எதனால் அடிக்கடி பசி உண்டாகிறது?

உடலின் செயல்பாட்டிற்கு சக்தி வேண்டும் என்பதன் வெளிப்பாடே பசி. பசி ஏற்படும் பொழுது வயிற்றில் ஒரு வித உணர்வு ஏற்படும். அதையே ‘பசி வயிற்றை கிள்ளுகின்றது’ என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுகின்றோம். அந்நேரம் சாப்பிடவில்லை என்றால் தலைவலிக்கும், எரிச்சல் வரும், எதிலும் கவனம் செலுத்த முடியாது. சிலருக்கு சாப்பிட்டு பல மணி நேரம் சென்றுதான் பசி ஏற்படும். ஆனால் இது எல்லோருக்கும் பொருந்தாது. பலருக்கு சரியாக காலை, மாலை, இரவு என்ற முறையில் பசி ஏற்படும். இதுவும் அவர்கள் தன் உடலையும் மனதையும் ஒரு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதைக் காட்டும். ஆனால் சிலர் சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள்ளாக பசிக்கின்றது என்பர். சிறு பிள்ளைகள் இப்படி கேட்கும் பொழுது பிஸ்கட், சாக்லேட் கேட்கும். அதை அவர்களது குழந்தைதனமான தந்திரம் என்று விட்டு விடுவோம்.

ஆனால் சில வளர்ந்தவர்கள் தனக்கு அடிக்கடி பசி ஏற்படுகின்றது என்று கூறும் பொழுது அதனைப் பற்றி நன்கு கவனிக்க வேண்டும். நம் உணவு முறை சரிவர இல்லாத காரணத்தினால் அடிக்கடி பசி ஏற்படலாம். தேவையான அளவு புரதம் உணவில் இல்லாமை: புரதத்திற்கு ஒரு குணம் உண்டு. குறைந்த கலோரி சத்தில் வயிறு நிறைந்த உணர்வினைத் தரும். பசி உணர்வை தூண்டும். ஹார்மோன்களின் அளவும் இதனால் கட்டுப்படுத்தப்படும்.  புரதம் இல்லாத உணவினை உட்கொள்பவர்களுக்கு எளிதில் பசி எடுக்கும். எப்பொழுதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். இரவு உணவிற்குப் பிறகு சிப்ஸ், முறுக்கு போன்றவைகளை கொறித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் நீங்கும். இதன் காரணமாக கூடிக் கொண்டே போகும் எடை குறையும். இதனைப் பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகள் இதனை உறுதி செய்தன.

ஒவ்வொரு வேளை உணவிலும் புரதம் நன்கு சேர்த்துக் கொண்டால் அதிக பசி அடங்கும். அசைவம், மீன், முட்டை இவைகளில் சிறந்த அளவு புரதம் உள்ளது. பால், தயிர், பால் சார்ந்த பொருட்கள் பருப்பு, கொட்டைகள், விதைகள், முழு தானிய உணவுகள் இவற்றில் புரதம் உள்ளது. எனவேதான் நம் பாரம்பரிய உணவில் இட்லி-வடை, பொங்கல்-வடை, பருப்பு பாயாசம், வேர்கடலை உருண்டை, பொட்டுகடலை உருண்டை என்ற உணவுகள் சேர்க்கப்பட்டு இருந்தன.

• அடிக்கடி பசி எடுப்பதற்கு மற்றொரு காரணம் ஒருவர் போதுமான அளவு தூங்குவதில்லை. தூக்கம் மூளையின் சிறந்த செயல் பாட்டிற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், நாட்பட்ட நோய்கள் பாதிப்புஇல்லாமல் இருப்பதற்கும் அவசியமாகின்றது. தூக்கம் குறைவாக இருப்பவர்களுக்கு சற்று புரதத்தினை உணவில் கூட்டிய பொழுது அவர்கள் நன்கு தூங்கினர். பசியின் பாதிப்பும் அதிகம் குறைந்தது.

• அதிகம் நார் சத்து இல்லாத உணவினை உண்பதும் அடிக்கடி பசி ஏற்பட காரணம் ஆகின்றது. வெள்ளை பிரெட், மைதாவால் ஆன பிஸ்கட்டுகள், நான், கேக், சோடா, மிட்டாய் போன்ற உணவுகள் ரத்தத்தில் எளிதில் சர்க்கரையினை ஏற்றி விடும். இதனால் அதிக இன்சுலின் சுரந்து இந்த சர்க்கரை அளவினை குறைக்க முற்படும். திடீரென ஏறும் சர்க்கரை, பின் அதிக இன்சுலின் சுரப்பதினால் திடீரென இறங்கும் சர்க்கரை பசியினை ஏற்படுத்தும். ஆகவே மேற்கூறிய உணவுகளை அதிகம் தவிர்த்து விடுவது நல்லது.

• மிகக் குறைவான கொழுப்பு உணவும் அடிக்கடி பசியினை ஏற்படுத்தும். பலர் கொழுப்பை கண்டு அதிகம் பயந்து விடுகின்றனர். நமக்கு நல்ல கொழுப்பும் தேவைதான். கொழுப்பு சேர்த்த உணவால் பசி எடுக்க சற்று நீண்ட நேரம் பிடிக்கும்.சீஸ், முட்டை, மீன், சியா விதை, பாதாம், வால்நட், ஆலிவ் தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை ஒவ்வொரு வேளை உணவிலும் ஏதாவது ஓரிரு பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

• நீங்கள் தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அடிக்கடி பசிப்பது போல் தோன்றும். எனவே தேவையான அளவு நீர் குடியுங்கள். நீர் சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள் இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.

• உணவில் நார்சத்து இல்லையென்றாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உணவில் நார்சத்து மிக அவசியம்.

• அநேகர் உணவு உண்ணும் பொழுது டி.வி. பார்த்துக் கொண்டோ, செல்போன் பார்த்துக் கொண்டோ அல்லது செல்போனில் பேசிக் கொண்டோ உணவை உண்கின்றனர். இதனால் அவர்கள் அவசரம் அவசரமாக உண்கிறார்கள். இதனால் முழுமையாக மென்று உண்ண முடிவதில்லை. சிலர் வறுத்த, பொறித்த உணவுகளை அதிகம் உண்டு விடுகின்றனர். இதனாலும் அடிக்கடி பசி ஏற்படும். எனவே உண்ணும் பொழுது அமைதியாய், பேசாமல் உணவினைப் பார்த்து பொறுமையாய் மென்று சாப்பிடவும்.

• மிக அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் அதிக பசி ஏற்படும்.

• அதிக மது அருந்துபவர்களுக்கு அதிக பசி ஏற்படும். ஏனெனில் வயிறு நிறைவினை உணர்த்தும் ஹார்மோன் குறைந்து விடுவதால் அதிக பசி உணர்வு ஏற்படும்.

• புட்டிகளில் காற்று அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் சூப், ஷேக்ஸ் இப்படி திரவு உணவு வகைகளையே சிலர் உண்பர். இவர்களுக்கு திட உணவினை உட்கொண்ட நிறைவு இராது. இதன் காரணமாக அடிக்கடி பசி ஏற்படும்.

• மிகுந்த ஸடிரெஸ் உள்ளவர்களுக்கு அதிக கார்டிலால் ஹார்மோன் சுரப்பதால் அடிக்கடி பசி ஏற்படும்.

• சில குறிப்பிட்ட பிரிவு மருந்துகள் அதிக பசியினை ஏற்படுத்தும்.

• அவசரம், அவசரமாக உணவை மெல்லாமல் அப்படியே விழுங்குபவர் களுக்கு அதிக பசி ஏற்படும்.

• சர்க்கரை நோய் உடையவர்கள், தைராய்டு அதிகம் சுரப்பவர்கள் மற்றும் மன உளைச்சல் பாதிப்பு உடையவர்களுக்கு மருத்துவ காரணங்களால் அடிக்கடி பசி ஏற்படும்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *