மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 23 – T .சௌந்தர்

இயலும் இசையும் அல்லது இசையும் இயலும்:

கண்ணதாசன் காலம்  .

கருத்தாழமும் தத்துவார்த்த அறிவுக்கூர்மையுமிக்க பாடல்களை எழுதி புகழடைந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்றால் சொல்லும் முறையில் ஆழமான கருத்துக்களையெல்லாம் எளிமையாக எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

கவிஞர் கண்ணதாசன் திரைப்பட நுழைவும் திராவிடக்கழக ஆதரவும் சமகாலத்தில் நிகழ்ந்தவை.அறிஞர் அண்ணா, எம்.ஆர்.ராதா ,கலைஞர் கருணாநிதி ,என்.எஸ்.கிருஷ்ணன் , எம்.ஜி.ஆர் என மிகப்பெரிய கலைஞர்கள் கூட்டமே தமிழ் திரையில் முகம் காட்டிய காலம்.

திராவிட இயக்கத்தின் செல்வாக்கு பின்னர் திராவிட முன்னேற்றக்கழகமாகி திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய காலம். இக்காலத்தில் அந்த இயக்கத்தின் முன்னணித் தலைவர்களுடன் நடப்பிலிருந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவரது வெற்றிக்கு அக்கட்சியின் செல்வாக்கும் முக்கிய காரணமாகியது. ஒருவரை ஒருவர் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது பிற்காலத்தில் வெளிப்பட்டது.

பெரியாரை கடுமையாக விமர்சித்து கடவுள் மறுப்பைத்  துறந்து ” ஒன்றே குலம் ஒருவனே தேவன் ” என்று   சமரசம்  பேசிய அண்ணாவின் தலைமையிலான திராவிட முன்னற்றக் கழகத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவனார் கண்ணதாசன். பிராமணிய எதிர்ப்பு , ஹிந்தி எதிர்ப்பு , நாத்திகம் ,புராண எதிர்ப்பு ,தனித்தமிழ் நாடு என்று கோசம் போட்டு வந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் கருத்துக்களை  அவரது ஆரம்பகாலப் பாடல்கள் நன்கு வெளிப்படுத்தின. தனது சினிமாப்பாடல்களிலும் இவற்றை அவர் பிரதிபலித்தார்.

தி.மு.க இயக்கத்திலிருந்த காலத்திலேயே  அவர் தனக்குத் தேவையான புகழையும் சம்பாதித்துக்கொண்டார். அந்த இயக்கத்தின் செல்வாக்கு காரணமாக அவர்களே தங்களுக்கு தாங்களே   அறிஞர், கலைஞர் , கவிஞர் , புரட்சிநடிகர், இலட்சியநடிகர், கலைவாணர் எனப் பட்டப்பெயர்களையும்  சூட்டிக்கொண்டனர்.

இந்த கவிஞர் என்ற பட்டம் என்பது அவரது வாழ்நாள் வரையிலும் , ஏன் இன்றும் கூட அவருக்கு நிலைத்த பட்டமாயிற்று. இன்றும் கவிஞர் என்றால் அது கண்ணதாசனையே குறிக்கும் என்று எல்லோரும் நம்பும் அளவுக்கு அது நிலைத்து நிற்கிறது. அன்றைய சினிமாவட்டாரங்களில் கவிஞர் என்றால் கண்ணதாசனை மட்டும் கருதியதும் , மற்றவர்களை அவர்களின் பெயர்களுடன் [  உ+ம்: “கவிஞர் ” வாலி ] அழைக்கப்பட்டதையும் நாமறிவோம்.

குறிப்பாக தி.மு.க பிராச்சாரம் செய்துவந்த திராவிட நாடு , தமிழரின் வீரம் , தமிழரின் காதல் , கொடை ,வள்ளல்தன்மை போன்றவற்றை அவர் அதிகமாமகப் பாடினார். பத்து வருடங்களாகும் மேல்  அந்த இயக்கத்தின் முக்கிய பங்காளியாக இருந்த அவர் ,தி.மு.க தலைவர்களின் நடவெடிக்கைகளால் அதிர்ப்தியுற்றும் நாத்திகத்தின் மேல் வெறுப்பு  கொண்டும் ஆத்திகராக மாறினார்.

பிராமணர் அல்லாத உயர் சாதியினரின் பணக்காரவர்க்கத்தை தி.மு.கவினர்  பிரதிநித்துவப்படுத்தியதால் பெரும் பணக்காரத் திரைப்பட நிறுவனங்கள் தி.மு.க கலைஞர்களை ஆதரித்த நிலையில் , அதனூடே தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதில் மிகவும் முனைப்பாக இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி தி.மு. கழகத்தினர் வெற்றிகண்டார்கள்.

வர்க்க அரசியல் பேசிய கம்யூனிச இயக்கத்தவர்கள் அற்புதமான கலைஞர்களைக் கொண்டிருந்த நிலையிலும் பெருநிதி மூலதன உதவியின்மையால் திரைத்துறையில் வெற்றிபெற முடியவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன் இருவரும் புகழ்பெற்ற இக்காலத்தில் இரு முக்கிய இயக்கங்களின் செயல்பாட்டாளர்களாகவும் விளங்கினர்.

சமூகப் பிரச்சனைகளுக்கு ஆழமான கருத்துக்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தத்துவார்த்த ரீதியில்  எளிமையாகக் கூறினார் என்றால் கண்ணதாசன் சமூக பிரச்சனைகளுக்கு மேலோட்டமான , சாதாரண மக்களை உடனடியாக ஆசுவாசப்படுத்தக்கூடியதுமான கருத்துக்களை எழுதினார். அதற்கு சிறந்த உகாரணம்

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

என்ற வரிகள் சான்றாகும் . இந்தவரிகளைக் கேட்கும் ஒருவன் தன்னைவிட கஷ்டநிலையில் பலர் இருக்கிறார்கள் என்ற சமாதானத்திற்கு வரக்கூடும் என்பதை நாம் அறிவோம். அது ஒரு ஆறுதல் மட்டுமே! இது போன்ற பொய்யான ஆறுதல்களை கண்ணதாசன் பலபாடல்களில் வழங்கினார் என்று முனைவர். கோ.கேசவன் ஒரு கட்டுரையில் கூறியது என ஞாபகத்திரு வருகிறது.

கண்ணதாசனின் கவிதைகள் பற்றிய பல்வேறு அரசியல்,சமூகம் சார்ந்த பலவிதமான கருத்துக்கள் வெளிவந்துள்ளன.அவை பெரும்பாலும் திரைப்பாடல்களுக்கு அப்பாலும் அவர் எழுதிய கவிதைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் அரசியல்சார்ந்து  தத்துவார்த்தரீதியில் எழுதினார் என்றால் , அவருக்குப்பின் திரைப்படங்களில் ஆன்மிகம் சார்ந்த தத்துவச் செறிவுள்ள கருத்துக்களை  எழுதியவர் கண்ணதாசன்.

வாழ்க்கையின் இன்பமும், துன்பமுமான பலவித சுவைகளை தனது எளிமைமிக்க , அழகுமிக்க , இனிய சொல்லோசைகளால் இசைப் பாடல்களை  நிறைத்தவர் கண்ணதாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது.ஒரு வரம்பு கொண்ட சினிமாப்பாடல் அமைப்புக்குள், அதற்கு ஒத்திசைவான வரிகளை எழுதி தன்னைவிட யார் சிறந்தவன் இருக்க முடியும் என்று எண்ணத்தக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்!

இனிய ஒலிகளையுடைய இசை எப்படி மக்களைக் கவர்கிறதோ அவ்வாறே கவிதையின் சொல்லோசை இனிமையும் மக்களை கவர்கிறது.கவிதையை படிக்கும் வாசகனின் உள்ளத்தில் ஏற்படுத்தும் உணர்ச்சியை விட , அவற்றை இசையுடன் கேட்கும் போது அவர்களை அறியாமலேயே அதனுடன் ஒன்றவைத்து விடுகிற ஆற்றல் இசைக்கு இருக்கிறது.

உருவமில்லாத இசை எவ்வளவு இனிமைமிக்கதாயினும் அதற்கான உருவத்தை பாடல்வரிகள் வழங்குகின்றன. அந்த ரீதியில் அந்த இனிய மெலோடியை எத்தனை நாளைக்கு ஒருவர் பாடிக்கொண்டு திரிய முடியும்? ஆனால் அந்த இசையுடன் பாடல்வரிகளை இணையும் போது கேட்ட நொடிகளிலேயே நம்மை ஆட்கொண்டு விடுகின்றன. உண்மையில் இசைதான் மக்களை உடனேயே கவர்கிறது என்றாலும் அதற்கிசைவான வரிகள் கிடைக்கும் போது அந்த இசையும் முழுமையடைகிறது.

நாம் என்னதான் பாடலற்ற மெட்டுக்களில் அல்லது வாத்திய இசையில் மயங்கினாலும் நமக்குப் புரியும் மொழியில் பாடலைக் கேட்கும்  போதே தான் இசை  முழுமையான திருப்தி கொடுக்கிறது. அதனால் தான் நாம் பெரும்பாலான பாடல்களை வானொலியில் மட்டுமே கேட்டு நம்மையறியாமல் பாடல்களை மனப்  பாடமும்  செய்கின்றோம்.

பட இயக்குனர்கள் விவரிக்கும் கதைசூழல் , நாயக , நாயகி உணர்வுநிலைகள் என்பவற்றை சரியாகப் புரிந்து கொண்டு இசையமைப்பாளர் தரும்  இசைக்கு பொருத்தமான வரிகளை எழுதுவதில் கண்ணதாசன் மிகச் சிறந்த இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதில் அவர் காட்டிய ஈடுபாடும் ,எழுதும் வேகமும்,நேர்த்தியும், வீச்சும் எல்லோரையும் வியக்க வைத்ததன். தனது திறமையும் அதில் தான் உண்டு என்பதையும் அவரே நம்பினார். 

இதை ” இசைப்பாடலிலே என் உயிர்த்துடிப்பு ”  என்று  அவரே சொல்வார்.

தனது நண்பர் கலைஞர் கருணாநிதி போல படத்தில் வசனம் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிய கண்ணதாசன் , அந்த வாய்ப்பு கிடைக்காததால் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். 1947 ஆம் வருடம்  வெளிவந்த  கன்னியின் காதலி படத்தில்

கலங்காதிரு மனமே நீ

கலங்காதிரு மனமே – உன்

கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே

கடினப்படாமல் ஏதும் கைக்கு வராதது

கஷ்டப்படுவார் தம்மை காய் நழுவாது

அடுத்தடுத்து முயன்றால்

ஆகாதது ஏது உனக்கு ஆகாதது ஏது

என்ற பாடல் வரிகளின் மூலம் தனது நிலையை  வெளிப்படுத்துவது போல ஒரு பாடலை முதன் முதலாக எழுதினார்.அதுவே அவரது முதல் பாடலாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து 1950 களின் நடுப்பகுதியில் குறிப்பிடத்தக்க நல்ல பல பாடல்களை எழுதினார் என்று முதல் அத்தியாயத்தில் சில பாடல்களைக் குறிப்பிட்டேன். ஆனாலும் கண்ணதாசனுக்கு நிலையான இடம், புகழ் அவர் மெல்லிசைமன்னர்களுடன் இணைந்த காலத்திலேயே கிடைத்தது என்பதை யாவரும் அறிவர்.

மெல்லிசைமன்னர்களின் எளிய , இனிய மெட்டுக்களுக்கு குறிப்பிடத்தக்க இனிய சொற்களுடன் கூடிய சந்தங்களை கண்ணதாசன் எழுதி பாடல் எழுதும் முறையில் புதுசாதனை உண்டாக்கினார். எத்தனையோ இனிமையான சந்த ஒழுங்குகளையெல்லாம் எழுதி தனக்கென புதிய நடையை உருவாக்கினார். அவர் எழுதிய பாடல்களில் மிக எளிமையான பல்லவிகளில் ஒலிகளின் தனிச்சிறப்பும் ,அதன் பின்னணியில் நுண்மையான குறியீட்டு தன்மையும் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த பாடல்களைக் கேட்கும் இசைரசிகர்கள் நாவில் அவை மிக இலகுவாக ஒட்டிக் கொள்ளும் தன்மையையும் நாம் காண முடியும்.

நினைவு தெரிந்த  நாளிலிருந்து நம்மை அறியாமல் நமது செவிகளில் புகுந்து நினைவுகளில் நீக்கமற நிறைந்துவிட்ட ஏராளமான பாட்டுக்களை எழுதிய பெருமை கவிஞர் கண்ணனாதாசன் அவர்களை  சாரும்.  பால்ய வயதில் இலங்கை வானொலி அலைகள் எங்கள் வானமண்டலம் எங்கும் நிறைத்த பெருந்தொகையான திரைப்பாடல்கள் அவர் எழுதியதே என்பதை பின்னாளில் புரிந்து கொண்டோம். பாடல்களுடன் சம்பந்தப்பட்ட இசைவாணர்களும் , கவிவாணர்களும் இசையென்னும் பேரின்பத்தில் மக்களை மிதக்க வைத்தனர.

பசுமரத்தாணி போல நம் நெஞ்சங்களின்  நினைவடுக்ககுகளில் பதிந்த பாடல்கள் பல நினைவுகளை மலர்த்துவதையும் அவற்றின் இசையும்,ஒலியமைதியும் , பாடல்வரிகளின் எளிமையும், அழகும், அதில் ஊறிய இலக்கிய நயங்களும் இன்று நம்முள் கரைந்து கரையேற முடியாத வண்ணம் உடலெங்கும் ஓடுகின்றன.

நம் நினைவுகளைத் தேக்கி  வைத்ததில் கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைக்கு மிகப்பெரிய, அழிக்க முடியாத  பங்குண்டு.

சினிமாவில் பாடல் எழுதுவோரை கவிஞர்கள் என்று அழைப்பதைவிட பாடலாசிரியர்கள் என்றழைப்பதுவே பொருத்தமானதாக இருக்கும். தன்னுணர்ச்சிப் பாடல்களை எழுதுவோர்களே பொதுவாக கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். கண்ணதாசன் ஆற்றல் வாய்ந்த கவிஞர் எனபதால் சந்தேகமில்லையெனினும் , அவர் சினிமாவில் எழுதியதெல்லாம் பட இயக்குனர்கள் ., மற்றும் தயாரிப்பாளர்கள் சொல்லும்  கதை சூழ்நிலைகளுக்கு பொருத்தமான வரிகளேயாகும். அது கூட நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது வீதம் இசையமைப்பாளர்கள் கொடுக்கும் மெட்டுக்களுக்கே எழுதப்பட்டவையாகும். கவிஞர்களது சொந்த மனக்கருத்துக்களை யாரும் அங்கே எதிர்பார்ப்பதில்லை.

மரபு ராகங்களிலிருந்து இனிய ரசங்களைப் பிழிந்தெடுத்து இனிமைமிக்க மெட்டுக்களை உருவாக்குவதுதை மெல்லிசைமன்னர்கள் ஓர் புதிய இயக்கமாகத் தொடங்கினார்கள் என்றால் தமிழ்க்கவிதை மரபின் ஓசையழகையும் , கவிதையழகையும் ,வாழ்க்கையில் காணக்கூடிய , வாழ்வுடன் ஒட்டிய நிகழ்வுகளை எல்லாம் எளிய தமிழில் மிக எளிய சொற்களில் கட்டப்பட்ட பாடல் வரிகளால் கண்ணால் பார்ப்பதை எல்லாம் மனத்திரையில் புதிய காட்சி விரிவுகளாய் வடித்த பெருமை கவிஞர் கண்ணதாசனைச் சாரும்!

அந்தவகையில் கதாமாந்தர்களின் உணர்வுகளை உள்வாங்கி மின்னல் வெட்டுக்களாய் ஒருசில வரிகளிலேயே அனாயாசமாக பொதிந்து கொடுக்கும் ஆற்றல்மிக்கவராகக் கண்ணதாசன் சிறந்து விளங்கியதை அவர் எழுதிய ஏராளமான பாடல்களில் கேட்கிறோம்.

அவர் மெட்டுக்களுக்காக எழுதிய பல பல்லவிகளைக் கேட்டவுடன்  நம் மனத்திரைகளில் எத்தனை அற்புதமான ஓவியங்களை தோற்றுவிக்கின்றன என்பதை நாம் உடனடியாகவே உணர்கின்றோம். நம் மனத்தில் அவை உண்டாக்கும் உணர்ச்சியலைகள் தான் எத்தனை எத்தனை!

கண்ணதாசன் தரும் சொற்களின் அடுக்கல்கள் , சொல்லோசைகள் , வரிகளில் இடையே நடனமாடிக்கொண்டிருக்கும் ஓசைநயங்கள் இசையுடன் ஒன்று கலந்து வரும் போது அதன் ஆற்றல்கள் வேறாகிவிடுகின்றன. அன்றாடம்  நாம் பாவிக்கும் சொற்களுக்கு இத்தனை வலிமையுண்டா என்று நாம் வியக்கவைக்கவும்  செய்கின்றோம். அவற்றை எத்தனை முறை கேட்டாலும் அந்த வியப்பு எப்போதும் புதிதாகவே அமைந்துவிடுகின்றன. 

கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களின் பல்லவிகளைக் கேட்கும் போது பாடலின்  குறிப்பாற்றலையும் , இன்பச்சுவையையும் கேட்டு இன்புறுகிறோம். அவை பலவிதமான உணர்ச்சியலைகளையும் நம்முள் எழுப்புவதை உணர்கிறோம்.

அவர் எழுதிய பல்லிவிகளை தனியே வாசிக்கும் போதே  மனதில் இன்ப உணர்வைக் கிளர்த்துவதாகவும் , அழகுணர்ச்சி மிக்கதாகவும் ,ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வலைகள் நம்முள் எழுவதை நாம் உணரமுடியும். அப்பர் எழுதிய ” மாசில் வீணையும் மாலை மதியமும் ” என்ற பாடலை வாசிக்கும்போதே   மனதில் எத்தனை இன்பம் பிறக்கிறது ! அது போலவே கண்ணதாசனின் இனிய சொல்லோசைகள் மெல்லிசைமன்னர்களின் தேனினினும் இனிய இசையுடன் இணைந்து வரும் பொது அதன் இனிமையை சொல்லவும் வேண்டுமா !?

சில பாடல்களின் பல்லவிகள்:

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே – வந்து

விடிந்தும் விடியாத கலைப் பொழுதாக

விளைந்த காலை அன்னமே

நதியில் விளையாடி கொடியின் தலைசீவி

நடந்த இளந்தென்றலே – வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொழிந்த தமிழ் மன்றமே…

01 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல- பாசமலர் 1961 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

அருள்மொழி கூறும் பறவையின் ஒலி கேட்டேன் – உன் 

இறைவன் அவனே அவனே எனப்படும் மொழி கேட்டேன் – உன்

தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்.

02 ஆலயமணியின் ஓசையை  – பாலும் பழமும் 1961 – பாடியவர்: சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

சொற்களின் மதிப்பும், ஒலியின்பமும், பாடல் ஒலிக்கும் காலச் சூழலை அற்புதமாகக் கண்முன் படம்பிடித்துக் காட்டுகின்றன.

மலர்கள் நனைந்தன பனியாலே என்

மனதும் குளிர்ந்தததும் நிலவாலே

பொழுதும் விடிந்ததது கதிராலே – சுகம்

பொங்கியெழுந்ததது நிலவாலே……

[ இந்தப்பாடலை இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்]

உள்ளம் என்பது ஆமை – அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி

நெஞ்சில் தூங்கி கிடப்பது நீதி…

03  உள்ளம் என்பது ஆமை    – பார்த்தால் பசிதீரும்   1962 – பாடியவர்: டி. எம்.எஸ்    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காற்றினிலே

நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்

நிற்குமோ ஆவி நிலைக்குமோ  நெஞ்சம் 

மனம் பெறுமோ வாழ்வே ….

04  செந்தமிழ் தென் மொழியால்   – மாலையிட்ட மங்கை  1959 – பாடியவர்: டி. ஆர்.மகாலிங்கம்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

பாடல்களின் ஆரம்பங்களில் மட்டுமல்ல இடையில்வரும் வரிகளிலும் ஒளியூட்டும் அழகிய சொல்லோசைகளை எழுத்திச் சென்றார்.

கன்னித்தமிழ் கண்டதொரு திருவாசகம்

கல்லைக்கனியாக்கும் ஒரு வாசகம்

உண்டென்று சொல்வது உந்தன்  கண்ணல்லவா

வண்ணக் கண்ணல்லவா

இல்லையென்று சொல்வது உந்தன் இடையல்லவா

மின்னல் இடையல்லவா …

02  கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா  – ஆலயமணி 1962 – பாடியவர்: டி. எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்

குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்

படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை

நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது வீட்டின் தனியுடமை ..

01  கேள்வி பிறந்தது அன்று   – பச்சை விளக்கு  1962 – பாடியவர்: டி. எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தண்ணீர் தணல் போல் எரியும்

செந்தணலும் நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல தெரியும் – அது

நாட்பட நாட்படப் புரியும் …

02  உள்ளம் என்பது ஆமை    – பார்த்தால் பசிதீரும்   1962 – பாடியவர்: டி. எம்.எஸ்    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி

ஏற்றத்தாழ்வுகள் மனிதனின் ஜாதி

பாரில் இயற்கை படைத்ததையெல்லாம்

பாவி மனிதன் பிரித்து வைத்தானே..

03  வந்த நாள் முதல்   – பாவமன்னிப்பு 1961- பாடியவர்: டி. எம்.எஸ்    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும்

வந்த துன்பம் எது என்றாலும்

வாடி  நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்…

04  மயக்கமா கலக்கமா    – சுமைதாங்கி  1962 – பாடியவர்: பி.பி.எஸ்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

இந்தப்பாடல் வரிகளை பாடும் போது  கல்நெஞ்சம் படைத்தவர்களின் இதயமும் உருகும்.அப்படிப்பட்ட  இசை !

நூறுவகை  பறவை வரும் கோடி வகை பூ மலரும்

ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா

ஆடையின்றி பிறந்தோமா ஆசையின்றி பிறந்தோமா

ஆடி முடிக்கையில் அள்ளிக் சென்றோர் யாருமுண்டோ..

05 எல்லோரும் கொண்டாடுவோம்  – பாவமன்னிப்பு  1961 – பாடியவர்: டி.எம்.எஸ் + ஹனீபா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

கீழ் வரும் பாடல்வரிகளை கேட்கும் போது பாடிய முறையும் ,பயன்படுத்தப்பட்ட ராகமும் மனத்தைக் கனிந்துருக வைக்கும்.

கன்னி மாலை கண்டும் இன்ப சோலை வந்தும்

இன்னும் கோபம் என்ன மின்னும் நாணம் என்ன

நாணத்  தடை பிறந்த உள்ளமே -அதில் 

ஆசை  மடைகடந்த வெள்ளமே – இந்த

நெஞ்சமே எந்தன் சொந்தமே

இன்பம்  பண்பாடுவோம் கண்ணே கண்ணா

நாமன்றி யார் அறிவார்   அன்பே 

நாமன்றி யார் அறிவார்

06  நானன்றி யார் வருவார் – மாலையிட்ட மங்கை 1959 – பாடியவர்: டி.ஆர்.மகாலிங்கம் + கோமளா – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி.

கட்டற்ற உத்வேகமும் , நெகிழ்ச்சியும் , மனவெழுச்சியும், இரக்கவுணர்வும் என பலவிதமான உணர்வுகளைத்  தூண்டுவதுமான ஏராளமான பாடல்களை தந்த இணை என்றால் அது கண்ணதாசன் – மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையே என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது.  கவிதையும் இசையும் ஒன்றுகலந்து வரும் போது இயல்பாக நெஞ்சில் பாய்ச்சி செல்லும் அதிர்வு அடர்த்தியை பலவிதமான பாடல்களில் கேட்கமுடியும். அது பாடலின் பல்லவியாக , அனுபல்லவியாக , சரணமாக அல்லது தொகையறாவாகக் கூட இருக்கலாம். அப்பாடல்களைக் கேட்கும் போது ” வாழ்வு என்பது இத்தனை மகத்தானதா !? என்ற உணர்வு எழுவதும் , அதுமட்டுமல்ல இது போன்ற இனியபாடல்களைக் கேட்   பதாலேயே வாழ்வு அர்த்தம் பெறுகிறது ” என்பதையும் நாம் உணர முடிகிறது.

இவ்விதமாக உணர்வுகளை பாடல்வரிகள் ஏற்படுத்துகிறதா இல்லை  அதற்கான இசை எழுப்புகிறதா என்று எழும் சிந்தனைக்கு இலகுவில் பதில் சொல்ல முடிவதில்லை.உள ஆற்றலை வசியம் செய்யும் இவர்களின் பாடல்கள் உருவமா , உள்ளடக்கமா என்ற கேள்விக்கே இடமற்று போக செய்யக்கூடியவையாக இரண்டறக்கலந்த ஒருமையில் ஒன்றி நிற்பவையாக உள்ளன!   

1950 , 1960 களில் எழுந்த திராவிட முன்னேற்றக்கழகத்தின் எழுச்சி தமிழ் திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. அதில் முக்கிய பங்காற்றிய நடிகர்கள் குறித்த புகழ்பாடல்கள்  பழங்காலத்து தமிழ் மன்னர்களான சேர , சோழ , பாண்டிய மன்னர்களுக்கிணையாக ஒப்பிடப்பட்டன. இந்த புகழ்மாலைகளையெல்லாம் தனது வளர்ச்சிக்கு முறையாகப் பயன்படுத்திக் கொண்டவர் எம் ஜி ஆர் என்றால் மிகையில்லை. அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த பெருமை கருணாநிதியையும் ,கண்ணதாசனையுமே சாரும்.

கருணாநிதி கதை வசனத்தில் ” பஞ் ” டைலாக்ஸ் [ Punch Dialogues ] என இன்று பிரசித்தி பெற்ற ஒரு கதாநாயகன் புகழ் பாடும்   முறையை ஆரம்பித்த முன்னோடி என்று அடித்துச் சொல்லலாம். கண்ணதாசனும் தான் வசனம் எழுதிய எம்ஜிஆர் படங்களில் அதை பின்பற்றினார். அவை கணிசமான அளவு ரசிகர்களின் செல்வாக்கையும் பெற்றது. திராவிட முன்னேற்றக கழக அரசியல் மேடைகளில் அடுக்கு வசனங்களை பேசி இந்த முறையை ஆரம்பித்து வைத்தவர் அண்ணாத்துரை ஆகும்.

இவ்விதம் தங்கள் கழகத்தைச் சார்ந்த நடிகர்கள் மீதான புகழைக்  சினிமாப்பாடல் வரிகளில் ஏற்றியவர் கவிஞர் கண்ணதாசனே ! குறிப்பாக எம்ஜிஆர் குறித்த புகழை அவர் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் பாடல்களில் வெளிப்படுத்தினார். அதை எம்ஜிஆர்  தனதுவெற்றிக்கான மூலதனம் ஆக்கினார். திரைப்பாடல்களில்  எம்ஜிஆருக்கு அவை அழியாத புகழைக் கொடுத்தன.

கண்ணதாசன் எம்.ஜி.ஆர் புகழ்பாடி  எழுதிய சில பாடல் வரிகள்

01  சேரனுக்கு உறவா செந்த்தமிழர் நிலவா [ பேசுவது கிளியா  என்ற பாடல்கள்   வரும் வரிகள் ]

02  உலகம் பிறந்தது எனக்காக  [ இந்தப் பாடல் முழுதும் அவர் புகழ்படுவது போலவே இருக்கும் ]

03  உறவு சொல்ல ஒருவர் இன்றி வாழ்பவன்  [ படம்: பாசம்  ]

04  மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் [ உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் ]

இவை மாத்திரமல்ல கே .வி.மகாதேவன் இசையில் தேவர் தயாரித்த ” த ” , “தா ” வரிசைப்படங்களில் வெளிவந்த பல பாடல்களிலும் கண்ணதாசன் நேரடியாகவும், மறைமுகமாகவும் எம்.ஜி.ஆர் புகழ்பாடி பல பாடல்களை எழுதினார்.

பின்னாளில் கவிஞர் வாலி முன்னிலைப்படுத்தப்பட்டு , அப்பட்டமாக எம்.ஜி.ஆர் புகழ்பாடி ஏராளமான பாடல்களை எழுதி புகழ்பெற்றார். இதனை வைத்து சிலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இவர்களை போல எம்.ஜி.ஆர் புகழ்பாடி பாடல்கள் எழுதினார் என்று கூறத் தலைப்படுகின்றனர்.

 உண்மையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்களையே எல்லோருக்கும் எழுதினார். தத்துவப் பாடல்களில் மட்டுமல்ல காதல் பாடல்களிலும் எழுதினார். எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல தான் எழுதிய படங்களில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் கதை சூழலுக்கு ஏற்ப தனது கருத்தையே பிரதானப்படுத்தி எழுதினார். எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் அப்பாடல் அதிகம் புகழ் பெற்றதால் பலரும் அப்படி நினைக்கிறார்கள். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது கொள்கைகளில் பிடிவாதமிக்கவராகவே வாழ்ந்தார்.

மெட்டுக்களுக்கு சொற்களை இட்டு நிரப்பும் திரைப்பாடல்  முறைக்குள் கவிஞர் கண்ணதாசன் தான்   உணர்பவற்றை மிக பொருத்தமாக எழுதினாலும் பொருட்செறிவற்ற வரிகளும் ஆங்காங்கே இட்டு நிரப்பட்டன என்ற குற்றச்சாட்டும், ஓசைநயத்திற்காக எழுதப்படும் சிலவரிகள் இசைக்கு பொருத்தமாக இருப்பினும் பொருட்செறிவற்ற பாடல்வரிகளையும் எழுதியதாக குற்றச்சாட்டுகள் அவர் மீது விழவும்  செய்தன.

“கட்டோடு குழலாட ஆட கண்ணென்ற மீனாட ஆட ”  என்ற பாடலில் பச்சரிப் பல் ஆட பம்பரத்து  நாவாட ” என்று இளம் பெண்கள் பாடும் பாடலில் ”  பல்லாட ” வரிகள் பல்லாடுவது கிழவிகளுக்கே என்றார் காமராசன்.

 ” இழுக்குள்ள பாட்டு இசைக்கு நன்றடா: அதை ஒன்றும் கண்டுகொள்ளாதே “

கண்ணதாசனின்  பாடல் எழுதும் முறை  பற்றி அவருடன் நெருங்கிப்பழகிய  இசையராஜா பின்வருமாறு கூறுகிறார் ;

“அவரது வார்த்தைகளை இசையை விட்டு பிரித்துப்பார்க்க முடியாது.சிலவேளைகளில் அர்த்தம் முன்னே , பின்னே இருக்கலாம் ;அர்த்தம் இருக்கோ இல்லையோ!.. ஏதாவது குற்றம் என்றால் ” அண்ணா அந்த Lines ஒருமாதிரி இருக்குது என்றால் , ” இழுக்குள்ள பாட்டு இசைக்கு நன்றடா: அதை ஒன்றும் கண்டுகொள்ளாதே “, சிலவேளை நிரப்புவதற்காக சில சொற்களை போடவேண்டியிருக்கும் அப்போது  அப்படி சொல்லுவார்.அவர் பாடல் எழுத யோசிக்கவே மாட்டார்!”

ஆனாலும்  1960களிலேயே மெல்லிசைமன்னர்களின் எளிய , இனிய மெட்டுக்களுக்கு குறிப்பிடத்தக்க இனிய சொற்களுடன் கூடிய சந்தங்களை கண்ணதாசன் எழுதி பாடல் எழுதும் முறையில் புதுசாதனை உண்டாக்கினார். எத்தனையோ இனிமையான ச  ந்த ஒழுங்குகளையெல்லாம் எழுதி தனக்கென புதிய நடையை உருவாக்கினார். அவர் எழுதிய பாடல்களில் மிக எளிமையான பல்லவிகளில் ஒலிகளின் தனிச்சிறப்பும் , அதன் பின்னணியில் நுண்மையான குறியீட்டு தன்மையும் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். அந்த பாடல்களைக் கேட்கும் இசைரசிகர்கள் நாவில் அவை மிக இலகுவாக ஒட்டிக் கொள்ளும் தன்மையையும் நாம் காண முடியும்.

கட்டற்ற உத்வேகம் , நெகிழ்ச்சி , மனவெழுச்சி, இரக்கவுணர்வு என பலவிதமான உணர்வுகளைத்  தூண்டுவதுமான ஏராளமான பாடல்களை தந்த இணை என்றால் அது கண்ணதாசன் – மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையே என்பதில் கருத்து முரண்பாடு இருக்க முடியாது.  கவிதையும் இசையும் ஒன்றுகலந்து வரும் போது இயல்பாக நெஞ்சில் பாய்ச்சி செல்லும் அதிர்வு அடர்த்தியை பலவிதமான பாடல்களில் கேட்கமுடியும். அது பாடலின் பல்லவியாக , அனுபல்லவியாக , சரணமாக அல்லது தொகையறாவாகக் கூட இருக்கலாம். அப்பாடல்களை கேட்கும் போது ” வாழ்வு என்பது இத்தனை மகத்தானதா !? என்ற உணர்வு எழுவதும் , அதுமட்டுமல்ல இது போன்ற இனியபாடல்களைக் கேட்பதாலேயே வாழ்வு அர்த்தம் பெறுகிறதோ “என்ற எண்ணம் எழுவதையும் உணர்கிறோம். 

இவ்விதமாக உணர்வுகளை பாடல்வரிகள் ஏற்படுத்துகிறதா இல்லை  அதற்கான இசை எழுப்புகிறதா என்று எழும் சிந்தனைக்கு இலகுவில் பதில் சொல்ல முடிவதில்லை.உள ஆற்றலை வசியம் செய்யும் இவர்களின் பாடல்கள் உருவமா , உள்ளடக்கமா என்ற கேள்விக்கே இடமற்று போக செய்யக்கூடியவையாக இரண்டறக்கலந்த ஒருமையில் ஒன்றி நிற்பவையாக உள்ளன!     

தனியே ஒரு பாடலை பாட்டுப்புத்தகத்தில் வாசிக்கும் பொழுது அறிவுபூர்வமாக மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதனை இசையுடன் பாடும் பொழுது அடிமன உணர்வலைகள் வேறுவிதமாக இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இசையின் அசைவுகள் செறிவான உணர்வலைகளைத் தந்து நமது உடலையே அசையச் செய்கிற ஆற்றலை நாம் உணர முடியும்.இசையுடன் பாடப்படும் வரிகளின் அர்த்தம் நம்மையும் ஈர்த்து நம்மைத் தனதாக்கிக் கொள்கிறது.

மனத்தளைகளிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக உணரவும் , இறுகிய மனநிலைகளை உடைத்து பூரண விடுதலையுணர்வையும், உடலுக்கு புத்துணர்வு , உயிரோட்டத்தையும் வழங்கும் ஆற்றல் இசைக்கு உண்டு. மெல்லிசைமன்னர்களின் இசையும் கண்ணதாசனின் வரிகளும் இணையும் போது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத பல உணர்வுகள் நம் உள்ளத்தில் மலர்வதை பல பாடல்களில் அனுபவித்திருக்கின்றோம்.

தனக்குச் சொல்லப்படும் காட்சிகளுக்கேற்ற எண்ணற்ற பாடல்களை எழுதிய கண்ணதாசன் அவற்றை தெளிவாக விளக்கும் அழகுணர்ச்சிமிக்க பாடல்களை மிக எளிமையாக சாதாரண மக்களும் எளிதில் புரியும் வண்ணம் தந்தது மட்டுமல்ல , பழந் தமிழ் இலக்கியம் என்று படித்தவர்களால் மட்டும் பேசப்பட்டு வந்த இலக்கியங்களையெல்லாம் பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் எளிய தமிழில் தந்தார். அவை தகுந்த வாய்ப்புகள் கிடைத்த போது அவரது வார்த்தைகளில் பீறிட்டுப் பாய்ந்தன. தனது எழுத்தின் ரகசியம் பற்றி பின்வருமாறு கண்ணதாசன் கூறுகிறார்

  //  இளம் பருவத்திலேயே தமிழ் இலக்கியங்களில் எனக்கு ஈடுபாடு அதிகம். மிகவும் சிறிய பிராயத்தில்கூட கடினமான தமிழ் இலக்கியங்களைக் குருட்டுத் தனமாக மனப்பாடம் செய்வது என் வழக்கம். பொருள் புரிகிறதோ இல்லையோ , ஓசை நயத்துக்காகப் பாடல்களை படிப்பது என் சுபாவமாக இருந்தது. அதே சமயம் தெளிவான உரைகள் கிடைத்தால் பொருளையும் புரிந்து கொண்டிருக்கிறேன். நல்ல பருவத்தில் ஏற்பட்ட இந்தப் பழக்கம், நாளடைவில் வளர்ந்து, என்னை ஓரளவுக்கு இலக்கிய அறிவுள்ளவனாக ஆக்கிற்று. ..பண்டிதர்களின் உரைநடையால் சாதாரண மக்களுக்குப் புரியாமல் போய்விட்ட விஷயங்களையே எனது எளிய நடையில் எழுதினேன்..// .. கண்ணதாசன் [ நான் ரசித்த வர்ணனைகள் ]

பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்தும் , பொதுமக்கள் சார்ந்த மக்கள் இலக்கியங்களிலிருந்தும் , வட்டார வழக்குகளிலிருந்தும் என பல்வகை மூல ஊற்றுக்களிலிருந்து தனக்கு வேண்டியவற்றை தாம் படித்தவற்றை  நினைவிலிருந்தும் அவர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களில் திரைப்பாடல்களாய் அள்ளி வீசினார்.அவை அவர் எழுதிய பல்வகைப்பாடல்களிலும் விரவிக்கிடக்கின்றன. அவர் எழுதிய பல்வகைப்பாடல்கள் அவற்றில்  மெல்லிசைமன்னர்களின் இசையில் மட்டும் வெளிவந்த பாடல்கள் இங்கே தரப்படுகிறது

தாலாட்டு

01  சிங்கார புன்னகை  – மஹாதேவி  1957 – பாடியவர்: எம்.எஸ் . ராஜேஸ்வரி + பாலசரஸ்வதி  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  மனம் ஒன்றே பெரிதெனக் கொண்டு  – மஹாதேவி  1957 – பாடியவர்: டி.எஸ்.பகவதி – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  தென்றல் வந்து வீசாதோ    – சிவகங்கை சீமை  1959 – பாடியவர்: எஸ்.வரலட்சுமி  + கோமளா  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  மழை கூட ஒருநாளில் தேனாகலாம்  – மாலையிட்ட மங்கை  1959 – பாடியவர்: எம்.எஸ்.ராஜேஸ்வரி  – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  ஏன் பிறந்தாய் மகனே – பாகப்பிரிவினை  1959 – பாடியவர்:டி.எம் .எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  சின்னஞ் சிறு கண்மலர்   – பதிபக்தி   1959- பாடியவர்: பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  நீரோடும் வைகையில்   – மன்னாதிமன்னன்  1960 – பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  சொல்லடா வாய் திறந்து   – நீல வானம் 1967 – பாடியவர்: பி.சுசீலா – இசை :விஸ்வநாதன்

சோகம்

01  சிரிக்க சொன்னார் சிரித்தேன்   – கவலையில்லாத மனிதன் 1960 – பாடியவர்:பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பெண் பார்க்க மாப்பில்லை    – கவலையில்லாத மனிதன் 1960 – பாடியவர்:கே.ஜமுனாராணி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  காவிரித்தாயே காவிரித்தாயே   – மன்னாதிமன்னன்  1960 – பாடியவர்:கே.ஜமுனாராணி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கண்கள் இரண்டும் என்று   – மன்னாதிமன்னன்  1960 – பாடியவர்:  பி.சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  ஆத்தோரம் மணலெடுத்து   – வாழ்க்கை வாழ்வதற்கே 1963- பாடியவர்:பி.பி.எஸ்  + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  என்னை யாரென்று எண்ணி எண்ணி   – பாலும் பழமும்  1961 – பாடியவர்:டி.எ.எஸ் + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  எங்கிருந்தாலும் வாழ்க  – நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 – பாடியவர்: ஏ.எல்.ராகவன்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  என்ன நினைத்து என்னை   – நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 – பாடியவர்: பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  சொன்னது நீதானா   – நெஞ்சில் ஓர் ஆலயம்  1963 – பாடியவர்: பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  காதலிலே பற்றுவைத்தாள் அன்னையடா     – இது சத்தியம் 1963 – பாடியவர்: பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

10  அவள் பறந்து போனாளே  – பார் மகளே பார்  1963 – பாடியவர்:டி.எம் .எஸ் + பி.பி.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பார் மகளே பார்   – பார் மகளே பார்  1963 – பாடியவர்:டி.எம் .எஸ்- இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  கண்களே கண்களே – காத்திருந்த கண்கள்  1962 – பாடியவர்: பி.பி.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  நெஞ்சம் மறப்பதில்லை  நெஞ்சம் மறப்பதில்லை 1962 – பாடியவர்: பி.பி.எஸ் + பி.சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  மலரே நீ சொல்ல ஒரு – கொடிமலர்  1965 – பாடியவர்: பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன்

வீரம்

01  வீரர்கள் வாழும் – சிவகங்கை சீமை 1958 – பாடியவர்: டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  

02  அச்சம் என்பது மடமையடா  – மன்னாதி மன்னன் 1960 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  அதோ அந்த பறவை போல – ஆயிரத்தில் ஒருவன்  1965 – பாடியவர்: டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  எங்கள் திராவிடப் பொன்னாடே   – மாலையிட்ட மங்கை  1959 – பாடியவர்: டி.ஆர் .மகாலிங்கம்    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

காதல்

01  ஏழை நின் கோவிலை   – பணம்  1954 – பாடியவர்: ஜி.கே.வெங்கடேஷ் + வசந்தகுமாரி – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  கூவாமல் கூவும் கோகிலம்   – வைரமாலை  1955 – பாடியவர்: லோகநாதன் + வசந்தகுமாரி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03 கண்மூடும் வேளையிலும்  – மஹாதேவி  1957 – பாடியவர்: ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை :விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  கனிய கனிய மழலை பேசும்   – மன்னாதிமன்னன்  1960 – பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 நான் பேச நினைப்பதெல்லாம்  – பாலும் பழமும்  1961 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  பேசுவது கிளியா      – பன்மத்தோட்டம்  1956 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

07  மதுரா நகரில்  தமிழ் சங்கம்  – பார் மகளே பார்   -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

08  அன்று  வந்ததும் இதே நிலா  – பெரிய இடத்து பெண்  1962 – பாடியவர்:டி.எம் .எஸ் + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

09  போக போக தெரியும்   – சர்வர் சுந்தரம்    -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

10 பால் வண்ணம் பருவம்   – பாசம் -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  என்னைத் தொட்டு   – பார்மகளே பார்  -பி.பி.ஸ்ரீனிவாஸ்+ பி.சுசீலா  – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

12  நாணமோ இன்னும் – ஆயிரத்தில் ஒருவன்1965 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

தத்துவம்

01  அண்ணன் என்னடா தம்பி என்னடா    – பழனி  1965 – பாடியவர்:டி.எம் .எஸ்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  போனால் போகட்டும் போடா   – பாலும் பழமும்  1961 – பாடியவர்:டி.எ.எஸ் + பி.சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கண்ணிலே நீர் எதற்கு   – போலீஸ்காரன் மகள் 1962 – பாடியவர்: சீர்காழி + ஜானகி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  ஆறுமனமே ஆறு – ஆலயமணி  1963 – பாடியவர்:டி.எ.எஸ் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 பிறக்கும் போதும் அழுகின்றாய்  – கவலையில்லாத மனிதன் 1960 – பாடியவர்: ஜே.பி சந்திரபாபு – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

நகைச்சுவை

01  நீயே எனக்கு என்றும்   – பலே பாண்டியா 1962 – பாடியவர்:டி.எம் .எஸ்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  சிரிப்பு வருது சிரிப்பு வருது  – ஆண்டவன் கட்டளை  1962 – பாடியவர்:ஜே.பி.சந்திரபாபு – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  தந்தனா பாட்டு பாடணும்    – மகாதேவி 1957 – பாடியவர்: சீர்காழி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  கோமாளி கோமாளி  – படித்தால் மட்டும் போதுமா  1963 – பாடியவர்:ஜி.கே.வெங்கடேஷ் + ஏ.எல் .ராகவன் – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05 காதலிக்க நேரமில்லை   – காதலிக்க நேரமில்லை 1964 – பாடியவர்: சீர்காழி – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06 பாரப்பா பழனியப்பா   – பெரிய இடத்துப் பெண்  1963 – பாடியவர்: டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

கால அளவில் நோக்கும் போது கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் கண்ணதாசன் – விஸ்வநாதன் இணையின்  தொடர்ச்சி  1950 களில் தொடங்கி 1980கள்  வரையான மூன்று தசாப்தங்களின் வெற்றிக்கூட்டணியாக திகழ்ந்தது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர்கள் எத்தனையோ இனிமைமிக்க பாடல்களை வழங்கினார்கள் என்பதை எண்ணிபார்க்கும் போது வியப்பும் மலைப்பும் ஏற்படும். அதுமட்டுமல்ல கண்ணதாசன் வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான பாடல்களைஎழுதியதையும் நாம் மறக்க முடியாது.

கண்ணதாசன் புகழின் உச்சியிலே இருந்த காலத்தில் வேறு பல கவிஞர்களும் தமிழ் திரைப்படங்களில் நல்ல, நல்ல  பாடல்களை எழுதி தங்களது திறமையை நிலைநாட்டினர். பெரும் புகழ் பெற்ற பல பாடல்களை அவர்கள் எழுதினாலும் பெரும்பாலும் அவர்களின், பாடல்களையும் கண்ணதாசனே எழுதினார் என்றே நினைக்கும் வண்ணம் கண்ணதாசனின் புகழ் ஓங்கியிருந்தது. அவர்களில் வாலி. அவினாசிமணி , பூவை செங்குட்டுவன் , புலமைப்பித்தன்  போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். வாலி தவிர்ந்த மற்றவர்கள் எழுதிய சில பாடல்களை பாருங்கள்:

பூவை செங்குட்டுவன்

01 நான் உங்க வீட்டுப்பிள்ளை  – புதிய பூமி 1967 – டி.எம்.எஸ் –  இசை : விஸ்வநாதன்

02 ராதையின் நெஞ்சமே  – கனிமுத்துப்பாப்பா 1970 – சுசீலா  – இசை : டி.வி.ராஜு 

03 வானம் நமது தந்தை – தாகம்  1970- எஸ்.ஜானகி  –  இசை :எம்.பி.ஸ்ரீநிவாசன்

04 காலம் எனக்கொரு பாட்டெழுதும் – பௌர்ணமி 1971 – எஸ்.பி.பி   –  இசை :ஜி.கே.வெங்கடேஷ்

05 திருப்பரம் குன்றத்தில் – கந்தன் கருணை  1967 –  சுசீலா + சூலமங்கலம்  –  இசை :மகாதேவன்

06 திருப்புகழைப் பாட பாட – கௌரி கல்யாணம் 1966 – சுசீலா + சூலமங்கலம் –  இசை :விஸ்வநாதன்

அவினாசிமணி

01  காலத்தை வென்றவன் நீ   – அடிமைப்பெண் 1969 – சுசீலா + ஜானகி –  இசை : கே.வி.மகாதேவன்

02  ஒளி பிறந்த போது    – கன்னிப்பெண்  1969 – ஈஸ்வரி  –  இசை : விஸ்வநாதன்

03  இவ்வளவு தான் உலகம்  – இவ்வளவு தான் உலகம்  1969- டி.எம்.எஸ் + ஈஸ்வரி –  இசை :விஸ்வநாதன்

புலமைப்பித்தன்

01 நான் யார் நான் யார் – குடியிருந்த கோயில்1967 –  டி.எம்.எஸ் –  இசை :விஸ்வநாதன்

02 ஆயிரம் நிலவே வா – அடிமைப்பெண்  1969 –  எஸ்.பி.பி.+ சுசீலா   –  இசை :கே.வி.மகாதேவன்

03 இந்தப் பச்சைக்கிளிக்கொரு- நீதிக்குத் தலை வணங்கு 1976 –  ஜேசுதாஸ் –  இசை :விஸ்வநாதன்

04 பகை கொண்ட உள்ளம் – எல்லோரும் நல்லவரே 1974 –  ஜேசுதாஸ் –  இசை :வி.குமார்

இவர்களில் கவிஞர் வாலி , கண்ணதாசன் காலத்திலேயே அவருக்கு நிகராக பாடல்கள் எழுதியவர். ஓவிய ஆற்றல்மிக்கவராகத் திகழ்ந்த வாலி தனது இலக்கிய ஆற்றலால் 1960 களில் மெல்லிசைமன்னர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு புகழ் பெற்றார்.

1990  களுக்குப் பின் கவிஞர் வாலி எழுதிய சில பாடல்கள் அவர் மீதான எதிர்மறையான கருத்துக்களை உருவாக்கியிருந்தன.ஆனாலும் 1960களில் மெல்லிசைமன்னர்களின் இசையில் அவர் எழுதிய பாடல்களை எண்ணிப்பார்க்கும் போது அப்பாடல்களின் இனிமை அதன் சொல்லோசைகள் குறித்த பிரமிப்பும் நமக்குள் ஏற்படும்.

அக்காலத்தில் வெளிவந்த , மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் கவிஞர் வாலி  எழுதிய பாடல்களையும் குறித்து எழுதாமல் இக்கட்டுரைகள்  நிறைவடையாது என்பது உண்மையாகும். அந்தக்காலத்தில் வாலி எழுதிய பாடல்கள் பலவற்றைக் கண்ணதாசனே எழுதினார் என்றே பலர் நினைத்தனர். அதற்கான அடிப்படைக்காரணமே மெல்லிசைமன்னர்களின் இனிய இசையில் அவை வெளிவந்தததும் தான்! அது பற்றி எழுதுவதற்கு காரணமே மெல்லிசைமன்னர்களின் இனிய இசைதான் என்று  சொல்வேன்.

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *