குடிநீரின்றி தவிக்கும் குச்சவெளி பல்லவன்குளம் மக்கள்

ஒரு நாட்டின் அடிப்படை மனித உரிமைகளில் முக்கியமானது சுத்தமான குடிநீர் பெறும் உரிமையாகும்.

ஆனால் குச்சவெளி பிரதேசத்தில் சுமார் 2004 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட மக்கள் இன்று வரை நிரந்தர குடிநீர் வசதியின்றி வாழ்ந்து வருவது கவலைக்குரியதோடு, அரசாங்கத்தின் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளின் செயற்பாட்டு தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை தற்காலிக தீர்வாக பவுசர் மூலம் குச்சவெளி பிரதேச சபை பூர்த்தி செய்து வந்தது. எனினும் கடந்த இரண்டு மாதங்களாக அந்த சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் அசௌகரியங்களையும் சுகாதாரப் பிரச்சினைகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

குடிநீர் விநியோகத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

நிதி ஒதுக்கப்பட்டும் சேவை வழங்கப்படவில்லை என்றால், அதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்? இந்த நிலைமை அதிகாரிகளின் அலட்சியத்தையா அல்லது நிர்வாகக் குறைபாடுகளையா பிரதிபலிக்கிறது?

நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பிரதேசத்தின் ஜூம் ஆ பள்ளி நிர்வாகம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் இணைந்து தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“நாங்கள் குடிநீரின்றி தவிக்கிறோம். எங்கள் பிள்ளைகள், பெண்கள் மற்றும் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றன” என்ற அவர்களின் கூற்று, நிலைமையின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சமூகத்திற்கு நிரந்தர குடிநீர் வசதியை ஏற்படுத்த முடியாதிருப்பது திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது.

மக்கள் தொடர்ந்து பொறுமையுடன் காத்திருந்த போதிலும், அவர்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.

குடிநீர் பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையை முற்றுகையிடுவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

இது வெறும் போராட்ட அச்சுறுத்தலாக அல்ல; பல ஆண்டுகளாகக் குவிந்திருக்கும் மக்களின் அதிருப்தியின் வெளிப்பாடாகும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையீடு செய்து தற்காலிக நீர் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதுடன், நிரந்தர குடிநீர் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், அடிப்படை உரிமைக்காக மக்கள் வீதியில் இறங்க வேண்டிய நிலை மேலும் தீவிரமடையும்.