மெல்லிசைமன்னர் எம். எஸ். விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 21 – T .சௌந்தர்

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும்

மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும்

பாடல்கள் பலவிதமான கட்டமைப்புகளைக் கொண்டியங்குகின்றன. மெட்டுகளில் பலவிதமான அமைப்புகள் இருப்பது போலவே பாடல்களில் இயல்பாய் இருப்பது தாளம். தாளமின்றி எந்த ஒரு பாடலும் இருக்க முடியாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாளமின்றி பாடல்களே இல்லை.  அதனாலதான்  ஸ்வரம், ராகம் , தாளம்  மூன்றும் சேர்ந்ததே சங்கீதம் என்று முன்னோர் கூறினர்.

பண்டைய தமிழ் மக்கள் இசை குறித்த மிகுந்த ஆற்றல் பெற்றவர்கள் என்பது வெறும் புகழ்ச்சி சார்ந்த கருத்தல்ல. இசை பற்றிய தெளிவும் , ஆற்றலும் மிக்கவர்கள் என்பதை பல பழைய நூல்கள் எடுத்தியம்புகின்றன.தொல் தமிழ்  இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழ் இலக்கணம் மட்டுமல்ல இசைபற்றிய அரிய கருத்துக்களையும் போகிற போக்கில் கூறிச் செல்கிறது. இசைக்கும் , மொழிக்கும் இடையே உள்ள நெருக்கமான பொதுத்தன்மையான ஓசை நயங்களை பேசும் பொது வண்ணம் பற்றிய செய்திகளையும் கூறிச் செல்கிறது. குறிப்பாக இருபது வண்ணங்களை பற்றிய குறிப்புகளையும் பேசுகிறது .அவையாவன ..

1. பாஅ வண்ணம்   2. தாஅ  வண்ணம்    3. வல்லிசை வண்ணம்   4. மெல்லிசை வண்ணம்   5.இயைபு வண்ணம்   6.அளபடை வண்ணம்   7.நெடுஞ்சீர்  வண்ணம்  8. குருஞ்சீர் வண்ணம்  9. சித்திர வண்ணம்   10. நலிபு வண்ணம்  11. அகப்பாட்டு வண்ணம்   12. புறப்பாட்டு வண்ணம்   13.ஒழுகு வண்ணம்   14. ஒருஉ வண்ணம்  15. எண்ணு வண்ணம்  16.அகைப்பு வண்ணம்  17. தூங்கல் வண்ணம் 18. ஏந்தல் வண்ணம் 19. உருட்டுவண்ணம்  20.முடுகு வண்ணம்.

தொல்காப்பியம் ஒரு மொழியியல் நூல் [ Linguistic  ] என்று குறிப்பிடும் போது தொல்காப்பியர் பன்டைய காலத்திலிருந்த இயல் இலக்கணம் ,இசை இலக்கணம், நாடக இலக்கணம் ஆகிய நூல்களிலிருந்து இயல் இலக்கணத்தை மட்டும் பிரதானமானது தொகுத்தார் என்றும் அதில்  இசையின் இலக்கணக் கூறுகளையும் கூறத்தவறவில்லை எனப்தையும் அறிஞர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

மோனை .எதுகை , இயைபு முதலிய தொடைகளின் இலக்கணம், இசைக்க கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை , விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுவன. இவற்றை முதன்முதலில் தமிழகத்திற்கு அறிமுகப்படுத்தியது தொல்காப்பியமே. மோனை  முதலிய தொடைகளின்  இலக்கணம் இல்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடல்களுக்குரிய யாப்பு வகைகளை தொல்காப்பியம் மிகவும் அழகாக வகுத்து பகுத்துக் காட்டியுள்ளது. தொல்காப்பியத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது , என்பார் இசையறிஞர் வீ.பா.கா.சுந்தரம்.

முன்னைக்காலம் தொட்டு இன்று வரை சில விஷயங்கள் சங்கிலித் தொடர் போல தொடர்ந்து வருவதை இசையிலும் நாம் காண முடியும். குறிப்பாக தாளம் பற்றி இன்றும் நாம் அறிகின்ற ஐந்து வகை தாளங்கள் இதற்கும் சான்றாக விளங்குகின்றன. சதுஸ்ரம் , திஸ்ரம் , மிஸ்ரம் , கண்டம் , சங்கீரணம்  இன்றும் கர்னாடக இசையுலகில் பேசப்படும் தாளங்கள் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியம்  , சிலப்பதிகாரம் போன்ற நூல்கள் அவை பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

தாளம் பற்றி தொல்காப்பியம் வியக்கத்தக்க செய்திகளையும் கூறுகின்ற போது  அவற்றின் தமிழ் பெயர்களில் நடை என குறிப்பிடுகின்றது.

01. மூன்றன் நடை [ (திஸ்ர நடை ] – தகிட

02  நாலன் நடை  [ சதுஸ்ரம்   ] – தகதின – தகதிமி — தாதிமி

03  ஐந்தன்  நடை [ கண்டம் ] – தக திமித — தக தகிட

04  ஏழன்  நடை   [ மிஸ்ரம் ] – தகிட தகதிமி — தனன தந்தன 

05. ஒன்பான் நடை [சங்கீர்ண நடை] – தகதிமி தகிடதக — தாக தக தக தக

“நடைமிகுந்தேத்திய குடை நிழல் மரபும்  ” என்ற தொல்காப்பியரின் வரிகள்  மூலம் அறிகிறோம்.

//.. இயற்றமிழுக்குரிய  ஐந்து  அங்கங்களான  எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பனவைகளோடு சுருதி, சுரம், இராகம், தாளம் முதலிய நான்கும் சேர்ந்து, இசைத்தமிழுக்கு மொத்தம் ஒன்பது அங்கங்களாகும். தாளம் இசையின்; கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது ஆகும். பாடல்களுக்கு வடிவமும், நடையும், விரைவும்,  எழுச்சியும்  நல்குவது  தாளமே.  ‘தாளம் இன்றேல் கூழம்’  என்பார்  பாரதியார்.//  என்பார்   இசை ஆய்வாளர் ஆ.ஷைலா ஹெலின்.

பாடல், இசையமைப்பு பற்றிய மெல்லிசைமன்னருடனான சில உரையாடல்களிலும் அவர் வழங்கிய பேட்டிகளிலும் முக்கியமான விஷயம் ஒன்றையும் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். அவரது  இசையமைப்பை வியக்கும் சிலரது கேள்விக்கு ” பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கும் , அந்த சந்தங்களையே தொடர்ந்தால் இசை வந்துவிடும் ” என்பார். இந்தக் கூற்றை வேறு ஒருவகையில் விளக்குவது போல மெல்லிசைமன்னர் விஸ்வநாதன பற்றி  கவிஞர் கண்ணதாசன்  , ” விஸ்வநாதனிடம்   ஒரு தினசரிப் பேப்பரின்  துண்டைக் கொடுத்தால் கூட மெட்டு போட்டுத்தருவான் ”  என்பார். உண்மையில் அவர் விளையாட்டாகக் கூறினாலும் சொற்களில் பொதிந்திருக்கும் ஒலிநயங்களில் இசையும் ஒளிந்திருக்கிறது என்பதை பழைய தமிழ் இலக்கண நூலான  தொல்காப்பியயமும் கூறுகிறது.

பழந்தமிழர்கள் இசைக்கும் மொழிக்கும் உள்ள மிக நெருக்கமான தொடர்புகளை மிக்கது துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர்.மொழிக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பையும் , ஒலிக்கும் ,ஓசைக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும், இசைக்கும் காலத்திற்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் சொற்களுக்கும் உள்ள தொடர்பையும் ,இசைக்கும் உடலுக்குமுள்ள பிணைப்பையும் மிகத்துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர்.

” பாடலின் வரிகளிலேயே இசை பொதிந்திருக்கு ” என விஸ்வநாதன் கூறிய கருத்து மிக உண்மை கருத்தாகும்.

வி.ப.க சுந்தரம்.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளின் பாடல்கள் சந்தங்களைஅல்லது பலவிதமான தாளங்களை / சந்தங்களை  அடிப்படையாகக் கொண்டன என்று விளக்குகிறார் வி.ப.க சுந்தரம்.

முரசியம்பின  முருட  திர்ந்தன

முறையெழுந்தன – பணிலம் வெண்குடை

அரசெ  ழுந்ததோர்  படியெழுந்தன

என்ற வரிகளை ” திகிட தகதிமி – தகதிமி ” என்ற மிஸ்ர நடையில் [ ஏழன் நடை ] , அது போலவே பிறப்பாடல்களை வேவ்வேறு சந்தங்களிலும் அமைத்தார் என விளக்குவார்.

மெல்லிசைமன்னர்கள் சந்தங்களில் , தாளநடைகளில் பல நுட்பங்களையும் வெளிப்படுத்தியள்ளனர்.இன்றைய  நிலையில் சினிமா மொழியில் “தத்தகாரம்” என்று சந்தங்களை அழைப்பதை நாம் காணலாம். இசையமைப்பாளர் தாம் அமைக்கும் மேட்டை தத்தகாரத்தில் கூற பாடலாசிரியர்கள் அதற்கேற்ற வரிகளை எழுதிக்கொடுப்பதையும் நாம்அறிவோம்.

சந்தத்துக்கு அல்லது இசைக்கு  பாடல் வரிகளா  ? அல்லது பாடல் வரிகளுக்கு இசையா / சந்தமா ? என்ற சிறு விவாதங்கள்  அவ்வப்போது  நிகழ்வதுண்டு! ஒரு சில இசையமைப்பாளர்கள் மட்டுமே எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பவர்கள் என்றும்  விஸ்வநாதன் காலத்தில் ” தத்தகாரத்துக்கும் ” பாடல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவார். ஏலவே  எழுதப்பட்ட பாடல்களுக்கு மனத்துக்கிசைந்த இசையை எந்த இசையமைப்பாளரும் எளிதில் கொடுத்துவிட முடியுமா என்பது சந்தேகமானதே என்றாலும் அதிலும் வல்லமை காட்டியவர்கள் மெல்லிசைமன்னர்கள்.

மெட்டா ? பாடலா ? என்பதை மெல்லிசைமன்னர் பாடலாசிரியர்களிடம் ” கவிஞரே பாடல் சந்தத்துக்கா ? சொந்தத்துக்கா ? என்று கவிஞர்களின் உளப்பாங்கை மென்மையாக அறிந்து வசப்படுத்தும்  யுக்தியை நாம் அறிவோம். மெல்லிசைமன்னர்கள் பாடல்கள் மெட்டுக்கு எழுதப்பட்டனவா அல்லது பாடலுக்கு இசையமைக்கப்பட்டனவா என்பதை இலகுவில் கண்டுகொள்ள முடியாத வண்ணம் மிக இயல்பாக இருப்பதை நாம் காண்கிறோம்.

சந்தத்திற்கு எழுதப்பட்ட சில பாடல்களை ஒரு சிறப்பான பாடல்களாக்கி புகழ்பெற   வைத்த பெருமையும் மெல்லிசைமன்னரைச் சாரும்!

01  சிப்பியிருக்குது முத்துமிருக்குது  – வறுமையின் நிறம் சிவப்பு     [1981] –  எஸ்.பி.பி. + ஜானகி     –  இசை : விஸ்வநாதன்.

02  வான்  நிலா  நிலா    – பட்டினப்பிரவேசம்     [1977] –  எஸ்.பி.பி.   –  இசை : விஸ்வநாதன்.

பாடல்வரிகளிலேயே பாடல்களுக்கான இசை இருக்கிறது என விஸ்வநாதன் கூறுவது மிக நுட்ப்பமான விடயமாகும். இதை “ இசை மொழியியல் “ என்ற பகுப்பில் தொல்காப்பியர்  ‘வளியிசை’ என்று  குறிப்பிடுகிறார்.

“ காற்றின் ஓசை மனிதனின் உள்ளக் கருத்துக்கு இசைய வெளிப்படும்போது, அது வளியிசை என்கிறார்.” என்பார் ஆய்வாளர் ஆ. ஷைலா  ஹெலின். [ இசை மொழியியல் – என்ற கட்டுரையில் ]

“ அகத்தெழு வளியிசை யரிநப நாடி “

[ தொல் எழுத்து 3-102 ]

மொழியின் அடிப்படை ஒலியில் இருப்பது போல இசையும் ஒலியில்  அமைகிறது. இலைமறையாக கிடக்கும் இந்த நுட்பங்களையெல்லாம் பழந்தமிழர்கள் தெரிந்திருந்தனர் என்பது வியப்பானதாகும். உருவம் இல்லாத இசை,  உருவமில்லாத காற்றில் கரைந்து போவது போல  மாயம் காட்டும் ” மாயமான் ” ஆன இசைக்கு , தனது இசைவடிவம் ஒன்றிற்கு இசைஞானி இளையராஜா ” காற்றைத் தவிர வேறில்லை ” [ Nothing But Wind ] என்று பெயர் சூட்டியது இசையின் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டதால் தானோ என்ற எண்ணம் எழுகிறது.

பலவிதமான உள்ளடக்கங்களை பலவடிவச் சோதனைகளையும் செய்து பார்க்கும் திரை இசையமைப்பாளர்களால் மட்டுமே இசை குறித்து இது போன்றதொரு முழுமையான பார்வை பார்க்கமுடியும்..     

பாடல்களுக்கிடையிலே தாளங்களை வாயால் சொல்லிப்பாடும் ஒரு நுட்பத்தையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தியவர்கள் மெல்லிசைமன்னர்கள். தாந்தி நக்கடி , தாந்தி நக்கடி – தை தை தை ,தை தை – தகதிமித்தா – தந்தானா தந்தானா –  போன்ற தாள லயங்களையும் , கொன்னக்கோல் என அழைக்கபடும் முறையையும் விட்டு வைக்கவில்லை எனலாம்.

தாளக்கட்டுகளை வாயால் கூறுவதையும் தமது பாடல்களில் இணைத்த பாடல்களுக்கான சில உதாரணங்கள்:

01  Rock and Roll   – பதிபக்தி    [1959] – வி.என்.சுந்தரம் + சந்திரபாபு  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  இந்த திண்ணை பேச்சு வீரரிடம்    – பதிபக்தி    [1959] – டி.எம்.எஸ் + சந்திரபாபு  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  தந்தானா   பாட்டு பாடணும்     – மகாதேவி     [1959] – ரட்ணமாலா + சந்திரபாபு  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  லவ்பேர்ட்ஸ் லவ்பேர்ட்ஸ்       –  அன்பேவா   [1967] – பி.சுசீலா   –  இசை : விஸ்வநாதன்

05  அம்மாடி பொண்ணுக்கு தங்கமனசு     – ராமன் எத்தனை ராமனடி   [1969] – டி.எம்.எஸ் –  இசை : விஸ்வநாதன்

06  உனக்கென்ன மேலே நின்றாய்      – சிம்லா ஸ்பெஷல்  [1981] – எஸ்.பி.பி –  இசை : விஸ்வநாதன்.

கொன்னக்கோல்:

01  வெட்கமாய் இருக்குதடி    – பார் மகளே பார்     [1963] – சூலமங்கலம்  + லீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  நீயே எனக்கு என்றும்   – பாழே பாண்டியா    [1962] – டி.எம்.எஸ்   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  மாதவி பொன்மயிலாள்  – இருமலர்கள்   [1968 – டி.எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன்.

மேல்நாட்டு இசையில் ஜோட்லிங் [ Jodling  ] என்று அழைக்கப்படும் வாயால் தாளம் போடும் யுத்தியையும் பயன்படுத்தினார்கள் ; சில உதாரணங்கள் :

01  மலர் நின்ற முகம்     – வெண்ணிற ஆடை     [1964] – ஈஸ்வரி    –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  அள்ளிப்பந்தல் கால்கள்      – வெண்ணிற ஆடை     [1964] – ஈஸ்வரி    –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

03  என்ன வேகம் சொல்லு பாமா  – இருமலர்கள்   [1968 – டி.எம்.எஸ் + ராகவன்  –  இசை : விஸ்வநாதன்

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில்  1950 களில் அனறைய இசையமைப்பாளர்கள் நாட்டுப்புற இசையையும்  , கர்னாடக  இசையையும் கலந்து தந்த போது  தபேலா , மிருதங்கம் , பறை , டோலக் , டேப், கஞ்சிரா, தவில், செண்டை போன்ற தாளக்கருவிகளையும் பயன்டுத்தினார்கள் .இவர்களில் தனித்துவமிக்க இசைநடைகளை தனது கர்நாடக இசைசார்ந்த  இனிய பாடல்களில்  பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் அன்றைய இசையமைப்பாளர்கள். இவற்றுடன் வாயால் சொல்லப்படும் தாள லயமான கொன்னக்கோல் , ஜதி போன்றவற்றையும் எல்லா  இசையமைப்பாளர்களும் பயன்படுத்தினார்கள் . மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல், ஜதி போன்ற ஒலிகளை நாட்டியப்பாடல்களிலும் அன்றைய இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினர். ஆயினும் அதில் ஜி.ராமநாதன் இசை அதிக கவனம் பெற்றது.

ஜி.ராமநாதன் பாடலில் ஒலிக்கும் தபேலாவின் நாதம் சிறப்பாக இருக்கும் காதல் பாடல்களில்  மோர்சிங்கையும் சேர்த்து பாடல்களின் ஒலிநயத்தை சிறப்பாக்கியிருப்பார் ஜி.ராமநாதன். மதுரைவீரன் படத்தில் ” நாடகம் எல்லாம் கண்டேன் ” பாடலின்  மோர்சிங்கின் ஒலிசிறப்பை நாம் கேட்கமுடியும். 

மோர்சிங் :

01   நாடகம் எல்லாம் கண்டேன்  – மதுரைவீரன்  1956 – பாடியவர்கள் : டி.எம்.எஸ் + ஜிக்கி  – இசை : ஜி.ராமநாதன்           

02   ஆண்டவனே இல்லையே  – ராணி லலிதா  1958 – பாடியவர்கள் : டி.எம்.எஸ் – இசை : ஜி.ராமநாதன்

நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த துள்ளலிசைப் பாடல்களிலும் தாளம் துல்லியமாக இருக்கும். தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம்  போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில !

01   வாங்க மச்சான் வாங்க  – மதுரைவீரன்  1956 – பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.லீலா   – இசை : ஜி.ராமநாதன்

02   சும்மா இருந்தா சொத்துக்கு நாட்டம்  –  மதுரைவீரன்  1956 – பாடியவர்கள் : பி.லீலா  + ஜிக்கி  – இசை : ஜி.ராமநாதன்

03   கண்ணே உன்னால் நான் அடையும்   –  அம்பிகாபதி  1957 – பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + மதுரம்  – இசை : ஜி.ராமநாதன்

04   சங்கத்து புலவர்   –  சக்கரவர்த்தித்த திருமகள் 1957 – பாடியவர்கள் : என்.எஸ்.கிருஷ்ணன் + சீர்காழி  – இசை : ஜி.ராமநாதன்

05   அத்தானும் நீதானே    –  சக்கரவர்த்தித்த திருமகள் 1957 – பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன் + டி.வி.ரத்தினம்   – இசை : ஜி.ராமநாதன்  .

ஜி.ராமநாதன் காலத்திலேயே தனது தனித்துவத்தைக் காண்பித்த இன்னுமொரு இசை ஆளுமை திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஆவார். அவரது பாடல்களிலும் தனித்துவமான தாள நடைகளால் தனிச் சிறப்புமிக்கவராகத் திகழ்ந்தார்.ஜி.ராமநாதன் தாளநடையில் தனித்துவமிக்க நாதலய ஆழமும் [Base ],ஒலித்துல்லியமும் இருப்பது போல கே.வி.மகாதேவன் தாள நடையில் தனித்துவமான நாட்டுப்புற தாள இசையின் சிறப்பான கூறுகளும்   ஆழமும்  இருக்கும். 

கே.வி.மகாதேவன் இசையில் நாட்டுப்புறப்பாங்கில் அமைந்த பாடல்களிலும் தபேலா , பறை , தப்பு , டேப்பு, கடம், கஞ்சிரா, தவில், செண்டை ,கடசிங்காரி போன்ற வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பின்னாளில் இளையராஜாவின் இசையில்

அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட கடசிங்காரி என்ற தாளக்கருவியைக் கண்டுபிடித்தவர் கே.வி.மகாதேவன் இசைக்குழுவில் இருந்த சிங்காரம் என்பவர். இவரது மகன் தான் இன்று இளையராஜாவின் இசைக்குழுவில் இந்தக்கருவியை வாசித்து வருகின்ற “ ஜெயாச்சா “ என்றழைக்கப்படும் எஸ்.ஜெயச்சந்திரன் என்ற இசைக்கலைஞர்.

மேற்குறித்த தாளக்கருவிகள் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்கு சில உதாரணங்கள்:

01   மாமா மாமா மாமா   – குமுதம்  1959 – பாடியவர்கள் : டி.எம்.எஸ் + கே.ஜமுனாராணி – இசை : கே.வி.மகாதேவன்          

02   ஏர்முனைக்கு நேர் இங்கே  –  பிள்ளைக்கனியமுது  1959 – பாடியவர்கள் :  டி.எம்.எஸ்  – இசை : கே.வி.மகாதேவன்  

03   பார்த்தா பாசுரம்    –  திருவிளையாடல்  1966 – பாடியவர்கள் :   டி.எம்.எஸ்  – இசை :கே.வி.மகாதேவன்

04   நாதர் முடி மேலிருக்கும்     –  திருவருட்செல்வர்   1967 – பாடியவர்கள் :   டி.எம்.எஸ்   – இசை : கே.வி.மகாதேவன்

05   மணப்பாறை மாடு கட்டி     –  மக்களைப்பெற்ற மகராசி 1957 – பாடியவர்கள் : டி.எம்.எஸ்   – இசை : கே.வி.மகாதேவன்

பெரும்பாலும் பக்திப்படங்களிலும் கிராமியக்கதைகளிலும் கே.வி.மகாதேவன் அதிகம் பயன்படுத்தப்பட்டாலும் , தேவர் பிலிம்ஸ் தயாரித்த  எம்.ஜி.ஆர்  படங்களிலும் , சிவாஜி நடித்த பல சமூகக்கதைகள் கொண்ட படங்களுக்கும் இசையமைத்தார். குறிப்பாக 1960களின் முன்னணி இசையமைப்பாளர்களாக  மகாதேவனும் , மெல்லிசைமன்னர்களும் இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் இருத்திக் கொள்ளலாம். 1940களின் ஆரம்பத்திலிருந்து இசையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட மகாதேவன் இசையில் மெல்லிசைமன்னர்களின் தாக்கமும் இருந்தது என்பதை அவரது வாத்திய இசை பயன்படுத்தும் முறையை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஆனாலும் கே.வி.மகாதேவன் இசையில் ஒரேவகைமாதிரியான தாள நடைகள்   பயன்படுத்தப்பட்டு ஒருவிதமான சலிப்பும் , ஏதோ ஒருவகை பூர்த்தியாகாத தன்மையும் வெளிப்பட்டது என்பதை யாரும் மறுக்கவும் முடியாத நிலை இருந்தது. தாள நடைகளில் பரவலான வெளிதாக்கமற்ற நிலையும், ஒருவித வரட்சியும், கிராமியப்பாங்கை சுற்றிவந்த  எதிரொலிகளுமே அதிகம் தெரிந்தது.இது பல்கிப் பெருகி வந்த சினிமாவுக்கு போதுமானதாக இருக்கவில்லை என கூறலாம். மகாதேவனின் இசையில் வெளிப்பட்ட ஒரேவகைமாதிரியான தாளலயப் பாங்கான பாடல்களுக்கு  உதாரணமாகச் சில பாடல்களைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

01   மண்ணுக்கு மரம் பாரமா    – தை  பிறந்த வழி பிறக்கும்  1959 – பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி  இசை : கே.வி.மகாதேவன்          

02   நீ சிரித்தால் நான் சிரிப்பேன்   –  பாவை விளக்கு  1959 – பாடியவர்கள் : சூலமங்கலம்   – இசை : கே.வி.மகாதேவன்  

03   சின்னப்ப பாப்பா எங்க செல்ல பாப்பா    –  வண்ணக்கிளி   1966 – பாடியவர் :  பி.சுசீலா     – இசை :கே.வி.மகாதேவன்

04   ஒரே ஒரு ஊரிலே     –  படிக்காத மேதை   1961 – பாடியவர்கள் :   டி.எம்.எஸ் + சூலமங்கலம்    – இசை : கே.வி.மகாதேவன்

05   படித்ததினால் அறிவு பெற்றோர்     –   படிக்காத மேதை 1961 – பாடியவர்கள் : எம்.எஸ்.ராஜேஸ்வரி   – இசை : கே.வி.மகாதேவன்.

01   காட்டு ராணி கோட்டையிலே     – தாயைக் காத்த தனயன்   1962- பாடியவர்கள் : பி.சுசீலா   இசை : கே.வி.மகாதேவன்          

02   காட்டுக்குள்ளே திருவிழா   –  தாய் சொல்லைத்த தட்டாதே 1962- பாடியவர்கள் : பி.சுசீலா   – இசை : கே.வி.மகாதேவன்  

தங்களுக்குப் பரிட்சயமானதாள வாத்தியக்கருவிகளைப் பயன்படுத்தி வந்த இக்காலங்களில் மெல்லிசைமன்னர்கள் பொங்கஸ் என்ற லத்தீன் அமெரிக்க தாளக்கருவியை அதிகமாகப் பயன்படுத்தி தமிழ் சினிமாவின் இசைமுகத்தையே மாற்றிக்கொண்டிருந்தனர்.

அவர்களை பின்பற்றி கே.வி.மகாதேவனும் தனது பாடல்களில் பொங்கஸ் இசைக்கருவியின் நாதத்தைப்  பின்னிப்பார்க்க விழைந்ததை  அவரது பல பாடல்களில் கேட்கின்றோம். இதற்கு எடுத்துக்காட்டாகச் சில பாடல்கள்.

01   நதி எங்கே போகிறது  – இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா   இசை : கே.வி.மகாதேவன்          

02   எண்ணிரண்டு பதினாறு  –  அன்னை இல்லம்  1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் +  ஈஸ்வரி   – இசை : கே.வி.மகாதேவன்   

03   உன்னை அறிந்தால் நீ  –  வேட்டைக்காரன் 1966 – பாடியவர் :   டி.எம்.எஸ்    – இசை :கே.வி.மகாதேவன்

04   அழகு சிரிக்கின்றது  – இருவர் உள்ளம் 1962- பாடியவர்கள் : டி.எம்.எஸ் + பி.சுசீலா – இசை : கே.வி.மகாதேவன்

05   சித்திரை மாத நிலவினிலே  – துளசிமாடம்  1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் –  இசை : கே.வி.மகாதேவன் 

06   ஆடும் மயிலே ஆட்டம் எங்கே   – துளசிமாடம்  1965- பாடியவர்கள் : டி.எம்.எஸ் –  இசை : கே.வி.மகாதேவன்.

மெல்லிசைமன்னர்கள் இசையில் பொங்கஸ் இசைக்கருவி பயன்படுத்தப்பட்ட பாடல்களின் பட்டியலை இக்கட்டுரையின் பத்தாவது பகுதியிலும் , பொங்கஸ் வாத்தியம் பற்றிய செய்திகளை எனது நூலிலும் வாசிக்கலாம்.

சோற்றுப்பதமாகச் சில பாடல்கள் :

01  ஹல்லோ மிஸ் ஹல்லோ மிஸ்  – என் கடமை  [1964] –  TMS  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  போனால் போகட்டும் போடா  – பாலும் பழமும் [1961] –  TMS  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  வந்த நாள் முதல்  – பாவமன்னிப்பு  [1961] –  TMS  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  அண்ணன் காட்டிய வழியம்மா  – படித்தால் மட்டும் போதுமா  [1961] –  TMS  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  மெல்ல நட மெல்ல நட   – புதிய பறவை   [1964] –  TMS  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

அறுபதுகளின் முற்கூறிலும் நடுப்பகுதியிலும் அதிகமாக பொங்கஸ் தாளக்கருவியை மிக எழுச்சியுடனும் பயபடுத்தினார்கள் என்று சொல்லும் போது அதன் இனிய அதிர்வு லயத்தை வேறு சில தாளவாத்தியக்கருவிகளுடனும் பயன்படுத்தி தாளப்பயன்பாடுகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அந்த வகையில் மெல்லிசைக்கு புதுநெறி வகுத்தவர்களாக விளங்கும் மெல்லிசைமன்னர்கள் அவர்களது சமகாலத்தவர்களுடன் ஒப்பிடும் பொழுது ஈடிணையற்றவர்களாக விளங்குவதையும் காண்கிறோம். 

பொங்கஸ் தாளக்கருவி என்பது லத்தீன் அமெரிக்க இசைக்கருவி. அமெரிக்கக்கண்டத்திற்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட ஆபிரிக்க உழைக்கும் மக்களின் இசைக்கருவி. இத்தாளவாத்தியக்கருவி லத்தீன் அமெரிக்க இசையில் அதிக தாக்கம் விளைவித்த வாத்தியம். பொழுது போக்கு இசையிலும் ,வியாபார வெற்றியிலும் உலகைக் கலக்கிய தாள வாத்தியம்.

அந்த வாத்தியக்கருவியை நமது மரபுசார்ந்த தளங்களுடன் இணைத்த பெருமை மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையே சாரும். பாடல்களின் தாளங்களுக்கு பொருத்தப்பாடாக, ஆற்றொழுக்காக , ஒன்றை ஓன்று குழப்பாமல் , தெளிந்த ஓட்டத்தில் அதைக் கலந்து தந்த மெல்லிசைமன்னர்களின்  பேராற்றல் எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.  எந்தவகையான பாடல்களாயினும் அவற்றிலெல்லாம் நுட்பமாயும் , நுண்கூர்மையுடனும் தந்த அவர்களது படைப்பாற்றல்   அவதானம் கொள்ளப்பட  வேண்டியது அவசியமாகிறது.

திரைப்பட  மெல்லிசைப் பாடல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட தாள வாத்தியக்கருவி  தபேலா ஆகும். எல்லாவிதமான பாடல்களிலும் இவ்வாத்தியம் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த வாத்தியத்துடன் பொங்கஸ் வாத்தியத்தை மெல்லிசைமன்னர்கள் புயன்படுத்திய விதம் என்பது அவர்களது புதுமை வேட்கையை துலக்கமாகக் காண்பிக்கக் கூடியதாகும்.

விதம் , விதமான தாள வாத்தியங்கள் மூலம் தாள நடைகளை மாற்றி, மாற்றி போட்டு அவற்றை  பாடல்களின் ஒருங்கிசைந்த சுவையின்பத்தின் அடிநாதமாக்கிக்  காட்டினார். பொங்கஸ்  மற்றும் தபேலா வாத்தியங்களை அற்புதமாகக் கலந்த பாடல்கள் சிலவற்றை இங்கே நோக்கலாம்.

பொங்கஸ் மற்றும் தபேலா இணைந்து வருகின்ற பாடல்கள் சில:

01  நினைக்காத தெரிந்த மனமே   – ஆனதா ஜோதி   [1962] – பி. சுசீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

01  பேசுவது கிளியா இல்லை     – பணத்தோட்டம்    [1962] – டி .எம்.எஸ் +பி. சுசீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  என்னை மறந்ததென்  – கலங்கரை விளக்கம்   [1965] –  பி.சுசீலா   –  இசை : விஸ்வநாதன்

03  ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்   – சாந்தி    [1967] – பி.சுசீலா  –  இசை : விஸ்வநாதன்

இந்தப்பாடல் பொங்கஸ் தாளத்துடன் ஆரம்பிக்கிறது இடையில் மட்டும் மிக அருமையாக தபேலா இணைந்து கொள்ளும் அழகோ அழகு!

04  யாருக்கு மாப்பிள்ளை   யாரோ   – பார்த்தால் பசி தீரும்    [1962] –  பி.சுசீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  மதுரா நகரில் தமிழ்சங்கம்   – பார் மக்களே பார்     [1963] – பி.பி.எஸ் + பி.சுசீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   

06  என் கேள்விக்கென்ன பதில்     – உயர்ந்த மனிதன்   [1965] – டி.எம்.எஸ் + பி.சுசீலா   –  இசை : விஸ்வநாதன்

பலவிதமான தாள வாத்தியங்களை வைத்து வித்தியாசமான தாளநடைகளில் அமைந்த பாடல்கள்  :

01  தாழையாம் பூமுடிச்சு  – பாகப்பிரிவினை   [1964] – டி .எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  தொட்டால் பூ மலரும்     – படகோட்டி    [1964] – டி .எம்.எஸ் +பி. சுசீலா  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  கொடுத்ததெல்லாம் கொடுத்தான்     – படகோட்டி    [1964] – டி .எம்.எஸ்   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  கட்டோடு குழலாட ஆட  – பெரிய இடத்துப் பெண்   [1964] – டி .எம்.எஸ் + சுசீலா + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  நான் மாந்தோப்பில்  – எங்க வீட்டுப் பிள்ளை   [1964] – டி .எம்.எஸ்+ ஈஸ்வரி   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டோலக் + தபேலா  

06  தரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி    [1964] – டி .எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டேப் + தபேலா

07  எல்லோரும் கொண்டாடுவோம்  – பாவமன்னிப்பு   [1961] – டி .எம்.எஸ்+  ஹனீபா  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டேப்

08  தாயத்து தாயத்து  – மகாதேவி    [1957] – டி .எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டேப்

10  தரை மேல் பிறக்க வைத்தான் – படகோட்டி    [1964] – டி .எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டேப் + தபேலா.

தாம் அமைக்கும் மெட்டுக்களின் அமைப்பிற்குள்ளேயே அதன் உறுதிப்பாட்டில் நிலைகொண்ட வண்ணம்  அதன் மையத்தைத் தழுவியும் ,சற்று விலகியும் தாளநடைகளை மாற்றியும் தங்கள் படைப்பாற்றல் மூலம் நெஞ்சை அள்ளும் பல பாடல்கள்தந்த அற்புதங்களையும் நாம் காண்கின்றோம். மனவெழுச்சிகளை  வெளிப்படுத்துகின்ற இசையில் அதனுடன் இணைந்த உணர்ச்சி பாவங்களையும் பல வண்ணக்கலவையால் ஓவியத்தில் நீகழ்த்துவது போல விதம்விதமான வர்ணஜாலங்களாக விரைந்தெழுந்து,அவை மடமாறும் இடங்களில் ஒன்றை ஒன்று உறுத்தாமல் மடைமாறிச் செல்வதும் அதன் நேர்த்தியும் நம்மை வியக்க வைப்பதுடன் நம்மை இனம் புரியாத ரசபாவத்திற்கும் உள்ளாக்கும் அதிசயத்தையும் காண்கிறோம்.குறிப்பாக அந்தந்த கணங்ககளில் இசைநெறியில் சுழலவேண்டிய  வாத்தியக்கருவிகளை வாசித்தளித்த இசைக்கலைஞர்களின் கைநேர்த்தியும் , அவர்களைக்  கையாண்ட  மெல்லிசைமன்னர்களின் கூர்மையான நோக்கும் கலைநேர்த்திமிக்கவையாகும்

இன்று அந்தப்பாடல்களை மீண்டும் பாடி புதிதாக ஒலிப்பதிவு செய்து வெளிவரும் இசைத்தட்டுக்களில் , இத்தனை துல்லியமான ஒலிப்பதிவுகள் , தொழில்  நுட்பங்கள் இருந்த போதும் வாத்தியங்கள் மடைமாறும் இடங்களிலெல்லாம் இடறி விழுவதைக் கேட்கின்றோம். இத்தனை தொழில்நுட்ப்பமில்லாத அந்தக்காலத்தில் அந்தக்கால வாத்தியக்கலைஞர்களின் ஞானமும் ,கைத்திறனும்  எத்தகையது என்பதை வாத்தியக்கலைஞராகத் தனது வாழ்வை ஆரம்பித்த இளையராஜா பின்வருமாறு கூறுவார்.  “அண்ணன் விஸ்வநாதன் இசைக்குழுவிலிருந்த வாத்தியக்கலைஞர்களுக்கு கிட்ட போகவே பயமாக இருக்கும் ; அத்தனை திறமைசாலிகள் ” என்பார்.

பாடல்களில் தாளம் மற்றும் மெட்டுக்களில் மாற்றங்களைகளைக் காட்டுவதன் மூலம் வெவ்வேறுவிதமான சூழ்நிலைகளை அதனூடே சிலசமயங்களில் வெவ்வேறு சமூக நிலைகளையும்  வெளிப்படுத்தும் அழகையும் பல விதங்களில் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

பாடல்களில் பலவிதமாக மாறி மாறி வரும் மெட்டுக்களும் அதற்கிசைந்த தாள மாறுதல்களும் :

01  எங்க வாழ்க்கையிலே     – ஒன்று பட்டால் உண்டு வாழ்வு   [1956] – சுசீலா  + ஜமுனாராணி   –   இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

02  ஆடைகட்டி ஆடும் நிலவோ    – அமுதவல்லி   [1957] – டி .ஆர்.மகாலிங்கம்   + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

 தாளநடைகளில் மாற்றங்களை தங்களது  ஆரம்ப காலங்களிலேயே புது தினுசாக பரீட்சித்துப் பாரத்தவர்கள் மெல்லிசைமன்னர்கள் என்பதற்கு இந்தப்ப பாடலே சாட்சி என்று கூறி விடலாம். எத்தனை விதமான தாள நடைகள் எனபதை உற்றுக் கேட்டால் நாம் அனுபவிக்க முடியும்.

03  மனம் கனிவான அந்த மங்கையை     – இது சத்தியம்  [1963] – டி எம் எஸ்  + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

என்னே , அற்புதமான பாடல் இது ! எத்தனை  இனிமை என்று வியக்கின்ற பாடல்களில் இதுவும் ஒன்று ! அருமையான இந்தப்பாடலில் எத்தனை விதம் விதமான தாள நடைகள் பயன்டுத்தியிருக்கின்றார்கள். மெட்டு எப்படியெல்லாம் மாறி, மாறி ஜாலம் காட்டுகிறது!

பாடலின் ஆரம்பம் தபேலா தாளத்துடன் ஆரம்பிக்கும் அழகும் , பல்லவி முடிந்து வருகிற பொங்கஸ் தாளம் என பாடல் முழுவது தபேலா, பொங்கஸ் வாத்தியங்களை வைத்து சுழன்று வரும் பாடலில் ஹம்மிங்கையும்   இணைத்து மெல்லிசைமன்னர்கள் போதையூட்டுகிறார்கள். 

04  நான் உயர உயர   – நான் ஆணையிட்டால்  [1964] – டி.எம்.எஸ் + சுசீலா   –  இசை : விஸ்வநாதன் 

      இந்தப்பாடலில் .. உயரும்போதுமயங்கி விடாமல் ” என்ற இடத்தில் ஒரு மாறுதலும் பின்னர் ” தாய்தந்தாள் பால் மயக்கம் ”   என்ற இடத்தில் ஒரு மாறுதலும் என பலவிதமான நடைகளுடன் பாடல் நளினம் காட்டும். 

05  ஜவ்வாது மேடையிட்டு   – பணத்தோட்டம்  [1963] –  டி.எம்.எஸ் + சுசீலா  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி          

        இந்தப்பாடலில் ” நாகலிங்கப்பூ எடுத்து ” என்ற இடத்தில் புதிய திருப்பம் காட்டும் இந்தப்பாடல்.

06  நினைத்தால் சிரிப்பு வரும்    – பாமா விஜயம்  [1968] –  சுசீலா + ஈஸ்வரி   – இசை : விஸ்வநாதன்

        “ஆடை மாறிய பாணி என்ன கிருஷ்ணய்யா” என்ற பாடல் வரிகளில் மெட்டும் , தாளமும்  மாறி விடும்.

07  அடியே நேற்று பிறந்தவளே     – என் தம்பி  [1969] –  சுசீலா + டி.எம்.எஸ்    – இசை : விஸ்வநாதன் 

08  தேடி தேடி காத்திருந்தேன்     – பெண் என்றால் பெண்   [1969] –  சுசீலா   – இசை : விஸ்வநாதன் 

09 தங்கத் தேரோடும் வீதியிலே     – லட்சுமி  கல்யாணம்   [1968] – டி எம் எஸ்  + சீர்க்ஸ்ழி    – இசை : விஸ்வநாதன்

10  கண்களும் காவடி சிந்திக்கட்டும்  – எங்க வீட்டுப் பிள்ளை   [1964] – ஈஸ்வரி   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  – டோலக் + தபேலா

ஒரே பாடலுக்குள் பலவிதமான  மெட்டு அடுக்குகளை  வைத்து பல்வேறு இசைக்கார்வைகளை வித்தியாசமான தாளநடைகளிலும் அமைத்துக்காட்டி தனது படைப்பாற்றல் எல்லையற்றது என மெல்லிசைமன்னர் நிரூபித்த பாடல்கள் சில :

01  மதுரா நகரில் தமிழ் சங்கம்    – பார் மக்களே பார்    [1963] –  பி.பி.எஸ் + சுசீலா    –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பெண் போனால் இந்த பெண் போனால்   – எங்க வீட்டுப் பிள்ளை   [1963] –  டி .எம்.எஸ்   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  தத்தை நெஞ்சம் முத்தத்தில்   – சர்வர் சுந்தரம்   [1965] –  சுசீலா    –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  நான் உயர உயர போகிறேன்    – நான் ஆணையிட்டால்   [1968] –  டி .எம்.எஸ்  + சுசீலா    –  இசை : விஸ்வநாதன்

05  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்   – அன்பே வா  [1969] –  டி .எம்.எஸ் +பி. சுசீலா   –  இசை : விஸ்வநாதன்

06  ஒரு ராஜா ராணியிடம்   – சிவந்த மண்    [1969] –  டி .எம்.எஸ் +பி. சுசீலா   –  இசை : விஸ்வநாதன்

07  முத்தமோ மோகமோ    – பறக்கும் பாவை   [1970] – டி .எம்.எஸ் + சுசீலா    –  இசை : விஸ்வநாதன்

08  நினைத்தால் சிரிப்பு வரும்   – பாமா விஜயம்    [1968] – சுசீலா + ஈஸ்வரி  – இசை : விஸ்வநாதன்

09  பாரதி கண்ணம்மா   – நினைத்தாலே இனிக்கும்    [1979] – எஸ்.பி.பி + வாணி   –  இசை : விஸ்வநாதன்

10  தங்கத் தோணியிலே – உலகம் சுற்றும் வாலிபன்    [1973] – ஜேசுதாஸ் + சுசீலா  –  இசை : விஸ்வநாதன் 

11  என் கேள்விக்கென்ன பதில்  – உயர்ந்த மனிதன்   [1967] – டி .எம்.எஸ்+  சுசீலா   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

11  நான் அளவோடு ரசிப்பபவன்    – எங்கள் தங்கம்    [1969] –  டி .எம்.எஸ் + சுசீலா    –  இசை : விஸ்வநாதன் 

பாடல் அமைப்பு உத்திகளில் ஒரு பாடலின் முன்பகுதியை ஒரு பாடகரும் , பின்பகுதியை ஒரு பாடகரும் பாடும் வண்ணம் அமைத்து பாடலுக்கு சுவை சேர்த்தவர்கள் மெல்லிசைமன்னர்கள். பின்னர் விஸ்வநாதன் தனியே பிரிந்து இசையமைத்த போதும் இந்த அமைப்பைப் பயன்படுத்தினார். அதற்கு சில உதாரணங்கள் :

01  வாராதிருப்பானோ      – பச்சை விளக்கு  [1957] – டி .எம்.எஸ். + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

02  பாட்டுக்கு  பாட்டெடுத்து      – படகோட்டி   [1964] – டி .எம்.எஸ். + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

03  மனம் கனிவான அந்த     – இது சத்தியம்  [1963] – டி .எம்.எஸ். + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

04  நான் மாந்தோப்பில்    – எங்க வீட்டுப் பிள்ளை  [1963] – டி .எம்.எஸ். +ஈஸ்வரி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  மலர்ந்தும் மலராத     – பாசமலர்   [1961] – டி .எம்.எஸ். + சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  கட்டோடு குழலாட ஆட    – பெரிய இடத்து பெண்  [1957] – டி .எம்.எஸ். + சுசீலா + ஈஸ்வரி    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

06  பொன்னெழில் பூத்தது புதுவானில்    – கலங்கரை விளக்கம்   [1957] – டி .எம்.எஸ். + சுசீலா    – இசை : விஸ்வநாதன்

திரைக்காட் சிகளில் பயணம் செய்யும் போது பாடும் பாடல்களுக்குப் பொருத்தமாகவும் தாளங்களை அமைத்து பாடல்களில் அமைத்து பாடல்களின் இனிமையில் கரைத்து வெளியே தெரியாத வண்ணம் காட்டிய  புதுமையின்  முன்னோடிகள் தான் மெல்லிசைமன்னர்கள்!

குதிரை வண்டி , மாட்டுவண்டி , புகையிரதம் , கார் எதையும் அவர்கள் தாளநடையில் காட்டினார்கள்.

குதிரை வண்டி:

01  அச்சம் என்பது மடமையடா      – மன்னாதி மன்னன்  [1960] – டி.எம்.எஸ்    –   இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி .

02  வாழ்வது என்றும் உண்மையே      – ராஜா மலையசிம்மன்     [1960] – சீர்காழி  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி .

03  அழகுக்கும் மலருக்கும்  – நெஞ்சம் மறப்பதில்லை   [1968 – பி.பி.எஸ்  + ஜானகி  –  இசை : விஸ்வநாதன். ராமமூர்த்தி.

04  ஓகோ கோ மனிதர்களே   – படித்தால் மட்டும் போதுமா   [1968 – டி.எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி

05  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்       – அன்பே வா   [1968] – டி.எம்.எஸ் + சுசீலா –  இசை : விஸ்வநாதன்.

மாட்டுவண்டி :

05  பாரப்பா பழனியப்பா    – பெரிய இடத்துப் பெண்    [1963]  – டி.எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி 

06 ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி     –  பாசம்    [1962] – ஜானகி   –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

 ரயில் :

07  கேள்வி பிறந்தது அன்று   – பச்சை விளக்கு  [1964 ] – டி.எம்.எஸ்  –  இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி.

08  சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்      – ராமன் எத்தனை ராமனடி   [1969] – சுசீலா –  இசை : விஸ்வநாதன்.

09  கடவுள் ஒரு நாள் உலகைக்கான  – சாந்தி நிலையம்   [1969 ]- சுசீலா   –  இசை : விஸ்வநாதன். 

திரையில் இசை என்பது பாடல் மட்டுமே என்ற புரிதல் இருந்துவரும் சூழ்நிலையில் அதன் பல்வேறு பரிமாணங்களையும் காட்டி புதுமைசெய்தது மாத்திரமல்ல , இசைக்கும் மொழிக்குமான நெருக்கமான தொடர்பையும் அழகாக வெளிப்படுத்தினார்கள்.

என்ன தான் உயர்வான இசை இருந்தாலும் அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மொழி  அத்தியாவசியமானதாகிறது.

தமிழ் மொழிக்கும் இசைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை காலங்காலமாக பேசிவருகின்றனர்.அந்தவகையில் இசைக்கும் மொழிக்குமுள்ள நெருங்கிய தொடர்பு போலவே பாடலாசிரியர்களுக்கும் மெல்லிசைமன்னர்களுக்கும் நல்ல புரிதல் இருந்து வந்துள்ளது.

[ தொடரும்]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *