாலும் நம் தமிழாராய்ச்சிச் சிரோன்மணிகள் இயலைத் தாண்டி எதனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. சிலப்பதிகாரம் பல்கலைக் கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெறும்போதே, ‘சிலப்பதிகாரம் முழுவதும்-அரங்கேற்றுக் காதை நீங்கலாக’ என்ற குறிப்புடனேயே இடம்பெறும். அத்தகைய சூழலில் முத்தமிழின் ஏனைய பிரிவுகளான இசைக்கும் நாடகத்துக்கும் பேராசிரியர் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.

சிவத்தம்பிக்கு முன்னதாகவும் அவருடைய சம காலத்திலும் இயங்கிய பல ஆய்வாளர்கள் பெரும்பாலும் பண்டைய தமிழ்ச் சமூகம் பற்றியும் அக்கால மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பற்றியுமே ஆராய்ந்தார்கள். அக்கால கட்டத்துச் சமூகத்தின் ‘சமூக வரலாற்றைப் பற்றி’ யாரும் விவாதிக்கவில்லை. சிவத்தம்பி மார்க்சிய வெளிச்சத்தில் அக்காலகட்டத்தில் நிலவிய சமூக உறவுகள், சமூக நிறுவனங்கள் என தனது ஆய்வு நோக்கை ஆழச் செலுத்தித் தமிழிலக்கிய ஆய்வில் புதிய ஒளியைப் பாய்ச்சியவர்.

தமிழியல் ஆய்வில்

க.கைலாசபதி

க.கைலாசபதி, கா.சிவத்தம்பி இரட்டையர்கள் என அறியப்பட்டார்கள். இருவரும் ஜார்ஜ் தாம்சனின் மாணவர்கள். அவருடைய வழிகாட்டுதலில் கைலாசபதி, தமிழ்ச் சங்க இலக்கியத்தையும் கிரேக்க வீர யுகப் பாடல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். சிவத்தம்பி, சங்க நாடகத்தையும் கிரேக்க நாடக மரபையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார். தான் ஜார்ஜ் தாம்சனிடம் மாணவனாகப் பயின்றமையைத் தன் வாழ்நாளின் இறுதிவரை பெருமையுடன் குறிப்பிட்டு வந்தார் சிவத்தம்பி.

இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் தொன்மை மொழியாக, ஐரோப்பியர்களால் அடையாளங்காணப்பட்ட வடமொழிக்கு மாற்றாகத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்தியவர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியுமே ஆவர். தமிழ் நூல்களின் எண்ணிக்கைக்கு இணையாக சிவத்தம்பி ஆங்கிலத்திலும் நூல்களை எழுதினார். கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம், தமிழ் எனப் பன்மொழிப் புலமை பெற்றவராக விளங்கினார் சிவத்தம்பி. எனவே உலக அரங்கில், தெற்காசிய அரங்கில், இந்திய அளவில் தமிழின் இடத்தை வற்புறுத்துவதில் அதனை நிலை நிறுத்துவதில் சிவத்தம்பி அறிவார்ந்த நிலையில் தங்குதடையின்றி வாதிக்க முடிந்தது.

இலக்கியவியலைச் சமூகவியல், வரலாற்றியல், தொல்லியல், பொருளாதாரம், புவியியல், தத்துவயியல், அறிவியல் எனப் பல்துறையோடு ஊடாட வைத்துப் புதிய ஆய்வு முறைமையையும் முற்றிலும் புதிய ஆய்வு முடிவுகளையும் உருவாக்கிக் காட்டியவர் சிவத்தம்பி.

சிறுகதை, நாவல் என்று நவீன இலக்கியத்திலும் பத்துப்பாட்டின் கவிதையியல், பண்டைச் சமூகவியல் என்று மரபிலக்கியத்திலுமாகத் தமிழின் விரிந்த பரப்பின் மீது சற்றும் அயராது பயணப்பட்டவர் அவர்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் கருத்துநிலைப் போராளியாக அடையாளங் காணப்பட்டவர் சிவத்தம்பி. விடுதலைப் போராட்டத்தில் தலைமையிடம் வகித்த பலர், பேராசிரியரின் மாணவர்கள். எனவே சிவத்தம்பியின் கருத்துக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தனர். தங்களின் கருத்துநிலை, அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேராசிரியர் என்ன கருத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அறிவதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள் போராளித் தலைவர்கள். விடுதலை இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்துத் தயக்கமின்றி விமர்சனங்களையும் வெளியிட்டவர் சிவத்தம்பி. அவருடைய கருத்துக்களும் நிலைபாடுகளும் கடுமையாக விமர்சிக்கப்பட்டமையும் உண்டு.

தமிழின விடுதலைப் போராட்டத்துக்கான சிங்கள அறிவுத்துறையினரின் ஆதரவைப் பெறுவதில் பெரும்பங்காற்றினார் அவர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவு, சிங்கள பௌத்தப் பேரினவாத்தின் தமிழின அழித்தொழிப்பு பேராசிரியரிடம் மிகப்பெரிய மனச்சோர்வையும் களைப்பையும் ஏற்படுத்தியிருந்ததாகப் பிந்தைய நாட்களின் அவரைச் சந்தித்தவர்கள் சொன்னார்கள்.

விடுதலைப் போராட்டத்தின் பின்னடைவுக்குப் பிறகு அவர் கொழும்பில் பாதுகாப்பின்றி இருப்பதை உணர்ந்த நண்பர்கள், ‘இந்தியாவுக்கு வந்து விடலாமே?’ என்று அழைத்தாகவும் அதற்கு, ‘உலகின் எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் போவாம்; இந்தியாவுக்கு மட்டும் வரமாட்டோம்; ஏனென்றால் இந்தியா எங்கள் முதுகில் குத்திவிட்டது’ என்று மனமுடைந்து கா.சிவத்தம்பி சொன்னதாக ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ ஈழப்போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததாக ‘எட்டப்பன்’ என்று ஈழ விடுதலை ஆதரவாளர்களால் கடுமையாகச் சாடப்படும் மு.கருணாநிதி அழைத்து, ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்’ ஆய்வரங்கைத் தொடங்கி வைத்துப் பங்காற்றிச் சென்றார் பேராசிரியர். ஈழத் தமிழர்களின் இரத்தக்கறை ஈரம் கைகளிலிருந்து மறைவதற்கு முன்னால் அவசரம் அவசரமாக மாநாட்டை நடத்திய மு.கருணாநிதியை ‘உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்’ என்று மாநாட்டு மேடையிலேயே புகழ்பாடும் மன விசாலம் அவருக்கிருந்தது. தனது இறுதிக் காலத்தில் அவர் எடுத்த இந்த நிலைப்பாடும் செயல்பாடும் அவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட ஏதுவாயிற்று.

இளம் எழுத்தாளர்களின் நவீனப் படைப்புகளையும் தொடர்ந்து வாசிக்கும் மாபெரும் படிப்பாளியாகவே அவர் எப்போதுமிருந்தார். சாரு நிவேதிதாவின் நூல் வெளியீட்டில் அவர் கலந்து கொண்டு ஆற்றிய உரை, அவ்வெழுத்தாளரை முற்றிலும் புதிய நோக்கில் பார்க்கமுடியும் என்பதைத் தமிழ் உலகிற்கு எடுத்துரைப்பதாக அமைந்தது.

தமிழகத்தின் இளம் ஆய்வாளர்களையும் அவர் தொடர்ந்து கவனித்தபடியே இருந்தார். தமிழியல் ஆய்வுப் புலத்திலும் அவர் முதுபெரும் பேராசிரியர்களுடன் இளைய ஆய்வாளர்களுடனும் தொடர்பில் இருந்தார். இளைய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளர்கள் என, நல்லாப்பிள்ள பாரதத்தைப் பதிப்பித்த மாநிலக்கல்லூரிப் பேராசிரியர் சீனிவாசன், யாப்பிலக்கண ஆய்வில் கவனம் செலுத்தி வந்த பேராசிரியர் ய.மணிகண்டன், சங்க இலக்கிய ஆய்வில் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வரும் பேராசிரியர் பெ.மாதையன் ஆகியோரை அடையாளம் கண்டார்.

வீ.அரசு

பேராசிரியரின் இறுதிப் பத்தாண்டு காலச் சென்னை வருகையின் போது, பேராசிரியர் வீ.அரசுவின் ஆதரவில் தங்கியிருந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் விருந்தினர் விடுதியில் புத்தகக் குவியலுக்கிடையேதான் வாழ்ந்தார். தமிழகத்துக்கு வந்து கொழும்பு புறப்படும் பொழுதெல்லாம் ஏராளமான புத்தகச் சுமையுடனேயே பயணப்பட்டார்.

மரபிசை, தமிழிசை ஆகியவற்றின் மீது தீராக் காதல் அவருக்கு எப்போதுமிருந்தது. காருக்குறிச்சி அருணாச்சலமும் டி.என்.ராஜரத்தினம் பிள்ளையும் தன் நாதசுரத்தால் அவருடைய இதயத்தை வருடியபடியே இருந்தார்கள். மதுரை சோமசுந்தரமும் சஞ்சய் சுப்ரமண்யமும் தன் வாய்ப்பாட்டில் அவரை வசியப்படுத்தியிருந்தனர். நடப்பதற்குச் சிரமமிருந்த போதிலும், தனது பருத்த தேகத்தைச் சுமந்தபடி மூச்சிரைக்கச் சென்னை இசையரங்குகளின் படிக்கட்டினைக் குழந்தையின் குதூகலத்துடன் கடந்து சென்றார். உணவாக இருந்தாலும் இசையாக இருந்தாலும் நூறு சதவிகிதக் கொண்டாட்டத்துடன் இரசிப்பவராக அவர் இருந்தார்.

தனது சொந்த கிராமமான ‘கரவெட்டி’யின் மீது தீராக் காதல் அவருக்கு இருந்தது. கரவெட்டி நினைவுகளை அவர் பகிர்ந்து கொள்ளும் போது, குதூகலமும் ஆர்வமும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் பொங்கிப் பிரவாகமெடுப்பதைக் காணமுடியும். எதிரில் அமர்ந்து கேட்பவருக்குத் தவிர்க்க இயலாமல் தன் சொந்த கிராமத்தின் மீதான ஈர்ப்பு கவிந்துவிடும். அவ்வளவு ஈடுபாட்டுடனும் உணர்வுடனும் சொந்த ஊரினோடு பிணைக்கப்பட்டவர் அவர். அதனால்தானோ என்னவோ சிற்பி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கிராமத்து நதி’ கவிதை நூலுக்கான முன்னுரையில் கரைந்து போயிருப்பார். தன் சொந்த மண்ணை விட்டுக் கொழும்புக்குப் புலம் பெயர்ந்த அந்த வலி மிகுந்த வன்முறை நாட்களைக் குறித்துச் சொல்லும்போது, காதலாகிக் கசிந்து… கண்ணீர் மல்கிச் சொல்வார்.

தன்னையும் கைலாசபதியையும் தமிழக ஆய்வுப் புலத்தில் நிலைநிறுத்தியவர்கள் முற்போக்கு இலக்கியவாதிகளே என்பதைப் பல இடங்களில் கா.சிவத்தம்பி பதிவு செய்திருக்கிறார். ‘நான் அடிப்படையில் ஒரு இயங்கியல்வாதி. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என் தள நோக்காக அமைவது. ‘மாற்றம்’ இந்நோக்குமுறைமையில் அச்சாணியாக இடம்பெறும். நான் இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ள முனைகின்றேன். அவற்றைப் பொது உலக நோக்குக்குள் அமைத்துக் கொள்ள விரும்புகின்றேன்’ என்று தனது கலை இலக்கிய அரசியல் செயல்பாட்டை வெளிப்படப் பதிவு செய்திருக்கிறார் பேராசிரியர். ஒரு மார்க்சிய அறிஞராக, ஆய்வாளராக, மாற்றங்களை முன்மொழியும் ஒருவராகத் தமிழ் ஆய்வுலகு அவரை நினைவில் ஏந்தும்.

முற்போக்கு முகாமில் மட்டுமல்ல, தமிழியல் ஆய்வுப் புலத்தில் பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவு, பாரிய வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது. இவ்வெற்றிடத்தை இட்டு நிரப்புவது எளிய பணி அல்ல

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *