T.சௌந்தர் எழுதிய காலமும் படைப்புலகமும் : 03

இளவயது சகபாடிகளும் , உத்வேகமும் ,இடர்களும் :


செவ்வியல் இசை  சார்ந்த பாடல்களை சிறப்பாகக் கொடுத்துக்கொண்டிருந்த தமது  முன்னோடிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அல்லது அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்களல்ல என்று முனைப்பு காட்டும் வகையில் செவ்வியலிசை ராகங்களில் நேர்த்தியான பாடல்கள் தந்தமை  முக்கிய கவனம் பெறுகின்றன.
அம்பிகாபதி படத்தில் ஜி.ராமநாதன் இசையமைத்த ” வாடா மலரே தமிழ் தேனே ” என்ற  புகழபெற்ற முகாரி ராகப்பாடலுக்கு இணையாக தம்மாலும் சோகம் ததும்பும் முகாரி ராகத்தில் ” கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் ” [ சிவகங்கைச் சீமை 1959] என்ற பாடலை அமைத்துக் காண்பித்தார்கள்.
“வாடா மலரே தமிழ் தேனே “பாடல் சோக ரசம் பொழியும் ராகத்தில் காதல் மகிழ்ச்சியை வெளிப்புத்தியது புதுமையாகப் பேசப்படட காலம் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இவைமட்டுமல்ல ராகங்களின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதிலும்  ராகங்களின் பிரயோகங்களிலும் ஆழமும் , நுண்மையும் காட்டும் வல்லமை தங்ளுக்கு உண்டு என்று காட்டித்  தம்மை நிலைநிறுத்திக் காண்பித்தார்கள்.அக்காலத்தில் பெருகியிருந்த  செவ்வியலிசை சார்ந்த பாடல்களைக் கொண்டு நாம்நோக்குதல் பொருத்தமாக இருக்கும்.
மெல்லிசைமன்னர்களின் முன்னோடிகளினதும் அவர்களது  சமகாலத்தவர்களினதும் பாடல்களுடன் ஒப்பிடுப்பார்த்தால் புரியும்.சில எடுத்துக்காட்டுக்கள் :
எல்லாம் இன்ப மாயம் – படம்:மணமகள் [1951] – பாடியவர்கள் :பி.லீலா + எம்.எல்.வசந்தகுமாரி – இசை: சி.ஆர்.சுப்பராமன்
நீயே கதி ஈஸ்வரி – அன்னையின் ஆணை 1958 – பாடியவர் : பி.லீலா – இசை : எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
வேலன் வருவாரோடி வடிவேலன் – படம்: திருமணம் [1957] – பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி – இசை: எஸ்.எம் சுப்பைய்யாநாயுடு
ஸ்ரீ சரஸ்வதி மாதா ஜெயம் அருள் – படம்: ராணி லலிதாங்கி [1958] – பாடியவர்கள் :பி.லீலா + டி.பி.ராமசந்திரன் – இசை: ஜி.ராமநாதன்
தாயே உன் செயல் அல்லவோ – படம்: இரு சகோதரிகள் [1957] – பாடியவர்கள் :பி.லீலா + ML வசந்தகுமாரி – இசை: எஸ்.ராஜேஸ்வரராவ்
நெஞ்சிருக்கும்வரைக்கும் நினைவிருக்கும் – படம்: ராணிசம்யுக்தா 1962 – பாடியர்: பி.சுசீலா – இசை : கே.வீ.மகாதேவன்- ராகம் சாருகேசி
ஆடும் அழகே அழகு – படம்:ராஜ ராஜன் [1956] – பாடியவர்கள் :சூலமங்கலம் சகோதரிகள் + பி .லீலா – இசை: கே.வீ.மகாதேவன்.
இது போன்ற செவ்வியல் இசைசார்ந்த பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்களும் ஈடு கொடுத்து இசைத்தார்கள் என்பது முக்கியமான அம்சமாகும்.
மெல்லிசைமன்னர்களின் இசையில் வெளியான செவ்வியலிசை சார்ந்த பாடல்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்:
01  ஆடும் கலை எல்லாம் பருவ மங்கையர் அழகு கூறும் கலையாகுமே- படம் : தென்னாலிராமன்[ 1956 ] – பாடியவர் : பி.லீலா ] காம்போதி ராகம்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
02  கலைமங்கை உருவம் கண்டு காதல் கொண்டு – படம் :மகனே கேள் [1957] – பாடியவர்கள் : சீர்காகாழி கோவிந்தராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி -ராகம் :கல்யாணி 
இரு பெரும் பாடகர்கள் “சவால்” என்று சொல்லத்தக்க வகையில் இணையில்லாமல் பாடிய பாடல்.பாலும் , தேனும் கலந்த இனிமை என்று சொல்வார்களே, அது தான் இந்தப்பாடல் என்று துணிந்து சொல்லிவிடலாம்.
பட்டுக்கோட்டையாரின் கவிநயம் மிக்க பாடல் வரிகளும்  கல்யாணி ராகமும் இணைந்த அசாத்திய பாடல் !
03  ஆடாத மனம் உண்டோ நடையாலங்காரமும் – மன்னாதிமன்னன் 1960 – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + எம்.எல்.வசந்தகுமாரி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி – ராகம் : லலிதா
04  முகத்தில் முகம் பார்க்கலாம்  – தங்கப்பதுமாய்  1959 – பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் + பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கல்யாணி
05  அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை – பாசவலை   1956- பாடியவர் : சி.எஸ்.ஜெயராமன்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :கரகரப்ரியா
06  மோகனைப் புன்னகை ஏனோ  – பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் ++ பி.சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :மோகனம்
07  வருகிறார் உனைத்தேடி மணவாளன் நானே என்று   – பத்தினித் தெய்வம்   1956- பாடியவர்கள் : எம்.எல்.வசந்தகுமாரி  + சூலமங்கலம் ராஜலட்சுமி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  ராகம் :அடானா
கற்பனையான அரசகதைகளும் சரித்திர மற்றும் புராண கதைகளும் வெள்ளப்பெருக்கென ஓடிய காலம் மாறி சமூகக்கதைகள் சார்ந்த திரைப்படங்கள் ஊக்கம் பெறத  தொடங்கியது 1950 களின் இறுதியிலேயேயாயினும்   அவற்றின் தொடர்ச்சி 1960 களிலும் சில  இடைச் செருகலாக ஆங்காங்கே வெளிவரவும் செய்தன என்பதையும்  மறுப்பதற்கில்லை.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
தங்கப்பதுமை படத்தில் , ” வாய் திறந்து சொல்லம்மா ” என்ற பாடலில் ஒரு மாறுதலாக ,மன எழுச்சி தரும் வகையில் உணர்ச்சிக்கு கொந்தளிப்பை ,மனதை கசக்கிப்பிழியும் அவஸ்தையை வெளிப்படுத்துகிறார்கள், 


வாய் திறந்து சொல்லம்மா உன் மக்களின் கதை கேளம்மா – படம் :தங்கப்பதுமை [1959] – பாடியவர்: பி.லீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.
செம்பும் கல்லும் தெய்வமென்று
நம்புவோர்கள் பித்தரென்று
சித்தர்கள் உரைத்தமொழி மெய்தானோ?
சிற்பிகள் செதுக்கி வைத்த
சித்திரச் சிலைகளுக்குள்
தேவி வந்திருப்பதுவும் பொய்தானோ? ,,,,
என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கடவுளை சீண்டும் சிந்தனை வரிகள் கொண்ட உணர்ச்சிமிக்க பாடல். தான் பாடிய பாடல்களிலேயே தனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்பாடல் தான் என்று , மகத்தான பால பாடல்களைப் பாடிய பி.லீலா குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உணர்ச்சி பாவங்களை தங்களது இசையின் உயிர் ஒட்டமாகக் கருதிய இசையமைப்பாளர்களில் மெல்லிசைமன்னர்களும் முக்கியமானவர்களாக விளங்கினர்.உணர்வின் பாவங்களை இனிய மெட்டுக்களில் சலிப்பில்லாத வகையில்  உயிரோட்டமாகப் படைப்பதில்  முனைந்து செயல்பட்டார்கள்.பொருத்தப்பாடான சூழ்நிலைகளில்  கதாபாத்திரங்களின் மன உணர்வை  இசையில் காட்டிட மரபுவழியையும், புதுமையான அணுகுமுறைகளையும் பயன்படுத்தி வெற்றியும் கண்டனர்.
1950 களின் ஒரு போக்காக ” ட டா , ட டா, ட டா .டாடடா ” என்ற ஓசை பிரயோகம் பரவலாக பாடல்களில் பயன்படுத்தப்பட்டது.சில பாடல்களில் இசை கரடு முரடாகவும் இருந்தது என்பதும் ,குறிப்பாக 1950 களில் வந்த ஹிந்திப்பாடல்களின் மெட்டுக்களை நேரடியாகக் கொண்டமைந்த பாடல்களில் இத்தன்மையை நாம் காண்கிறோம்.
1950 களின் திரையின் மெல்லிசைப்போக்கை அவதானிப்பவர்கள் புதிய போக்கு ஒன்று அங்கொன்றும் , இங்கொன்றுமாகச் சில பாடல்கள் மூலம் மெதுவாக வளர்ச்சி அடைந்து வந்ததை அவதானிக்க முடியும்.
ஒருபக்கம் பழமையை உயர்த்திப்பிடித்த அதே நேரம் மறுபக்கம் புதுமையையும் ஆங்காங்கே  உயர்த்திப்பிடித்து அற்புதமான பாடல்களைத் தந்து இசைரசிகர்களைக் கிறங்க வைத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி !
அதன் சாட்சியாக சில பாடல்களை இங்கே உதாரணம் காட்டலாம்.
01  விண்ணோடும் முகிலொடும் விளையாடும் வெண்ணிலவே-  படம்: புதையல் [1957] – பாடியவர்கள் :சி.எஸ்.ஜெயராமன் + பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
02  தென்றல் உறங்கிய போதும் –  படம்: பெற்ற மகனை விற்ற அன்னை  [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
03  துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் –  படம்: தலை கொடுத்தான் தம்பி [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
04  கண்மூடும் வேளையிலும் கலை என்ன  கலையே  –  படம்: மகாதேவி  [1957] – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா  + பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
05  தங்க மோகன தாமரையே –  படம்: புதையல்   [1957] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
06  என் வாழ்வில்  புதுப்பாதை கண்டேன்  –  படம்: தங்கப்பதுமை   [1957] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
07  சின்னஞ்  சிறு கண்மலர்   –  படம்: பதி பக்தி    [1958] – பாடியவர்கள் :பி.சுசீலா – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
08  வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே   –  படம்: பதி பக்தி    [1958 – பாடியவர்கள் :டி.எம்.சௌந்தரராஜன்  – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
09  ராக் அண்ட் ரோல்     –  படம்: பதி பக்தி    [1958 – பாடியவர்கள் :ஜெ.பி.சந்திரபாபு + வி.என்.சுந்தரம்   – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
10 மழை கூட ஒருநாளில்    –  படம்: மாலையிட்ட மங்கை     [1959] – பாடியவர்கள் :எம்.எஸ்.ராஜேஸ்வரி  – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
11 இல்லறம் ஒன்றே நல்லறம் என்றே     –  படம்: மாலையிட்ட மங்கை     [1959] – பாடியவர்கள் :பி.சுசீலா   – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
12 செந்ததமிழ் தென் மொழியாள்      –  படம்: மாலையிட்ட மங்கை     [1959] – பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம்   – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
13 நானன்றி யார்  வருவார்   படம்: மாலையிடட மங்கை     [1959] – பாடியவர்கள் :டி.ஆர். மகாலிங்கம் + ஏ.பி.கோமளா    – இசை  : விஸ்வநாதன் + ராமமூர்த்தி
செவ்வியல் இசையின் இறுக்கம் தளர்ந்து ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மெல்லிசைப் போக்கின் வேகத்தைச் சற்று அழுத்தம் கொடுத்து நகர்த்தியதுவே மெல்லிசைமன்னர்களின் பாரிய பங்களிப்பாக இருந்தமை இக்காலகட்டத்தின் பங்களிப்பாக இருந்தது.
வெற்றிக்கனிகளை தட்டிப்பறிக்க விந்தைதரும் மாயாஜாலக் காடசிகளுடன் அமைந்த புராணக்கதைகள் மட்டுமல்ல சமகால சமூக வாழ்வை அழகுடன் சொன்னாலும் வெற்றியளிக்கும் என்பதை இயக்குனர் ஸ்ரீதர்  கல்யாணப்பரிசு [1959] படத்தின் மூலம் எடுத்துக்காட்டியமை தமிழ் திரை வரலாற்றில் புதிய உடைப்பை உண்டாக்கியது.அப்பாடத்தின் அபார வெற்றியும் , பாடல்களின் மெல்லிசை ஓங்கிய தன்மையும் மெல்லிசைக்கான புதிய பாதையை அகலத்திறந்து விட்டது எனலாம்.
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா புகழின் உச்சிக்கு சென்றார்கள்.ஏ.எம்.ராஜா சிறந்த பாடகர் மட்டுமல்ல சிறந்த இசையமைப்பாளர் என்ற அடையாளமும் பெற்றார்.
கல்யாணப்பரிசு படத்தில்
” வாடிக்கை மறந்ததும் ஏனோ “
” ஆசையினாலே மனம்” 
” உன்னைக்கண்டு நான்  ஆட”
” துள்ளாத மனமும் துள்ளும்
” காதலிலே தோல்வியுற்றான்”
போன்ற பாடல்கள் மெல்லிசையின் உயிர்த்துடிப்புகள் மேலோங்கி நிற்கும் சாகாவரம் பெற்ற பாடல்களாக இன்றும் விளங்குகின்றன.
“வாடிக்கை மறந்ததும்” ஏனோ பாடலில் சைக்கிள் மணி ஒலியும் ,”ஆசையினாலே மனம்”  பாடலில்  I see ,Really ,Sorry   ஆங்கில வார்த்தைகளை கல்லூரியில் படிக்கும் காதலர்கள் பாடுவதாக சமயோசிதமாக புதுமையாக ஆங்காங்கே பயன்படுத்திதுடன் ஹம்மிங்கையும் இணையாகப் பயன்படுத்திய பாடல்.
இயக்குனர் ஸ்ரீதர் , இசையமைப்பாளர் ஏ.எம்.ராஜா கூட்டணியில் தொடர்ந்து வெளிவந்த தேன் நிலவு [1960] ,விடிவெள்ளி [1960] மற்றும் அன்புக்கோர் அண்ணி [1960] போன்ற படங்களில் மெல்லிசைப்பாடல்கள் விட்டுவிடுதலையாகிப் பறந்து கொண்டிருந்தன.
தேன்நிலவு படத்தில்
” சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ” 
” நிலவும் மலரும் பாடுது “
” காலையும் நீயே மாலையும் நீயே “
” மலரே மலரே தெரியாதா “
” ஊர் எங்கு தேடினேன் “
” பாட்டுப் பாடவா”
விடிவெள்ளி படத்தில்
” எந்நாளும் வாழ்விலே
” பண்ணோடு பிறந்தது தளம் “
” இடை கையிரண்டில் ஆட”
” நினைத்தால் இனிக்கும் சு தினம் “
” கொடுத்துப்பார் பார் பார் “” காரு சவாரி ஜோரு “
” நான் வாழ்ந்ததும் உன்னாலே “
அன்புக்கோர் அண்ணி படத்தில்

” ஒருநாள் இது ஒரு நாள் உனக்கும் எனக்கும்”
ஆடிப்பெருக்கு படத்தில்
” கண்ணாலே பேசும் காதல் நிலையாகுமா “
” பெண்களில்லாத உலகத்திலே “
” காவேரி ஓரம் கவி சொன்ன காதல் “
” கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தான் “
” அன்னையின் அருளே வா வா வா “
” புரியாது புரியாது வாழ்க்கையின் ரகசியம் புரியாது “
” தனிமையிலே இனிமைக்கான முடியுமா “
உற்று நோக்கினால் எளிமையும் , இனிமையும் , குதூகலமும் ஒன்று கலந்த  மெட்டுக்களில்  , எளிய நடையிலமைந்த பாடல் வரியும் , மேலைத்தேய இசையைத் தொட்டு செல்லும் இயல்பு குன்றாத காதல் உணர்வும்,  துயரத்தில்  மூழ்கடிக்கும்  சோகரச இலக்கணமுமிக்க பாடல்களை மெல்லிசையின் போக்கிலமைந்திருப்பதையும்  அவதானிக்கலாம்.
” ஏ.எம் ராஜா , திரையிசையில் ஒரு முன்னோடி.அவருக்கு முன்னிருந்த இசையை மாற்றி , வடநாட்டுப்பாணியை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.ராஜாவின் சங்கீதம் மேன்மை , இனிமை , மென்மை ஆகிய மூன்றின் சங்கமம் ”  என்பார் அவரது சமகாலப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ்.[ திரை இசை  அலைகள் -1 ,  வாமனன் ]
இக்காலங்களில் மெல்லிசைப்பாங்கை முன்னிறுத்திய முக்கிய இசையமைப்பாளராக முன்னணிக்கு வந்துகொண்டிருந்தவர்  மெல்லிசைமன்னர்களின் சமகாலத்தவரான டி.ஜி.லிங்கப்பா. 1950 களிலிருந்தே சிறந்த பல பாடல்களைத் தந்தவர் .அவர் இசையமைத்த சில பாடல்களை உற்று நோக்குவது பொருத்தமாகும்.


ஓ ,,ஜெகமத்தில் இன்பம் தான் வருவதும் எதனாலே – [மோகனசுந்தரம் 1950]
பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா – [ மோகன சுந்தரம் 1950]
மதுமலரெல்லாம் புதுமணம் வீசும் – [கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி 1954]
தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ – ஒரு நாள் 1956]
அமுதை பொழியும் நிலவே – [ தங்கமலை ரகசியம் 1957]
இக லோகமே இனிதாகும்- [ தங்கமலை ரகசியம் 1957]
கானா இன்பம் கனிந்ததேனோ – சபாஷ் மீனா 1958]
சித்திரம் பேசுதடி  எந்தன் சிந்தை மயங்கித்தாடி –  [சபாஷ் மீனா 1958]
தென்றல் உறங்கிடக் கூடுமடி  எங்கள் சிந்தை உறங்காது – [ சங்கிலித் தேவன் 1960]
படிப்புத் தேவை முன்னேற படிப்புத் தேவை – [சங்கிலித் தேவன் 1960 ]
தாமரைப் பூ குளத்திலே சாயங்கால பொழுதிலே [ முரடன் முத்து 1965]
ஏ.எம்.ராஜா ,டி.ஜி.லிங்கப்பா போன்றவர்கள் மெல்லிசைமுன்னோடிகள் என்பதையாரும் மறுத்துவிட முடியாது.துரதிஷ்டாவசமாக ஏ.எம்.ராஜா  ஒதுக்கப்படடமையும் , அல்லது ஓதுங்கியமையும் , டி.லிங்கப்பா , இயக்குனர் பி.ஆர் .பந்துலுவால் கன்னடப்படங்களில்   சிறப்பாகப்  பயன்படுத்தப்படடமையாலும் தமிழ் சினிமா இரு மாபெரும் இசையமைப்பாளர்களின் இசையை இழந்தது.
இசையமைப்பாளர்களின் திறமை ஒரு பக்கம் இருந்தாலும் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் அளவுக்கதிகமான தலையீடும் இனிய இசை தரமுனைந்தவர்களுக்கு கொடுக்கப்படட இடையூறுகள் கசப்பாகவே  இருந்தததை பலரும் பதிவு செய்திருக்கிறார்கள்.இது பற்றி இசை ஆய்வாளர் திரு.வாமனன் “திரை இசை அலைகள் ” நூலில் பின்வருமாறு எழுதுகிறார்.
ஏ.எம்.ராஜா


” படித்து படம் பெற்ற ராஜா , கண்டிப்பும் கட்டுப்பாடும் மிக்கவர்.தன் பணியைக் குறித்து படு சீரியஸான  கண்ணோட்டம்  உடையவர்.தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க  வேண்டும் என்று நினைப்பார்.சினிமா உலகின் நெளிவு சுழிவுகளும் , சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய  நீக்கு போக்குகளும் ராஜாவுக்கு கைவராத விஷயங்கள்…..தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால் ஒலிப்பதிவுக் கூடத்தை விட்டு விட்டு பேசாமல் வீட்டுக்கு சென்று விடக்கூடியவர் ராஜா.”
டி.ஜி.லிங்கப்பா


கல்யாணம்  பண்ணியும் பிரம்மச்சாரி படத்திற்கு இசையமைப்பதில் லிங்கப்பாவுக்கு ஒரு சங்கடம் இருந்தது.பந்துலுவுக்கு மெட்டுப் போட்டுக் காட்டுவார்.ஓகே ஆகும்.நீலகண்டன் அவற்றை நிராகரிப்பார்.வேறு மெட்டுக்கள் போடச்  சொல்வார். ” நீலகண்டன் சொல்ற மாதிரிச் செய்திடு ” என்று இயக்குனருக்கு வீட்டுக் கொடுத்தார் தயாரிப்பாளர் பந்துலு. ” கர்நாடக பாணியில் லைட்டா கொடுத்தா  பந்துலுவுக்குப் பிடிக்கும், ஆனா நீலகண்டன் பாமரமான இசையைத் தான் கேப்பார்.
நீலகண்டனுக்கு இருந்த இன்னொரு பழக்கமும் லிங்கப்பாவிற்கு நெருடலாக இருந்திருக்கிறது.
லிங்கப்பா மெடட்டமைத்தவவுடன்  திரைப்படக் கம்பனியில் வேலை பார்க்கும் டிரைவர் ,ஆபீஸ் பையன் எல்லோரையும் கூப்பிட்டு ” எப்படி இருக்கு ” என்று இசையமைப்பாளரின் முகத்திற்கு நேரேயே கேட்பாராம் நீலகண்டன்.
” நான் சங்கீத பரம்பரையியிலிருந்து வந்தவன்யா …என் ரத்தத்திலே  இசை ஓடுது …….நீ யார் யாரையோ கேட்டுக்கிட்டிருக்கே .!
இது போன்ற ஒரு சம்பவத்தை மெல்லிசைமன்னர் விஸ்வநாதன்,” நான் ஒரு ரசிகன் ” என்ற விகடன் தொடரில்  தனக்கு நேர்ந்த அனுபவத்தை  மிகுந்த மரியாதையுடன் பின்வருமாறு எழுதுகிறார்.
“…கொஞ்ச நாட்கள் கழித்து வாசன் ஸாரிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது.நானும் ராமமூர்த்தி அண்ணாவும் அவரைப் பார்க்கச் சென்றோம்.” வாருங்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களே !” என்னு வெளியில் வந்து எங்களை அவரே வரவேற்றார். உள்ளே அழைத்து உட்க்காரச் சொன்னார்  பெரியவர் என்ற மரியாதையுடன் நாங்கள் நின்றுகொண்டே இருந்தோம். ” நான் உட்காரச் சொல்றேன் .. உட்காருங்க ..” என்றார் அன்போடு.நாங்கள் உட்கார்ந்தோம்.
” நீங்கள் பல படங்களுக்கு இசையமைச்சு நல்ல புகழோடு இருக்கீங்க ..என்னோட அடுத்த தயாரிப்பு ” வாழ்க்கைப்படகு “! இந்தப் படத்துக்கு உங்களைத்தான் மியூசிக் டைரக்டரா  போடணும்னு எனக்கு வேண்டியவங்க, டிஸ்ரிபியூட்டர்கள் , நடிகர்கள் ,, ஏன் என் வீட்டில்கூட சொல்லிட்டாங்க… நான் உங்களை ரொம்ப இம்சை பண்ணுவேன். நான் நிறைய ஆட்களை வைச்சிருக்கேன் . இது நொள்ளை அது நொள்ளை குற்றம் சொல்லிக்கிட்டிருப்பாங்க ..” என்று வாசன் சார் சொன்னார்.எனக்கு ஒன்றுமே புரியலே.ராமமூர்த்தி அண்ணனோ தொடய்யக் கிள்ளி ” என்ன …விசு .. போயிடலாமா ?”னு கிசுகிசுத்தார்.முழுசாத்தான் கேட்டு தெரிஞ்சுக்குவோம்னு ” ஏன் சார் அப்பாடிச் சொல்றீங்க?”னு நான் கேட்ட்டேன்.
” இங்கே நிறைய ஆட்களுக்கு சம்பளம் கொடுத்து வெச்சிருக்கேன் அபிப்பிராயம் சொல்றதுக்கு .. இவங்கள்லாம் ஏதாவது சொல்லணுமென்கிறத்துக்காக சொல்வாங்க…. உங்களை ரொம்ப ” பன்ச்
“பண்ணுவாங்க ..”  பன்ச் ” பண்ணுவாங்க ..இதையெல்லாம் நீங்க சகிச்சுப்பீங்களா ?னு  வாசன் சார் கேடடார் .
யோசிக்கிறதுக்கு இரண்டு நிமிட டயம் கேட்டேன். ” நான் வேணும்னா வெளியே போய் இருக்கட்டுமா ?” ன்னார் அவர் ரொம்ப பெருந்தன்மையோட. நாங்க போறதா சொல்லிட்டு வெளியே வந்தோம்.
மெல்லிசைமன்னருடன் இறுதிக்காலம் வரை பணியாற்றிய கவிஞர் காமகோடியான் எம்.எஸ்.வி பற்றிய  ஒருசம்பவத்தை  பின்வருமாறு நினைவு கூறுவதை பாருங்கள்
காமகோடியன் :

பார் மகளே பார் படத்திலே , கவ்ஞர் கண்ணதாசன் வந்தாச்சு ,ஒரு பாட்டு எழுதி முடிச்சாச்சு.எம்.எஸ்.வீ நல்லா விசில் பண்ணுவாரு,நீரோடும் வைகையிலே பாடலை விசிலிலேயே பண்ணிட்டிருக்கிராரு ..நால்லாயிருக்கேடா பல்லவி போட்டிடுவோம் என்கிறார் கண்ணதாசன் ! கவிஞரே உங்க வேலை இன்னகைக்கு  முடிஞ்சுது.நாளைக்கு உட்காருவோம்.இது வந்து full song விசிலிலேயே பண்ணப்போறேன்.டேய் ,டேய் நல்லாயிருக்கிடா டுயூன் ,வார்த்தை போட்டா நல்லாயிருக்கும்.இதை புதிசா பண்ணுவோமே, நாளைக்கு சந்திப்போம்! கண்ணதாசன்  எழுந்திரிச்சு போயி நேரா சிவாஜி வாகினியில் இருப்பதை அறிந்து அங்கே  வாகினியிக்கு கார் எடுத்திட்டு போயி [ரெக்கார்டிங் நடப்பது ஏ.வீ. எம்மில் ] சிவாஜி சாரை கூட்டிக்கிட்டு நேரே இங்கே வந்திட்டாரு! சிவாஜி எம் எஸ் வீயை பார்த்து ” என்னமோ ஒரு டியூன்  போட்டியாமே , எங்கே ஒருக்கா வாசிச்சுக் காட்டு !இவ்வளவு அருமையான டுயூனுக்கு 4 நிமிஷம் விசிலே  அடிச்சா சனங்களுக்கு போய் சேருமா பாட்டு !? கவிஞர் எழுதட்டும்ன்னு சொல்லிட்டு போயிட்டாரு !
[Endrum Nammudan MSV – 16/08/2015 | SEG 01 ]
1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள் பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவன  பெற்றார்கள் என்று சொல்லலாம்.பதிபக்தி , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.
கதைகளின் நாயகர்களாக நடிப்பது மாறி தாங்கள் அடைந்த புகழால் மட்டுமல்ல, தங்கள் அரசியல் இயக்கத்தின் பின்புலத்தோடும் தமிழ் திரையின் மிகப்பெரிய நாயகர்களாக எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முன்னணிக்கு வந்தார்கள்.
கதைகளில் நடிப்பது என்பது மாறி இந்த நடிகர்களுக்காக செயற்கையாகக்  கதைகள் தயாரிக்கப்படும் புதிய கலாச்சாரம் தமிழ் திரையில் உதயமாக  இருநடிகர்களும் மூல காரணமாயினர்.
வீரதீர சாகசம் புரிபவராகவும் , தாயன்புமிக்கவராகவும் ,நேர்மை, வாய்மையாளனாகவும் ,ஏழைகளின் நண்பனாகவும் , காதலிகளால் மட்டும் காதலிக்கப்படும்  கதாநாயகனாகவும்  எம்.ஜி.ஆரும் , துன்பத்துயரில் தவிக்கும் கதாநாயகனாகவும் , சோகத்தை வாரிச்சுமக்கும், நாயகனாகச் சிவாஜியும் தங்களுக்கெனத் தனிப்பாதையில் வலம்வரத் தொடங்கிய காலம்.இந்நிலையில் படித்த சாதாரண மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாயகராக ஜெமினி கணேசனும் முன்னணிக்கு வந்தார் .

1950  களில் மெல்லிசைப்பாங்கில் தங்கள் தனித்துவத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படுத்த மெல்லிசைமன்னர்கள்  பாகப்பிரிவினை பாடல்களால் தனிக்கவனம்  பெற்றார்கள் என்று சொல்லலாம்.புதையல் , பதிபக்தி  , தங்கப்பதுமை போன்ற படங்களில்  தெறித்த மெல்லிசை உருவ அமைப்பு முழுமையாக ஹிந்தி திரை இசைக்கு நெருக்கமாக மாறி  தமிழ் திரையிசையை நகர்த்தியது.
பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து , கவிஞர் கண்ணதாசனால் தயாரிக்கப்படட “மாலையிடட மங்கை ” பட இசையால் மெல்லிசைமன்னர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள்
1950 களில் வீச ஆரமபித்த மெல்லிசைகாற்றில் ஆங்காங்கே புது புது நறுமணங்களை தூவி ரசிகர்களைக் கவர்ந்து புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும்.
1950 களிலேயே தலைதூக்கிய தெலுங்கு திரையின் மெல்லிசை, பத்து வருடங்கள் முன்னோக்கியதாவே இருந்தமை  மெல்லிசைமன்னர்களுக்கு உத்வேகம் கொடுத்திருக்கும் என நம்பலாம். தெலுங்கில் மட்டுமல்ல தமிழிலும் தெலுங்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்து சிறந்த பாடல்களையும் தந்து  கொண்டிருந்தார்கள்.தென்னிந்திய இசையுலகில் எழுந்த இசையலையின் போக்குகளையும் மெல்லிசைமன்னனர்கள் பற்றுக்கோடாகக் கொண்டிருப்பர் என்றும் கருதலாம். எனினும் தெலுங்கு திரையிசை மெல்லிசைக்கு மடைமாற்றம் பெற்ற வேகத்தில் நிகழாமல் , தமிழில் அதற்கான காலம் 1960 களில் கனியும் வரை பொறுத்திருக்க நேர்ந்தது.
தமிழ் திரையிசையின் முன்னோடிகளின் வழியில் சற்று விலகிவர முனைந்ததும்  ஹிந்தித் திரைப்பட இசையின் அதிர்வலையிலிருந்து மீள முயற்சி செய்ததுடன் அதற்கு நிகராக பாடல்களை உருவாக்குவதிலும் முனைப்புக் காட்டினார்கள்

[ தொடரும் ] T.சௌந்தர்

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *