திரையில் சித்திரம்தான் பேசும்; ,,பொன்னியின் செல்வன் திரைப்படம் பற்றி ஓவியர் மருது

மருது

பொன்னியின் செல்வன்” கதை சின்னஞ்சிறு வயதிலேயே கேட்டது; பார்த்தது;
ரசித்ததுதான். வாரப் பத்திரிகைகளில் தொடராக வந்ததை வெட்டி ஒட்டி பைண்டிங்செய்து அதை புதையல்போலப் பாதுகாத்து வைத்திருக்கிற மக்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக அதைப் பாதுகாத்து வைத்துக்கொண்டு அந்த நூல் கட்டுகளை உலகம் பூராவும் தூக்கிக் கொண்டு போய் வாசிக்கிற அல்லது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு அன்பளிப்பு செய்கிற தலைமுறை இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்குக் காரணம் கல்கியின் எழுத்து மட்டுமல்ல; கல்கியின் எழுத்தைப் படிக்கத் தூண்டும் காத்திரமான ஓவியர் மணியம் அவர்களின் கோட்டோவியத்துக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.எம்ஜிஆர் நடிக்க விருப்பப்பட்ட கதை.அவரைத் தொடர்ந்து பலரும் பலமுறை முயற்சி செய்தும் செய்ய முடியாததை விடாப்பிடியாக நின்று மணிரத்னம் சாதித்து இருக்கிறார் . அரசுகளின் ஆதரவு அவர்களுக்குக் கைகூடி நின்றதால் கொரோனா காலத்தில் கூட தங்குதடையின்றி படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன.

இவ்வளவு மாபெரும் தயாரிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து திரைக்குக் கொண்டுவருகிற முயற்சி, முதலில் பாகுபலியில் நிகழ்ந்தது; பொன்னியின் செல்வனில் அது நிறைவேறி இருக்கிறது. நானும் படம் பார்த்தேன். படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் படம் எனக்குத் திருப்தி
அளிக்கவில்லை. இதுபற்றி எதையும் சொல்லவோ எழுதவோ வேண்டாம் என்றுதான் கொஞ்சகாலம் தவிர்த்தேன். ஆனாலும் இது போன்ற கதைகள் எதிர்காலத்தில் பல்கிப்பெருக வாய்ப்பு இருப்பதாலும் பலநூறு இளம் கலைஞர்களுக்கு பெரியவாய்ப்புகள் கிடைக்கப்போகின்றன என்பதாலும் சரி, தவறைச்சொல்வதில் தவறில்லை என்றுதான் சிலகருத்துகளை முன்வைக்கிறேன்.

சுதந்திரம் பெற்றதற்குப் பிறகான ஆண்டுகளில் துறைதோறும் பத்திரிகைகள் வெவ்வேறு பொருண்மையில் வெளிவந்து கொண்டிருந்த காலத்தில் பத்திரிகையின் ஆசிரியரே கதை எழுதுகிறவராகவும் இருந்ததால் ஒவ்வொரு வாரமும் படிக்கும் வாசகனைத் தொடர்ந்து படிக்கத் தூண்டுவதற்காகவும் வாராவாரம் வாசகன் விலைகொடுத்து வாங்கிப் பத்திரிகையை ஆதரிக்கவேண்டும் என்கிற முனைப்போடும் எழுதப்பட்ட ஒரு தொடர்கதையே தவிர தமிழர் வரலாற்றையோ அவர்தம் அரசியலையோ அந்தகாலத் தமிழ்ச் சூழலையோ மீட்டெடுத்துக் காட்டுவதற்காகவோ வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதற்காகவோ எழுதப்பட்ட கதை அல்ல ‘பொன்னியின் செல்வன்’ .
இந்த வாரம் வரவேண்டிய கதைப்பகுதிகள் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்துக்கு முன்பே ஆசிரியரால் எழுதி முடிக்கப்பட்டிருக்கும். எழுதப்பட்ட கதைப் பக்கங்கள் ஓவியம் வரைவதற்காக ஓவியருக்கு அனுப்பி வைக்கப்படும்.அவர் அந்தக் கதைக்குப் பொருத்தமான சித்திரத்தை உருவாக்க சில நாட்கள் எடுத்துக்கொள்வார். பலசமயங்களில் வாரக்கணக்கிலும் ஆகும். பின்னர் அவர் வரைந்த ஓவியம் பிளாக் எடுக்கப்போகும். அவரிடம் ஓரிரண்டு நாட்கள் ஆகும். பிளாக் எடுத்து வந்த
பிறகு எழுத்தையும் பிளாக்கையும் இணைத்துபக்கங்களாக வடிவமைக்கும் பணி தேர்ந்த அச்சுக்கோப்பாளரின் கைக்குப் போகும். அவர் ஒவ்வொரு எழுத்தாய் அச்சுக்கோர்த்து அந்த அச்சு எழுத்துக்களுக்கு நடுவே தயாரிக்கப்பட்ட பிளாக்குகளை அமைத்து பக்கம் வடிவமைத்துக் கொடுக்க ஓர் இரண்டு நாட்களாவது ஆகும்.எனவே வாரப் பத்திரிகையையே மாதம் முழுதும் பார்க்க வேண்டிய காலம் அது. அப்படி ஒரு
கூட்டு உழைப்பைக் கேட்கும் அந்த பழைய முறையிலான பத்திரிகைப் பணியில் ஓவியர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை இந்த தலைமுறை அறியாது. ஆனாலும் அதை சாதித்த தலைமுறையில் உள்ளவர்கள் விடுபட்டு விடாமல் இளைய சமூகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டியது கடமை.

அந்த கடமையும் நன்றி உணர்ச்சியும் முன்னெடுத்தவர்களிடம் இல்லை என்பது மிகுந்த அவலமானது. படைப்புலகத்திலும்அரசியல் ஊடுருவி நிற்பது அந்த கலைக்குச் செய்யும் கேடு என்றுதான் சொல்லவேண்டியதாயிருக்கிறது.ஒரு எழுத்தை வார்த்தைகளால் படிக்கிறபோது மனதில் எழுகிற சித்திரத்தை ஒவ்வொருவர் மனதிலும் தோன்றும் சித்திரத்தை அதன் கதைப்போக்கை முழுமைப்படுத்தக்கூடியவராக ஒரு ஓவியர்தான் இருக்கிறார். இதழ்வடிவமைப்புகளில் இந்தக் காலத்தைப் போல கடைசி நிமிடத்தில் பெரிய படங்களை சிறிதாக்கி வைக்கவும் சிறிய படங்களைப் பெரிதாக்கி வைக்கவுமான தொழில்நுட்பவசதிகள் இல்லாதகாலம் அது. எனவே கல்கி எழுதும் தொடருக்கு என்னபடம் வரையவேண்டும் என்பதையும் எத்தனை பெரிய அளவில் அது
இடம்பறவேண்டும் என்பதையும் தீர்மானிப்பவராக ஓவியர் மணியமே இருந்தார்.
வரைந்தபடத்தை பிளாக் எடுத்து விட்டால் பிறகுஅதை மாற்றமுடியாது என்பதால்
அந்தத்தொடரின் போது ஓவியரின் பங்களிப்பு முதன்மையானதாக இருந்தது.
60, 70 ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் குறைவு. அதிலும் நாளிதழ், வார இதழ்
படிக்கிறவர்கள் மிகக் குறைவு. அவ்வாறு வாசிக்கிறவர்களை காட்சிப்பூர்வமாக வசியம்
செய்து தன் வயப்படுத்தும் மாயக் கண்ணாடியாக மணியம் ஓவியமே இருந்தது. சுருங்கச் சொன்னால் கல்கியின் வார்த்தைகளுக்கு மணியம் சித்திரங்களே
முட்டுக்கொடுத்தன என்று சொல்லலாம்.

குறிப்பாக அது பொதுச்சித்திரமாக மாறி அனைத்து வாசகநெஞ்சங்களையும் காட்சிபூர்வமாக ஒன்றிணைத்து மறக்கமுடியாத எழுத்தாக நிலைநிறுத்தி வைத்தது என்றுகூடச்சொல்லலாம்.ஓவியத்தைக் கற்கிற படிக்கிற ஆராய்ச்சி செய்கிற பிள்ளைகளுக்கு அந்தச் சித்திரங்கள் மிகமுக்கியமான கவனத்தைக் கொடுத்தது. மணியம் ஓவியங்களைக் கல்கியின் கதையிலிருந்து எடுத்து
விட்டால் அது வெறும் பஞ்சாங்கம்தான்.கல்கியின் படைப்பைத் தர உயர்வு செய்தது
மணியம் வரைந்த கோடுகள்தான்.அதிலும் தென்னாட்டுச் செல்வங்களாகிய நமது மரபுச் சிற்ப ஓவியங்களையும் அன்றைய பார்சி தியட்டர் பாதிப்பிலிருந்து இருந்த
தென்னிந்தியாவின் சினிமா மாதிரியையும் கொண்டு செய்யப்பட்ட சித்திரமாக இப்போது பார்க்கும்போது அது இருந்தாலும் அந்தச் சித்திரங்கள் ஆளுமைமிக்க கல்கியின் எழுத்துகளை தமிழ்படித்த எல்லோர் மனத்திலும் ஒரு தாக்கத்தை
ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை கோடுகளின் வீரியம் அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.அவருடைய சித்திரத்தை அடிப்படையாகக்கொண்டு திரைப்படம்
இல்லையென்றாலும் அவ்வளவு மகத்தான கலைஞருக்கு திரைப்ப ட த் தி ல் ந ன் றி
தெரிவிக்கக்கூட மறந்துவிட்டார்களே என்பது வருத்தமாக இருந்தது. படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது பெருங்கோபம் என்னுள் ஊற்றெடுத்தது.


1950களிலேயே ஹாலிவுட் பட உலகம் வரலாற்றுப் புனைவுகளை எந்த கண்கொண்டு
பார்க்க வேண்டும் என்பதை பலபலக் கதைகளில்காட்சி வடிவங்களில் திரைக்கதைகளில் காட்டியிருக்கிறது. தமிழ் சினிமாக்களில் கூட
அங்கொன்றும் இங்கொன்றுமாய் காட்டியிருக்கிறார்கள். இந்த 60 ஆண்டு அனுபவங்களை படிப்பினைகளை தற்போது நம்கையில் உள்ள தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி உலகத் தரத்துக்குக் காட்சிகளைஉருவாக்கி அதில் நடித்திருக்கிற கலைஞர்கள் வழியாக அதை வாழும் தலைமுறைக்குக் கடத்தி
இருக்க வேண்டும். ஆனால் அது இந்தப் படத்தில்நடக்கவில்லை. ஏனென்றால் எப்பொழுதும் மணிரத்னம் பிராந்தியப் படமாக தொடங்குவார்.பின்னர் பிராந்தியத் தன்மையைக் குறைத்து இந்தியப்படமாக எடுப்பார் . அதனால் அவ்வாறான அடையாளத்தை எதிர்பார்க்க முடியாதுதான்.திரைப்படத்துறையின் கடந்த 80 ஆண்டுகால வளர்ச்சி என்பது இந்தியாவில் பம்பாயிலிருந்துதான் தொடங்குகிறது. கலைவாணர் போன்ற அரிய கலைஞர்கள் பம்பாய் சினிமாவில் போய் வெளிவந்தவர்கள்தான். காரணம் சினிமாத் தயாரிப்புக்கான கட்டமைப்பு சென்னையில் இல்லாத காலம் அது. பின்னர் விஜயவாகினி,ஏவிஎம் எல்லாம் வந்த பிறகு சினிமாக் கலைஞர்களின் வேலைவாய்ப்பு பெருகப்பெருக நாடகக்கலைஞர்களைப்போல பெருந்தொழில்நுட்பக்குழுக்களும் ஒவ்வொன்றாய்

தமிழ்நாட்டை நோக்கிப் புறப்பட்டு வந்தன. இப்படி தொடக்க காலத்தில்தொழில்நுட்பக் கலைஞர்களும் கலை இயக்குநர்களும் தமிழர்களாய் இல்லாததால் தென்னிந்திய சினிமா என்ற போர்வையில் எல்லாவற்றையும் கலந்தே காட்சிப்படுத்தினார்கள்.
இருந்தாலும் காலப்போக்கில் தென்னிந்தியப் படைப்பாளிகள்,கலைஞர்களின்
முன்முயற்சியாலும் அவரவர்தம் தனித்துவத்தாலும் அவரவர்தம் தாய்மொழியில்
அவரவர்தம் அடையாளத்தோடு இயங்கத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் தமிழரின் மூலத்தன்மைக்கு ஊறு நேர்ந்துவிடாமல் திரைக்கலையை வளர்த்தெடுக்க வேண்டும் என்கிற தாகத்தில்தான் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருபுதுமாதிரியான கலைஞர்கள் கூட்டம் திரைத்துறைக்கே வந்தார்கள். அதை
திரையில் வெளிப்படுத்தியும் காட்டினார்கள்.ஆனால் பொன்னியின் செல்வனில் அப்படியான தமிழ்த்தன்மை எதிலும் வெளிப்பட்டிருப்பதாக நான் கருதவில்லை. காட்சியின் பின்புலத்திலாவது ஒரு தனித்தன்மை இருக்கவேண்டுமென்பதில்
படக்குழு கவனம் கொள்ளவில்லை.மேலும் போற்றத்தக்க உலகக் கலைஞர்கள்
தாங்கள் காட்சிப்படுத்தும் முயற்சியில் நேர்மையோடு தங்களை முழுவதுமாக
ஒப்புக்கொடுக்கிறார்கள் என்பதுஅவர்களுடைய படைப்பில் நீக்கமற நிரம்பியிருக்கிறது .அம்மாதிரியான முயற்சிகள் எதுவும் இந்தப்படத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.மணிரத்னம் படங்கள் என்றால் வசனம்குறைவாய் இருக்கும். காட்சிப்படுத்தல் கொஞ்சம்கூடுதலாய் இருக்கும். ஆனால் ஜெயமோகன்
வசனத்தில் கதாபாத்திரங்கள் எல்லாம் அதிகமாகப்பேசுகின்றன. பேசவேண்டிய வசனங்கள் காட்சியாகவும் காட்சிப்படுத்தக்கூடிய நிகழ்வுகள் நீண்ட வசனங்களாகவும் அமைந்து படத்தைப்பார்க்கிறவர்களுக்கு சோர்வையும் அயர்ச்சியையும்
ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.படத்தின் நிறைவுக் காட்சியில் கதாநாயகர்கள் கடலலையில் தத்தளித்துக்கொண்டுவரும் காட்சி
ஒன்றைத்தவிர படம் முழுவதிலும் நெகிழ்ந்துஉணர்ச்சிவசப்படக்கூடிய காட்சிகள் ஒன்றுகூட இல்லை. சண்டைக்காட்சிகள் காட்சிப்படுத்தலாக இல்லாமல் நிகழ்த்திக்

காட்டுவதாக அமைந்திருக்கிறது. சினிமாத்தன்மைக்கான வேகம் குறைந்து நாடகத்தன்மைக்கான அசல்படமெங்கும் வெளிப்படுகிறது.

 

நாசர் நடித்த ‘தேவதை’படத்தைசெஞ்சிக்கோட்டையில்காட்சிப்படுத்தினோம். கதை
புனைவுதான் . ஆனால் 500ஆண்டு வரலாற்றுப்பெருமையுடைய அந்தக்கோட்டையைச் சுற்றியபகுதிகளிலேயே 4 மாதங்கள் தங்கி எடுத்தோம். அடுத்தஷெட்யூல் போட்டு நாங்கள் புறப்படுவதற்கு முன்பாக எங்களைச் சந்தித்த தங்கர்பச்சான் சொன்னார்: ‘நான்போய் மொத்தசெஞ்சிக்கோட்டையையும் காட்சிப்படுத்திக்கொண்டு வந்துவிட்டேன். இனிமேல் அங்கே போய் எடுப்பதற்கு என்ன இருக்கிறது’ என்று.
முன்னொரு காலத்தில் என்று கதை இருப்பதால்படத்தில் செஞ்சிக்கோட்டைதான் அது என்று அடையாளப்படுத்தும்படியான காட்சிகளைத் தவிர்த்துவிட்டோம். படத்தைப் பார்த்துவிட்டுஅவர் வியந்து பேசியது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

2009 – 2010 களில் மணிரத்னம் உதவியாளராய் இருந்த அழகம்பெருமாள் என்னைச் சந்தித்து இந்தப்படம் தொடர்பாக மணிரத்னம் என்னுடன்பேச விரும்புவதாகச் சொன்னார். ஒரு நாள் நானும் அவரைச் சந்தித்தேன்.அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது, எனது‘வாளோர் ஆடும் அமலை’ நூலை எடுத்து அவரது
மேசைமேல் வைத்தார். ‘கதையை 90 சதவிகிதம் ஜெயமோகன் எழுதிவிட்டார். ஆனாலும் காட்சிப்படுத்துவதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.விகடனில் தங்களின் நூல்பற்றிய விமர்சனம் பார்த்தேன். பொன்னியின் செல்வனை எப்படிப்
படமாக்கப்போகிறோம் என்கிற கவலையில் பலநாட்கள் தூக்கம் பிடிக்காமல்கூட இருந்திருக்கிறேன்.உங்கள் சித்திரத்தின் பரிமாணம் என்னைத்
தூண்டியிருக்கிறது’ என்றார். அப்பொழுது நான் சொன்னேன்: அதில் எழுதுவதற்கு என்ன இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் கல்கி எழுதி முடித்துவிட்டாரே. உங்களுக்கு முன் இருக்கிற சவால் காட்சிப்படுத்த வேண்டியதுதான்என்றேன். மென்மையாய்ச் சிரித்தார்.
இவ்வளவையும் நான் விரிவாகச்சொல்வதற்குக்காரணம் தற்பெருமை பேசுவதற்காகவோ பொன்னியின் செல்வனை விமர்சிக்க வேண்டும் குறைத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவோ அல்ல. சரியான முறையில் கதைக்களம்முன்னிலைப்படுத்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டத்தான். எழுதுவதெல்லாம் திரைக்கதை ஆகாது. காட்சிப்படுத்தப்படுவதற்காக
எழுதவேண்டும். ஏனென்றால் திரை சித்திரம் வழியேபேசும்; அதுதான் மக்களைப்பேசவைக்கும்

மாத சஞ்சிகையிலிருந்து

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *