கணித பேரரசன் நல்லையா பற்றி பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா!

நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் “கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்” என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உரைத்த பாடலை முதலில் ஒப்புவிக்கத் தோன்றுகின்றது.


“கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்

கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்

கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்

கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?

ஆங்கே, கணந்தோறும் ஒரு புதிய வண்ணங் காட்டிக் காளிபரா சக்தி

அருள் களிக்குங் கோலம் கணந்தோறும்

அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.”

எல்லோருக்கும் பிரியமான நல்லையா சேர் வடமராட்சியில் கொம்மாந்துறையில் கோவில் கொண்டு உறையும் அன்னை மனோன்மணி அம்பாள் உவந்த மகத்துவம் மிக்க கணித ஆசான் என்றால் மிகையாகாது. அவரிடம் நாம் கற்கும் போது கணந்தோறும் வியப்புகள் புதியன தோன்றும் வண்ணம் அடுக்கடுக்காகக் கணித எண்ணக்கருக்களையும், புதிர்களையும், பயிற்சிகளையும் அதிசயக்கத்தக்க ஆர்வத்தை தூண்டும் வகையில், எம்மவரின் சிந்தையில் நிலைபெறும் வகையில் சேர் ஒப்புவிப்பதைக் கண்டு நவநவமாய்க் களிப்போம். பயிற்சி வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் முயன்ற பின் நல்லையா சேர் பலவிதமான முறைகளில் விடைகளைப் பெறும் வழிகளை ஒப்புவித்து புதிய வண்ணங்கள் காட்டி மகிழ்விப்பார்.

இவ்வாறாக கணந்தோறும் புதிய விடயங்களைக் கற்பித்து எமது ஆர்வத்தைத் தூண்டி நல்லையா சேர் மகிழ்வுறும் கோலம், கணந்தோறும் சேர் புதிய பிறப்பெடுத்து வருவது போன்ற அதிசயமான ஆற்றல் மிகுந்த ஆசானாக எம்மைப் பிரமிக்க வைக்கும்.
இலங்கை சுதந்திரம் அடையும். காலத்தையண்டி 1945 ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நல்லையா சேர் பிறந்தார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதக் கல்வி என்பன மேட்டுக் குடியினருக்கே பெரும்பாலும் உரித்தானதாகவே இருந்தது. எமது பிரதேசத்தின் கணித ஜாம்பவனாகத் திகழ்ந்த நல்லையா சேர், தில்லையம்பலம் சேர், வேலாயுதம் சேர் ஆகியோர் சமகாலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி பயின்று கணித ஆசான் ஏபிரகாம் மாஸ்டரின் வழிகாட்டலில் கணிதத் துறையில் தேர்ச்சி பெற்று பேரதெனியா பல்கலைக்கழகம் சென்று தம்மை மேம்படுத்தி எம்போன்ற மாணவச் செல்வங்கட்கெல்லாம் குருவாயிருந்து வாழும் வழிகாட்டி ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள்,


நானும் என் சகோதரர்களும் நல்லையா சேரிற்கு பெரிதும் நன்றியுடையவர்களாக இருக்கின்றோம். எனது மூத்த சகோதரர் பொறியியலாளர் திரு.சிறிஸ்கந்தராசா முதல் ஏனைய நான்கு சகோதரர்களும் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும் நல்லையா சேரிடம் கற்று சிறப்புப் பயிற்சி பெற்று உயர்நிலைப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டோம். நாம் எல்லோரும்பொறியியலாளராகவும் கணிதப் போராசிரியராகவும் சிறப்புப் பெற்று சீலமாக வாழ சீரருள் புரிந்த நல்லையா சேர் அவர்களை எமது ஆதவனாக போற்றித் துதிக்கின்றோம்.


நல்லையா சேரின் கணிதக் கற்பித்தலின் ஆரம்பம் 1966-67 களில் கரணவாய் தாமோதர வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அப்போதைய மாணவர்களுக்கான (எனது மூத்த சகோதரர் உட்பட வழிகாட்டல் கற்பித்தலாக அமைந்தது. இதனாலோ என்னவோ கரணவாய் தல்லையா சேரின் பிரியமான இடமாகவும் அவரின் பல வாழ்நாள் நண்பர்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகின்றது. நல்லையா சேரின் ஐம்பது வருடங்களாக (அரை நூற்றாண்டு பிரணமித்த கணிதக் கற்பித்தல் 2015-ஆம் ஆண்டு முடிவுறும் வகையில் எமது கரணவாய் பிரதேசம் உட்பட வடமராட்சியின் பல எண்ணற்ற பல மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்று சாதனையாளர்களாகவும், பொறியியலாளர்களாகவும், துறைசார் விற்பன்னர்களாகவும், கணித ஆசிரியர்களாகவும் பிரகாசிக்க வழிசமைத்தது. நல்லையா சேரின் சேவையால் வடமராட்சிப் பிரதேசம் வியப்புறும் வகையில் உயர்தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தொடர்ந்து மேன்மை அடைவுச் சுட்டிகளைப் பெற்று இலங்கைத் தீவின் மூளை என்ற கூற்றை மேலும் உன்னதமாக்கியது.

நல்லையா சேரின் பிறந்த ஊரான கொம்மாந்தறைக்கு ஒரு புதிய விலாசமாக சேர் அமைந்தார் என்பது மிகையாகாது. சேரின் பழைய மாணர்கள் தமது விடுமுறைக்காலங்களில் சேரை சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ள அவரின் கொம்மாந்தறை வீட்டுக்கு சென்ற வண்ணமிருப்பார்கள். சேரின் மனைவியாரும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் வீடு நாடிச் செல்வோரை இனிதே உபசரிப்பார்கள்.
நல்லைய சேர் ஒரு சிறந்த குருவிற்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தார். சேரின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. காண்பவரின் கவனத்தை ஈர்த்திருக்கவல்லது. அவரது வார்த்தை (அல்லது மொழி) எமக்கெல்லாம் மந்திரமூலமாக சொற்சுவை பொருட்சுவை பொருந்தியதாக மனதை அலைய வீடாமல் நிறைபெறச் செய்யும். அவரது கிருபையும் நல்லாசிகளும் எம்போன்ற பல சந்ததி மாணவர்களை சான்றோர்களாக்கியது. நல்லையா சேரின் அறிவிலும் ஆளுமையிலும் பரிவிலும் அவரது மாணவர்கள் மயங்க நின்றனர். மாணவர்களின் அன்பில் சேர் மயங்கி நின்றார் என்பதே பொருந்தும்.

நல்லையா சேரின் உயர்விலும் உன்னத கற்பித்தல் பணியிலும் பின்புலமாக நின்ற துணை அவரது அன்புக்குரிய பாரியார் செல்லப்பாக்கியம் அம்மையார் என்றால் மிகையாகாது. சேர் மணமுடித்த காலத்திலிருந்து அரச தொழிலை நாடாது கயதொழிலாக கணிதம் கற்பிப்பதை மேற்கொண்ட வேளையில் அவர்களின் ஊரான கொம்மாந்தறைக்கே உரித்தான வெங்காயச் செய்கையினை அவரது பாரியார் தலைமையில் மேற்கொண்டு கடுமையான உழைப்பாளிகளாக திகழ்ந்தார். நல்லையா சேர் தம்பதியியனர் நீண்ட இல்லற வாழ்வில் சிறப்புடன் பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிப் பாதுகாத்து பேரப்பிள்ளைகளையும் கண்டு, மகிழ்வுடன் உற்றார் உறவினருக்கும் உதவியான இருந்தனர். நல்லையா சேர் தன்னைத் தொழில் ரீதியாக முற்றாக அர்ப்பணிக்கவும் செல்லபாக்கியம் அம்மையார் ஒரு மனைவியாக, அன்னையாக, பாட்டியாக காலத்தால் ஆற்றிவந்தமை போற்றுதற்குரியது. அதேவேளை சேரின் அன்புக்குரிய நான்கு பிள்ளைகளின் அவரின் ஏகபுத்திரி செல்வி பவானி எம்மக்களிற்கெல்லாம் விடுதலை வேண்டி ஒரு வீர மகளீராக மிளிர்ந்து தன்னையயே ஆகுதியாக்கினார். மறுமைக்கு நீங்கிய பிரிவுச் சுமையை சேருடன் செல்லபாக்கியம் அம்மையாரும் கனத்த இதயத்துடன் சுமந்துகொண்டு தனது ஏனைய பிள்ளைகளினதும் எம்போன்ற மாணவர்களினதும் நலன்களை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்புடன் வாழ்நாள் முழுவதும் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் ஈடுபடுத்தி வாழ்ந்து வந்தனர்.இன்றைய அறிவுலகு விஞ்ஞான அடிப்பமையிலான ஒழுங்குபடுத்தப்பட்டு பேணப்படும் அறிவுடமை விஞ்ஞானம் எனப்படலாம். அறிவுடமையை ஒழுங்குபடுத்தி உதவும் மொழி அல்லது கருவியாக கணிதம் அமைகிறது. மேலும் இன்னொரு வகையில் கூறுவதாயின் எந்தவொரு விடயத்தையும் ஆழமான முறையில் புரிந்துகொள்ள முயலும்போது கணிதம் ஒரு கருவியாகத் துணைபுரிகிறது. வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும். அதே போல் கணிதத்தையும் தர்க்க ரீதியான முறைமைகளினால் தான் கையாள முடியும்.

நல்லையா சேர் கணிதப் பாடத்தை உயர்தர மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்பித்து இன்புற முடிந்தமைக்கு வைராக்கியமும், தெளிந்த சிந்தனையும், தர்க்க முறைகளிலிருந்த தேர்ச்சியும், மாணவர்களின் மீதான மெச்சத்தக்க அன்பும், விந்தையான கணித நுட்பங்களை எளிதான முறையில் ஒப்புவிக்கும் திறனும் அவரின் மூலதன உரிமங்கள் ஆயின.

முடிவாக நல்லையா சேர் கொம்மாந்தறையில் உறையும் மனோன்மணி அம்பாள் உவந்த கணிதப் பெருந்தகை.வடமராட்சி மண்ணின் மைந்தர்கள் உயரப்பறந்திட சேர் ஆற்றிய அரை நூற்றாண்டுக்கு மேலான சீரிய சேவை போற்றுதலுக்கும் மதிப்புக்குமுரியது. சேர் தனது இறுதிக் காலத்தை இடர் இன்றி கழித்திட அரும்பணி செய்த துணைவியார் மூத்த மகன் வசீகரன், பேரப்பிள்ளைகள் ஆகியோர் புண்ணியவான்கள்.
நல்லையா சேரின் அடியினைப் பின்பற்றி கணிதத் துறையில் நானும் பல மேன்மைகளைப் பெற்று ஒரு கணிதப் பேராசிரியராக உயர்வுற தனது நல்லாசிகளை என்றும் வழங்கிவந்த எனது பிரியமான ஆசானின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் அருளாசியை வேண்டி அமைகிறேன்.
சாந்தி! சாந்தி!! சாந்தி!!

நினைவு கூர்ந்தவர்:
பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா,

கணிதப் பேராசிரியர்,

துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

யாழ்ப்பாணம்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *