குழுவொன்றில் பலபேர்
கூடியே இருந்தாலும்
வழி நடத்த ஒருவர்
தலைவராக வேண்டும்
தம் இனப் பற்றும்
தம் சார்ந்தோர் நலனும்
தம்முடையோர் வாழ்வும்
தாழ்வின்றி உயர்ந்திட
தன்னலம் இன்றி
தன் சுகம் பாராது
தன் வாழ்வை அர்ப்பணிக்க
தன்னவர்க்காய் வாழ்ந்திட
எமக்காக ஒரு தலைவர்
எம்முடன் இருந்து விட்டால்
எட்டி வைக்கும் அடியெல்லாம்
வெற்றிப் படி ஆகிவிடும்
பல குழுவாய் பிரிந்திருந்து
பல் வேறு கொள்கையுடன்
பலமின்றி வாழ்ந்திருந்தால்
பாரினிலே பயனேது
பக்குவமாய் எடுத்துரைத்து
பழுதின்றி ஒன்று கூடி
பலமோடு வாழ்ந்திருந்தால்
பார்முழுதும் நம் வசமே
நம்மோடு இருப்பவர்கள்
நலமாக உள்ளதன்றி
நம் அயலில் இருப்போரும்
நலமாக இருக்க எண்ணும்
தாயன்புக்கு நிகராக
தந்தை போல் அரவணைக்க
தலைவனொருவன் இருந்துவிடில்
தரணியையே வென்றிடலாம்
தலைவராக இருப்பதுவே
தலைமைத்துவம் ஆகாது
தன் சார்ந்தோர் பாதுகாப்பே
தலைவனின் தனிச்சிறப்பு
சிவகௌரி ( சுடரி)
வவுனியா
இலங்கை
