மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமும் படைப்புலகமும் – [ 26 ] T .சௌந்தர்

Visits of Current Page:657
GlobalTotal: 358416

திரை இசைக்கு அப்பால்…

பாடல்கள் , டைட்டில் இசை , படத்தின் பின்னணி இசை போன்றவற்றில் வாத்திய இசையின் பலவிதமான சாத்தியங்களை மெல்லிசைமன்னர்கள் மிக முனைப்பாக பயன்படுத்தி உயிர்ப்புள்ள புதிய திசையைக் காட்டியதுடன் இசையில்  புதிய குறியீடுகளாகவும்  பின்வந்தவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்தனர்.

பொதுவாக சினிமாத்துறை தாண்டி வாத்திய இசை என்பது பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் அறவே இல்லை என்று சொல்லிவிடலாம்.சேர்ந்து பாடுவது குழுவாக ஆடுவதெல்லாம் மறைந்து ஒருவர் பாடவோ , ஆடவோ செய்யவும் பலர் ரசிக்கவுமான  ஒரு இறுகிய போக்கு நிலைபெற்று ,அதை ஆட்டவோ ,அசைக்கவோ முடியாத நிலை இருந்த வேளையில் சினிமா இசை கொஞ்சம் அதை தொட்டு பார்த்தது.  

சினிமா என்பது பணம் கொழிக்கும் ஒரு துறையாக இருப்பதால் , அதில் முதலீடு செய்தால் இன்னும் பலமடங்கு பணம் பாண்ணலாம் என்ற உந்துதல் தான் சினிமாவில் வாத்திய இசை உள்நுழையக் காரணமாகியது. ஆனால் உலகெங்கும் ஒரு நாட்டின் கலாச்சார அடையாளமாகவும் பெருமையின் அடையாளமாகவும்  கருதப்படும் இசைத்துறைக்கு பெருமளவு நிதி ஒதுக்கும் நிலையில் மிகுந்த இசைவளம்மிக்க இந்தியா  என்ன செய்திருக்கிறது என்றால் பெருத்த ஏமாற்றமே பதிலாகக் கிடைக்கும்!

மேலைநாட்டவரைப் பார்த்து ஏதேதோவெல்லாம் பிரதி பண்ணினார்கள்.தங்கள் நாட்டுக்கென்று ஒரு இசைக்குழுவை அமைக்க முடியவில்லை என்பது நமது கவனத்திற்குரியது.

சென்னையிலும் , பம்பாயிலும் பெருமளவில் இசைக்கலைஞர்கள் குவிந்திருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு பொதுவான இசைக்குழு இல்லை. அது பற்றி இந்திய மாநில ,மத்திய அரசுக்கு எந்தவிதக் கவலையும் கிடையாது

2019  வருடம் இந்தியாவின் முதன் முதல் சிம்பொனி இசைக்குழு இங்கிலாந்துக்கு வந்தது. அவர்கள் மேலைத்தேய சிம்பொனி இசைக்கலைஞர்களான பீத்தோவன், ராக்மானினொவ் , ரிமிஸ்கி போன்ற கலைஞர்களின் படைப்புகளை இசைக்கப்பபோவதாகவும் பிரபல தபேலா வித்துவான் அந்த இசைக்குழுவில் முக்கியமானவர் எனவும் செய்திகள் வெளியாகின.

செய்தியாளர்களிடம் பேசிய குஸ்ரு சன்டக் [  Khushroo Suntook ] என்பவர் ” இந்தியாவின் ஒரே ஒரு தொழில் முறை சிம்பொனி  இசைக்குழு நாங்கள் என்பது எங்கள் தேசிய அவமானங்களில் ” ஒன்று என்று கூறினார்.  இந்தியாவைப் போன்ற நாடுகளான சீனா , ஜப்பான் , கொரியா போன்ற நாடுகளில் பல சிம்பொனி இசைக்குழுக்கள் இருப்பதை மனதில் வைத்து அவர் அப்படிக் கூறியிருப்பார். போலும்! சீனாவில் மட்டும் 200க்கும் மேற்பட்ட சிம்பொனி இசைக்குழுக்கள் இருப்பதாக Marat Bisengley  என்பவர் கூறுகிறார்.

இசையில் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட கொண்ட இந்தியாவில் , உலகப்புகழபெற்ற பல கலைஞர்கள்  இருக்கும் ஒரு நாட்டில் ஒரு சிம்போனி இசைக்குழு இல்லை என்பது ஒரு அவமானமானகரமானது தான்.அதே வேளையில் இசைப்பாரம்பரியமற்ற ஒரு நாடான இலங்கையில் தென் கிழக்கு ஆசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சிம்பொனி இசைக்குழு 1958 இல் உருவாக்கப்பட்டது என்பதும்  ஆச்சரியம் அளிக்கும் செய்தியாகும். ஆனால் இந்திய சிம்பொனி இசைக்குழு 2006  தான் ஆரம்பிக்கப்பட்டது

நூறு ஆண்டுகள்  ஆங்கிலேய ஆட்சி அல்லது ஐரோப்பியரின் ஆட்சிக்கு உட்பட்ட போதும் , தஞ்சையைச் சேர்ந்த  சரபோஜி மன்னர் , மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ வாதியார் போன்ற மன்னர்கள் லண்டன் பில்கார்மோனிக் இசைக்குழுவிற்கு நிதி வழங்கிய போதும் அவர்களுக்கும் இங்கே ஒரு இசைக்குழு உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை.

ஆனாலும் மேலைத்தேய கலாச்சாரத்திலும் , பண்பாட்டிலும் ஆர்வம்காட்டிய பார்சி இனத்தவர்கள் வர்த்தகம் மட்டும் அல்லாமல் கலைத்துறையிலும் ஈடுபாடு காட்டினர். இன்று ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் , மேலைத்தேய  செவ்வியல் இசையில் புகழ்பெற்றிருக்கும் இசைக்கலைஞரான சுபின் மேத்தா பார்சி இனத்தவர் என்பது குறிப்ப்பிடத்தக்கதாகும் .

இசை என்பது இழிகுலத்தோருக்கானது என்று கருதப்பட்ட ஒரு நிலை மாறி ,பார்ப்பனர்களால்  அது புனிதமாக்கப்பட்டு வேதம் , புராண , இதிகாச , பக்திக்குள் இசை மூழகடிக்கப்பட்டதும் , பார்ப்பனஆதிக்கத்தின் மூலம்  இந்தியர்களின் இசை என்பது பக்தி இசையாக மாறி எந்தவித புதுமையான முயற்சிகளுக்கு இடமில்லாமல் போனதால் ஒற்றைப்பரிமாணமாக ஒருவர் பாடவோ அல்லது ஒருவர் ஒரு வாத்தியம் வாசைப்பதே போதுமானது என்று இசை இறுக்கம் பெற்றது. இசை என்பது பார்ப்பனீயமயப்படுத்தப்பட்டு பூர்வமாக சங்கீதத்தை தொழிலாகக் கொண்டவர்களை ஓரம் கட்டியதன்  மூலம் இது சாதிக்கப்பட்டது.

ஆனாலும் நவீன கலைவடிவமாக வந்த சினிமாவை , குறிப்பாக இசையை இவர்களால் முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்பதாலும் சினிமாவின் வளர்ச்சி மேலைநாடுகளுடன் சார்ந்திருந்ததாலும் சினிமா இசை தப்பியது. சினிமாவிலும் பார்ப்பன இசையமைப்பாளர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் , இசையில் அவர்களால் பார்ப்பன சனாதனிகளுக்கு அடங்க முடியவில்லை. ஏனெனில் சினிமா இசையே அதற்கு எதிராகவே இருந்தது என்பதே உண்மை. கர்னாடக சங்கீதம் என்பது ஒற்றைப்பரிமான monotony வகையையும் மேலைத்தேய இசை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட , பல அடுக்குகள் ஒரே நேரத்தில் ஒலிக்கும் polyphony என்கிற இசை வகையையும் சார்ந்ததாகும் 

பார்ப்பன சிந்தனைக்கு மாறான போக்கைக் கொண்ட சினிமா இசையை , தங்கள் கட்டுக்குள் அடங்காத இசையை  குறிப்பிட்ட காலம் வரை இந்திய வானொலிகள் மூலம் தடை செய்தார்கள். சினிமாக்கலைஞர்களின் மீது மக்கள் மத்தியிலிருந்த  செல்வாக்கும் அதன் மூலம் அவர்கள் பெற்ற அங்கீகாரமும்  எல்லை மீறி சென்ற காரணத்தால் தவிர்க்க முடியாமல் சினிமாப்பாடல்களை வானொலிகளில் ஒலிபரப்ப அனுமத்திதார்கள்.

மகிழ்வூட்டும் வாத்திய இசையின் தேவையை  உணர்ந்த  சினிமா இசையமைப்பாளர்கள்  இசையின்மீதான சனாதனப்பார்வையை உதற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மனதில் மரபு என்றும், ஆச்சாரம் என்றும் கருதினாலும் சினிமா என்று வரும் போது அதைத்தாண்ட வேண்டிய அவசியம் சினிமா இசையமைப்பாளர்களுக்கு இருந்தது.  இதைக் கட்டுப்படுத்த முடியாது என்று உணர்ந்து அவர்களை அங்கீகரிக்க மறுத்தனர். சினிமா இசை என்பது தரம் குறைந்த இசை என்ற ஓர் மனநிலை சராசரி இந்தியர்களிடம் வெகு  சாமர்த்தியமாக பரப்பினர்.

கர்னாடக இசை என்றாலே , அவர்கள் பாடும் முறையால் மக்கள் அந்நியப்பட்டிருந்த சூழலில் மரபு இசையிலிருந்து ராகங்களை எடுத்து வாத்திய இசை என்ற இனிப்புப் பூசி கொடுத்து சுவைக்க வைத்த பெருமை இசையமைப்பாளர்களுக்கு உண்டு.

மரபு ராகங்களுடன் வாத்தியங்களை இணைப்பதென்பது கர்னாடக கச்சேரி மேடைகளில் வித்துவான்களுக்கு பின்பாட்டு பாடும் வாத்திய முறையல்ல. அந்த ராகம்சார்ந்து மேலைத்தேய இசைப்பாங்கில் வாத்தியங்களை அந்த ராகங்களை இசைவாக இசைக்க வேண்டும். அது சினிமா இசையமைப்பாளர்களால் சாத்தியமானது. அதுவே  வெகுஜனங்களையும் வெகுவாகக் கவர்ந்தது.

சினிமாப் பாடல்களை அடியொற்றியே  பக்திப்பாடல்கள் வாத்திய இசையுடன் அமைக்கப்பட்டன. வெகுஜனங்களால் அதிகம் ரசிக்கப்படாத கர்னாடக இசையும் பக்தியையே பரப்புகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இருவிதமான இசைகளை ஒன்றுடன் ஒன்று எதிர்திசைகளில் நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்ற போதும் அதனதன் தன்மைகளை அங்கீகரிப்பதே இசையின் பன்முக ஆற்றலைப் புரிந்து கொள்ள ஒரே வழி. அந்தந்த இசைகளை அந்தந்த வழிகளில் ஏற்றுக் கொள்வதும் தான் சிறந்தவழி என்பதை புரிந்து கொண்டால் பலவிதமான இசைகள் வளர வழி ஏற்படும்.

வாத்திய இசையில் புதிய பாய்ச்சலைக் காட்டிய மெல்லிசை மன்னர்கள் சினிமா இசையைத் தாண்டியும் சில படைப்புகளில் ஈடுபட்டார்கள் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. அவர்களது பாடல்களை ஒலிபரப்பிய வானொலிகள் கூட இவற்றை பற்றி பொருட்படுத்தவே இல்லை.வானொலிகளில் தங்கள் குரல்களை ஒலிக்க

வைப்பதிலிருந்த அக்கறை இசை நிகழ்ச்சிகளில் இருக்கவில்லை என்பதும் அதுபற்றி விழிப்புணர்வு அறவே இல்லாத ஒரு சூனிய காலமுமாக இருந்திருக்கிறது. இசை பற்றிய தேடல் என்றால் அது தமிழ் பாடல்களை போலிருக்கும் ஹிந்திப்பாடல்களை கண்டுபிடித்து ஒழிக்க விடுவதாகவே இருந்தது.இதற்கு யாரையும் குறை கூறிப் பயனில்லை.

1950 1960 களில் உருவாகி புகழ்பெற்ற  லத்தீன் அமெரிக்க இசையும் , வட அமெரிக்க இசையும் வர்த்தக ரீதியில் உலகெங்கும் பரவின.லத்தீன் அமெரிக்காவின் ரம்பா, சல்சா ,டாங்கோ, போஸோ நோவா அமெரிக்காவின் ஜாஸ் , புளூஸ், ரோக் போன்ற இசைவகைகளும் பொழுதுபோக்கு இசையில் பாரிய தாக்கம் விளைவித்தன.

அதே காலகட்டத்தில் மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க இளைஞர்கள் பழமைவாத சமூக நோக்கத்திற்கு எதிரான ஓர் கிளர்ச்சியாக இளைஞர்களால் முதன்மைப்படுத்தப்பட்ட பாப் , ரோக் போன்ற இசைவகைகளும் , அந்த இளைஞர்களின் ஆன்மீக ஈடுபாடும் இந்திய இசையின்பால் ஏற்பட்ட ஈர்ப்பும் மேற்குக்கும்  , கிழக்குக்குமான இசைத்த தொடர்புகளை புதிய நோக்கில் அணுகத் தலைப்பட்டது. மேலைத்தேய இசைக்கலைஞர்கள் கீழைத்தேய இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசைக்கும் ஒரு புதிய இசை இயக்கத்தை உருவாக்கினர்.

The Beatles, Bob Dylan,  Rolling Stones, போன்ற புகழ் பெற்ற இசைக்குழுக்கள் இந்தியா , ஜப்பான் போன்ற நாடுகளின் இசையில் ஈடுபாடுகாட்டினார்.இதே வெளிப்பாடுகளை ஜப்பான் இசையிலும் காண முடியும். Misora Hibari  என்ற பெண் இசைக்கலைஞர் ரோக் , ஜாஸ் போன்ற இசைக்கலைவைகளில் பாடல்களை பாடி புகழ்பெற்றார்.

மேற்கூறிய  The Beatles , The Byrds  போன்ற இசைக்குழுக்கள் இந்திய இசையில் அதிக ஈடுபாடு காட்டி சித்தார் இசைக்கலைஞர் ரவிசங்கரை அழைத்து பல இசைநிகழ்ச்சிகளை நடத்தியதுடன் அவரிடம் சித்தார் இசைக்கவும் பழகினர்.

இந்த இசைப்பரிவர்த்தனை தனியே பாப் இசையுடன் மட்டும் நிற்கவில்லை. மேலைத்தேய செவ்வியல் இசைக்கலைஞர்களையும் [ Western Classical ] இந்திய இசையின் பால் ஈர்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக யெஹுதி  மெனுஹின்  [ Yehudi  Menuhin ] போன்ற வயலின் இசைமேதை ரவிசங்கருடன் இணைந்து பல இசைக்கச்சேரிகளை நடாத்தினார். அவர்களின் முயற்சியில் West Meets  East போன்ற இசைத்தட்டுக்கள் வெளிவந்து புகழ் பெற்றன. இதன் புகழ் கலப்பு இசையின் ஈர்ப்பை உலகெங்கும் உண்டாக்கியத்துடன் ஜப்பானியக் கலைஞர்களும் இந்தியக்கலைஞர்களுடன் இணைந்து சில படைப்புகளை உருவாக்க உதவியது.

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க வயலின் இசைக்கலைஞரான  Yehudi  Menuhin மற்றும் புலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு புல்லாங்குழல் கலைஞரான Jean Peirre Rampel போன்ற கலைஞர்கள் சித்தார் மேதை ரவி ஷங்கருடன் இணைந்து West Meets East என்ற புகழ்பெற்ற இசைத்தட்டை  1967 இல் வெளியிட்டனர்.

பின்னாளில் இளையராஜா தான் அடைந்த வெற்றிகளால் வாத்திய இசையில்  How to Name It – Nothing But Wind  போன்ற இசை தட்டுக்களை வெளியிட்டு இசை விற்பனர்களின் பாராட்டைப் பெற்றதுடன் , சாதாரண ரசிகர்களின் மத்தியிலும் அது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதிலும் மெல்லிசைமன்னர்களே இளையராஜாவுக்கு  முன்னோடிகளாக இருந்தனர்.

1969 ஆண்டு மெல்லிசைமன்னர் டி.கே.ராமமூர்த்தி தனியே இசையமைத்த Fabulous Notes Of The Indian Carnatic-Jazz  என்ற இசைத்தட்டு முன்னோடியாக அமைந்தது. இந்திய ராகங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு அதனுடன் ஜாஸ் இசையின் கூறுகளும் இணைந்த புதுமையும், நவீனமுமான இசைவடிவமாக வெளிவந்தது. 

இந்திய மனோதர்ம இசைக்கும் ஜாஸ் இசைக்கும் இடையே இருக்கும் இணக்கப்பாடுகளையும் , மென்மையான வேறுபாடுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தும் இந்த இசைத்தொகுப்பில்  கௌளை ,ரஞ்சினி, பேகடா ,மோகனம் ,உதய சந்திரிகா ,  நாட்டை , பியாக , மாயாமாளவகௌளை , சஹானா,கனகாங்கி , ரசிகப்பிரியா போன்ற ராகங்கள் கனகச்சிதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ் இசைக்கருவிகளான வீணை ,குழல் ,கடம் , மிருதங்கம் , மத்தளம் ,கடம் ,செண்டை ,டேப் , செங்கு ,புல்புல் தாரா போன்றவற்றுடன் மேலைத்தேய இசைக்கருவிகளான சாக்ஸபோன் , பேஸ் க்ளாரினெட் ,பியானோ, கிட்டார் , ட்ரம்பெட் ,பொங்கஸ் , ட்ரம்ஸ் , டபுள் பேஸ் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 

மெல்லிசைமன்னர்கள் திரைப்படங்களில் பின்னணி இசையில் பயன்படுத்திய இசையின் சாயல்களையும்  1950 களில் புகழ்பெற்றிருந்த  அமெரிக்க ஜாஸ் இசைக்கலைஞரான chico hamilton இசையின் சாயல்களையும் இதில் காண முடியும்.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியின் அடியொற்றி மெல்லிசைமன்னர் விஸ்வநாதனும் 1970 ஆம் ஆண்டு தனி வாத்திய இசைத்தொகுப்பாக Thrilling Thematic Tunes என்ற இசைத்தட்டை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு இசைவடிவமும் ஒவ்வொரு தலைப்பின் பெயரிட்டு இசைக்கப்படுத்துள்ளன. அவை பின்வருமாறு:

[01]  Reminiscences –   [02]  Fields & Stories –  [03]  Quo-Dharma  [04]  Swing-O-Spring  [05]  Eve Of Kurukshetra

[06]  East – West Wedding  [07]  Train Music (Toy Train With Children) – [08] Holiday Mood  [09]  Rasa Leela – [10]  Holiday Mood – [11] Rasa Leela – [12]  Melody Medley – [13] Percussion Ensemble – Viswanathan

வெளிவந்தகாலத்தில் மிக புதுமையாக இருந்திருக்கக்கூடிய ஒரு இசைத்த தொகுப்பு என்று  சொல்லலாம். இதில் வருகின்ற வாத்திய இசை பெரும்பாலும் விஸ்வநாதன் திரைப்படங்களில் வழங்கிய இசை போன்ற தன்மையே ஓங்கி நிற்கிறது. ஒவ்வொரு இசைத்துணுக்கிற்கும் தரப்படட தலைப்புகளுக்கு பொருத்தமான இசை அமைக்கப்பட்டுள்ளது. பலவிதமான உணர்வுகளைக் கிளர்த்துமிந்த இசைத்தொகுப்பில் புல்லாங்குழல் இசையை மிக அற்புதமாகப் பய்னபடுத்தியிருப்பார்  மெல்லிசைமன்னர்.

இந்த தொகுப்பில் வருகின்ற ராஸலீலா என்ற இசை மனத்தைத் தொடும் வகையிலும் , புல்லாங்குழலின் பல்வேறு பரிமாணங்களையும் வெகு சிறப்பாக எடுத்துக்காட்டுவதாகவும் ,அதனுடன் கோரஸ் இசையையும் மிக நேர்த்தியாக பயன்படுத்தியிருப்பார். இந்த இசையில் வரு ஒரு சிறிய பகுதி இலங்கை வானொலி ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமானதொரு இசையாகும். இலங்கை வானொலியில் ஒவ்வொரு நாளும் காலையில் ஒலிபரப்பாகும் புதுப்பாடல் நிகழ்சசியான ” பொங்கு பூம்புனல் ” நிகழ்ச்சியின் முகப்பிசை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த இசைத்தட்டில் வெளிவந்த இசைத்தொகுப்பிலிருக்கும் பல இசைகளைவிட விஸ்வநாதன் தான் இசையமைத்த படங்களிலேயே நல்ல முயற்சிகளை பரீட்ச்சித்துள்ளார் என்று சொல்லலாம். உதாரணமாக கன்னிப்பெண் படத்தில் சிவகுமார் நாடககக்குழுவிற்கு ஒத்திகை பார்ப்பதாக வரும் காட்சியில் பலவிதமான இசை கலவையாக அமைத்திருப்பார் விஸ்வநாதன். 

கலைக்கோயில் படத்தில் இசைவித்துவானாக வரும் எஸ்.வி சுப்பையா வீணையை பார்த்து பழைய நினைவுகளை மீட்டுவதாக வரும் காட்சியில் வயலின்களும் ,செனாயும், குழலும் கலந்து வரும்   சிவரஞ்சனிராகப் பின்னணி இசையும், மனக்கசப்பினாய் பிரிந்து போகும் முத்துராமனும் ,சுப்பைய்யாவையும் மீண்டும் சந்திக்கும் கோயில் காட்சியில் வரும் பின்னணி இசை என மெல்லிசைமன்னர் தந்தவை ஏராளம்.

ராமமூர்த்தி மற்றும் விஸ்வநாதனுக்கு முன்பாக தமிழ் இசையமைப்பாளர்கள் யாரும் செய்யாத இந்த முயற்சியாக இவை அமைந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  

மெல்லிசைமன்னரின் இசையின் பங்களிப்பில் முக்கியமானதொரு இடம் கர்னாடக இசைப்பாடகர் மகாராஜபுரம் சந்தானத்துடன் இணைந்து அவரது கச்சேரியில் வாத்திய இசை வழங்கியது. அன்றைய காலத்தில் மிகப்பெரிதாகப் பேசப்படட நிகழ்வாகும். இசைச்சங்கமம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட அந்த இசை நிகழ்ச்சியில் மனவெழுச்சி தருகின்ற ” சம்போ சிவா சம்போ ” என்ற ரேவதி  ராகத்திலமைந்த பாடல் அதிக புகழ்பெற்றது. புதுமை  நுழைய முடியாத கோட்டைக்குள் மெல்லிசைமன்னரை அழைத்துச் சென்ற பெருமை மகாராஜபுரம் சந்தனத்தை சாரும்.

மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி இசையமைத்த  Fabulous Notes Of The Indian Carnatic-Jazz  மற்றும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையமைத்த  Thrilling Thematic Tunes போன்ற இசைப்படைப்புகளின் தாக்கம் கர்னாடக வயலின் இசைக்கலைஞரான லால்குடி ஜெயராமன் படைத்தளித்த The  Dance of Sound :Thillana என்ற படைப்பிலும் பிரதிபலித்தது.

லால்குடி ஜெயராமன் இன்னிசை வடிவமாக The  Dance of Sound  Thillana என்ற பெயரில் தனி இசைத்தட்டை 1978 இல்  வெளியிட்டார். ஒரு கர்னாடக இசை வித்துவான் என்ற ரீதியில் அந்த இசை சார்ந்த அதே வேளையில் கொஞ்சம் மேலைத்தேய இசைக்கலப்புடன் அதை இசையமைத்திருந்தார் . கர்னாடக கேட்டுப்  பழகியவர்களுக்கு மிக இதமாக அமைந்த அற்புதமான இசைத்தட்டு. அதில் வயலினுடன் சந்தூர் , குழல் , பிராஸ்ட்ரம்ஸ் போன்ற பலவிதமான வாத்தியக்கருவிகளின் இனிய கூட்டொலிகளையும் நாம் கேட்க முடியும்.

இந்த இசைத்தட்டு உருவாக்கத்தில் மெல்லிசைமன்னனர்களின் வாத்தியக் குழுவில் வயலின் அக்கலைஞராகவும் , பின்னாளில் புகழபெற்ற இசையமைப்பாளராகவும் வளர்ந்த ஷ்யாம் என்பவர் அதன் [ Arranger  ] தொகுப்பாளராக இருந்தார்                        .

சினிமா அரங்கத்திற்கு வெளியே தனியே வாத்திய இசையில் மட்டுமல்ல ,எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளிவந்த இசைப் பாடல்கள் தமிழிலும்  , மலையாளத்திலும் வெளிவந்தன :அவற்றில்  சில பக்திப்பாடல் இசைத்தட்டுக்களாகவும் அமைந்தன.

தமிழில்:

01  கிருஷ்ணகானம்

02  வடிவேல் முருகன் [ முருகன் பாடல்கள் ]

03  பொன்னூசல் [ நால்வரின் திருமுறைகள் ] அ.ச.ஞானசம்பந்தன் உரையுடன் வெளிவந்த இசைத்தட்டு

04  இசைசங்கமம்

மலையாளத்தில் :

01  ஐயப்பன்  பாடல்கள் – ஜேசுதாஸ்  

02  சரணம் ஐயப்பா – ஜேசுதாஸ்

03  மகர்லோட்சவம்  – ஜேசுதாஸ்

04  ஐயப்பன் காவு  – உன்னிமேனன் 

05  கிருஷ்ணகாதா    – ஜேசுதாஸ் 

சினிமா இசைக்கு நெருக்கமாக இருப்பது பக்திப்பாடல்கள்.சினிமா வாய்ப்புக் கிடைக்காத இசையமைப்பாளர்கள் தங்களது  திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் ,வெளிக்காட்டவும் பக்திப்பாடல்களை இசையமைப்பை ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.சினிமாவில் ஒலிக்கும்  வாத்திய இசைபோலவே அவை அமைந்திருப்பதால் படத்தயாரிப்பாளர் பக்திப்பாடல்களை இசையமைக்கும் ஒரு இசையமைப்பாளருக்குத் துணிந்து வாய்ப்பை வழங்கும் நிலை இருக்கிறது.

இந்த பக்திப்பாடல்கள் சாராம்சத்தில் மெல்லிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். அந்த மெல்லிசைவடிவம் சினிமாவின் கொடை என்றால் மிகையல்ல. திரைப்படனங்களில் புகழபெற்ற பல இசையமைப்பாளர்கள் பக்திப்பாடல்களையும் இசையமைத்துப் புகழ் பெற்றனர்.

பக்திப்பாடல்களில் தனக்கென தன்னிகரில்லாத இடத்தை பிடித்து வைத்திருந்த சீர்காழி கோவிந்தராஜன் பாடிய புகழபெற்ற பல  பாடல்களை இசையமைத்தவர் சினிமாவில் ஏற்கனவே பெரும்புகழ் பெற்ற டி.ஆர்.பாப்பா  அவரை அடியொற்றி வி.குமார் ,  மெல்லிசைமன்னர் ராமமூர்த்தி என பெரும்பாலும் எல்லா இசையமைப்பாளர்களும் இசை வழங்கியுள்ளனர். பிற்காலத்தில் தேவா பக்த்திப்பாடல்கள் இசையமைத்து புகழ் பெற்ற பின்னர் தான் சினிமாவில் நுழையமுடிந்தது.

சினிமா இசையமைப்பாளர்கள் பக்தி இசையில் ஈடுபட்டது போகவே சினிமாவில் புகழ் பெற்ற பாடகர்கள் பலரும் பக்திப்பாடல்களையும் பாடினர்.

அந்தவகையில் விஸ்வநாதனும் சில பக்திப்பாடல்களை இசையமைத்தார். அவை சினிமாப்பாடல்களுக்கு நிகாரகப் புகழ் பெற்றன. குறிப்பாக அவரின் கிருஷ்ணகானம் என்ற இசைத்தட்டை  கூறலாம். அந்த இசைத்தட்டில் வெளியான

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ,

ஆயர்பாடி மாளிகையில் ,

குருவாயூருக்கு வாருங்கள்

கோகுலத்து பசுக்கள் எல்லாம்

போன்ற பாடல்கள் ஒவ்வொரு தமிழர்களும் மனப்பாடமாக சொல்லும் வகையில் ஒலிபரப்பப்பட்ட பாடல்களாகும். அந்தப்பாடல்கள் தனித்துவம் மிக்க மெல்லிசைப்பாங்கினவை.

ஏற்கனவே தமிழ் திரைப்படங்களிலும் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த பக்திப்பாடல்களும் தனித்தன்மை மிகுந்தவை. கீழ் உள்ள பாடல்களை உதாரணம் காட்டலாம். 

01   அழகன் முருகனிடம்  – பஞ்சவர்ணக்கிளி – பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

02   பழமுதிர் சோலையிலே  – குழந்தையும் தெய்வமும்  – பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் 

03   ராமன் எத்தனை ராமனடி – கௌரி கல்யாணம் – பி.சுசீலா  – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

04   திருப்புகழைப் பாட- கௌரி கல்யாணம் – பி.சுசீலா+ சூலமங்கலம் – இசை:விஸ்வநாதன்  

05   கண்ணன்  வந்தான் அங்கே  – ராமு  – சீர்காழி + டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

06   கேட்டதும் கொடுப்பவன்  – தெய்வமகன் – டி.எம்.எஸ்   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

07   மண்ணுலகில் இன்று தேவன்  – புனித அந்தோனியார்  – வாணி   – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

பக்திப்பாடல்கள் என்ற வகையில் மலையாளத்திலும் மெல்லிசைமன்னரின் இசையில் யேசுதாஸ் தனது   சொந்த இசைக்கம்பனியான தரங்கிணி மூலம் சில இசைத்தொகுப்புக்களை தானே பாடி வெளியிட்டார்.பக்திப்பாடல்கள் மட்டுமல்ல மலையாள கலாச்சார கொண்டாட்டங்கள் சம்பந்தமான பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புக்களை ஜேசுதாஸின் ” தரங்கிணி ” நிறுவனம் வெளியிட்டு வந்தது.

அந்த தொடரில் ஓணப்பண்டிகை குறித்த இசைத் தொகுப்பு ஒன்றிற்கு  மெல்லிசைமன்னர் இசையமைத்தார். அவரது படைப்பாற்றலுக்கு அழியாத புகழைத் தரும் அந்த இசைப்படைப்பு 1988  ஆம் ஆண்டு “ஆவணிப்பூக்கள் ”  என்ற பெயரில் மிக அருமையான பாடல்கள் அடங்கிய இசைத்தட்டாக  வெளியானது. அந்தப்பாடல்களை ஜேசுதாஸ் ,சித்ரா பாடினர். 

01   துளசி கிருஷ்ணா துளசி – ஜேசுதாஸ்

02   நித்ய  தருணி நீல ரஜனி  – ஜேசுதாஸ்

03   ஓணப்பூவே – ஜேசுதாஸ்

04   குளிச்சு குறியிட்டு – ஜேசுதாஸ்

05   கினாவில் இன்னலை – ஜேசுதாஸ்

06   உத்திராட இராத்திரியில் – ஜேசுதாஸ் + சித்ரா

07   மூவந்தி முத்தச்சி  – ஜேசுதாஸ்

08   அத்த கலத்தினே பூ தேடும் – சித்ரா

ஒரு பாடகரின் குரல் வளம் . பாடும் ஆற்றல் அறிந்து இசையமைக்கும் வல்லமை கொண்ட மெல்லிசைமன்னர் ஜேசுதாஸ்  குரல் அறிந்து மிக , மிக அற்பதமாக இசைத்துள்ளார். அவரது படைப்பாற்றலின் வீச்சும் , செழுமைமிக்க அனுபவமும் மிக உன்னதமாக வெளிப்பட்ட பாடல்கள் அவை என்று சொல்லலாம்!. அந்த தொகுப்பில் அமைந்த ஒவ்வொரு பாடல்களும் பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன.

குறிப்பாக  ஜேசுதாஸ் பாடிய “துளசி கிருஷ்ணா துளசி “, “நித்ய  தருணி நீல ரஜனி “, “கினாவில் இன்னலை ”  போன்ற பாடல்கள் மெல்லிசைமன்னரின் அதியுச்சப் பாடல்கள் என்று சொல்லலாம்.

இக்காலகட்டத்தில் தமிழ் திரைப்படங்களில் மிகக்குறைந்த படங்களில் இசையமைத்த விஸ்வநாதன் ஒரு சில படங்களில் இத்தகைய பாடல்களை இசையமைத்தார் என்பதும்  இளையராஜாவின்  இசையலையில் அவை அதிகம் பேசப்படாமல் போனமையும் துரதிர்ஷ்டமானது.

திரை இசைக்கு அப்பால் மெல்லிசைமன்னர் இசையமைத்த முக்கியமான பாடல் தமிழ் தாய் வணக்கப் பாடலான “ நீராரும் கடலுடுத்த ” என்ற பாடலாகும். பழந்தமிழர் கண்டெடுத்த முல்லைப்பண்ணில் தமிழ்த்தாய் வாழ்த்தை அமைத்த மெல்லிசைமன்னரின் இசை நுட்பத்தை இன்றும் கேட்டு இன்புறுகிறோம்.

அது போலவே மகாகவிகள் பாரதி , பாரதிதாசன் போன்றோரின்  நாட்டுடைமையாக்கப்பட்ட பாடல்களையெல்லாம் மெல்லிசைமன்னர்களை வைத்து இசைத்தொகுப்புகளாக்கி வெளியிட்டு அருஞ்சொத்தாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.

மெல்லிசையில் தமிழ் திரையிசையைக் கீர்த்தி பெற வைத்து இசையின் உயிராற்றலை வெளிப்படுத்திய  மெல்லிசைமன்னரின் இசையை பிற மொழி சினிமாக்களும்  பயன்படுத்த தவறவில்லை.

[ தொடரும் ] 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *