மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்-   மு. நித்தியானந்தன்-பாகம் 6

கடல்கடந்த நாடுகளில் கூலிகளாகக் கொண்டுசெல்லப்பட்ட இந்தியத் தமிழர்கள் தங்கள்மீது துரைத்தனம் நடத்திய அடக்குமுறைதர்பாருக்கு எதிராகக் கிளர்ந்தபோது, அதற்கு தங்கள் உயிரைப் பணயம்வைக்க நேர்ந்தது. இலங்கையில் தேயிலைத்தோட்டத்தில் கிளர்ந்த அந்த எழுச்சிப் போராட்டத்தில், 1942இல் வீராசாமியும் வேலாயுதமும் தூக்குக்கயிறை முத்தமிடவேண்டி வந்ததென்றால், அதற்கு அடுத்து  ஐந்து ஆண்டுகள் கழித்து, மலேயாவில் ரப்பர் தோட்டங்களில், ஈயச்சுரங்கங்களில் அடக்குமுறையை எதிர்த்து, தொழிற்சங்கப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய எஸ்.ஏ.கணபதி 1949இல் மலேயாவின் புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டமை உலக அரங்கில் அதிர்வை ஏற்படுத்தியது. 

தன் தாய்மாமனுடனும் தாத்தாவுடனும் பத்தாவது வயதில் வயிற்றுப்பிழைப்புக்காய் சிங்கப்பூருக்குச் சென்ற கணபதி, ரப்பர் தோட்டங்களில் இடியப்பம் விற்றும், தோட்ட அதிகாரிகளின் வீட்டில் பாத்திரங்கள் கழுவியும் தொழில்பார்த்துவந்தார். தஞ்சையின் தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தேவர் – வைராத்தாள் தம்பதிகளின் மகனாகப் பிறந்த கணபதி, மலேயாவின் ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்பட்டவர். அகில மலேயா தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவராகப் பணியாற்றியவர். 1943ஆம் ஆண்டில் மலேயாவின் ஈயச்சுரங்கப் போராட்டத்தில் 14,000 தொழிலாளர்கள் தொடர்ந்து 45 நாட்கள் போராடி வெற்றிகண்டதில், தலையாய பங்கு கணபதியுடையதாகும். கணபதியின் தலைமையில் இயங்கிய அகில மலேயா தொழிற்சங்கக்கூட்டமைப்பு 1948 இல் தடைசெய்யப்பட்டபோது கணபதி தலைமறைவாக இயங்கிவந்தார்.  மலேய, சீன, தமிழர்களை இணைத்து, மூன்று லட்சம் அங்கத்தவர்களைக் கொண்டு   வலிமைமிக்க தொழிற்சங்கமாக இந்த அமைப்பு விளங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் மலேயா இருந்த காலம் அது. சிங்கப்பூர்,  மலேயா என்பன இணைந்திருந்த காலம்.

1949ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி மலேயாவின் ரவாங் செலங்கூர் என்ற இடத்தில் ரப்பர் தோட்டத்தில் தோட்ட மனேஜர், அவருடன் இணைந்த பொலிஸ் படையினர் கணபதியைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்தனர். அவரைச் சிறைப்படுத்தியபோது அவரிடம் 6 தோட்டாக்களுடன் கூடிய பிஸ்டல் இருந்ததாக வழக்கு ஜோடித்தனர். அவசரகாலச் சட்டத்தின்கீழ் வழக்கு விசாரணை மேற்கொண்டு கணபதிக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. 

பாரதப் பிரதமர் நேரு பொதுநலவாய அமைப்பிற்கூடாக தூக்குத்தண்டனைக்கு எதிராக வேண்டுகோள் முன்வைத்தார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் வி.கே.கிருஷ்ண மேனன் கணபதிக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கைவிடுமாறு கோரினார். கணபதியைத் தூக்கிலிடுவதற்கு 24க்கும் குறைவான மணித்தியாலங்களே இருந்த நேரத்தில் அவசரகதியில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் அது. தஞ்சையில் இருந்த கணபதியின் குடும்பத்தினர் கணபதியைக் காப்பாற்றுமாறு இந்திய அரசாங்கத்திடம் மனுக்கொடுத்திருப்பதைச் சுட்டிக்காட்டி, கணபதிக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று ஹிந்து பத்திரிக்கை கோரியிருந்தது. தண்டனை நிறைவேற்றப்படவிருந்த செலாங்கூர் பகுதி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு வெளியில் சுல்தானின் ஆட்சியின் கீழ் இருந்ததென்றும், அவர் தனது மன்னிக்கும் சலுகையைப் பிரயோகிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

முதலில் தூக்குத்தண்டனை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு, ஆனால்,   1949 மே 4 ஆம் திகதி மலேயாவின் புடு சிறைச்சாலையில் கணபதி தூக்கிலிடப்பட்டார். அமெரிக்காவின் பிரபல தொழிற்சங்கத் தலைவர் ஹரி பிரிட்ஜஸ் ‘இது ஏகாதிபத்தியப் படுகொலை’  என்று கண்டனம் செய்தார். இந்தியாவின் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் ‘பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்காக கொமன்வெல்த்தில் பண்டித நேரு அறுவடை செய்த கனி கணபதியின் மரண  தண்டனை’ என்று அறிக்கை வெளியிட்டது.

‘கயிற்றில் தொங்கிய கணபதி’ என்ற தலைப்பில் கலைஞர் கருணாநிதி எழுதி வெளியிட்ட பிரசுரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

‘கணபதி தூக்கிலிடப்படுவார்.’ இச்செய்தி திராவிடத்தை, ஏன் உலகத்தையே எட்டிய நேரத்தில் திராவிடம் சோர்ந்து விழுந்தது. அதேவேளையில் ஆறுதல் சிறிது தலைநீட்டியது. சுதந்திர பூமியில், சுதந்திர வீரர்களை, சுதந்திரத் தலைவர்களைப் பெற்றிருக்கின்ற   நமக்கு ஏன் அச்சம்?  நமக்கு ஏன் வீண் சஞ்சலம்? நமது சர்க்கார் நமது நாட்டுக் கணபதியை அநாதையாக மலேயாவில் மாளவிடாது என மனதைத் திடப்படுத்திக்கொண்டோம். அதுமட்டுமல்ல, காமன்வெல்த்தோடு ஏற்படும் உறவு கணபதியைக் காப்பாற்றும் என நம்பி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டோம். துடைத்த கையை எடுக்கவில்லை.  தூக்குமேடை கணபதியைத் தின்று ஏப்பமிட்ட சப்தம் நமக்குக் கேட்டது’ என்று எழுதினார் கலைஞர் கருணாநிதி.

தீண்டாமைக்கு எதிராகப் பேரியக்கம் நடத்திய இளைஞன், பெரியார் பெயரில், தமிழ்மொழியின் பெயரில் மன்றங்கள் அமைத்துச் செயற்பட்ட பெருமகன், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் பாட்டாளிவர்க்க விடுதலை நோக்கிப் பயணித்தவன், தொழிற்சங்கத்தைக் கட்டி எழுப்புவதில் இரவுபகலாய் உழைத்த பெருந்தொண்டன் தூக்கிலிடப்பட்ட செய்தியை எழுபது ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று சிந்தித்துப்பார்த்தாலும் விடுதலை நேசர்கள் சிந்திய ரத்தம் நெஞ்சில் கனல்மூட்டுகிறது.                                      

போப் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் வழங்கிய சாட்சியங்கள் அனைத்தையும் நேர்த்தியாகத் தொகுத்து  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் O.K.de Kretser Jr என்பவர்    The Pope Murder Case  – The Trial of Ramasamy Weerasamy and Iyan Perumal Velaithen  என்ற தலைப்பில் ஓர் அரிய ஆவணத்தை  1942இல் வெளியிட்டிருக்கிறார். இக்கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான மூன்று வழக்கறிஞர்களில் ஓ.எல்.டி.கிரெட்சர் (ஜூனியர்) ஒருவராவார்.

இவ்வளவு விரிவாக ஒரு பரபரப்பான கொலை வழக்கு

இதுகாலவரை ஆவணப்படுத்தப்பட்டதில்லை.முக்கிய சாட்சியங்கள், சம்பவம் நடந்த இடம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைபடங்கள், தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள், அவர்களில் ஒருவர் இறுதியாக எழுதிய கடிதத்தின் பிரதி என்று மிக முக்கிய  புகைப்படங்களுடன் இந்த நூல் தொகுக்கப்பட்டுள்ளது. வீராசாமி, வேலாயுதம் ஆகிய இரண்டு வீரத் தியாகிகளின் புகைப்படங்கள் இந்த நூலிலிருந்தே பெறப்பட்டிருக்கின்றன. போப் துரையின் புகைப்படம் எங்கும் இல்லை. பெறுமதிமிக்க இந்த ஆவணம் கிடைத்திருக்காவிட்டால், கூடிப்போனால்  இந்த வழக்கு குறித்த பத்திரிகைத் தகவல்களோடு நாம் திருப்தி அடைந்து கொள்ள நேரிட்டிருக்கும்.  சட்டரீதியாக மிகத் துல்லியமான விபரங்களை இந்த நூல் தருகிறது.

‘நீதிமன்றங்கள் என்ற நிறுவகத்தில் பொதுமக்கள் கொண்டிருக்கும் அக்கறைதான், நீதி தன்வழிச் செல்வதை நியாயமான அளவுக்குத் தூயதாக வைத்திருக்கிறது; எனினும், மேற்படி பொதுமக்கள் என்ற கூட்டத்தில் வெகுசிலர் மட்டுமே, மிக முக்கியமான வழக்கு விசாரணைகளை நேரடியாகப்பார்ப்பதற்கான வாய்ப்பினைக்கொண்டிருக்கிறார்கள்.இதன் விளைவு என்னவென்றால், சாதாரண பிரஜை என்பவன் பிரபல்யமான வழக்குகள் பற்றிய விபரங்களை பத்திரிகைகளில் சுருக்கப்பட்டு வெளியிடப்படும் அறிக்கைகள் மூலமே அறிந்து கொள்ளமுடியும்.நீதிமன்ற விசாரணைகளின்போது அங்கே அரங்கேறும் நாடகத்தின்  வாதப்பிரதிவாதங்களையோ, ஆளையாள் தாக்கி எதிர்க்கும் மோதல்களையோ துலாம்பரமாகக் காட்டுகின்ற சூழலை அனுபவிக்கும் வாய்ப்பு அவனுக்கு இல்லாமல்போய்விடுகிறது.பொதுசன ஞாபகம் நீடித்து நிற்பதில்லை; நீதிமன்ற வாதாட்டுப்புகழும் நிலைநிற்பதில்லை.

இதனாலேதான், பொதுசன ஞாபகத்துக்கு உதவும் வகையிலும், நீதிமன்ற வாதாட்டுப்புகழை நிரந்தரமாகப் பதிந்து வைக்கும் வகையிலும் ‘இலங்கையின் புகழ்பூத்த வழக்கு விளக்கங்களின் தொகுப்பு’ என்ற வரிசையின் முதலாவது தொகுப்பை வகுத்துத் தொகுத்து வெளியிடுகிறேன்’   என்று வழக்கறிஞர் ஓ.எல்.டி.கிரெட்சர் (ஜூனியர்) போப்துரை கொலைவழக்கு பற்றிய முழுமையான பதிவினைத் தொகுத்து நூலாக வெளியிடுகையில் கூறுகிறார்.

இவை நமக்கு வெறும் வழக்கு விபரங்கள் அல்ல. நீதிமன்ற வளாகத்துள் பொறிபறக்கும்  சட்டமேதைகளின் வாதங்கள் பற்றியதல்ல.தங்களின் சட்டநுண்ணறிவை, தங்களின் வழக்கிற்கு வாகாக எங்கே முன்மாதிரித் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அல்லது வழங்கப்படவில்லை என்று சொல்லுக்கு, அர்த்தத்திற்கு, வார்த்தை உதிர்க்கப்பட்ட சூழலுக்கு என்றெல்லாம் விலாவாரியாக சட்டவிளக்கம் தரவல்ல சட்டநிபுணர்கள் பற்றியதல்ல.காலாகாலமாக, ஈவிரக்கமில்லாமல் சுரண்டப்படும் தொழிலாளருக்கு வழங்கப்படவேண்டிய சமூக நீதி பற்றிய அக்கறை நமது. இந்த அடிமைச் சுரண்டல் அமைப்பைத் தகர்த்து நியாயம் கோரும் உழைப்பாளரின் போராட்டம் பற்றியது நமது கரிசனை.சகல ஒடுக்குமுறைகளையும் ஏற்று, அடங்கி ஒடுங்கி வாழ்வதை, சட்டம்-ஒழுங்குகளுக்கு அமைய வாழும் நாகரிக வாழ்வாகக் கற்றுத்தரும் ஆட்சி அமைப்புகள், நிர்வாக இயந்திரங்கள், சட்ட ஸ்மிருதிகள் என்பனவற்றின் பிரம்மராக்ஷஸின் முன்னால் நசிந்து கிடக்கும் ஏழை மனிதனின் தீனக்குரல் பற்றியது நம் உணர்வு.    மலையகத் தொழிலாளர்களின் உரிமைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நம் சொந்தங்களின்        கதை இது. வாழ்வற்ற வாழ்வில் ஜீவனம் செய்யும் பஞ்சைபராரிகளின் சோகக்கதை இது. இந்த வாழ்வினை சதையும் ரத்தமும் நரம்பும்  சேர்த்துப்பிணைத்து ஒரு காவியமாய் வடிவமைக்க முயன்ற சாரல்நாடனின் நெஞ்சத்துடிப்பு இந்த நாவலில் நமக்குக்கேட்கிறது.           

சாரல்நாடன் ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவலுக்கு இந்த நூலை ஆதாரமாகக் கொண்டிருக்கிறார். 

மலையகத்துப் போராட்ட வரலாற்றில் அதியுன்னத உயிர்த் தியாகத்தை நல்கிய வீராசாமி, வேலாயுதம் ஆகிய இரு இளைஞர்களின் வாழ்வு சாரல்நாடனின் இதயத்தைத் தைத்திருக்கிறது.  உண்மையில் நடந்து முடிந்த ஒரு வரலாற்று நிகழ்வை, சாசுவதமான இலக்கியப்படைப்பாக்க வேண்டும் என்ற வேணவா அவரின் சிந்தனையை ஆட்கொண்டிருந்திருக்கிறது. ஒரு சிருஷ்டியாளனாக அதனைச் சாதிக்கும் திறமையும் அவருக்குக்கைகூடி வந்திருக்கிறது. நம் நினைவிலிருந்து அனேகமாக மறைந்தே போய்விட்ட அந்த தியாகப்பெருமக்களின் வாழ்வை மலையக மக்களின் நெஞ்சில் சிற்பமாகப் பொறித்துவைக்கவேண்டும் என்ற சாரல்நாடனின் கனவு பெரிதும் மெச்சத்தக்கது.

நாம் வாழும் காலத்திற்கு மிக அண்மித்து நடந்த ஒரு போராட்ட வாழ்வு குறித்து கணிசமான விபரங்கள் நமக்குக்கிடைத்திருப்பது நமது அதிர்ஷ்டம் என்று சொல்லவேண்டும். ஓர் யதார்த்த வரலாற்று நிகழ்வு புனைவு பெறும்போது திட்பநுட்பமான, திருத்தமான வரலாற்று உண்மைகள் என்ற உறுதியான தளத்தில் அவை கட்டி எழுப்பப்படவேண்டும்.

மலையகத் தொழிலாளரின் வாழ்க்கைச் சூழல், தொழில்சார் பிரச்னைகள், ஸ்டோர் வேலை, மலைக்காட்டு வேலை, கவாத்து, கான் வெட்டு, கொழுந்தெடுப்பு, புல்லுவேட்டு, தொழிற்சங்க அலுவல்கள், தொழில் வழக்குகள் என்று சாரல்நாடனுக்கு இவை அனைத்தும் மிகப்பரிச்சயமான விவகாரங்கள். எந்த நிகழ்வு குறித்தும் ஆதாரங்களைத் தேடுவதில் அவர் காட்டும் அக்கறை ஆத்மார்த்தமானது.மலையக மக்கள் வாழ்வு குறித்து அவரே சிறுகதைகளை, குறுநாவல்களைப்படைத்தளித்திருக்கிறார்.

வரலாற்று மெய்மை (historical accuracy) என்பது வரலாற்றுப்புனைவில் அடிநாதமாக விளங்குவது. The Name of the Rose என்ற Umberto Ecoவின் நாவல் பதினான்காம் நூற்றாண்டில் நிகழ்கிறது. அந்த நாவலில் இத்தாலியத் துறவிகள் மடாலயத்தில்  பன்றி ரத்தம் நிறைந்த  தொட்டியில்  ஒரு பிணம் தலை  குப்புற அமிழ்த்தப்பட்டுக்காணப்படுகிறது.இத்தாலியில் கடுங்குளிர் காலத்தில்தான் பன்றிகள் வெட்டப்படும்.இத்தாலியில் நவம்பர் மாதத்தில் குளிர் ஆரம்பித்தாலும் மலைப்பாங்கான பிரதேசத்தில்தான் அம்மாதத்தில் குளிர் சற்று அதிகமாகக் காணப்படும் என்று மலைப்பிரதேசத்தில் அமைந்த மடாலயத்தை உம்பேர்டோ இக்கோ தனது நாவலுக்குத் தெரிவு செய்கிறார்.புனைவின் மெய்மையினை உறுதிப்படுத்த ஒரு நாவலாசிரியன் எடுத்துக்கொள்ளும் அக்கறையை இது காட்டுகிறது.

‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவல் போப்துரை கொலை பற்றியும் அதில் சம்பந்தம் கொண்ட வீராசாமி, வேலாயுதம் ஆகிய இரு தியாகிகள் பற்றியும் பேசும் நாவலே. அத்துடன் சாத்தப்பன் கங்காணி,துரை பங்களா அப்பு, டீமேக்கர் என்று இதர பாத்திரங்கள் வந்து போகின்றன.கதை போப் துரை கொலையுண்டு கிடப்பதிலிருந்து ஆரம்பமாகி, நீதிமன்றம் வீராசாமியையும் வேலாயுதத்தையும் குற்றவாளிகள் என்று கண்டு, தூக்குத்தண்டனை வழங்குவதோடு முடிவு பெறுகிறது.மலையகத்தின் தியாகம் மிகுந்த போராட்ட வரலாறு  நாவலாக வடிவம் கொள்ளும் நேரமிது.

கந்தலா தோட்டம் என்று தமிழில் வழங்கப்பட்ட ஸ்டெலென்பேர்க் தோட்டத்தை ஆனைமலைத்தோட்டம் என்று இந்நாவலில் பெயர் சூட்டியிருக்கிறார் சாரல்நாடன்.

போப் துரையை அறிமுகப்படுத்துகையில்,’ கடந்த இருபது ஆண்டுகளாக இதே தோட்டத்தில் மானேஜராக கடமை புரியும் அவருக்கு அந்த தோட்டம் மட்டுமல்ல, தோட்டத்து இளம் பெண்களும் வாலிபர்களும் நன்கு தெரிந்தவர்கள். எட்டுவயதில் கொழுந்தெடுக்கப்பழகி, பத்து வயதில் பேர் பதியத் தொடங்கியிருக்கும்   அவர்களது வாழ்வின் ஒவ்வோர் அசைவையும் நன்கு அறிவார். அவருக்குத் தெரியாமல் அங்கு ஒரு மாற்றம் நேர முடியாது’ என்கிறார் சாரல்நாடன்.

போப்துரை கொலைவழக்கில் சாட்சியமளிக்கும் 45வயதான செபஸ்தியான் பெர்னாண்டஸ் என்ற பங்களா அப்பு, தான் கடந்த எட்டு ஆண்டுகளாக போப் துரையிடம் அப்புவாக பல்வேறு தோட்டங்களில் வேலை பார்த்துவந்திருப்பதாகவும், ஸ்டெலென்பேர்க் தோட்டத்திற்கு  போப்துரை வந்தபோது, தானும் தனது மகன் பிலிப் பெர்ணான்டோவும் வீரமுத்து என்ற தோட்டக்கூலியுமே அவரின் பங்களா வேலைக்காரர்களாக இருந்தோம் என்று கூறுகிறார்.

போப்துரை   ஸ்டெலென்பேர்க் தோட்டத்தில் ஓரிரு ஆண்டுகளே வேலை பார்த்திருக்கிறார்.

‘இந்த குணாம்சங்களோடுதான் இரண்டாயிரம் ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஆனைமலைத்  தோட்டத்தை  புசல்லாவைப் பிராந்தியத்திலேயே முதலாவதாக வரச் செய்திருந்தார்’ என்று நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. போப் துரை கொலை வழக்கில் ஸ்டெலென்பேர்க் தோட்டத்து ஸ்டோர் டீமேக்கர் ஆர்.எல்.லுடோவைக் சாட்சியமளிக்கையில், போப்துரை ஸ்டெலென்பேர்க் தோட்டத்தில் மூன்று ஆண்டுகளே துரையாக வேலை பார்த்தார் என்றும் அந்தத் தோட்டம் 475 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தேயிலைத் தோட்டம்  என்றும் கூறுகிறார். அந்த தோட்டத்தில் டீமேக்கராக இருந்தவர் ஆர்.எல்.லுடோவைக்.

ஆனால், அங்கு டீமேக்கராக இருந்தவர் காசிம் என்று நாவல் சொல்கிறது. என்ன பிரச்னை எனில், அந்த தோட்டத்து ஸ்டாரில் காவற்காரனாக இருந்து, இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக இருப்பவர் பெயர் காசிம். போப் துரை இரவு விருந்துண்டு தோட்டத்திற்குத் திரும்புகையில், துரையின் கார் ஸ்டோரடிக்கு வந்துவிட்டது என்று ஒரு மைல் தொலைவில் உள்ள துரை பங்களாவில்  அப்புவிடம் , கராஜைத் திறந்து வைக்குமாறு அறிவித்தவர் காவற்காரர் காசிம்தான்.பதினைந்து நிமிஷங்களாகியும் துரையின் கார் பங்களாவிற்கு வராததால், அதனை அப்பு காசிமுக்கு அறிவித்து, என்ன நடந்தது என்று துரையின் கார்போன பாதையில் நடந்துபோய்த் தேடியதில் துரை குற்றுயிராய் பாதையில் வீழ்ந்து கிடப்பதை முதலில் பார்த்தவர் காவற்காரர் காசிம்தான்.

இந்தக் காவற்காரரின் பெயரை டீமேக்கருக்கு வைத்ததில் உண்மை நிகழ்வின் மாந்தருக்கும் நாவல் மாந்தருக்கும் இடையில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.உண்மைச் சம்பவத்தில் சம்பந்தம் கொண்டவர்களின் பெயர்கள் அனைத்திற்கும் கற்பனைப் பெயர்களை வைத்துக் கொண்டிருந்தால், அவற்றைப் புனைவாகக் கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை ஒருவர் மாற்றி, ஒருவருக்கு வைத்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதிலும், இச்சம்பவத்தில் முக்கிய இரு போராளிகளான வீராசாமி, வேலாயுதம் ஆகிய இருவர் குறித்த புனைவில் மிகுந்த முரண்பாடுகள் காணப்படுகின்றன.

மே மாதம் 9 ஆம் திகதி நள்ளிரவில் போப் துரைமீதான தாக்குதல், வழியை மறித்து நடத்தப்பட்டு, அவர் துரை பங்களாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு மரணிக்கிறார்.

மே மாதம் 11 ஆம் திகதி கண்டியில், பொலீஸின் கண்காணிப்பிலிருந்த அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்க ஆபிஸிலிருந்து வெளியில் வந்த சந்தேக நபர் பொலிஸ் இன்ஸ்பெக்டரால் கைது செய்யப்படுகிறார். முதலில் லெச்சுமி தோட்டத்தைச் சேர்ந்த சுப்பையா என்று தெரிவித்த அந்நபர் விசாரணையின்போது தான் வீராசாமி என்றும், போப் துரை மீது தான்  தாக்குதல் நடத்தியதாகவும் தன்னுடன் வேலாயுதமும் சேர்ந்து இதனைச் செய்ததாக வாக்குமூலம் அளிக்கிறார்.

அதன் பின், வேலாயுதத்தைத் தேடும் பொலிஸ் வேட்டை ஆரம்பமாகிறது.

மே மாதம் 15 ஆம் திகதி ரம்பொட, ப்ரொடொப்ட்  எஸ்டேட்  கண்டக்டர் சந்தியாகு தங்கள் தோட்டத்தில் அந்நியமான நபர் ஒருவர் காட்டுப்பக்கமாய்ப் போய்க்கொண்டிருப்பதைப்பார்த்து, சந்தேகம் கொண்டு அவரை விசாரித்து, சிறைப்படுத்தி பொலிஸிடம் ஒப்புவிக்கிறார். அவர் விசாரணையில் தான்தான் வேலாயுதம் என்று தெரிவிக்கிறார். 

இவை எல்லாம் போப் துரை கொலை வழக்கில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குமூலங்களில் பெறப்பட்டவை.

சாரல்நாடனின் இந்நாவலின்புனைவு இவ்வாறு அமைகிறது:

‘உடுப்பு பார்சல் இங்கேயே இருக்கட்டும். பிறகு வந்து எடுத்துக்கொள்கிறேன்’ என்று ஆபிசுக்கு வெளியில் வந்தான். 

அவன் மனம் லேசாகிவிட்டிருந்தது.

வெளியில் வந்து முப்பது அடி தூரம் நடந்திருப்பான்.அவனை யாரோ பெயர் சொல்லி அழைத்தார்கள். யாராயிருக்கும் என்று திரும்பிப்பார்த்தான்.

‘வேறு யாரும் வரலையா?’

‘இல்லை, நீங்க யாரு?’

‘ஆனைமலை தோட்டத்தில் இருந்து தானே வந்திருக்கிறீர்கள்?’

‘ஆமாம்’

‘வேலாயுதம் நீங்க தானே’

‘நான் தேடி வந்த ஆளு நீங்கதான், வாங்க போவோம்’

‘எங்கே’

‘உங்களைக் கைது செய்யும்படி பொலிஸ் ஆணை பிறப்பித்திருக்கிறது’ என்று கூறி, கைவிலங்கை எடுத்துக்காட்டியதும் வந்திருப்பது ‘மப்டி’யில் இருக்கும் பொலிஸ் என்பதைக் கண்டு கொண்டான்.’

உண்மையில், கண்டியில் தொழிற்சங்க ஆபிஸிலிருந்து வெளியில் வரும்போது பொலிஸினால் கைது செய்யப்பட்டது வேலாயுதம் அல்ல; வீராசாமி.

வீராசாமியின் இடத்தில் வேலாயுதத்தின் பெயரை இட்டு மேற்கொண்ட இப்புனைவு வரலாற்று மெய்மையைப் பேணியதாகத் தெரியவில்லை.

புனைவிற்காகவே இம்மாதிரிப் பெயர் மாற்றங்களைச் சாரல்நாடன் செய்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. உண்மையான பெயர்களையே இட்டிருந்தால் அவை வரலாற்றோடு பெரிதும் பொருந்திப் போயிருக்கும்.

‘வழமையாக வீட்டிலிருக்கும்போது வேலாயுதத்துக்கு அடுத்த காம்பிராவிலிருக்கும் ஜெபமாலை அப்பு பியானோ வாசிப்பார், அவர் வாசிப்பதை கேட்டுக்கொண்டே இருக்கலாம்’ என்று சாரல்நாடனின் இந்நாவலில் ஓரிடத்தில் வருகிறது.

உண்மையில் தோட்டத்து காம்ராவில் பங்களா அப்புவின் மகன் பிலிப் பெர்னாண்டோ கிராமபோன் பெட்டியைத் தான் இயக்கியிருந்தாரே தவிர பியானோவை அல்ல.பியானோ வாசிப்பதற்கு இசை நுட்பங்கள் தேவை. லயக்காம்பிராவில் பியானோவை வாசிப்பது சாத்தியமில்லை.

இந்த நாவலுக்கு வரலாற்று முக்கியத்துவத்தை வழங்குவதற்கு, சாரல்நாடன் மலைநாட்டில் இடம்பெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளைத் தனது நாவலில் இணைத்திருக்கிறார்.

நேரு தனது மனைவி கமலாவுடன் நுவரெலியாவில் ‘கிறேன் ஹோட்டலில்’ தங்கியிருந்தபோது வேலாயுதம் அந்த ஹோட்டலுக்குச் சென்று அவரைப் பார்த்துவிட்டு பத்துமணிக்குப் பிறகு இரவு முழுக்க நடந்துவந்து ஆனைமலைத் தோட்டத்துக்கு வந்தது அவன் நினைவுக்கு வந்தது என்றெழுதுகிறார் சாரல்நாடன்.

நேரு தனது மனைவி கமலாவுடனும் மகள் இந்திராவுடனும் ஒரு மாதகால விடுமுறையில் நுவரெலியாவில் தங்கியிருந்தது 1931 ஏப்ரல் 23 தொடங்கி மே 22 வரையிலான காலப்பகுதியாகும். 

 இப்போராட்டம் நடந்த காலப்பகுதியில் வீராசாமிக்கு இருபத்திரண்டு வயது என்று சாரல்நாடன்  தனது நாவலில் பதிவுசெய்கிறார். ஏறத்தாழ வேலாயுதமும் சமவயதினர் என்றே தெரிகிறது. 1941 இல் 22 வயதெனில், 1931 இல் அவர்களுக்கு 12 வயதாக இருக்க வேண்டும். 

‘தென்னிந்தியாவின் புகழ்பூத்த மதுரையம்பதியிலிருந்து இலங்கைக்கு, தான் வந்த காலம் வேலாயுதத்தின் நினைவுக்கு வந்தது. தன் சித்தப்பா முறையான ஒருவருடன் தன் பதின்மூன்றாவது வயதில் கப்பல்மூலம் இந்த நாட்டுக்கு வந்து தோட்டத்தில் பேர்பதிந்து வேலைசெய்யத் தொடங்கினான்’ என்று இந்நாவலின் 6ஆம் அத்தியாயத்தில் சாரல்நாடன் எழுதுகிறார்.

இந்நிலையில், பதின்மூன்று வயதில் கப்பல்மூலம் மலைநாட்டிற்கு வந்தவர், அதேவயதில் என்றாலும் நுவரெலியாவிற்குச் சென்று நேருவைப் பார்த்துவிட்டு, ஆனைமலைத் தோட்டத்திற்குத் திரும்பினார் என்ற கதை காலவழுகொண்டதாகவே தெரிகிறது.

கம்பளையில் 1940ஆம் ஆண்டு 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை இந்திய காங்கிரஸின் மாநாட்டில் வேலாயுதம் பங்குகொண்டு, அக்கூட்டத்தில் நடேசய்யரும் பிரசங்கம்செய்ததை நினைத்துக்கொள்வதாக சாரல்நாடன் எழுதிச்செல்கிறார். ஆனால், அக்காலகட்டத்தில் பிரதானமாகவிருந்த இலங்கை இந்தியன் காங்கிரஸ் லேபர் யூனியனிலோ, நடேசய்யரின் இலங்கை இந்தியத் தொழிலாளரின் சம்மேளனத்திலோ அல்லாமல், லங்கா சமசமாஜக் கட்சியின் ஆதரவில் இயங்கிய அகில இலங்கைத் தோட்டத்தொழிலாளர் சங்கத்திலேயே வேலாயுதமும் வீராசாமியும் இணைந்து செயற்பட்டனர் என்பதை நாம் நினைவில் இருத்துவது நல்லது.

இந்த நாவலில் தமிழகத்தில் ஆஷ் கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாடசாமி, பொலிஸ் பிடியில் சிக்காமல் இலங்கைக்கு வந்து ஆனைமலைத் தோட்டத்தில் சாதாரண தொழிலாளியாக, தனது மனைவி மங்கத்தாயியுடன் வேலைசெய்து வருவதாக சாரல்நாடன் செய்திருக்கும் புனைவு சாரல்நாடனின் கற்பனைத்திறனுக்கு வலுசேர்க்கிறது. புதுச்சேரியிலிருந்து மலேயாவிற்கு தப்பிச்செல்லும் மாடசாமியின் திட்டம் தோல்வியில் முடிவது பற்றி நமக்குத் தகவல் உள்ளதே தவிர, அதன்பின்னர் அவர்பற்றிய ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஒரு வரலாற்றுப் புனைவில் சாத்தியமான சம்பவங்களை அக்காலகட்ட வரலாற்றோட்டத்தோடு இணைத்துச் செலுத்தும் உரித்தினை சாரல்நாடன் துணிவோடு மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு வரலாற்றைப் புனைவிலக்கியமாக்குவதற்கும், ஓரிலக்கியப் புனைவினை வரலாறாக்குவதற்குமான நுண்ணிய வேலைப்பாட்டில், சாரல்நாடன் ஒரு கழைக்கூத்தாடியின் நிதானத்துடன் பயணித்திருக்க வேண்டும்.

மலையகத்தின் பெரும் போராட்டத்தை, தியாக வரலாற்றை இலக்கியமாக்கும் பெருமுயற்சியில் ஈடுபட்ட அமரர் சாரல்நாடனின் இலக்கிய சோதனை வரலாற்றில் நிலைபெறும். வீராசாமி, வேலாயுதம் ஆகிய தியாகப்போராளிகளின் வாழ்வு சாரல்நாடனைப் பிணைத்திருக்கிறது. வெற்று உபதேசிகளாக இல்லாது, நாளாந்த சுரண்டல் அமைப்பை எதிர்த்து, போர்க்கொடி தூக்கிய இம்மாபெரும் வீரர்கள் தூக்கிலே தொங்கநேர்ந்தது மலையகத்தின் பெருந்துரதிர்ஷ்டம்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் தொழிலாளர்வர்க்க விடுதலைக்காக வெலிக்கடைச் சிறைச்சாலையில் தூக்குக்கயிற்றை முத்தமிட்ட வீராசாமி, வேலாயுதம் ஆகிய மாபெரும் நாயகர்களுக்கு மலையகம் மண்டியிட்டு அஞ்சலி செலுத்துகிறது.   

சாரல்நாடன் தனது நாவலை முடித்து, முன்னுரையையும் எழுதி, அச்சில் வெளியிடத் தயாராக இருந்த நிலையில், அந்த ஆசையினை நிறைவேற்றிக்கொள்ள முடியாத அபாக்கிய நிலையில் அவர் மரணித்தபின்பு, அவரின் எண்ணத்திற்கு செயல் வடிவம் தந்திருக்கிறார் எச்.எச்.விக்ரமசிங்க அவர்கள். இன்றும் அன்று கண்ட அதேவேகத்தில், சிற்றெறும்பாய் செயற்பட்டு, சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ என்ற நாவலை  நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். இந்நாவலை நூலாக்கிப் பார்ப்பதில் அமரர் சாரல்நாடனின் குடும்பத்தினர் காட்டிவரும் அக்கறையும் மதிக்கத்தக்கது.

மலையக இலக்கிய வரலாற்றை உருவாக்குவதில் இத்தகு நூலாக்க முயற்சிகள் பெரிதும் வேண்டப்படுவன. இந்த ஆவணப்படுத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்த சாரல்நாடன், தானே முன்னின்று நூற்பதிப்பு முயற்சியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் என்பது நினவுகூரத்தக்கது.     ரத்தமும் சதையுமாக நடந்த ஒரு சரித்திரபூர்வமான உண்மை நிகழ்வினை நாவலாக்கி மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற சாரல்நாடனின் கனவை நனவாக்க எச்.எச்.விக்ரமசிங்க மேற்கொண்டிருக்கும்  முயற்சிகள் காலத்தால் என்றென்றும் நினைவுகூரப்படும். 

மு.நித்தியானந்தன்

இத்துடன் இத்தொடர் முடிவு பெறுகின்கிறது.

                .

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *