படபடக்கும் இதயம்… காரணங்கள் என்ன?

உடல் பருமன் பிரச்னை அதிகரித்து உள்ள நிலையில், இதனால் ஏற்படும், ‘ஏட்ரியல் பைப்ரிலேஷன்(Atrial Fibrillation)’ எனப்படும், சீரற்ற இதயத் துடிப்பால், மருத்துவ ஆலோசனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

ஏட்ரியல் பைப்ரிலேஷன் என்பது என்ன?

மின் அதிர்வுகளில், இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுபாடு இது. இந்நிலையில், சீரற்ற இதயத்துடிப்பை அவ்வப்போது உணர முடியும். இதயத்தில், மேல் அறை, கீழ் அறை என்று இரண்டு அறைகள் உள்ளன. இப்பிரச்னை இருந்தால், இதயத்தின் மேல் அறையில், வழக்கத்தை விடவும் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும்.
சராசரியாக நிமிடத்திற்கு, 72 – 82 முறை இதயத்துடிப்பு இருக்க வேண்டும். இதைக் காட்டிலும் மிக அதிகமாக துடிக்கும் போது, இதய அறையில் உள்ள ரத்தம் முழுமையாக வெளியில் வராது. காரணம், இதயத் தசைகள், முழு திறனுடன் சுருங்கி விரிந்தால் மட்டுமே, முழு ரத்தமும் வெளியே வரும்; ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
மிக வேகமாக துடிக்கும் போது, ரத்தம் அங்கேயே தங்கி, அழுத்தம் அதிகமாகி, சிறிய ரத்தக் கட்டிகள் உருவாகும். இக்கட்டிகள் சில நேரங்களில் வெளியில் வந்து, உடலில் எந்தப் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்களையும் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், பக்கவாதம், மூச்சுத் திணறல், இதய கோளாறுகள் போன்ற பல்வேறு பிரச்னைகள் வரலாம்.

அதிகபட்ச இதயத்துடிப்பு எவ்வளவு இருக்க வேண்டும்?

உடற்பயிற்சி செய்யும் போது, ஓடும் போது, 120 – 130 முறை வரை, இதயத்துடிப்பு இருக்கலாம். ஓய்வாக இருக்கும் போது இப்படி இருப்பது, அசாதாரணமான விஷயம்.

எதனால் இந்தப் பிரச்னை வருகிறது?

கட்டுக்குள் இல்லாத ரத்த அழுத்தம், உயர் ரத்த அழுத்தத்திற்கு முறையாக மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, இதய வால்வுகளில் ஏற்படும் கசிவு, அடைப்பு இவற்றால் வரலாம். தைராய்டு பிரச்னையால் வரலாம். உடல் பருமன் அதிகமாக இருப்பது, சர்க்கரை கோளாறு போன்றவற்றாலும் வரலாம்.
உடல் பருமன் அதிகமாக இருந்தால், துாங்கும் போது, சுவாச குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, ஆக்சிஜன் செல்வது குறைந்து, ஆழ்ந்த உறக்கம் இருக்காது; அடிக்கடி உறக்கம் களைந்து விடும். இதனாலும், பிரச்னை வரலாம். சில நேரங்களில், 60 – 70 வயதிற்கு மேல், எந்த காரணமும் இல்லாமல் இப்பிரச்னை வரலாம்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?

இதய துடிப்பு அதிகமாக இருப்பது, சிலரால் இதய துடிப்பை உணர முடியாமல் போவது, மூச்சு விடுவதில் சிரமம், எதிர்பாராமல் நிலை குலைவது, ரத்த அழுத்தம் குறைவது, மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, பக்கவாதமாக வரலாம்.

சிகிச்சை முறைகள் என்ன?

படபடப்பாக இருப்பதாக சொல்லி வருவர். வீட்டிலிருந்து, டாக்டரிடம் வருவதற்குள், இதயத்துடிப்பு சாதாரணமாகி விடலாம். இதனால், இ.சி.ஜி., பரிசோதனை செய்யும் போது தெரியாது. இது போன்ற நேரங்களில், இதற்கென்று உள்ள கருவியை, 24 மணி நேரம் முதல், சிலருக்கு ஒரு மாதம் வரையிலும் உடலில் பொருத்தி, எந்த நேரத்தில், சீரற்ற இதயத்துடிப்பு வருகிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ற சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு, இதயத்துடிப்பு அதிகமாக இருப்பதாக சொல்வர். ஆனால், டாக்டர் பரிசோதிக்கும் போது, கண்டுபிடிக்கவே முடியாது. இவர்களுக்கு, நான்கைந்து மாதங்கள் கூட, கருவியை பொருத்தியே வைக்க வேண்டியிருக்கும்.
கோளாறு இருப்பது உறுதியானால், மாத்திரைகள் தருவோம். மாத்திரைகளால் சரியாகாத பட்சத்தில், இதயத்திற்கு லேசான அதிர்வு கொடுத்து சரி செய்யலாம்.

முறையான சிகிச்சை செய்யாவிட்டால் ஏற்படும் விளைவுகள்?

அடிக்கடி இதயம் வேகமாக துடிக்கும் போது, இதயத்தின் வேலை பளு அதிகமாகும். முறையான சிகிச்சை செய்யாவிட்டால், மாரடைப்பு ஏற்படலாம். இந்தப் பிரச்னை இருக்கும் அனைவரும், ரத்தம் உறைவைத் தடுக்கும் மருந்துகளை, தொடர்ந்து சாப்பிட வேண்டும். சிலர் செய்யும் தவறு, டாக்டர் ஆலோசனைப்படி, மாத்திரைகளை சாப்பிடுவதில்லை. சிலர், ஒரு நாள் சாப்பிடுவது, இடையில் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் விடுகின்றனர். இப்படி, சில நாட்கள் மாத்திரை சாப்பிட்டு விட்டுவிட்டால், பக்கவாதம் வரலாம்.
பக்கவாதத்துடன் வருபவர்களில், 25 சதவீதம் பேருக்கு, சீரற்ற இதயத் துடிப்பினாலேயே பிரச்னை வருகிறது. குறிப்பாக, 50 வயதிற்கு உட்பட்டவர்கள்.

இப்பிரச்னை அதிகரித்து உள்ளதா?

இருபது வயது முதல், எந்த வயதினருக்கும், இப்பிரச்னை வரலாம். குழந்தைகளுக்கும் வரும். ஆனால், அவர்களுக்கு வருவது, பிறவி கோளாறுகளால் இருக்கும். மரபியல் காரணங்களால் வருவது அரிது.
நாற்பது வயதிற்கு உட்பட்டவர்கள், இப்பிரச்னையால் பாதிக்கப்படுவது அதிகரித்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன், 70 வயதிற்கு மேல் தான், இப்பிரச்னையுடன் வருவர். தற்போது, அதிக மன அழுத்தம், உணவு முறை, சிகரெட், மது பழக்கம் போன்றவற்றால், இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது.
சீரற்ற இதயத் துடிப்புக்கு மிக முக்கிய காரணம், ஒரே நாளில், அளவுக்கு அதிகமாக மது அருந்துவது. இரவு முழுவதும் குடித்துவிட்டு, அதிகாலையில், அதிக இதய படபடப்புடன் வருவர்.

முழு உடல் பரிசோதனையில், இதைக் கண்டறிய முடியுமா?

எல்லா நேரமும் படபடப்பு இருப்பவர்களுக்கு, கண்டுபிடித்து விடலாம். சிலருக்கு, எப்போதாவது வந்து போகும். அப்படி இருந்தால் தெரியாது. அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம், ஆலோசனை பெற வேண்டும்.

டாக்டர் ராஜேஷ்வரி நாயக்,
இதய நோய் நிபுணர்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *