மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 24  – T .சௌந்தர்

இசை சாம்ராஜ்ஜியத்தில் புதிய கவிஞன்

தன்னுயிர் பிரிவதை பார்த்தவரில்லை

என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்  ..

மற்றும்

என்னை எடுத்து தன்னைக் கொடுத்து

போனவன் போனாண்டி

தன்னை கொடுத்து என்னை அடைய

வந்தாலும் அவருவாண்டி ….

என்று அற்புதமான பாடல் வரிகளை ஒரு புதுக்கவிஞர் எழுதினார்.

அவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ,கண்ணதாசன் போன்றோரைத் தொடர்ந்து தமிழ் திரைப்பாடல் எழுதுவதில் அவர்களின் தொடர்ச்சி என நிரூபித்து நிலைபெற்றார். அவர்தான் கவிஞர் வாலி !  கவிஞர்கள் கண்ணதாசன் , வாலி என் இரு கண்கள் என்றால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என் நெற்றிக்கண் என்பார் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்.

எம்.ஜி. ஆர் மற்றும் திராவிட முன்னேற்றக்கழகத்தினருடனான முரண்பாடுகளால் அவ்வப்போது விலகியும் , ஒதுங்கியும் இருந்த கண்ணதாசன் எம்.ஜி ஆர் சார்ந்த  தி.மு. க வினரின் அரசியல் கருத்துக்களை எழுதாமல் இருந்த நிலையில் நேரடியாக எம்.ஜி.ஆர் – தி.மு.க புகழ் பாடும்  பாடலாசிரியராக வாலி அமைந்தார்.

திரைப்பாடல் எழுத்துமுறையில் கண்ணதாசனின் பாணியைக் கைக்கொண்ட கவிஞர் வாலி தனக்கான ஓர் தனியிடத்தையும் பிடித்துக் கொண்டார்.ஒரு காலகட்டத்தில் யார் எந்தப்பாடலை எழுதினார் என்று சொல்ல முடியாத  வகையில் பல பாடல்கள் அமைந்தன. அரசியல் கருத்துக்கள் மற்றும் தத்துவப்பாடல்கள் என்ற வகையில் பட்டுக்கோட்டையின் பாணியைச் சாராமல் முற்றுமுழுதாகவே கண்ணதாசனின் எளிமையான முறைகளையும் கவிஞர் வாலி பின்பற்றினார்.

சில படங்களில் கண்ணதாசனும் , வாலியும் தனித்தனியே  முழுப்பாடல்களை எழுதி தமக்கான அடையாளமாக இது இன்னாரின் பாடல்கள் என்று அடையாளம் காணும் வகையில் பாடல்களை எழுதினர்.குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த பல படங்களில்  பாடல்கள் முழுவதும் கவிஞர் வாலியால் எழுதப்பெற்று புகழ் சேர்த்தன.

தி.மு.க அரசியலில் முரண்பாடுகள் இருந்தாலும் எம்.ஜி.ஆருடனான தனிப்பட்ட பிரியமும் , நட்பாலும் சில சமரசங்களுக்கு பின்னர் எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார். ஒரு படத்தில் கண்ணதாசனும் , வாலியும் எழுதிய போது எந்தப்பாடலை யார் எழுதினார்   என்று சொல்ல முடியாத மயக்கம் தரும் ஒற்றுமை இருந்தது.

இருவரும் எழுதிய பாடல்கள் மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் வந்ததால் அவர்களுக்கிடையேயான வேறுபாடுகளை யாராலும் குறிப்பாக இனம் காணமுடியாமல் போயிற்று. அதுமாத்திரம் அல்ல  சிறந்த இனிய பாடல்கள் எல்லாம் கண்ணதாசனுடையவை என்ற மயக்கம் எல்லோரிடமும் இருந்ததாலும் , வாலியும் அவர் பாணியைப் பின்பற்றி எழுதியதால் அந்த மயக்கம் தவிர்க்க முடியாததாயிற்று.

`வாலி பாட்டு எது, என் பாட்டு எது  என்று எனக்கே சில சமயங்களில் தெரிவதில்லை’- நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. என்று கவிஞர் கண்ணதாசன் கூறினார் என்பார் கவிஞர் நா.காமராசன்.

இன்றும் பலர் கவிஞர் வாலி எழுதிய பாடல்களை கண்ணதாசன் எழுதியதாக நினைப்பது சகஜமாக  உள்ளது. சில சமயங்களில் அந்தப்பாடல்களை இசையமைத்த மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட சில இசை நிகழ்ச்சிகளில் வாலி முன்னைனையிலேயே இது கண்ணதாசன் எழுதிய பாடல் என்று சொன்னதுண்டு. அதே மேடையில் அந்தப்பாடல்களை நான் தான் எழுதினேன் என்று வாலி திருத்தியதுமுண்டு. 

இவ்விதம் கண்ணதாசன் புகழ் எப்படிப்பட்டது என்பதை   கவிஞர் வாலியே ஒருமுறை ” தமிழ்நாட்டில் கம்பராமாயணம் , திருக்குறள் தவிர மற்ற எல்லா நூல்களையும் கண்ணதாசனே எழுதினார் என்று மக்கள் நம்புகிறார்கள் ” என்று நகைச்சுவையாய் கூறினார்.

அதுமட்டுமல்ல ,கண்ணதாசன் கவிதையின் ஆதிக்கம் ,செல்வாக்கு போன்றவை மக்கள் மத்தியில் மிகுந்த பாதிப்புகளை உண்டாக்கின . அவர் தனது பாடல்களில் பயன்படுத்திய   சொல்லோசைகள் , மொழிவழக்குகள் ,நடை என்பவை இயல்பானதாகவும்,கவர்ச்சிகரமானதாகவும் இருந்ததால்  அவர் எழுதும் பாடல்வரிகள்  புதிய படங்களின் தலைப்பாகவும் , கதை , கவிதை நூல்களின் தலைப்புகளாகவும் வெளிவர ஆரம்பித்தன.

நடிகர்களின் புகழ் பாடுவதை பாடலாசிரியர்கள்  ஆரம்பித்து வைத்தார்கள் என்பதும் அது  1960களில் உச்சம்பெறுவதையும் காண்கிறோம். கண்ணதாசன் கணிசமான அளவு ஆரம்பித்தார் என்றால் கவிஞர் வாலி அதை முழுமூச்சாக செய்தார். எம்.ஜி.ஆர் பற்றிய புகழாராத்தை வெளிப்படையாக எழுதினார். ” எம்.ஜி.ஆர் பற்றிய புகழை நான் பாடினேன் என்றால் அவர்  , தி.மு.க வில் இருந்த காலத்தில் தான் தி.மு.க வின் கருத்துக்களைத் தான் பாடினேன்.ஏனென்றால் எனது வளர்ச்சிக்கு உதவியது திராவிட முன்னேற்றக கழகமே “என்று கவிஞர் வாலி பகிரங்கமாவே கூறினார்.

பொதுவாக நடிகர்கள் அதிக புகழ் பெற்றதாலும்   அவர்களை புகழ்ந்து எழுதுவதை ஒரு போக்காகக் கொள்ள வேண்டிய நிலை கவிஞர்களுக்கு உண்டானது.

பாடல் எழுதுவது பற்றி வாலி  கீழ்வருமாறு வாக்குமூலம் தருகிறார் :

எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அவர் பற்றி சற்று மறைவாக கண்ணதாசன்  ” செந்தமிழா எழுந்து வாராயோ ” , “சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா ” , உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் ” என்று எழுதினார் என்றால் நான் எம்.ஜி.ஆரின் படங்களில் தனிப்பாடல்களில் அவரது சமூகக்கருத்துக்களுடன் “ஏழைகளின் தலைவன் ” , நான் அளவோடு ரசிப்பவன் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் ” , “என்னைப்பாட வைத்தவன் ஒருவன் ” எனப்   பச்சையாக வண்ணம் கொடுத்தேன்!  நடிகர்களின் குணவியல்பு  , அரசியல்  குணாதிசயங்களை வெளிப்படுத்தலாம்     

குறிப்பாக ” மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் /  அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் ” என்ற பாடல் அது எம்.ஜி.ஆரை  புகழ்கிறதா , தி.மு.க வை புகழ்கிறதா , தமிளைப் புகழ்கிறதா என்ற ஐயம் பலருக்கு இருந்ததது. அவரவர் மனநிலைக்கு ஏற்ப அதை எடுத்துக் கொண்டனர். ஆனாலும் பரந்துபட்ட மக்களின் செல்வாக்கு இருந்ததால் அது எம்.ஜி.ஆரை மட்டுமே குறிப்பிட்டது என்பதாகவே இருந்தது.

அண்ணனின் தம்பி உண்மையின்  தோழன்

ஏழைக்கு தலைவன் நீங்கள் அய்யா / …..

நம்நாடு படத்தில் ” வாங்கய்யா வாத்தியாரய்யா  “என்ற பாடலில் வரும் வாலியின் வரிகள் இவை!

தமிழ்ப்புலவர்கள் தங்களை ஆதரித்த மன்னர்களையும் ,புரவலர்களையும் அவர்களது  வீரதீர சாகசங்களையும் புகழ்ந்து தள்ளியதை தமிழ்கவிதை மரபில் காண்கிறோம். அரசர்களை  புகழ்ந்தவர்கள் பின்னர் கடவுள்களை  தந்தையாகவும், தாயாகவும் , தோழனாகவும் , நாயகன் ,நாயகியாகவும் பாவித்து எழுதிய மரபை நாம் மறந்துவிட முடியாது.

கம்பன் தெய்வச்சுவை சொட்டச் சொட்ட எழுதிய கம்பராமாயணமும் , கண்ணன்  மீது தீராத காதல் கொண்ட ஆண்டாள் தன்னை அவனது மணப்பெண்  என உருவகித்துப்  பாடியதையும், அதன் வழியே  பாரதியார் கண்ணனை வெவ்வேறு பாத்திரங்களாக்கி பாடியதையும் நாம் மறந்துவிட முடியாது.

இந்த லட்சணத்தில் சினிமாப்பாடல்களை எழுதும் கவிஞர்களை மட்டும் குறைகூறி என்ன பயன்!?

“ஓசையிலிருந்து தான் நான் எழுதுவேன் ” என்பார் கண்ணதாசன். கண்ணதாசனின் எழுத்துநடையையே தான் பின் பற்றியதாக கவிஞர் வாலி பிற்காலத்தில் கூறினார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன் போன்றோரின் பாடல்களால் கவரப்பட்டு தானும் பாடல்கள் எழுத வேண்டும் என்று வந்தவர் வாலி. ஏற்கனவே நாடகங்கள் மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் பெயர் பெற்றிருந்த அவர் சினிமாவில் பாடல் எழுதும் வாய்ப்புகள் தேடினார். 

நிலவும் தாரையும் நீயம்மா-இந்த

உலகம் ஒருநாள் உனதம்மா

முதன் முதலாக பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் – வாலி சந்திப்பின் போது வாலி எழுதிய மேல் சொன்ன வரிகளை படித்து ,ரசித்த  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  ” நாளைய  உலகம் உனதய்யா ” என்றாராம் ! அந்த வருடமே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மரணமடைந்தார் . 

அழகர்மலைக்கள்வன் [ 1959 ] படத்தில் அந்தப்பாடல் இசையமைப்பாளர் கோபால் இசையில் பி.சுசீலாவின் குரலில் வெளிவந்தது.

கவிஞர் வாலி , பின்னர் கண்ணதாசனின் சாயலில் பாடல்களை எழுதினாலும் தனது முத்திரைகளையும் அதில் பதிக்கத் தவறவில்லை.

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்

நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

நதியில் விளையாடி கொடியின் தலைசீவி

நடந்த இளந் தென்றலே …

என்று கடந்த கால கவிதைகளின் மரபுகளை  கண்ணதாசன் எளிய தமிழில் சொல்லோவியங்களாக்கினார் என்றால் , கவிஞர் வாலி , சாதாரண நடைமுறையில் புழங்கும் சொற்களை பயன்படுத்தி தன் கால இளைஞர்களுக்கு  தனக்கே உரிய குறும்புடன் எழுதியது போல

அன்புள்ள மான் விழியே

ஆசையில் ஓர் கடிதம்      என்றும்

குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்

குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை  என்ன தர வேண்டும் …

என குடியிருப்பு , வாடகை போன்ற சொற்களை கவர்ச்சியாக எழுதினார். கண்ணதாசனிடமிருந்த பழந்தமிழ் இலக்கிய அனுபவங்கள் போலல்லாமல் , அவை சற்று குறைவாக இருந்தாலும் கதைக்குத் தேவையான விதத்தில் பாடல்களை எழுதினார்.

வணிக வெற்றிகளை மட்டும் நம்பும் தமிழ் திரைத்துறைக்கு தேவையான கவர்ச்சிமிக்க எளிமையான ஓசைநயமிக்க சொல்லடுக்குகளை புனைந்தவர் கவிஞர் வாலி.எம்.ஜி.ஆருக்கு அவர் எழுதிய புகழ்ச்சிப் பாடல்கள் எம்.ஜி.ஆரின் கவர்ச்சிக்கு மினுக்கு உடை போல அவரது சொல்வீச்சுகளும் ஜாலம் காட்டின ! பாடல் எழுதுவதில் மட்டுமல்ல கண்ணதாசனைப் போலவே வசனம் எழுதுவதிலும் அதனது எழுத்தாற்றலைக் காண்பித்தவர் கவிஞர் வாலி!

நாடகத்தில் ஈடுபாடு கொண்டவராகவும் , இசையில் நல்ல ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கிய வாலி கர்னாடக இசை ராகங்கள் பற்றிய புரிதலும் கொண்டவராக இருந்ததுடன் தனது இளம்வயதிலேயே ” கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் ” என்ற பாடலை கர்னாடக இசைப்பாடகர் மதுரை சோமு வுக்கு எழுதிக் கொடுத்தார். அப்பாடல் பின்னாளில் அதிக புகழ்பெற்று எம்.எல் வசந்தகுமாரி போன்றோரால் மேடைகளில் பாடப்பட்டது.

அது மாத்திரமல்ல பக்திப்பாடல்கள் எழுதுவதிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். ” உள்ளம் உருகுதைய்யா ” , ” கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் ” என்ற புகழபெற்ற முருகன் பாடல்களை  திரைக்கு அறிமுகமாகும் முன்னரே எழுதியவர் வாலி என்பது பலர் அறியாத தகவல்

முதன் முதலாக எம்.ஜி.ஆறுக்காக நல்லவன் வாழ்வான் படத்தில்  “சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ” என்ற பாடலை டி.ஆர். பாப்பாவின் இசையில்  எழுதினார்.  பாடல் எழுத்து வாய்ப்பு  கே.வி.மகாதேவனிடம் கிடைத்த போதும் மகாதேவன் இவரது பாடல் எழுதும் முறையை “பாராட்டவுமில்லை , ஊக்குவிக்கவுமில்லை” என்று பின்னாளில் வாலி கூறினார்.

கவிஞர் வாலிக்கு நெருக்கமான பலர் சினிமா உலகில் இருந்து சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கண்ணதாசனுக்கு உதவியாளராக சேர்த்துவிடுவதாகக் கூறிய ஜி.கே.வெங்கடேஷிடம் நான் அப்படி இருந்துவிட்டால் எனக்கு யாரும் சந்தர்ப்பம் தரமாட்டார்கள் என்று மறுத்து விட்டார். அவரைப்போலவே தானும் பாடல்கள் எழுத வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவராகவே விளங்கினார்.

தனக்கு பிடித்த கவிஞரான கண்ணதாசனை நேரில் கண்டு உரையாடிய போது கண்ணதாசன் அவருக்கே உரிய பாங்கில் நட்பு பாராட்டியதையும் அவர் பற்றி தான் உயர்ந்த மதிப்பு வைத்திருந்ததையும் குறிப்பிட்ட வாலி , தான் கண்ணதாசன் பற்றி எழுதிய கவிதையும் அவரிடம் காண்பித்து மகிழ்ந்ததாக பதிவு செய்திருக்கின்றார்.

காட்டுக்குள் தேனீக்கள்

கூட்டுக்குள் வைத்ததை

பாட்டுக்குள் வைத்தவனே

காக்கைக்கு கூட்டுக்குள் குயிலாகக்

கூவித் திரியாமல்

காலம் கழித்தவனே

– வாலி –

திராவிட முன்னேற்றக்கழகத்தில் கண்ணதாசன் இருந்த காலம் பற்றியது அந்தக்கவிதை.

ஒரு சில படங்களில் பாடல் எழுதிய போதும் தொடர்ச்சியாக எழுதும் வாய்ப்புகள் அற்ற நிலையில் தொடர்ந்தும் , பாடல் எழுதும் வாய்ப்பு தேடி களைத்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பிவிடலாம் என்ற நிலையில் , அவரது நண்பர்களில் ஒருவரான பிபி.ஸ்ரீனிவாஸ் தாம் சிலநாட்களுக்கு முன் பாடி ஒளிப்பதிவான ” மயக்கமா கலக்கமா ” என்ற பாடலைப் பாடிக்  காண்பித்த போது , அந்தப்பாடலில் வரும் வரிகள் தன்னை மிகவும் பாதித்ததாகவும் , தனக்கு நம்பிக்கை தந்ததாகவும் , ஊர்க்குத் திரும்பிப்போவதைக் கைவிட்டு தொடர்ந்து முயற்சிக்கலாம் என்ற நம்பிகையையும் தந்தது என்று  வாலி பல இடங்களில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக்காலத்தில் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்த இசையமைப்பாளர்கள் என்றால் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையினர் என்ற ரீதியில் அவர்களின் கண்பட்டால் அல்லவா பெருமை கிட்டும் என்ற நிலை இருந்தது. அப்படிப்பட்ட ஜாம்பவான்களை வாலி சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது.

தொடர்ந்து வேலையற்ற வாழ்க்கைப்போராட்டமாகிய நிலையில் ” இதயத்தில் நீ ” என்ற படத்தில், வாலியின் திறமையை அறிந்த   தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன்  மூலம் நல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அந்தப் படத்தின் இசையமைப்பாளர்கள் மெல்லிசைமன்னர்களே !தயாரிப்பாளர் சொல்லுவதை யாரால் தட்ட முடியும்?

மெல்லிசைமன்னர்களின் இசையில் ” பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா / பொன்மகளே வாய் திறந்து பாமாலை பாடவா / என்ற பாடல் வரிகளை எழுதிய வரிகளை எழுதிய போது அதை  அருமையாக இசைத்த மெல்லிசைமன்னர் ” இவ்வளவு நாளும் எங்கே இருந்தீர்கள் ” என்று கேட்டு விட்டு மிகுதி பாடல்களையும் இவரே எழுதட்டும் என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்; பிறகென்ன சாப்பாட்டுக்கு வசதியில்லாமல்   நான் சாப்பிட நேரமில்லாமல் பாடல் எழுதினேன்; எல்லாப்பெருமையும் அண்ணன் விஸ்வநாதனையே சாரும்!  என்பார் வாலி.   

01 பூவரையும் பூங் கொடியே   – இதயத்தில் நீ [ 1963 ] – பாடியவர் : பி.பி.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

01 ஓடிவது போல இடையிருக்கும்    – இதயத்தில் நீ [ 1963 ] – பாடியவர் : பி.பி.எஸ் + சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

கற்பகம் படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் அவருக்கு பெரும் புகழைத் தந்தன. குடும்ப உறவுகளின் உணர்வுநிலைகளின்   அழகிய கூறுகளை மொழிச்  சிக்கல் இல்லாமல் மிக எளிய நடையில் அவர் எழுதிய விதமும்  மெல்லிசைமன்னர்களின் உணர்ச்சி ததும்பும் இசையில் வெளிவந்து இன்றுவரை சாகாவரம் பெற்றுத் திகழ்கின்றன. பாடல்கள் பெரு வெற்றி பெற்றதில் முக்கிய சிறப்பு என்னவென்றால் அந்தப்பாடல்கள் புகழபெற்ற நடிகர்களாலோ அல்லது ஆண் பாடகர்களாலோ பாடப்படாமல் தனியே பெண்குரலில் பாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கனவாகும்.

அறிமுக நாயகியாக கே.ஆர்.விஜயா நடித்த இந்தப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.எத்தனை விதமான உணர்ச்சி மிகுந்த பாடல்கள் !

மனக்கிளர்ச்சியும் , உணர்ச்சிமேலீடும்  தரும் வரிகளும் இசையும் இணைந்து கேட்பார்களை வார்த்தையால் வர்ணிக்க முடியாத உணர்வுகளுக்கு இட்டு செல்லும் பாடல்கள் என்று கூறலாம். ஒவ்வொருபாடலும் முத்து முத்தானவையாகும்.

01 அத்தைமடி மெத்தையடி  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 பக்கத்து வீட்டு பருவ மச்சான் – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ஆயிரம் உறவுகள் வருவதுண்டு  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04 மன்னவனே அழலாமா  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 அன்னைமடி மெத்தையடி  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

இந்த நான்கு பாடலும் நம்மைப் மகிழ்ச்சியில் துள்ளவைக்கவும்  , சோகத்தில் கரைக்கவும் செய்பவை.

01 அத்தைமடி மெத்தையடி  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நிலபுலன்களுக்குச் சொந்தக்கார, பணக்காரத்   தந்தையின் அருமை மகள் கற்பகத்தின் கதையைக் கூறுமிந்தத் திரைப்படம் மிக நுட்பமான உணர்வுகளை படம் பிடித்துக்காட்டுவதாய் அமைக்கப்பட்ட திரைப்படம் . தமிழ் திரையின் அதிசிறந்த நடிகர்களான எஸ்.ரங்காராவ் , எம்.ஆர்.ராதா, வி.நாகைய்யா , ஜெமினி கணேஷன் , வி. கே.ராமசாமி ,சாவித்திரி என சிறந்த குணசித்திர நடிகர்கள் நடித்த சோகச் சித்திரம் தான் கற்பகம் . நாட்டுப்புற மக்களின் இன்ப துன்ப நிகழ்வுகளையும்,அவர்களின் மனோவியலையும் மிக நுண்ணுணர்வுகளினூடாக வெளிப்படுத்திய படம்  

ஒரே காலத்தில் திருமணம் செய்த தனது அண்ணனின் மகளை, அதுவரை பிள்ளையில்லாத நாயகி  தாலாட்டி உறங்க வைக்கப் பாடும் பாடல்  ” அத்தைமடி மெத்தையடி ” என்ற பாடல் ! இந்தப்படத்தின் தீம் இசை போல இந்தப்பாடல் பயன்படுத்தப்பபட்டுள்ளது .  பாடலின் மையக்கருத்தை , அதை அற்புதமாக வெளிப்படுத்தும் இந்தப்பாடல் வெவ்வேறு இடங்களில் வேறு விதங்களில் மீண்டும்  மீண்டும் ஒலிக்கிறது. பாடலில் முன்னர் வரும் ஆராரி..ஆராரி..ஆராரி .ஆராரோ  ஹம்மிங்கில் நாயகியின் ஏக்கம் மிஞ்சிய சோகத்தின் குரலாக இசையமைக்கப்பட்ட விதம் நம்மைத் தாக்குகிறது. பாடல்ன்னவோ சந்தோசமானதாக ஒலித்தாலும் வார்த்தையில் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம் பின்னிபிணைக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடல் மீண்டும் ” அன்னைமடி மெத்தையடி ” என்று ஒரு சிறிய பாடலாகவும் படத்தில் இடம் பெற்றுள்ளது

மெல்லிசைமன்னர்களின் இசையும் , வாலியின் எளிமையான வரிகளும் ,உணர்ச்சி பெருக்குகளையும்  பொதிந்து வைத்திருக்கின்றது.

02 பக்கத்து வீட்டு பருவ மச்சான் – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பக்கத்து வீட்டு பருவ மச்சான்

பார்வையிலே படம் பிடிச்சான்

மென்மையாக ஹம்மிங்குடன் ஆரம்பிக்கும் இந்தப்பாடல் ஆர்ப்பாட்டமும் , எழுச்சியும்தருகின்ற  இனிமையான பாடல்! ஹம்மிங் ,விசில் , ஜலதரங்கம் , சித்தார் , குழல் , பொங்கஸ் என அதனை பரிவாரங்களையும் வைத்துக் கொண்டு மனதில் பதிய வைக்கிற இசையால் நம்மை கட்டிப்  போடுகிறார்கள்  மெல்லிசைமன்னர்கள்.

இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்திக்கு மெல்லிசைமன்னர்கள் என்ற பட்டத்தை சிவாஜி தலைமையில் வழங்கி கௌரவித்த கண்ணதாசன் , அந்த விழாவின் இசை  நிகழ்ச்சியில்  விஸ்வநாதன் அப்போது வெளிவராத கற்பகம் என்ற படத்தில் புதிய கவிஞர் வாலி எழுதிய  இந்தப் பாடலை சுசீலாவை பாடவைத்தார். மேடையில் பாடப்பட்ட  கவிஞர் வாலி எழுதிய இந்தப்பாடல்  குறித்து கவிஞர் கண்ணதாசன் பேசிய போது இந்தப்பாடலை நான் நன்றாக ரசித்தேன். புதிய  கவிஞரின் கவியாற்றல்  “மனசுக்குள்ளே தேரோட்ட மைவிழியில் வடம் புடிச்சான் ”  என்ற வரிகளில் மிக அற்புதமாக வெளிப்பட்டுள்ளது என்றும் எனது வாரிசாக இவர் தான் வருவார் என்றும் பாராட்டிப் பேசினார்.  

03 ஆயிரம் இரவுகள் வருவதுண்டு  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

முதலிரவு பாடல் வேளையில் நாயகியின் தோழி பாடுவதாக அமைந்த பாடல் இது. இப்பாடலில் ஒரு புதுமை; பாடல் வரிகள் முற்றுப்பெறாமல் கேள்வி கேட்பது போலவும் அதற்கு இசையில் பதில் சொல்வது போலவும் புதுமையைக் கையாண்டபாடல்!

வயதில் வருவது ஏக்கம் – அது

வந்தால் வராது  –  – – –  –

வந்ததம்மா மலர் கட்டில் இனி

வீட்டினில் ஆடிடும் –  –  – –

என்று பாடலும்   இசையும் குழைந்து வரும் இனிய பாடல்;

04 மன்னவனே அழலாமா  – கற்பகம் 1963 – பாடியவர்: பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

நாட்டுப்புறபகுதிகளில் செய்வினை ,சூனியம் , சகுனங்கள் , ஆவி போன்ற நம்பிக்கைகள்  இன்றும் வழக்கத்தில் உள்ளன. தனது மனைவி இறந்த சோகத்தில் நாயகன் , மன உழைச்சலின் உச்சத்தில்  மறுமணம் ஒன்றை நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் , இறந்து போன அவனது மனைவியே ஆவியாக அவன் கண்முன் தோன்றி பாடுவதாக அமைந்த பாடல் இது !

இந்தப்பாடலின் வாத்திய அமைப்பை கவனித்தால் பெரும்பாலும் கிளப் டான்ஸ் போன்ற காட்சிக்கு பயன்படும்  ட்ரம்பெட் , வயலின் போன்ற இசைக்கருவிகளை அமானுஷ்ய உணர்வை தரும் வகையில் புதுவகையில் பயன்படுத்தி , வழமையான இசை இலக்கணங்களை புது விளக்கம் செய்தது போல ஒரு பாடலை மெல்லிசைமன்னர்கள் தந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல இசை உத்திகளில் ஹோரஸ் இசையையும் புதுவிதமாக செய்து தமிழ் சினிமாவிற்கு தலை சிறந்த பாடலை தந்ததை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தப்பாடலுக்குப் பயன்படுத்தப்பட்ட ராகமும் மிக முக்கியமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டியதாகும். பழந்தமிழ் ராகமான  கீரவாணி யின்  தன்மையறிந்து   பயன்படுத்தப்பட்ட விதம் அருமையிலும் அருமை ! 

பாடலின் சூழ்நிலையை விளக்கும் அருமையான வரிகள் , அதற்கேற்ற அதியற்புத  இசையமைப்பு இவற்றையெல்லாம் தந்து இனிய குரலால் மேலே உயர்த்தி செல்லும் சுசீலாவின் தேனினும் இனிய குரல்! இதைவிட இசைரசிகர்களுக்கு வேறென்ன வேண்டும் !?

சினிமாப்பாடல் எழுதும் முறை பற்றி  கவிஞர் வாலி பின்பவருமாறு கூறுகிறார்

// …“ திரைப்படப்பாடல் என்பது காட்சிக்காக எழுதப்படும் நாடகப்பாடல்கள். அதில் கவித்துவம் இருக்கலாம். இலக்கணத்தை மண்டையில் ஏற்றிக் கொண்டு சினிமாப்பாடல் எழுதினால் இசையமைப்பாளர்களோ அல்லது பட இயக்குநர்களோ விரும்பமாட்டார்கள். இலக்கணப்படி இப்படி வரக்கூடாது என்று நாம் சொன்னால் ” இவன் என்ன பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிப் பேசுகிறான் ” என்பார்கள். கவிஞர் சுரதா ரொம்ப தமிழ் படித்தவர் என்பதனாலேயே அவருக்கு பயந்து ,திருத்தங்கள் கருத்துக்கள் சொல்ல முடியாது என்று பயந்தார்கள்.

Lyrics என்பது இசைக்கு இசைந்து போகக்கூடியது. உணர்ச்சிகளை ஒட்டி அந்தப்பாட்டுக்கள் நாயக , நாயகி உணர்வுகளை வாலாயப்படுத்த வேண்டும். இலக்கண [ Gramatic ] வழியில் போனால் அது நடக்காது.அப்படிப்போனால் நல்லதுதான். உணர்ச்சி தான் முக்கியம்!

 Gramatic இல்லாவிட்டால் பரவாயில்லை. ஷேக்ஸ்பியர் காலத்திலும் அவர் பாடல்களிலும் அது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.ஆனாலும் அந்த இலக்கணம் இல்லாததால் அவை வெறுக்கப்படவில்லை. மக்கள் அவரது பாடல்களை கொண்டாடினார்கள்! //  “  – வாலி

மெல்லிசைமன்னர்கள் தங்கள் படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்த காலத்தில் கவிஞர் வாலியுடன் இணைந்தது தந்த தொடர் வெற்றிப்பாடல்கள் படத்திற்குப் படம் இடம்பெறாத தொடங்கியது. இசையை பாடல்வரிகள் மிஞ்சியதா இல்லை பாடல்வரிகளை இசை மிஞ்சியதா என்று பிரித்துப் பார்க்க முடியாத பிரமிக்க வைக்கும் இனிய பாடல்கள் காற்றாலையில் மிதந்தன.

1960 களில் தொடங்கிய மெல்லிசைமன்னர்கள் – வாலி இணை தொடர்ந்து 1980 கள் வரையிலும் பல இனிய நெஞ்சுமறக்காத பாடல்களைத் தந்து தமிழ் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தை பிடித்தன. பலவிதமான பிரிவுகளில் தொகுத்து கூறத்தக்க வகையில் ஏராளமான பாடல்களை இந்த இணை தந்துள்ளது. எப்படிப்பட்ட பாடல்கள் என்று இன்றும் நாம் வியப்புடன் நோக்கும் பாடல்களை நாம் கேட்கக் கிடைத்தது தமிழ் சினிமாவால் விளைந்த ஒரே ஒரு நன்மை என்று கூறலாம்.

என்னதான் வரிகளை யார் எழுதினாலும் இசையில் தங்கள் படைப்பாற்றலால் உச்சங்களைத் தோட்ட மெல்லிசைமன்னர்களின் இசையின்றி இவை சாத்தியமாகி இருக்க மாட்டாது என்பதே உண்மை! அது தான் இசையின் பேராற்றல் ! 

கவிஞர் வாலி – மெல்லிசைமன்னர்கள் இணையில் வெளிவந்த ஏராளமான பாடல்களை படங்கள் , பாடக, பாடகிகளின் தனிப்பாடல்கள், ஜோடிப்பாடல்கள் , சந்தோசப்பாடல்கள், சோகப்பாடல்கள்  என பலவிதமாக வரிசைப்படுத்திக் கூறலாம். இருவரின் இலையில் வெளிவந்த ஒரு சில  பாடல்களை இங்கே வரிசைப்படுத்தி கூறலாம் 

படகோட்டி [1964]

01 என்னை எடுத்து தன்னை கொடுத்து – படகோட்டி   [1964 ] – பாடியவர் : பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  தொட்டால் பூ மலரும்  – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கொடுத்ததெல்லாம் கொடுத்தான் – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ்   – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  தரைமேல் பிறக்கவைத்தான்  – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  பாட்டுக்கு பாட்டெடுத்து   – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  கல்யாணப்பொண்ணு    – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

எங்க வீட்டு பிள்ளை [1965]

01  குமரிப்பெண்ணின் உள்ளத்திலே   – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பெண் போனால்    – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  நான் மாந்தோப்பில்   – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  நான் ஆணையிட்டால்  – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ்   – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பஞ்சவர்ணக்கிளி  [1965 ]

01 அழகன் முருகனிடம்  – பஞ்சவர்ணக்கிளி  [1965 ] – பாடியவர் : பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  அவளுக்கும் தமிழ் என்று – பஞ்சவர்ணக்கிளி  [1965 ] -பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கண்ணன்  வருவான் – பஞ்சவர்ணக்கிளி  [1965 ] – – பாடியவர் : பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  பூ மணக்கும் கன்னியாக [bit] – பஞ்சவர்ணக்கிளி  [1965 ] – – பாடியவர் : பி.சுசீலா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

தெய்வத்தாய் [ 1964 ] 

01  இந்தப் புன்னகை என்ன விலை    – தெய்வத்தாய்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  வண்ணக்கிளி சொன்ன மொழி     – தெய்வத்தாய்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 மூன்றெழுத்தில் என்  – தெய்வத்தாய் [1964 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

ஆயிரத்தில் ஒருவன் [1965 ]

01  உன்னை நான் சந்தித்தேன் – ஆயிரத்தில் ஒருவன் [1965 ] – பாடியவர் : சுசீலா    – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பருவம் எனது பாடல்    – ஆயிரத்தில் ஒருவன்   [1965 ] – பாடியவர் : சுசீலா    – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 ஏன் என்ற கேள்வி  – ஆயிரத்தில் ஒருவன் [1965 ] – பாடியவர் : டி.எம்.எஸ்    – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

டி .எம்.எஸ் + பி.சுசீலா ஜோடிப்பாடல்கள்:

01  இந்தப் புன்னகை என்ன விலை    – தெய்வத்தாய்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  வண்ணக்கிளி சொன்ன மொழி     – தெய்வத்தாய்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

 03  தொட்டால் பூ மலரும்  – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  பாட்டுக்கு பாட்டெடுத்து   – படகோட்டி   [1964 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  குமரிப்பெண்ணின் உள்ளத்திலே   – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  பெண் போனால்    – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  நான் மாந்தோப்பில்   – எங்க வீட்டு பிள்ளை   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  மாணிக்க தொட்டில்   – பணம் படைத்தவன்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி+ சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  அந்த மாப்பிள்ளை காதலிச்சான்  – பணம் படைத்தவன்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி. சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  பவளக்கொடியில்  – பணம் படைத்தவன்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + ஈஸ்வரி   – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  அன்றொரு நாள் இதே நிலவில்   – நாடோடி   [1966 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + சுசீலா    – இசை: விஸ்வநாதன்

12  விழியே விழியே   – புதிய பூமி   [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ் + பி. சுசீலா  – இசை: விஸ்வநாதன்

டி .எம்.எஸ் பாடல்கள்:

01  ஒரு பெண்ணை பார்த்து   – தெய்வத்தாய்    [1965 ] – பாடியவர் : டி .எம்.எஸ்   – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

02 மூன்றெழுத்தில் என்  – தெய்வத்தாய் [1964 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

03  நான் ஆணையிட்டால் – எங்கவீட்டுப் பிள்ளை [1965 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  தரைமேல் பிறக்க – படகோட்டி  [1964 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 கொடுத்ததெல்லாம் –  படகோட்டி  [1964 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி     

06  கண் போன போக்கிலே  –  பணம் படைத்தவன்  [1964 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி     

07  காற்று வாங்க போனேன்  – கலங்கரை விளக்கம்  [1965 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன்

08 கை விரலில் பிறந்தது நாதம் – கல்லும் கனியாகும்  [1968 ] – பாடியவர் : டி .எம் எஸ்   – இசை: விஸ்வநாதன்

09  வரதப்பா வரதப்பா  – பாபு  [1970 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன்

10  நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி  – நம்நாடு  [1967] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன்

11  அந்த நாள் ஞாபகம்  –  உயர்ந்தமனிதன்  [1968 ] – பாடியவர் : டி.எம்.எஸ் – இசை: விஸ்வநாதன்

பி.சுசீலா பாடல்கள்:

01  நான் நன்றி சொல்வேன்  –  குழந்தையும் தெய்வமும்  [1965 ] – பாடியவர் : பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன்

02  நாளை இந்த வேளை    –  உயர்ந்தமனிதன்  [1968 ] – பாடியவர் : சுசீலா  – இசை: விஸ்வநாதன்    

03  உன்னை நான் சந்தித்தேன் – ஆயிரத்தில் ஒருவன் [1965 ] – பாடியவர் : சுசீலா    – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  பருவம் எனது பாடல்    – ஆயிரத்தில் ஒருவன்   [1965 ] – பாடியவர் : சுசீலா    – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  சித்திர பூவிழி   – இதயத்தில் நீ    [1965 ] – பாடியவர் : ஈஸ்வரி  + பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி  

06  ஆடை முழுதும் நனைய    – நம்நாடு   [1968 ] – பாடியவர் : சுசீலா    – இசை: விஸ்வநாதன்

07  ஆண்டவனே உந்தன்     –  ஒளிவிளக்கு   [1967 ] – பாடியவர் : சுசீலா  – இசை: விஸ்வநாதன்

மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் – கவிஞர் வாலி இணையில் வெளிவந்த பாடல்களை தொகுத்தால் அதுவே  நீண்டு ஒரு நூலாக விரியக்கூடியது என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்   

பொதுவாக சினிமாப்பாடல்களை ஒரு இலக்கியமாக அங்கீகரிக்காததை தமிழ் சூழலில்  காண்கிறோம்.தமிழ் இலக்கிய மற்றும் மொழியியல் ரீதியில் சினிமாப்பாடல்கள் பற்றிய ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.பொதுவாக இலக்கியம் என்றால் அது சமூகத்தைப் பிரதிபலிப்பது , அதனூடே சமூக மாற்றத்திற்கு உதவுவது. சமூகத்தில் இருக்கும் தனிமனிதர்களிடமே பெரும்பாலும் மாற்றங்கள் முதன் முதலில் தோன்றுகின்றன. அந்தவகையில் சாதாரண மக்கள்      தங்களைப்பாதித்த  சினிமாப்பாடல்கள் பற்றி பேசுவதை பரவலாக்க இருக்கின்றோம்.அப்படிப்பட்டகருத்துக்களை பல்துறைகளைச் சார்ந்த நபர்களும் கூறியிருக்கின்றனர். அதில் தமது பிற்கால வாழ்வில் சினிமாவிலேயே புகழபெற்ற பல கலைஞர்களும் அடங்குவர்.

” வேப்பமர உச்சியில் நின்று பேய் ஒன்னு ஆடுதுன்னு

   விளையாட்டுப் போகும் நேரம் சொல்லி வைப்பாங்க – உன்

   வீரத்தையே கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க ” 

என்ற வரிகள் தன்னை சிந்திக்க வைத்ததாக கவிஞர் வைரமுத்துவும்

” இளமை எல்லாம்  வெறும் கனவு மாயம்

  இதில் மறைந்தது சில காலம்

  நினைவும் அறியாமல் முடிவும் தெரியாமல்

  மயங்குது எதிர்காலம் “

என்ற கண்ணதாசனின் வரிகள் தனது எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியதாகவும் ,சிந்திக்க வைத்ததாகவும் இசையமைப்பாளர் இளையராஜாவும்

தனது சமகாலக் கவிஞராக விளங்கிய கண்ணதாசன் எழுதிய

உன் கண்ணில் நீர் வழிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என்று தொடங்கும் பாடலின் பின்வரும் வரிகள் தன்னை உலுக்கியதாகவும் தனது மனைவி இறந்த போது கண்ணதாசனின் அந்தப்பாடல் தனக்கு தஞ்சமளித்ததாகவும் , கவிஞர் வாலியும்  கூறியிருந்தனர்.

பாடலாசிரியர் தெரிய வேண்டியது என்ன ?  – வாலி சொல்கிறார்..

//..சினிமாவுக்கு பாடல் எழுதத் தெரிந்திருக்க வேண்டிய விஷயம் என்னான்னா … வெறுமனே தமிழ் தெரிஞ்சா ,இசை  தெரிஞ்சா மட்டும் போதாது  ..அந்த இசையினுடைய சுரத்தானங்களுக்குத் தகுந்த மாதிரி போட்டாத்தான் நல்லாயிருக்கும்.அதற்குரிய இடங்களிலில் இடம் இருக்கும் .

நான் . கண்ணனாதாசன் எழுதியகாலம் தி.மு.க முன்னணிக்கு வந்த காலம் , தமிழ்மேல் எல்லோருக்கும் காதல் பிறந்த காலம். எதுகை ,மோனை ,சந்தங்கள் ரசிக்கப்பட்ட காலம் . எம்.ஜி.ஆர் , சிவாஜி போன்றவர்கள் சங்கரதாஸ் நாடகக்கம்பனிகளில் பயின்றவர்கள் அவர்கள் பாடல்களை எதுகை ,மோனையுடன் கேட்டுப் பழகியவர்கள்; இலக்கிய நயத்துடன் , சந்த இயைபுத்தொடையுடன் அளவுகளுடன் இருந்தால் தான் பாட்டாக ஏற்பார்கள் என்ற காலமிருந்தது…//  – வாலி.

அந்தக்காலத்து பட இயக்குனர்கள் , பாடலாசிரியர்கள் , இசையமைப்பாளர்கள் எனப்பலரும் நாடகத்துறையில் பயிற்சி பெற்று வந்ததால் நல்ல இசை , பாடல் வரிகள் , பாடும் முறை  போன்றவற்றை அறிந்திருந்தாலும் அதில் ஓரளவேனும் பயிற்சி , மற்றும்  நல்ல ரசனை இருந்ததாலும்  நல்ல , நல்ல பாடல்கள் வெளிவரக்கூடியதை இருந்தது.

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி

முல்லை மல்லிகை மெத்தையிட்டு

தேன் குயில் கூட்டம் பண்பாடும்

மான்குட்டி கேட்டு கண் மூடும்  …… [ அத்தைமடி மெத்தையடி ]

உணர்வுநிலைகளைத் தாக்கும் உணர்ச்சிமிகும் இனிய இசையும் எளிமைமிக்க தாலாட்டு மரபின் ஓசைநயமும்  , அழகும் கேட்கும்போதெல்லாம் மனதில் இனம்புரியாத உணர்வுகள் கிளர்ந்தெழுவதும் , மெய்சிலிர்ப்பும் , மெல்லிசைமன்னர்களின் இசை மாயவித்தைகள் பற்றிய பிரமிப்பும் அரை நூற்றாண்டாக நிலைபெற்று நிற்கின்ற ஆச்சர்யத்தையும் உணர்த்தும் பாடல்!

பிற்காலத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் பலவிதமான விமர்சனங்களுக்குட்ப்பட்டாலும் , அன்று அவர் எழுதிய பல இனிய பாடல்கள் நம்மை மகிழ்வித்தது மட்டுமல்ல , நம் வாழ்விலும் , நம் நினைவுகளிலும் ஒன்றிக்கலந்த பாடல்கள் என்பதை யார்தான் மறுதலிக்க முடியும். அதற்கு முக்கிய காரணம் அவை மெல்லிசைமன்னர்களின் இனிய மெட்டுக்களில் வெளிவந்தது என்பதும் முக்கியமான  காரணமல்லவா!!

தமிழ் திரை இசையை பொறுத்தவரையில் மெல்லிசைமன்னர்களுக்கு முன்னோடிகளாக இருந்த மூத்த இசையமைப்பாளர்கள் இசையென்றால் பெரும்பாலும் பாடல்களிலேயே கவனம் செலுத்திய நிலையிலிருந்து விலகி , படத்தின் பின்னணி இசையிலும் தமது படைப்பாற்றலால் அன்று பெரும் புகழ்பெற்ற ஹிந்தித் திரைப்படங்களுக்கு நிகராக ஓரளவேனும் தரத்தை உயர்த்த முயன்ற  பெருமை மெல்லிசைமன்னர்களையே சாரும்!   

[ தொடரும்  ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *