சுதரின் நீங்காத நினைவுகள் – (முதலாம் ஆண்டு)

நினைவுக் கவிதை – சுதருக்கு

நீ சென்ற பாதை
முடிந்த பயணம் அல்ல,
எங்கள் நினைவுகளில்
தொடரும் வழி.

உன் குரல் மௌனமானது,
ஆனால் உன் பெயர்
எங்கள் உரையாடல்களில்
இன்னும் உயிருடன்.

ஊரின் செய்திகளில்,
உறவின் ஒன்றுகூடல்களில்,
“சுதர் இருந்திருந்தால்…”
என்ற வரியில்
நீ மீண்டும் வருகிறாய்.

மண்ணில் புதைந்தது உடல்,
மனங்களில் புதையாதது
உன் மனிதம்.

சென்றாலும் நீ போகவில்லை,
நீ இருந்த இடமெல்லாம்
இன்றும்
நினைவுகள் விழிக்கின்றன.

சுதர்

மனித குல வரலாற்றிலே மரணம் என்பது பொதுவானது. அதில் நம்முடைய வாழ்வில், சில உறவுகளின் இழப்புகளோடும் நினைவுகளோடும் தான் நாம் கடந்து வந்திருக்கிறோம்.
சுதரை இழந்து இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது.
ஆனாலும், இன்றும் அவன் இல்லை என்பதை உணர என் மனம் மறுதலித்துக் கொண்டே நிற்கிறது.
காலம் நகர்ந்தாலும், நினைவுகள் அப்படியே நிற்கின்றன.
சுதர் எனது ஐயாவின் தம்பியான துரைராஜாவுக்கும் இராஜலட்சுமிக்கும் பிறந்த மகன். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்; சுதருக்கு ஒரு தமக்கை — மஞ்சுளா. அவனது முழுப்பெயர் சுதர்சன் துரைராஜா. அனைவராலும் அன்புடன் “சுதர்” என்றே அழைக்கப்பட்டவன்.

அவனது இளமைக்காலம் பெரும்பாலும் ஈழத்தின் வடமராட்சி பிரதேசத்தில் கழிந்தது. கொம்மந்தறை அவனது சொந்த ஊர். இன்றும் அவனது பெரும்பாலான உற்றார் உறவுகள் வடமராட்சி உடுப்பிட்டி வடக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.

சிறுவயதில் ஒரு சுட்டிப்பையனாக அறியப்பட்ட சுதர், வாழ்நாள் முழுவதும் அதே குழந்தை மனதுடன் மனிதர்களை நேசித்தவன். அவனது சிறுவயது நண்பர்களான அன்பு, வினோ ஆகியோர் அவனது இறுதிப் பயணம் வரை தோழமையுடனும் நட்புடனும் இருந்தது, அவன் வாழ்வின் அழிக்க முடியாத அழகான பகுதிகளாகும்.

வாழ்க்கைத் துணையாக அமுதா என்கின்ற அமிர்தலட்சுமியுடன் இல்லற வாழ்வில் இனிதே வாழ்ந்து, இரண்டு மகன்களான மிதுன் மயூரன் மற்றும் மகளான பிரணயாவையும் பெற்ற, ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவனாகவும் அவன் வாழ்ந்தான்.

நானும் சுதரும்

சுதர் என்னைவிட ஓரிரு ஆண்டுகள் மூத்தவன். உண்மையில், அவனோடான என் நெருக்கமான அறிமுகம் இந்திய இராணுவ தடுப்புக் காவல் காலத்திலிருந்தே தொடங்குகிறது. காங்கேசன்துறையில் எங்கள் உறவினர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்த அந்த நாட்களில்தான், அவன் எனக்கு நன்கு அறிமுகமானான்.

இலண்டனுக்கு வந்தபோது, என்னை முதன்முதலாக அழைத்து வந்து தன்னோடு வைத்துக் கொண்டவன் சுதர். காலங்கள் மாறினாலும், எங்கள் தொடர்பு ஒருபோதும் துண்டிக்கப்படவில்லை. ஊர் சம்பந்தமான விடயங்களாகவோ, மனிதர்கள் பற்றிய தகவல்களாகவோ ஏதாவது தேவைப்பட்டால், நான் முதலில் தொடர்பு கொள்வது அவனையே.

ஊரும் உறவும் – சுதர்

ஊருடனான உறவும், அடுத்த தலைமுறையுடனான தொடர்பும் என்ற எண்ணத்தில், சுதர் எங்களுக்கொரு தூணாக இருந்தான். ஊரும் உறவும் சார்ந்த முயற்சிகளில் அவனது ஆதரவும் செயற்பாடும் அளப்பரியது. உறவுகளின் ஒன்றுகூடல்களை ஒருங்கிணைப்பதில் அவன் செய்த பங்களிப்பு மறக்க முடியாதது.

ஊரும் உறவும் சார்ந்து பல கனவுகளை நாம் கண்டோம்.
இன்று அவன் இல்லை.
ஆனால், அவன் விட்டுச் சென்ற நினைவுகள்,
அவன் காட்டிய பாதை,
அவன் உருவாக்கிய உறவுகள் —
எங்கள் மனங்களில் என்றும் உயிருடன் இருக்கும்.