தொல்காப்பியத்தில் இயற்கை

இயற்கை – நிலம் – இசை : 03 – T.சௌந்தர்

தொல்காப்பியம் தமிழ் இலக்கணம், நிலம், இசை போன்றவற்றிற்கும் தனிச் சிறப்பு கொடுத்து எழுதப்பட்ட இலக்கண நூல் மட்டுமல்ல, கருத்துக்களை சுருக்கமாகவும் மதிநுட்பச் செறிவுடனும் சொல்லிச் செல்லும் திறனாய்வு நூலுமாகும். உலக இலக்கியங்களில் எங்கும் காண முடியாத “திணை” என்ற பொருளில் நிலங்களை வகுத்து, அவைக்குரிய இயற்கைப் பின்னணியையும், பண்களையும் , இசைக்கருவிகளையும், அந்நிலங்களில் வாழ்ந்த இசைக்கலைஞர்களையும், கலைவகைகளையும் விளக்கிச் சொல்லும் நூலுமாகும்.

தொல்காப்பியத்தில் இயற்கை:

நவீன காலத்தில் அண்டவியல் [ Cosmology ] எனும் துறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இயற்கை, அண்டவியல் பற்றிய அறிவியல் செய்திகளை கூறும் தொல்காப்பியம் ஐம்பூதங்கள் என அவை குறித்துத் தன்காலத்திற்கேற்ப பேசுகிறது.

வளி எனவருஉம் பூதக்கிளவியும்

அவ்வியல் நிலையல் செவ்விதென்ப

[ தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் – உ யிர்மருங்கியல் -நூற்பா 242 ]

அதுமட்டுமல்ல இன்னுமொரு பாடலில்.

நிலம் நீர் விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

திரிவுஇல் சொல்லோடு தழாஅல்.

[ தொல்காப்பியம் – பொருளதிகாரம் -மரபியல் – நூற்றபா 90 ]

இயற்கையில் பிரிக்க முடியாத வண்ணம் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்த நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற மூலக்கூறுகளால் இந்த உலகம் உருவாகியிருக்கிறது என்பதை தொல்காப்பியம் கூறுகிறது.

பண்டைத்தமிழர்கள் இந்த பிரபஞ்சத்தை ஐம்பூதங்களால் உருவானது என்றார்கள். பூதம் என்ற சொல் ஓர் அறிவியல் [ Scientific ] சொல்லாகும். பின்னாளில் பூதம் என்ற சொல் பேய், பிசாசுகளுடன் சேர்க்கப்பட்டுவிட்டது. எல்லையற்று விரிந்திருக்கும் அண்டவெளியை பூதம் [ Giant ] என்றார்கள். பூதி, பூத, பூதுதல், பூதை போன்ற தமிழ் சொற்கள் விரிவடைதல், விரிதல் என்று பொருள்படும்.

தமிழர்கள் இந்த ஐந்து மூலங்களையும் தமது வாழ்வியல் கூறுகளுடன் இணைத்து பகுத்தார்கள். இயற்கை,வாழ்வியல், உயிர் இயக்கம் என பகுப்பாய்வு செய்தார்கள்.

ஐம்பூதங்களின் பொருள்நிலை பின்வருமாறு அமைந்திருக்கும்.

1. நிலம் – திடவடிவம் 2. நீர் – நீர்மவடிவம் 3. தீ – தீய்மம் 4. காற்று – வளிமவடிவம் 5. விசும்பு – வெளிமம்.

துகளாய் இருப்பது மண். அதுவே இறுக்கமாகி, அமுக்கம் பெற்றால் அது நிலம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. தொல்காப்பியத்தின் இக்கருத்துக்களை சங்க இலக்கியங்களும் பேசுகின்றன. பின்னர் மதம் இவற்றை சிவனுடன் இணைத்து பேசுவதை நாம் காண்கிறோம். சங்க இலக்கியத்தில் மதுரைக்காஞ்சியில் பஞ்சபூதங்களை உருவாக்கியவர் மழுவாள் நெடியோன் என்கிறார் மாங்குடிமருதனார் !

நீரும் நிலமும் தீயும்

மிக விசும்பொடு ஐந்து உடன் இயற்றிய

மழுவாள் நெடியோன் தலைவன் ஆக [455]

இக்கருத்துக் குறித்து சமீபத்தில் நிகழ்ந்த ஆய்வரங்க கூட்டத்தில் ஆய்வாளர் நா.கணேசன் , அதனைப்பற்றிய தமிழ் இலக்கிய குறிப்பைத் தருகின்றார்.

“ சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட சின்னங்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியார்கள் லிங்க உருவம் ஆரம்பத்தில் சிவனோடு தொடர்பு இருக்க முடியாது என்றும் இது வேதகால வருணனோடு தொடர்புடையதாக, மழுவாள் நெடியோனோடு தொடர்புடையதாக இருக்கலாம் என கருதுகிறார்கள். மிருகபதி என்று கருதுகிற பசுபதி சின்னம் இதோடு தொடர்புடையதாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. அது மகரம் என்ற சின்னத்தோடும் [முதலை] தொடர்பு எனப்படுகிறது. அதற்கான ஆதார சின்னம் ஹரியானா மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை,மகரவிடங்கர் சின்னங்கள் அவற்றுடன் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.”

[ ” மழுவாள் நெடியோன் ” சிந்து நாகரீகமும் பெருங்கற்காலத் தமிழகமும் – நா.கணேசன் ]

ஐம்பூதங்கள் குறித்து சங்ககால நூல்களும் குறிப்புகளைத் தருகின்றன.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

[திருக்குறள் 271 ] என்று குறளும்

“மண்திணிந்த நிலனும்

நிலன் ஏந்திய விசும்பும்

ஒளித் தலைஇய தீயும்

தீ முரணிய நீரும் , என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொருத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வழியும் , தென்றலும், அளியும் உடையோய்

(புறநானுறு -2)

[புறநானூற்றுப் பாடல்]

தொல்காப்பியத்தில் நிலம் பற்றிய செய்திகள்:

தொல்காப்பியர் அண்டவியலை மூன்றாகப் பிரிக்கிறார். அவை

முதல் பொருள்

கருப் பொருள்

உரிப் பொருள்

எனப்படும். அதுமட்டுமல்ல அவற்றுக்குள் இருக்கும் பலவகை அம்சங்களை வகைப்படுத்தலுக்கும் [ Categorize ] உள்ளாக்குகிறார்.

முதல் பொருள் என்றால் நிலமும், பொழுதும் [ Space & Time ]. அத்துடன் நிற்காமல் அதற்குள் உள்ள பிரிவுகளை விளக்கும் போது, அதற்குள் இரண்டு பொழுதுகள் !

1. சிறுபொழுது 2. பெரும்பொழுது. இதற்குள்ளும் வரும் படிநிலைகள்..

சிறுபொழுதில் வரும் படிநிலைகள் :

வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்.

பெரும்பொழுதில் வரும் படிநிலைகள்:

கார், குதிர்முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்.

கருப் பொருள் என்ற பகுதியில்

தாவரம், விலங்குகள், மனிதன், சுற்றுச் சூழல் எல்லாம் வருகிறது.

உரிப்பொருள் என்ற பகுதியில்

மானிட உறவுகள், வாழ்க்கை நடைமுறைகள், மரபுகள் அவற்றின் பகுப்புக்கள் என விரிந்து செல்கிறது. அவற்றுக்குள் இருக்கும் பலவகை அம்சங்களை வகைப்படுத்தலுக்கும் [ Categorize ] உள்ளாக்குகிறார்.

ஞாலம் என்றும் பூமியைச் சொல்லும் வழமை தமிழில் உண்டு. ஞாலம் என்ற சொல் தொங்குதல் என்ற பொருள் தரும். அண்டவெளியில் பூமி தொங்குகிறது எனப் பழந்தமிழர்கள் நினைத்தார்கள் போலும் !

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பில் [ தொல்காப்பியம்- புற: 30 ]

இன்றைய நவீன விஞ்ஞானம், இயற்கையைப் பலதுறைகளைக் கொண்டு வகமைபடுத்தி

[ Synthesis ] ஆய்வுகளுக்குட்படுத்துவது போலவே பல ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட தொல்காப்பியம், இன்று வியந்து போற்றப்படும் Intertextual [ இடைப்பனுவலியல் ] என்கிற முறைக்கு நிகராக அவை உள்ளன என வியந்து கூறுவர். இவ்விதம் மேல்கண்ட பொருள்களின் உள்ளுக்குள் உள் என்னென்ன பிரிவுகள், வகைகள் உள்ளன என்பதை தொல்காப்பியம் விவரிப்பது மட்டுமல்ல தன் காலத்திலிருந்து நூல்களையெல்லாம் சுட்டிக் காட்டும் வண்ணம்

” என்மனார் புலவர் ” என்ற சொல்லின் மூலம் Reference தருகின்றார்.

தொல்காப்பியத்தில் நிலம் என்னும் பொருளை விளக்கும் பகுதி திணை எனப்படுகிறது.இந்த திணை என்ற சொல் பலதரப்பட்ட வியாக்கியானங்களை கொண்டுள்ளதாகவும் இதற்கான தெளிவான ஒரு விளக்கம் கிடைக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

நிலத்தின் அடிப்படைக் கூறுகளை புரியாதவர்கள் சங்க இலக்கியத்தை புரிய முடியாது என்பர். நிலம் எனும் சொல்லை பூமி, இடம் என்ற பொருளிலும் பாடுகிறார் தொல்காப்பியர்.

திணைதொறும் மரீஇய திணை நிலப்பெயரே – [தொல்.பொருள்.அகத்- நூல் 22 ]

ஐம்பூதங்களில் ஒன்றான நிலம் பற்றி தொல்காப்பியம் பல இடங்களில் பேசுகிறது.

– வினைசெய் இடத்தின் நிலத்தின் காலத்தின் – [ தொல்: சொல். வேற்று – நூல்77 ]

– நிலப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே – [ தொல்: சொல் , பெயர் – நூல் 162 ]

– இருநிலத் தீண்டா அருநிலை – [ தொல்: பொரு , புற ,நூல் 72]

திணை என்ற பகுதி நிலம் பற்றி பேசுகிறது என்று சொல்லும் போது அவற்றை ஐந்து நிலங்களாகப் பிரிக்கிறார். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகும்.

இந்த ஐந்து நிலத்திற்குமுரிய மனிதர்களின் செயல்பாடுகள், தொழில்கள், உணர்வுகள், அந்த நிலங்களுக்குரிய மனிதர்கள் வழிபட்ட தெய்வங்களின் பெயர்களும் விவரிக்கப்படுகின்றன.

பேராசிரியர் சிவத்தம்பி பின்வருமாறு விளக்குகிறார்.

“ தமிழ்நாட்டின் பௌதீக அமைப்பை ஐந்திணை என்ற கவிமரபால் ஐவகைப்பட பிரிவுகளாகக் கூறுவது சங்க இலக்கியம். தொடக்ககால தென்னிந்திய சமூகமும், பொருளாதாரமும் ” திணைக்கோட்பாடும் ” என்ற எனது கட்டுரையில் ஐவகைப் பிரிவுகளாகிய மலைப்பகுதி, காட்டுப்பகுதி, சமவெளிப்பகுதி, மணல்வெளிப்பகுதி, ஆற்றுப்படுக்கைகள் அல்லது வேளாண் பகுதி ஆகிய நானில பிரிவினையினடிப்படையில் தோன்றியுள்ளது என்று விளக்கியுள்ளேன்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இப்பௌதீக பகுதிகள் ஒன்றுக்கொன்று அருகில் உள்ள போதிலும் அவற்றிற்கிடையேயுள்ள சமூக பொருளாதார அமைப்புகள் மிக வேறுபட்டதாக இருப்பதால் அவை ஒவ்வொன்றையும் தனித்தனி உலகமாகக் காட்டுவது ஏற்கக்கூடியதே!

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை பண்டைத்தமிழ் நாட்டின் இப்பிரிவாக்கம், மானிடவியலாளர்களாலும், சூழலியலாளர்களாலும் இன்றைய தினம் புகழப்படுகிறது. சூழலியலை உள்ளடக்கிய நுண் நுழைபுலமையுடைய இப்பிரிவாக்கம் நவீன மானிடவியல் புவியியலாளர்களின் நுண்ணறிவை நினைவூட்டும் வகையில் அமைந்திருப்பதாக டாகடர் அய்யப்பன் வியந்து புகழ்கிறார்!

தமிழ்சமூக அமைப்பு, சுற்றுப்புறச் சூழலிலிருந்து முகிழ்த்த தனிச்சிறப்பான பண்புநலன்களைக் கொண்டிருந்தது. மானுடவியல் வலியுறுத்தும் மனித வாழ்வின் ஐந்துபடிநிலைக் கட்டங்களையும் வரலாற்றிற்கு முந்தைய காலப்பகுதியிலேயே தமிழ் சமூகம் எட்டிவிட்டது தனித்துவம் வாய்ந்ததாகும் என்று தீட்சிதர் கூறுகிறார்.” – பேராசிரியர் சிவத்தம்பி – [முல்லைத்திணை ஒழுக்கம்]

“ வளமற்ற நிலப்பகுதியை பாலை சார்ந்த நிலம் என பழந்தமிழ் பாடல்கள் வகுத்துள்ளன. தொழில் நிமித்தம் வளமான நிலப்பகுதிகளை நோக்கி பயணம் செய்ய நேர்வதால் ஏற்படும் பிரிவு, துன்பநிலை குறித்த 171 பாடல்களை புலவர்கள் எழுதியுள்ளனர். அவற்றில் பெருங்கடுக்கோ என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார்.

உலகெங்கிலுமுள்ள இலக்கியங்கள் இயற்கையைப் புனைந்து பாடியுள்ளன. ஆனால் தமிழில் இயற்கையை மட்டும் தனியே பாடாமல் இயற்கையோடு இணைந்த மனித வாழ்வையும் சேர்த்து சங்கப்பாடல்கள் கவனப்படுத்துகின்றன. இதன் காரணமாகவே திணைவைப்பு முறைகளும் இருந்தன. இயற்கையைக் காட்சிப்படுத்தி அதற்கு பின்னணியாக இருக்கும் ஒரு காட்சியை காட்சிப்படுத்தி அதை ஓர் நாடகப் பண்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.” – எஸ்.ராமகிருஷ்ணன். [ கம்பனும் மில்டனும் ]

பண்டைத் தமிழர்கள் மட்டுமல்ல வேறு சில நாகரீக மாந்தர்களும் இது போல செய்திகளை அறிந்திருந்தனர் என்பார் பேராசிரியர் க.கைலாசபதி.

” பல பழைய இலக்கியங்கள் காட்டும் ஒளியில் கண்டால் இதுதொன்றும் வியப்பூட்டுவதில்லை. சாத்விக் [ Chadwick ] கருதுவது போல செய்யுட் பயிற்சி மொழித்திறனோடு பொது அறிவு, குறிப்பாக இயற்கையானதும் அல்லது இயற்கையற்றதும் இயற்கையானதுமான வரலாறு, கட்புலனாகும் உலகம் ஆகியவற்றை வற்புறுத்துகிறது. இம்முறைக்கல்வியால் முற்காலப்புலவர்கள் திறம்பட இயற்கைப் பண்பாட்டுக் களத்தினர், அவர்களின் இயற்கை உலகு பற்றியக்கருத்துக்கள் முற்றிலும் சரியாக அறிவியல் நெறிப்படி உள்ளன.” என கைலாசபதி தனது ” வீரயுகப்பாடல்கள் ” என்ற நூலில் சாத்விக் [ Chadwick, P.A. Poetry and Prophecy ] என்ற மேலை அறிஞரின் கருத்தை பதிவு செய்கின்றார்.

“ பழந்தமிழ் இலக்கியங்களை முன்னை மரபு காதல் ,வீரம் எனும் வகைக்குரியனவாகப் பகுக்கிறது என்பது முன்னர் கூறப்பட்டது. இலக்கிய படைப்பின் எல்லா நுவல் பொருள்களும், காதலின் உணர்ச்சிமிக்க சூழல்கள் அல்லது காதலல்லாப் பிற சூழல்கள் ஆகிய இரண்டையும் குறிக்கின்றன. அந்த அடிப்படைப் பகுப்பு நில அடிப்படையில் நிலவிய கருத்துக்களின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த நில அடிப்படைகள் ஐவகையாகக் காணப்பட்டன. நில அமைப்புகள் ஐந்தாக அமைய காதல், வீரம் என்ற இரண்டின் சூழல்கள் அல்லது நடத்தைப்பாங்குகள், தன்மை ஆகியனவும் அவ்வடிப்படையில் கருதப்பட்டன. “

[ பேராசிரியர்.க.கைலாசபதி – வீரயுகப்பாடல்கள் : பக்கம் 292 ]

இவைமட்டுமல்ல மலர்களின் அடிப்படையில் நிலம் வகுக்கப்பட்டதென்றும் அதனுடன் தாவரத்தையும் சேர்க்கலாம் என்றும் மலருக்கும், செடிக்கும் பழந்தமிழ் மக்களுக்குமிடையிலான தொடர்பு இனக்குழு மூலங்களின் மங்கிய ஆதாரமாகவும் விளங்குவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். அதுமட்டுமல்ல அவை தொன்மையான அக்காலத்திற்குரியனவாகவும், கடவுளர்களோடும் இணைத்துக் கூறப்பட்டுள்ளன என்றும் தமிழின் “புறப்பொருள் வெண்பா மாலை” என்ற நூலின் பாடல் ஒன்றில் காணப்படுவதாக கூறுவதுடன் வேறு சில பண்டைய சமூகங்களும் இயற்கையைக் குறித்து இதே வகையான மனப்பாங்கையும், அணுகுமுறையும் கொண்டிருந்ததையும் காட்டுகின்றன என்கிறார் பேராசிரியர் கே.கைலாசபதி. இதற்கு ஆதாரமாக மெக்சிகோ சுனிஸ் சமூகத்தை காட்டுவதுடன் , அவர்களும் தமது வாழிடத்தை ஏழாக வகுத்து இயற்கையின் கூறுகளையும், காலம், காற்று மற்றும் மரம், உயிரினம், தொழில்களையும் இயற்கையுடன் இணைத்து பேசுவதாகவும் கூறுகிறார்.

தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள பகுப்புகள், ஒழுக்களாறுகள் என்பவை அவருக்கு முந்தைய செயல்களின் அடைப்படையில் உருவானவை என்பது அவரது துணிபு. முற்கால செய்யுள்களில் காதல், வீரம் என்பவை மாறி பிற்கால செய்யுள்களில் கடவுளும் சேர்க்கப்பட்டனர் என்றும் முற்காலத்தில் செய்யுள் எழுந்த காலத்தில் இவை தலைமை பெற்றிருந்திருக்கும் எனவும் பொருண்மை [ மையமாக ] மரபுகளை ஒழுங்கமைவு செய்தவர்களால் இப்பாட்டு சூழல்கள் திணை என வகுக்கப்பட்டன எனவும், இந்த நிலச்சூழல்களின் [ திணை ] அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடிக்கருத்துக்களை பகுத்த தொல்காப்பியம், புறப்பொருள்வெண்பா மாலை போன்றவை சற்று வேறுபாடான நிலைகளைக் கொண்டிருப்பதும் தமிழ் வீரநிலைப்பாடல்களின் தன்மை வேல்ஸ், ஐரிஷ், கிரேக்கம் போன்ற மேலைநாடுகளின் வீரநிலை தன்மையையும் ஓத்திருப்பதாக உள்ளது என்கிறார் பேராசிரியர் க.கைலாசபதி.

திணை என்ற சொல் பற்றிய பலவிதமான கருத்தாடல்கள் தமிழில் உள்ளன. இது பற்றிய தெள்ளத்தெளிவாக விளக்கம் இல்லையெனும் அளவுக்கு கருத்துமாறுபாடுகள் நிலவிவருகின்றன. இதைப்பற்றி தமிழ் அறிஞர்களின் கருத்தை கீழே தருகிறேன்.

திணைக்கோட்பாடுகள் பற்றி ஆராய்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வருமாறு கூறுகிறார்.

” ஒவ்வொரு நிலப்பகுதியையும் ஒரு குறிப்பிட்ட ஒழுக்க முறையுடன் தொடர்புபடுத்தும் மரபானது சங்க இலக்கியங்களிலும் காணப்படுகிறது. இந்தக் கருத்தினைக் கூறும் குறியீடாய் திணை என்ற சொல் விளங்குகின்றது. தொல்காப்பியர் இந்தச் சொல் குறித்து வரையறை எதனையும் செய்யவில்லை. முந்திய உரையாசிரியரான இளம்பூரணர், இந்தச் சொல்லுக்குப் பொதுக்கருத்து அல்லது உள்ளடக்கம் என்று விளக்கம் கூற முற்படுகிறார். மற்றொரு உரையாசிரியராகிய நச்சினார்க்கினியர் திணை என்னும் சொல்லை ஒழுக்கம் அல்லது நடத்தை என்று வகைப்படுத்திக் கூறுகின்றார்.

திணை என்ற சொல் முதலில் நிலத்தைக் குறித்துப் பின்னர் அந்நிலை மக்களின் வாழ்க்கை ஒழுக்கலாற்றையும் அவ்வொழுக்ககலாற்றைப் பற்றி பாடப்பட்ட இலக்கியத்தையும் குறித்தது என்பார் தமிழண்ணல்.” [ பேராசிரியர் கா.சிவத்தம்பி ]

தொல்காப்பியத்தில் திணைக்குரிய அம்சங்கள் பற்றிய வகைப்பாட்டில் நிலங்கள் பற்றி பேசும் போது முக்கியமாக அந்த ஐந்து நிலங்களுக்குமுரிய இசைகளையும், இசைக்கருவிகளையும் பற்றி பேசப்படுவது மிகவும் கவனம் பெறுவதுடன் இன்று பயன்பாட்டில் இருக்கும் ராகங்களைக் குறிக்கும் பண்கள் பற்றிய குறிப்புகளும் கிடைக்கின்றன.

நிலம் என்பதை நாடு என்ற பொருளிலும் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். அன்றைய தமிழ் நாடு பகுதி எது என்று

” வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகு ” என்ற பாயிரத்தில் மூலமும், அதனுடன் சேர்ந்த அல்லது சுற்றியுள்ள பன்னிரு நிலம் / நாட்டை பற்றிய சித்திரத்தை

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம்குறிப் பினவே திசைச் சொல் கிளவி

என்ற பாடலிலும் சொல்லி, அன்றைய காலத்தில் எல்லோருக்கும் விளங்கும் பொதுமொழியாகக் (Standard spoken language) கொண்டு, செந்தமிழ்நாடு அதிலிருந்து வேறுபட்டு ஏனைய பன்னிரு தமிழ்ப் பகுதிகளில் [ கொடுந்தமிழ் நாடு ] வழங்கும் தமிழைக் கொடுந்தமிழ் என்றும் அல்லது கிளைமொழி (dialect) என்றும் கூறுகிறார்.

பிற்காலத்தில் தமிழ்நாட்டை புகழ்ந்து பாடும் பாரதி

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே

என்று செந்தமிழ் பேசுகின்ற பெருமைமிக்க நாடு என்று பயன்படுத்துகிறார். உள்ளக்கிளர்ச்சியூட்டும் இக்கவிதை வரிகளை அவன் தொல்காப்பியத்திலிருந்தே எடுத்திருக்கின்றான் என்பர்.

இவ்விதம் இயற்கை, நிலம் பற்றிய கருத்துக்கள் பழைய இலக்கியங்களில் கூறப்பட்டாலும் அவையெல்லாம் உண்மையாக இருப்பதில்லை எனவும் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இக்குறிப்புகள் பயன்படமாட்டா என்ற கருத்துக்களும் நிலவுகிறது.

ஆனாலும், பழம்பாடல்களின் நிலவர்ணனைகளிலிருந்து இன்றைய புவியியல் அமைப்புடன் அவை எவ்விதம் ஒத்துப் போகின்றன என்பதை ஆய்வுக்குட்படுத்திய ஆய்வாளர்கள் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்ந்து கூறுகின்றனர்.

சமீபத்தில் கீழடியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அரும்பொருட்கள், தொல்லியல் தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள குறிப்புகளுடன் இசைவாகின்றன.சங்க இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் அக்கால நகரமான மதுரையின் அமைவிடம் பற்றிய இலக்கியக் குறிப்புகளிலிருந்து அது இன்றைய கீழடிக்கு அருகிலே அமைந்திருக்கலாம் என்ற அவதானிப்பை வழங்கியுள்ளது. இதற்கு காரணமே இலக்கியக் குறிப்பு தான்.

கீழடி ஆராய்ச்சிகளுக்கு முன்பும் இலக்கிய சான்றுகளை முன்வைத்து சிலர் எழுதியுள்ளனர்.

உதாரணமாக, சிலப்பதிகாரத்தில் மதுரையை நோக்கி கோவலனும்,கண்ணகியும் செல்லும் பாதை பற்றிய குறிப்புகளில் அவர்கள் சென்ற பாதையின் நில அமைப்புப் பற்றிய வர்ணனைகளை/ குறிப்புகளை இளங்கோ தருவதாகவும், அவை இன்றும் காணக் கிடைப்பதாகவும் கூறுகின்றார் முனைவர்.மு.பழனியப்பன் [ சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை ]

“ கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் (காடு காண் காதை, 71- 73) என்று தொடங்கும் பாடலில், என்ற இவ்வடிகளில் சூலம் போன்று மூவழிகள் தோன்றும் என்று மாங்காட்டு மறையவன் கூறுகின்றார் எனவும் மூன்று வழிகளில் முதல்வழி வலப்புற வழியாகும். இது சிறுமலை வழியாக மதுரைக்குப் போகும் பாதை எனவும்,

“வாழையும்,கமுகும், தாழ்குலைத் தெங்கும் ” என்று தொடங்கும் பாடலில் இடது புறமாக செல்லும் வழியையும் காண்பிப்பதாகவும், இக்காட்சி இன்னமும் மெய்யாக உள்ளது. சிலப்பதிகார எச்சமிச்சங்கள் அழிந்த இந்த காலச் சூழலில் அவர் காட்டிய இயற்கைக்காட்சிகள் இன்னும் மிச்சம் இருப்பது ஆறுதல் அளிக்கிறது என்றும் எழுதுவார் முனைவர்.மு.பழனியப்பன்.

கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டுவந்த கண்ணகி – கோவலன் கதையைக் காவியமாகக் கூற வந்த இளங்கோ, தனக்குத் தெரிந்த பாதையை எழுதியிருக்கலாம் என்றே நாம் கருத வேண்டும்.

இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை நடத்திய பழந்தமிழர்கள் தமது இலக்கியங்களில் இயற்கை பற்றிய வர்ணனைகளை பொதிந்து வைத்தார்கள். தம்மைச் சுற்றி உள்ள இயற்கையில் உள்ள மரங்கள், தாவரங்கள், மலர்கள்.புள்ளினங்கள், குருவிகள், மிருகங்கள் பற்றியும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எழுதி வைத்துள்ளார்கள்.

பண்டைக்கால நாகரீக சமுதாயங்களில் மலர்கள் சிறப்புற பயன்படுத்தப்பட்டிருப்பதை காணலாம். கிரேக்க, ரோமானிய பண்பாட்டிலும் இலைகளாலும், மலர்களாலும் சிறப்பு செய்வதை சிலைகளிலும் ஓவியங்களிலும் காண முடியும். ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற வீரர்களை சிறப்பிக்கும் கிரேக்கர்கள் ஒலிவ் தழைகளால் முடி சூட்டியதையும் காண்கிறோம். அதே போலவே தமிழர்களும் மலர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள்.

மலர்களால் இறைவனை வணக்கம் செய்வது திராவிடர்களின் சிறப்பு என்பர். வைதீக வழிபாட்டில் மலர் வழிபாடு இடம் பெற்றிருக்கவில்லை என்றும், ஆரியர், திராவிடரிடமிருந்தே மலர்வழிபாட்டு முறையைக் கற்றனர் என்றும், “பூஜை” என்னும் வடசொல் ” பூ செய் ” என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும், வேதகால ஆரியர் இறைவனுக்கு வேள்வியியற்றி, அதில் மிருகங்களின் தசை முதலியவற்றைப் போட்டு வழபாடியற்றினர் என்றும் திராவிடர் தொன்னெடுங் காலந்தொட்டு மலர் வழிபாட்டு முறையினை மேற்கொண்டொழுகினர் என்றும் எஸ்.சுந்தரகுமார் சட்டர்ஜீ குறிப்பிடுவர். [ S.K.Chatterji – Race Movements and Prehistoric Culture in the Vedic Age ]

நீண்ட காலமாக எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் வாழ்பனுபவங்களை, இயற்கையுடன் பொருத்தி எழுதிவந்துள்ளனர்.இயற்கையைப் பாடாத உலகக்விஞர்களே கிடையாது என்பதுமட்டுமல்ல அதை ஆளுமையுடனும் உணர்ச்சிபூர்வமாகவும் வெளிப்படுத்தினர்.

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *