வானம் சிவந்த நாட்கள்>> சாரல்நாடன்

சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற உண்மை சம்பவங்களை அடிப்படியாக வைத்து எழுதப்பட்ட புத்தகத்தை இங்கே தொடராக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

 வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்தின் முன்னுரையில் மு. நித்தியானந்தம் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் .”மலையைக இலக்கியத்திற்கான வரலாற்றை உருவாக்குவதற்கான ஆதாரங்களைத் தேடும் முயற்சியில் அயராது உழைத்த பெருமகன் சாரல்நாடன்“.

சாரல்நாடன் எழுதி வெளியிட்ட பதினொரு நூல்களும் மலையகத்தையே உயிராய் நேசித்த ஒரு எழுத்தாளனின் நெஞ்சக்கணப்பறையின் தகிப்பிலே கனன்றவை.1962ஆம் ஆண்டில் ‘கால ஓட்டம்’ என்ற சிறுகதையோடு ஆரம்பமான இவரின் இலக்கிய ஓட்டம் இறுதிவரை தொடர்ந்தது. 1941இல் புசல்லாவை ஸ்டெலென்பேர்க் (Stellenberg) தோட்டத்துரை போப் என்பவரைத் தோட்டத்தொழிலாளர்கள் கொலைசெய்த உண்மைச் சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு சாரல்நாடன் எழுதிய குறுநாவல்தான் ‘வானம் சிவந்த நாட்கள்‘. வீரகேசரி வாரமஞ்சரியில் திரு. வி.தேவராஜ் பொறுப்பாசிரியராகவிருந்தபோது இந்த நாவல் தொடராக அப்பத்திரிகையில் வெளிவந்தது. தற்போது புத்தகமாக வெளிவந்திருக்கும் இந்நூலை இங்கே வெளியிட அனுமதி தந்த நித்யானந்தம் அவர்களுக்கு நன்றி . இவர் எழுதிய வானம் சிவந்த நாட்கள் என்ற புத்தகத்திற்கான ஆய்வுகளுடன் கூடிய முன்னுரை தொடராக  மலையகத்தின் அக்னிக் குஞ்சுகள் என்ற தலைப்பில் நமது தளத்தில் வெளிவந்தது. அதை இத்தருணத்தில் ஞாபகப் படுத்திக் கொள்கிறோம்

வானம் சிவந்த நாட்கள்


அன்றைய பொழுது வழக்கத்துக்கு மாறாக விடிந்தது, காலை பிரட்டுக்களத்துக்குச் சென்று வந்தவர்கள் சொன்ன தகவல்கள், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் நிலைமையை மேலும் மோசமாக்கியது. யாருக்கும் வேலைக்குப்போகத் தோன்றவில்லை. பெண்கள் பேயடித்தாற்போல விழித்துக் கொண்டுநின்றனர்.
ஆண்கள் தங்களுக்குள் கூடிக்கூடி பேசிக் கொண்டனர். சுற்றி நின்ற சிறுவர்கள் விளங்கியும் விளங்காமலும், ஆனால் ஏதோ பெரிதாக ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டவர்களாகக் காட்டிக் கொண்டு இங்குமங்கும் அலைந்து திரிந்தனர்.
புசல்லாவை பகுதியில் பெரிய தோட்டங்களிலொன்று ஆனைமலைத் தேயிலைத் தோட்டம். பரந்துவிரிந்து கிடக்கும் பசுமைப் படர்ந்த தேயிலை மலைகள் பார்ப்பவர் கண்களுக்குக் குளிர்ச்சி தந்தன.
அந்தப் பசுமையிலும் தான் எத்தனை வித்தியாசங்கள்? பார்வைக்குக் கிட்டடியில் இருக்கும் கவ்வாத்து மலைகள், கவ்வாத்து செய்யப்பட்டு பசுமைச் செடிகள் களையப்பட்டு காய்ந்த மிளாறுகளுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கின்றன.
சற்றுத் தொலைவில் இருக்கும் மலைகள் கரும்பச்சை நிறத்தில் காட்சி தருகின்றன; தூரத்து மலைகளில் தெரியும் மரகதப் பச்சை தரும் தோற்றம் என்று அத்தோட்டத்தின் பார்வையில் படும் நாலாப் பக்கங்களிலும் ஒரே பசுமையாக விரிந்து கிடக்கிறது. இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த நிலத்தின் மலைச்சரிவுகளில் சூரியக் கதிர்கள் இன்னும் விழாததால் இரவு நேர பனித்துளிகளை தம்மீது தாங்கி இருக்கும் இளங்கொழுந்துகள் லாகிரித் தன்மையுடன் வளர்ந்து தெரிகின்றன.
பனித்துளிகள் படர்ந்திருக்கும் போதே, தூய்மை உணர்வுடன் அவற்றைத் தம் கைநிறையப் பறித்தெடுத்து தமது கூடைகளுக்குள் சேர்க்க, பெண் தொழிலாளிகள் யாரும் இன்னும் வரக்காணோம்.
நீண்ட கறுப்பு நிற கோட்டை அணிந்து கொண்டு, நிரையில் நிற்கும் முப்பது பெண்களையும் மேற்பார்வை செய்வதற்கு, தன்னுடைய முத்தெல எடுக்காதே, மூணு எல வச்சு எடு என்ற வழமையான குரலை ஒரே ராகத்தில் சொல்வதற்குப் பழகி போன கங்காணி யாரும் அங்கு வரவில்லை.
ஆறுமணிக்கு ஒரு தரமும், ஆறரை மணிக்கு மறு தரமும் ஒலிக்கும் தொழிற்சாலை சங்கு இன்று ஒலிக்கக் காணோம். எழுபதாண்டுகளாகத் தோட்டத்தில் நிலவி வந்த இந்த பழக்கங்கள் எல்லாம் இன்று ஒன்று சொன்னாற் போல நின்று போனதற்கு என்ன காரணம்?
அந்தத் தோட்டத்து துரை, கண்டிப்புக்கு பேர் போனவர், காசு கொடுத்துதான் அவரைப் பேச வைக்க முடியும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அர்த்தமிக்கதாக இருக்கும், சொன்ன சொல்லை மாற்றுவதற்கு அவருக்குத் தெரியாது, அவரும் அவருடைய பழக்கவழக்கங்களும் அவ்விதம் ஆகிப் போய் வெள்ளைக் காரரின் இமேஜைக் கூட்ட உதவிற்று.
கடந்த இருபதாண்டுகளாக இதே தோட்டத்தில் மானேஜராக கடமைப் புரியும் அவருக்கு அந்த தோட்டம் மட்டுமல்ல, தோட்டத்து இளம் பெண்களும், வாலிபர்களும் நன்கு தெரிந்தவர்கள். எட்டு வயதில் கொழுந்தெடுக்கப் பழகி, பத்து வயதில் பேர் பதியத் தொடங்கியிருக்கும் அவர்களது வாழ்வின் ஒவ்வோர் அசைவையும் நன்கு அறிவார். அவருக்குத் தெரியாமல் அங்கு ஒரு மாற்றம் நேர முடியாது.முல்லோயா தோட்டம் அவருக்குப்பக்கத்தில் உள்ளது தான். அங்கு இரண்டாண்டுகளுக்கு முன்னம் நடந்த சம்பவங்கள் அவரது பழக்க வழக்கங்களை மேலும் கடூரமாக்கியது. உடல் உழைப்பைத் தருவதற்கென்று இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கூலி இந்தியர்கள், தொடர்ந்தும் அதே நிலமையில் தான் வைக்கப்படல் வேண்டும். அவர்களுக்குத் தேவையானது கைநிறைய காசும், உடல் நிமிரமுடியாத அளவுக்கு உழைப்புந்தான்…. இரண்டும் கிடைக்க வழி செய்து விட்டால் போதும் அவர்களை எந்த அளவுக்கும் கசக்கிப் பிழிய முடியும் என்று இறுமாந்திருந்த வெள்ளைக்காரத் தோட்டத்துரையின் நினைப்புச் சிதறடிக்கப்பட்டது. முல்லோயா தோட்டத்தில் கிளர்ந்தெழுந்த போராட்டம் இலங்கை அரசாங்க சபையில் பேசப்படும் அளவுக்கு வளர்ந்தது. தமிழர்களும் சிங்களவர்களும் வெள்ளைக் காரர்களின் அடக்கு முறைக்கெதிராக ஒரே குரலில் பேசினார்கள்.
வெள்ளை நிர்வாகம் தன் ஆதிக்க பலத்தை பயன்படுத்தியது. கலவரத்தை அடக்குவதற்கு போலீசார் அழைக்கப்பட்டனர், தோட்டங்களில் முன்னெப் போதுமில்லாத விதத்தில், பங்களாக்களில் போலீசார் குடி வைக்கப்பட்டனர். வேண்டிய மட்டும் அவர்களுக்கு சாராயம் குடிப்பதற்குத் தோட்ட நிர்வாகம் ஒழுங்கு பண்ணியது. குடிபோதையில் இருந்த அவர்களிடம் நிர்வாகப் போதையிலிருந்த துரையின் போதனை நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. மலேரியா விஷக் காய்ச்சல் நாட்டின் நாலாபக்கங்களிலும் பரவியபோது, சூரியமல் இயக்கத்தைக் கொண்டு நடாத்த அநேக வாலிபர்கள் நகரப்பகுதியிலிருந்து வந்திருந்தனர், அவர்கள் சிவப்புநிற ஆடைகளை அணிந்திருந்தனர். பார்ப்பதற்கே கம்பீரமாக இருந்தது.
தோட்ட வாலிபர்கள் தாமும் அவ்விதம் சிவப்பு ஆடைகள் அணியத் தொடங்கினர்.
கந்தல் ஆடை, கம்பளிப் போர்வை என்று தாமிதுவரை கண்டு வந்த தொழிலாளர்கள் இப்போது தன் கண்ணுக்குத் தும்பைப்பூப்போல வண்ண ஆடைகளணிவதைக் காண துரைக்குச் சகிக்கவில்லை. சிவப்பு நிறத்தைக் கண்டாலே தோட்டத்துரைக்கு வெறுப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.
வேலை செய்யும் போது தம் தலையில் சிவப்புநிற லேஞ்சு உடுத்தி முண்டாசு கட்டும் தொழிலாளிகளை வேட்டை ஆடும்படி கேட்கப்பட்டனர்.
ஸ்டோரில் இரவு நேர வேலையை முடித்துக் கொண்டு தம் காம்பராவுக்குத் திரும்பி கொண்டிருந்த ஒரு தொழிலாளியின் தோளில் தொங்கிய சிவப்பு நிறப் போர்வை போலீசாருக்குத் தோட்டத்துரையின் கட்டளையை நினைவு படுத்தியது. டுமீல்….. டுமீல் தோட்டாக்கள் வெடித்தன. தொழிலாளி சுருண்டு சூரியன் உதித்து வரும் காலைநேரத்தில், தொழிற்சாலைக் கெதிரில் தொழிலாளி ஒருவன் நாயைப்போல சுடப்பட்டுக் கிடக்கிறான், கேட்பார் யாருமின்றி.
இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து சார்பில் யுத்தகளத்தில் பணி ஆற்றியபோது துப்பாக்கி சத்தம் அவர்களுக்குச் சர்வசாதாரணம், துப்பாக்கி ரவையால் சாதிக்க முடியாதது எதுவுமேயில்லை. அதன்பின் ஏற்பட்ட எழுச்சி முன் ஒரு போதும் இலங்கையில் ஏற்பட்டதே இல்லை. தோட்டத்துரை இதை நன்கு அறிவார். தன் தோட்ட உத்தியோகஸ்தர்கள் அனைவரிடமும் இதைக் கூறி இருக்கிறார். தோட்டத்து பெரிய கங்காணி, பெரிய கிளாக்கர், டீமேக்கர், மலை உத்தியோகஸ்தர்கள் என்று ஒருவர் கூட பாக்கி இல்லாமல் இதை நன்கு அறிவர்.
தமது தோட்டத்துரையை அவர்கள் அச்சம் கலந்த மரியாதையுடன் நோக்கினர்.
ஆபீஸில் அவர் அமர்ந்திருந்து தன் சுற்று நாற்காலியை ஒரு தரம் சுற்றிவிட்டு, கண்களை உருட்டிப் பார்த்தாரென்றால் எதிரில் நிற்பவர்களுக்கு மூத்திரம் வரும்.
இந்த குணாம்சங்களோடு தான் இரண்டாயிரம் ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஆனைமலைத் தோட்டத்தை புசல்லாவைப் பிராந்தியத்திலேயே முதலாவதாக வரச் செய்திருந்தார்.
அந்த துரையைத்தான், மண்டையில் அடித்து யாரோ கொலை செய்திருக்கிறார்கள், கொலை நேற்று இரவு நடந்திருக்கிறது, அவரது சடலம் தொழிற்சாலைக்கு வரும் பாதையில் மூன்றாவது முடக்கில், வழிப்பாதையில் கிடக்கிறது.தோட்டம் முழுக்கக் கதி கலங்கி போயிருந்தது. “நம் தோட்ட துரைக்கா இப்படி ஒரு சாவு” என்று எண்ணி அஞ்சியதை விட, அந்த கொலைக்குப்பின் தொடர இருக்கும் போலீஸ் விசாரணையை நினைத்து அவர்கள் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.போலீஸ் விசாரணையென்றால் லேசா? எத்தனைப்பேரை எத்தனை நாளைக்குக் கொண்டு போய் அடைத்து வைப்பார்களோ? யாருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை.
பெரியகங்காணி சாத்தப்பன் கொலையை விசாரிக்க முன் நின்றார். ஆறுமணி பிரட்டுக்களத்தில் ஆள் கணக்கெடுப்பை நடத்தச் சொன்னார்.
தோட்டத்தில் யார் இருக்கிறார்கள், யாரெல்லாம் இல்லாது போய் விட்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ளும் முயற்சி. ஆண் தொழிலாளர்கள் எல்லாம் தோட்டத்தில் பேர் பதிந்தவர்கள், அத்தனைப் பேரையும் பிரட்டுக்களத்துக்கு வரச் சொல்லி தண்டோரா போட்டிருந்தது.
வழமையான நாட்களைப் போலில்லாது, சுகமில்லாதவர்களும், காலில் காயப்பட்டவர்களும் பிரட்டுக்களம் வந்து கணக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. வேலைக்கு அன்று போகாமல் இருக்க நினைத்தவர்களும் அந்தக் காலைக்குளிரில் பிரட்டுக்களத்துக்குப் போக வேண்டி வந்தது. கொலைப் பற்றிய சேதி அறிந்ததில் இருந்துதொழிலாளர்கள் வேறெல்லாவற்றையும் மறந்து விட்டனர்.ஆள் கணக்கெடுப்பு நடந்து முடிந்தது.
ஏழு பேர்கள் குறைகிறார்கள் என்று கண்டறியப்பட்டது. ஏழு பேர்களின் மீதும் சந்தேகக் கண்கள் வைக்கப்பட்டன. நேற்று இரவு அவர்களது நடவடிக்கைகளைப் பற்றி துப்பு துலக்கல் தொடங்கியது.அவர்களைக் கடைசியாக யார் யார் கண்டார்கள் என்று ஆராயும் முயற்சி நடைபெற்றது.
நேற்று சாயந்திரம் அரிசி காம்பராவில், அரிசி பிடிக்க நின்று கொண்டிருந்தபோது ராகவனை தான் பார்த்ததாக வள்ளி என்ற தொழிலாளி கூறினாள்.
ராகவனுடன் சாத்தய்யா கதைத்துக் கொண்டிருந்ததை தாங்கள் பார்த்ததாக ராமனும் வேலனும் கூறினார்கள். அங்கிருந்த பல தொழிலாளிகள் அதை ஆமோதித்தனர்.
அவர்களது வாக்குமூலங்கள் பதியப்பட்டன. பிரட்டுக்களத்துக்கு வந்திருந்த போலீசார் கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். யார் கொலையாளி என்று தெரியும் வரைக்கும் எல்லாமே முக்கியத் தகவல்கள்.
ராகவனும், சாத்தய்யாவும் எங்கு போயிருப்பார்கள் என்பதைவிட, எங்கிருந்தாலும் அவர்களைத் தோட்டத்துக்குக் கொண்டு வரும் முயற்சிகளில் பலர் இறங்கினர்.
கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு வராத பலர், வெளி இடங்களில் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தனர். அவர்களைத் தோட்டத்துக்கு அழைப்பிக்கும் முயற்சியில் சிலர் இறங்கினர். வீராசாமி, வேலாயுதன், அய்யம் பெருமாள் என்ற மூன்று தொழிலாளிகளைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
வினையத்தான் வெங்கடாசலம் என்ற தொழிலாளிகள் தன்னிடம் கூறிவிட்டு டிக்கோயாவில் தம் உறவினர் வீட்டுக்குச் சென்றிருப்பதை சாத்தப்பன் பெரிய கங்காணி அங்கு கூறினார்.
அவர் கூறுவதைப் போலீசார் கேட்டுக் கொண்டனர் என்றாலும் அவர்களிருவரையும் உடன் தோட்டத்துக்குத் திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.நிலமையை முழுவதாகப் பரிசீலித்த கங்காணி சாத்தப்பன் ‘தண்டோரா’ போட ஏற்பாடு செய்தார்.பிரட்டுக் களத்தில் தப்படித்து அறிவித்தல் செய்தார்கள். ‘தோட்டத்தைவிட்டு வெளியே போயிருக்கும் தொழிலாளர்கள் உடனடியாகத் தோட்டத்துக்கு மாலை ஐந்து மணிக்கு முதல் வந்து சேர வேண்டும். அப்படி வராதவர்கள் கண்டி போலீஸில் ஆஜராக வேண்டும்.
பக்கத்துத் தோட்டத்திலும் ஆனைமலைச் செய்தி பரப்பப்பட்டது, சுற்று வட்டாரத் தோட்டம் எங்கும் ஒரே பரபரப்பு. செய்தி அறிந்தவுடன் பக்கத்துத் தோட்டத்துரை ஹமில்டன் பறந்தோடி வந்திருந்தார்.
முதல் நாள் இரவு ஹமில்டன் பங்களாவில்தான் போட்துரை இரவுச் சாப்பாட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தார். போப்புக்கு அது கடைசி இராச்சாப்பாடாக அமைந்ததில் ஹமில்டன் துரைக்கு ஒரே வருத்தம்.
விருந்தின் போது போப் துரையிடம் எந்தவிதமான வேறுபாடுகளும் காணக்கிடைக்கவில்லை. வழமைப்போல, குதூகலத்துடன் காணப்பட்டார். ஒரு போத்தல் விஸ்கியை குடித்துத் தீர்த்தார். அடிக்கடி ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டாலும் திருமதி ஹமில்டனுடன் நகைச்சுவையாக சம்பாஷித்தார். பேச்சுவாக்கில் ஒரு தரம், தன் நிர்வாகத்தில் விரும்பத் தகாத ‘கேரக்டர்’ சில உருவாகியிருப்பதாகக் கூறினார்.
நாற்பது வயதுக்கான அனுபவமும், ஆஜானுபாகுவான உடற்கட்டும் ஆறேகாலடி உயரமும் கொண்ட போப் தான் இப்போது பிணமாகி தொழிற்சாலை ரோடில் விழுந்துக் கிடக்கிறார்.
ஹமில்டனுக்கு நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. போப்பின் உடம்பில் இருபத்தொன்பது வெட்டுக்காயங்களிருந்தன என்பதை நினைக்கையில் அவருக்குக் கூசியது. தலையில் மாத்திரம் எட்டு, வலக்காலில் மூன்று, இடக்காலில் ஏழு உடம்பில் ஒன்பது என்றிருந்த காயங்கள், அவரை நிற்கும் போது தாக்கி கீழே வீழ்த்தியிருப்பதை உறுதிப்படுத்தியது. கடைசி வரை போராடி விழுந்த வீரனுடையதாக அந்த உடல் தென்பட்டது.
பாரதயுத்தத்தில் போர் புரிந்து வீழ்ந்து பட்ட கும்பகர்ணன் உடலைப் போல துரையின் சடலம் கிடந்தது.அவர் உடம்பு வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்தது, அருகில் டீமேக்கர் காசிம் மற்றும் தோட்டத்து உத்தியோகஸ்தர்கள் அருகில் கண்கலங்கி நின்றிருந்தனர்.
சுற்றி நின்ற போலீசார் இருவர் உடலைக் கவனித்துக் கொண்டனர். வைத்தியப் பரிசோதனை முடிந்திருந்ததால் இறுதி முடிவுகளை எழுதிக் கொண்டிருந்தனர்.
நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
பதினொரு மணியாகி விட்ட காலைப் பொழுது. துரை கொலையுண்ட சேதி காட்டுத்தீப்போல் எங்கும் பரவி பக்கத்து தோட்டத்திலும் வழக்கமான செயல்களைப்பாதித்திருந்தது. அங்கும் தொழிலாளர்கள் ஆர்வ மேலிட்டால் ஆனைமலைகக்கு வந்து சம்பவங்களை நேரில் பார்ப்பதில் துரிதம் காட்டினர். “கோவிந்தன் குண்டடிபட்டு முல்லோயாவில் வீழ்ந்து கிடந்ததைப் போல, போப் துரை ஆனைமலைப் பாதையில் வீழ்ந்து கிடக்கிறார்” என்று அவர்களில் ஒருவர் பேசிக் கொண்டார். என்ன இருந்தாலும் இருநூற்றி நாற்பது ராத்தல் எடை கொண்ட போப் துரையை எதிர்த்து வீழ்த்தியவர்” யாரென்றறிய யாராலும் முடியவில்லை .
முல்லோயாவில் நடந்த கோவிந்தன் உயிர்ப்பலிக்குப் பின்னர் ஆனைமலைத் தோட்டத்து துரை கொலை அவர்களைக் கலக்கியது. வெள்ளைக் காரர்களின் ஆட்சி ஒன்றும் கேள்வி கேட்க முடியாத ராஜ்யம் என்ற நினைப்பு லேசாக அவர்கள் மனதிலிருந்து அசையத் தொடங்கியது.
முன்பு ஒரு போதும் இல்லாத அளவுக்கு தொழிலாளர்கள் எழுச்சிக் கொண்டு நிற்கின்றனர்.கொல்வின் ஆர்.டி.சில்வாவும், ஜி.ஜி. பொன்னம்பலமும், ஜி.ஆர். மேத்தாவும் மூன்று மாத காலம் வழக்கு மன்றத்தில் வாதாடினர்.

தொடரும்..

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *