மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்: காலமும் படைப்புலகமும் : 19 – T .சௌந்தர்

ஹிந்துஸ்தானி ராகங்கள்

மெல்லிசைமன்னர்கள் தமது காலத்தின் சமகால இசைப்போக்குகளுடன் மட்டுமல்ல, நாம் கேட்டு ரசித்த சில முக்கிய ராகங்களையும், அவற்றுடன் அதிகம் கேட்காத சில ராகங்களையும், முக்கியமாக ஹிந்துஸ்தானி ராகங்களையும் பயன்படுத்தி தங்கள் பாடல்களை வளப்படுத்தினார்கள்.

குறிப்பாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தித் தங்கள் பாடல்களை புதுமையாக காட்டினர். சில பாடல்களைக் கேட்கும் போது அவை நமக்குத் தெரிந்த ராகங்களின் சில சாயல்களை சார்ந்து இருப்பதும், அதில் சில வித்தியாசங்கள் இருப்பதையும் உணர்கிறோம். சில பாடல்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ராகங்களை நினைவூட்டவும் தவறுவதில்லை. கேட்டு அனுபவிக்கும் போது அது குறித்த சிந்தனை நமக்குள் எழுகிறது. தமிழில் மரபாக பயன்படுத்தப்பட்டு வரும் ராகங்களை பயன்படுத்தி பாடல்களை அமைப்பதிலும் பார்க்க ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தும் போது பாடல்கள் மிகவும் வித்தியாசமான தொனிகளைத் தருவதால் அவை புதுமையாக இருக்கும் என்பதாலும் மெல்லிசைமன்னர்கள் அந்த ராகங்களில் அதிகமான பாடல்களைத் தந்திருக்கின்ற உத்தி சிறப்பானதாகும்.

தமிழ் இசையும் ஹிந்துஸ்தானி இசையும் அடிப்படையில் ஒன்றாக இருந்த போதும் பாடும் முறையில் வித்தியாசங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக ராகங்களில் ஒரே மாதிரியான அமைப்பு காணப்படினும் ,அவற்றிலும் பல வகைகள், நுட்பம், மற்றும்  நுண்கூறுகளில் , சாயலில்,  மெல்லியதான நுட்ப வேறுபாடுகளிலுமமைந்த  பல ராகங்களும் இரு இசைகளிலும் காணப்படுகின்றன. ஆயினும் ஹிந்துஸ்தானி இசையில் சுதந்திரமான இனியக்கலவைகளைக் கொண்டதாக புதிய, புதிய ராகங்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல மெல்லிசைக்கு உகந்ததாகவும் விளங்குகின்றன.

அதிஸ்ரவசமாக சினிமா இசையமைப்பாளர்கள் தனியே ராக இலக்கணங்களுக்குள் நின்று சுழலாமல் அதிலிருந்து உணர்வின் வெளிப்பாடுகளை கட்டுப்பாடற்ற முறையில் தருவதற்காக , சுவைக்காக வேறு ராகங்களையும்  சில இடங்களில் கலந்து மக்களைக் கொள்ளை கொண்டார்கள்.

பொதுவாக இசையில் ராகங்களில் தூய்மைவாதம் பேசப்படுவது வழமை. எந்த ஒரு கலைவடிவமும் பழமை பேசிக் கொண்டு, பயன்படாமல் இருந்தால் அவை காலத்தால் மறக்கப்பட்டு வழக்கொழிந்து போய்விடும். இவை மனித சமூகத்தின் அனுபவமாக உள்ளன.  ராகங்களை பற்றி விரிவாக ஆராய்ந்த அறிஞர் ஆப்ரகாம் பண்டிதர் ஆதிகாலத்தில் தமிழ் மக்கள் ராகங்களை உருவாக்கும் முறை குறித்து நன்கு அறிந்து வைத்திருந்ததாகவும், அந்த முறைப்படி 12,000 ராகங்கள் பயன்பாட்டில் இருந்ததாகவும். அவை வர வரக் குறைந்து  இன்று  சில நூறு ராகங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று விளக்குகிறார்.

பழந்தமிழர்கள் ராகங்களை உருவாக்கிய முறையை கண்டுபிடித்த ஆப்ரகாம் பண்டிதர் ஆரோகணமாக வரும் 1800 ராகங்களையும், அவரோகணமாக வரும் 1800 ராகங்களையும் ஒன்றோடுடொன்றாகச் சேர்க்க வரும் ராகங்களை விபரிக்கின்றார். 1800 x 1800 = 32 ,40,000 என்றும் அவை விக்ருதிகளை ஏற்காத ,அதாவது மாற்றங்களை ஏற்காத சுத்தமான ராகங்கள் எனவும் அதனுடன்  72 விக்ருதிகளை ஏற்கும் பொழுது அதாவது மாற்றங்களை ஏற்கும் பொழுது  அவை  32,40,000 x72 = 23,32,80,000 ராகங்கள் உருவாக்குகின்றன என்கிறார் பண்டிதர்!   

இன்று சில நூறு ராகங்களை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட குழப்பங்களுக்கு உள்ளாகியிருக்கும் இசை இத்தனை ஆயிரம் ராகங்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் அவை பற்றிய தெளிவு இல்லாமலும் இருப்பதற்கு யார் பொறுப்பு?

ராகங்கள் குறித்து பழமை பேசுவதும், தூய்மை பேசுவதும் , மாற்றங்களை மறுக்கும் போக்குகளால்  ஒருவிதமான தூய்மைவாதம் நிலைநாட்ட சிலர் முனைகின்றனர். இந்த தூய்மைவாதம் என்பது பாசிசத்தன்மை அடைகின்றது. பல இனமக்கள் கலப்பதால் அவர்களிடையே புதிய அழகு பிறப்பது போல ராகங்களில் கலப்புகள் என்பது நல்ல இனிமையான, புதுமையான ராகங்களை தந்துள்ளன. பலவிதமான மக்கள் கலந்தது போலவே மக்களால் இசையிலும் மாற்றங்கள் வந்தன. இவை எல்லாம் கடவுள்கள் உருவாக்கிக் கொடுத்தவையல்ல; மக்களால் உருவானவை.  மக்கள் அவற்றைப் பயன்படுத்தும் போது அவை சில மாறுதல்களுக்கும் உட்பட்டு உயிர் பெறுவதுடன் பழையமரபின் புதிய வடிவமாகவும் தொடர்கிறது.

கர்னாடக இசை போல இறுக்கமிக்கதாக அல்லாமல் இனிமையாலும், எளிமையாலும் கேட்போரை உள்ளிழுக்கும் தன்மைமிக்கதாகவும் ஹிந்துஸ்தானி இசை இருந்து வருகிறது. பெரும்பாலும் ராக ஆலாபனைக்கு அங்கே முக்கியத்தும் வழங்கப்பட்டு வருவதும், ஆலாபனைகளை விரித்து, விரித்துப் பாடுவதாலும் பல இனிய சங்கதிகளைக் கேட்க முடியும். இந்திய இசையின் உயிர் ராகம் பாடுவதில் தான் உள்ளது என்பதையே பல அறிஞர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். 

ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர்கள் பாடும்முறையும், அவர்களது குரல்வளமும் கேட்போரை வியக்க வைக்கும் படியாக இருக்கும். ஹிந்துஸ்தானிபாடகர்கள் பற்றி பாரதி தனது கட்டுரை ஒன்றில் வியந்து பின்வருமாறு எழுதுகிறான்.

// சுமார் 12 வருஷங்களுக்கு முன்பு நான் இரண்டு மூன்று வருஷம் ஸ்ரீ காசியில் வாஸஞ் செய்தேன். அங்கே, பாட்டுக் கச்சேரி செய்ய வரும் ஆண்களுக்கெல்லாம் நேர்த்தியான வெண்கலக் குரல் இருந்தது. பெண்களுக்கெல்லாம் தங்கக் குரல். அங்கிருந்து தென்னாட்டிற்கு வந்தேன். இங்கே ஓரிரண்டு பேரைத் தவிரமற்றப்படி பொதுவாக வித்வான்களுக்கெல்லாம் தொண்டை சீர்கெட்டிருப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மிகவும் வியப்புண்டாயிற்று. ஒன்று போல எல்லோருக்கும் இப்படித் தொண்டை வலிமை குறைந்தும் நயங் குறைந்தும்இருப்பதன் காரணமென்ன? இதைப்பற்றிச் சில வித்வான்களிடம் கேட்டேன். “வட நாட்டில் சர்க்கரை, பால், ரொட்டி, நெய் சாப்பிடுகிறார்கள்: புளியும் மிளகாயும் சேர்ப்பதில்லை; இங்கே புளி, மிளகாய் வைத்துத் தீட்டுகிறோம். அதனாலே தான் தொண்டை கேட்டுப் போகிறது” என்றனர். பின்னிட்டு, நான் யோசனை செய்து பார்த்ததில், ‘மேற்படி காரணம் ஒரு சிறிது வாஸ்தவம் தான்’ என்று தெரிந்து கொண்டேன். ஆனால் அதுவே முழுக்காரணம் அன்று. நம்மவர் தொண்டையை நேரே பழக்குவதில்லை. காட்டு வெளிகளிலே போய், கர்ஜனை செய்யவேண்டும். நதி தீரங்கள், ஏரிக்கரை, கடற்கரைகளிலே போய்த் தொண்டையைப் பழக்க வேண்டும்.//

கர்நாடக இசைப் பாடகர்களின் நசிந்த குரல் குறித்த பாரதியின் கவலையை தமிழ் சினிமா போக்கியது என்பதை நாம் கண்டோம்.

தனது இசையமைப்பில் காலத்திற்கு காலம் வித்தியாசங்களைக் காட்ட முனைந்த விஸ்வநாதன் காலநகர்வில் மெதுவாக வந்தடைந்த இடம் ஹிந்துஸ்தானி இசையாகும். பொதுவாக அவர் பாடும் முறையும் பயன்படுத்தும் சங்கதிகளும் அந்த இசையில் அவருக்கிருந்த ஆழந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் காட்டுவதாக இருப்பதை காணமுடியும்.

1960 களில் அதிகமாக லத்தீன் அமெரிக்க இசையில் அதிக கவனம் செலுத்திய விஸ்வநாதன், ராமமூத்தியை விட்டு பிரித்த பின்னர் தனியே இசையமைத்த படங்களில் ஹிந்துஸ்தானி இசையை அதிகமான அளவில் பயன்படுத்த தொடங்கினார். ஹிந்துஸ்தானி இசையின் இனிமைமிக்க ராகங்கள், அதன் எளிமை இசையமைப்பிற்கு வளமான களமாக இருந்தது, அதன் மூலங்களிலிருந்து மன எழுச்சிகளை உண்டாக்கும் வியக்கத்தக்க பாடல்களையும் தந்தார்.    

மெல்லிசைமன்னர்கள் தீவிரமான ஹசல் இசை ரசிகர்களாகவும், அதில் தீவிர ஈடுபாடு காட்டியவர்களாகவும் இருந்தனர். அந்தரீதியில் அவர்களது இசை தமிழ் எல்லைகளைக் கடந்து செல்லத் தயங்கவில்லை. இனிமையும், எளிமையுமிக்க பாடல்களைத் தர முனைந்த அவர்கள் தங்களது இசைக்கான அகத்தூண்டுதலாக ஹிந்திப்பாடல்களையும் முன்னுதாரணமாகக் கொண்ட அதேவேளையில், ஹிந்துஸ்தானி செவ்வியல் இசையின் பாதிப்பிலும் பாடல்களை உருவாக்கினார்கள்.

கதாபாத்திரங்களின் உணர்வுக்கு நேரடியாக எளிமைமிக்க பாடல்களை வழங்கிய அவர்களது இசையில் சங்கீதவித்துவத்தனம் குறுக்கிடவில்லை. ராகங்களின் ஜீவன்களைத் தொட்டுக்கொண்டு, காற்று படப் பட ஓங்கிவளரும் தீ போல ஒவ்வொரு பாடலிலும் இனிய சங்கதிகளை ஊதி, ஊதி ராகத்தின் உயிர்நிலைகளை விரித்து, விரித்து இசைக் கோலங்களாக்கினார்கள். ராகங்களின் தன்மைகளை யாரும் எதிர்பார்க்க்காத வண்ணம் பல கோணங்களில், பலதிசைகளிலும் அமைத்து இசையில் மாயவித்தை காட்டினார்கள்.

ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை என இரு இசையிலும் சில ராகங்கள் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருப்பதும், சில ராகங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடியும். அதனால் பலருக்கு மயக்கங்களும் உண்டாகின்றன.

வெவ்வேறு பெயர்களைக் கொண்ட ஒரே ராகங்கள்:

பைரவ் = மாயாமாளவகௌளை // பைரவி = சிந்துபைரவி // யமன் = கல்யாணி //  பூபாலி, பூப் = மோகனம் //  அசாவேரி = நடபைரவி // பீம்பிளாசி = ஆபேரி 

ஒரே பெயர்களைக் கொண்ட ராகங்கள் :

தேஷ் = தேஷ் //   கீரவாணி = கீரவாணி  //   மாண்டு = மாண்டு

ஹிந்துஸ்தானி இசையில் உள்ள சில ராகங்களை கேட்கும் போது, சில ராகங்கள் நமக்கு கர்நாடக இசையின் சில நெருக்கமான சாயல்களை நினைவூட்டுவதை உணர்கிறோம். ஆனாலும் மிக உன்னிப்பாகக் கவனிக்கு போது அவற்றில் உள்ள மிக துளித்தெடுப்பு [Fractional] நுண்கூறுகளைக் காண்கிறோம். உதாரணமாக கர்னாடக இசையில் பயன்படும் ஹிந்துஸ்தானி ராகமான ஜோன்புரி என்ற ராகத்தை எடுத்துக்கொண்டால் அதைப்பாடும் முறை மிகுந்த மாறுபாடு கொண்டதாய் இருப்பதைக் காண்கிறோம். அதே ராகத்தை ஹிந்துஸ்தானி இசையில் கேட்கும் போது மென்மையான சிந்துபைரவி ராகத்தின் மெல்லிய வாசத்தை அனுபவிக்கிறோம். ஏன் சில சமயங்களில் முற்றுமுழுதாக அது சிந்துபைரவி ராகம் தானோ என்ற சந்தேகம் வருமளவுக்கு அதன் தொனி அமைந்துவிடுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் கேட்கும் போது சிலவேளைகளில் கானடா ராகத்தின் சாயலையும் கேட்கமுடியும். இதை எளிதாகி சில பாடல்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கிறேன்.

நடபைரவி:

தமிழில் நடபைரவி என்றொரு ராகம் இருக்கிறது. நடபைரவி ஒரு மேளகர்த்தா ராகம். அதாவது ஒரு தாய்ராகம்!

ஒருகாலத்தில் அந்த ராகமும் அதிகம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் அதனை தனது நாதஸ்வரத்தால் பிரபலப்படுத்தியவர் இசைச் சக்கரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது. வட இந்திய இசையில் மேளகர்த்தா என்பதை ” தாட் ” என அழைப்பர். இந்த நடபைரவி என்கிற ராகத்தை வட இந்தியாவில் அசாவரி என அழைக்கின்றனர். ஹிந்துஸ்தானி இசையில் அசாவரி என்பது தாய் ராகம். இந்த ராகத்தில் பல இனிய பாடல்களை மெல்லிசைமன்னர்கள் தந்தார்கள். இந்த ராகத்தில் அமைந்த பாடல்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த ராகத்தின் ஜன்ய ராகங்களிலும் பாடல்களை தந்துள்ளார்கள்.

ராகம் சந்திரகௌன்ஸ்:

தமிழில் ஹிந்தோளம் என்ற ராகம் ஹிந்துஸ்தானி இசையில் மால்கௌன்ஸ் ராகத்திற்கு நிகரானது. ஹிந்தோளராகத்திற்கு மிக நெருக்கமான ராகம் சந்திரகௌன்ஸ்!

“மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி “– என்ற தமிழின் தலை சிறந்த பாடலை மெல்லிசைமன்னர்கள் இந்த ராகத்திலேயே தந்தார்கள்.

ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் B R..Deodhar [1901 – 1990] என்பவரால் இந்த ராகம் கண்டுபிடிக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகின்றது..அவர் ஹிந்தோள ராகத்தில் வரும் சிறிய ” நி ” க்கு பதிலாக பெரிய ” நி ” பயன்படுத்தினார் என்பர்.

ராகம் ஜோன்புரி:

“அசாவரி தாட்” ட்டின் [அசாவரி = நடபைரவி] ஜன்ய ராகங்களில் ஒன்று தான் ஜோன்புரி. [தாட் என்றால் மேளகர்த்தா என்று அர்த்தம்.]

நடபைரவி அதுமட்டுமல்ல தர்பாரி கானடா, மற்றும் கானடா குடும்ப ராகங்கள் இதன் ஜன்யமாகக் கருதப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தை கேட்கும் போது கானடா, ஜோன்புரி, மென்மையான சிந்துபைவி ராக சாயலும் தென்படுவதை அவதானிக்க முடியும். ஆயினும் நேரடியாக ஹிந்துஸ்தானி இசையில் இந்த ராகத்தின் ஆலாபனையைக் கேட்பவர்கள் மெல்லிசைமன்னர்களின் பாடல்களின் சாயல்களை அடையாளம் காண முடியும்.

தமிழில் ஜோன்புரி ராகத்தில் அமைந்த ” சர்பகோண போதன் ” [ தியாகராஜ பாகவதர்] , ” நாடகமெல்லாம் கண்டேன் ” [மதுரை வீரன் ] , ” நிறைவேறுமா எண்ணம் நிறைவேறுமா ” [ காத்தவராயன் ], ” நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் ” [ நான் பெற்ற செல்வம் ] போன்ற பாடல்களையும் இதே ராகத்தில் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த ” சொன்னது நீதானா  ” [ நெஞ்சில் ஓர் ஆலயம் ] பாடலையும் ஒப்பிட்டு பார்த்தால் மெல்லிசைமன்னர்கள்  ராகத்தை மறைத்து மெட்டமைத்தது போன்ற உணர்வைத் தருகிறது. ஆனாலும் இந்தப்பாடலில் சிந்துபைரவி ராகத்தின் வாசம் வீசுவதை அனுபவிக்கிறோம்.

” சொன்னது நீதானா  ” [ நெஞ்சில் ஓர் ஆலயம் ] என்ற பாடல், என்ன ராகம் என்று அறியும் முனைப்பை தூண்டிய பாடல்! மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த தலை சிறந்த பாடல்களில் ஒன்று. இந்தப்பாடலில் சிந்துபைரவி ராகத்தின் சாயல் தென்படுவதை காணலாம். ” சொன்னது நீதானா  ” [ நெஞ்சில் ஓர் ஆலயம் ]  என்ற மெல்லிசைமன்னர்களின் இனிய பாடல் அருமையான ஜோன்புரி ராகத்தில் அமைந்த பாடல் எனபது குறிப்பிடத்தக்கது.

ராகம் : ராகேஷ்ஸ்ரீ [ Rageshsree ]

இந்த ராகம் அசப்பில் திலங் ராகத்தின் சாயல் கொண்டது. திலங் என்ற ராகம் கர்நாடக இசையிலும், ஹிந்துஸ்தானி இசையிலும் ஒரே பெயர் கொண்டே அழைக்கப்படுகிறது. ஹிந்துஸ்தானி இசையில் ராகேஷ்ஸ்ரீ என்கிற ராகம் அதிகமான புழக்கத்தில் இருக்கின்ற ராகம். “கமாஜ் தாட்” டைச் சேர்ந்த ராகம். தமிழிலும் திலங் ஹரிகாம்போதியின் ஜன்ய ராகம்.

ராகேஷ்ஸ்ரீ, மற்றும் திலங், ஜோக், தேஷ், திலக் காமோத், சரஸ்வதி, கோரா கல்யாணி, சம்பகலி , கமாஜ் போன்ற ராகங்கள்   “கமாஜ் தாட்”  ராகங்கள் வகையைச் சார்ந்தவையாகும்.

இந்த ராகேஷ்ஸ்ரீ ராகம் சாயலில் பாகேஸ்வரி ராகத்தின் லேசான தன்மையையும் கொண்டிருப்பதை சில பாடல்களில் கேட்க முடியும். பொதுவாக கர்னாடக இசையில் மட்டும் பாடல்களைக் கேட்டு பழகியவர்களுக்கு சினிமாவில் இந்த ராகத்தை ஹிந்துஸ்தானி பாணியை அடிப்படையாகக் கொண்டு அமைந்த பாடல்களைக் கேட்கும் போது பலவிதமான, நுட்பமான மனநிலை அசைவுகளையும் உண்டாக்கும் பலவிதமான ராகங்களின் வாசனைகள் ஒன்று கலந்து வீசுவது போன்ற உணர்வு வரலாம்.

ஓவியத்தில் நீர் வண்ணக்கலவையால் ஓவியம் வரையும் போது தாளில் படரும் நீரிலே மென்மையாக, வித்தியாசமான நிறங்களைத் தொட்டு ஆங்காங்கே மெதுவாகப் படரவிட்டு வர்ணங்களின் இயல்பான ஓட்டத்தில் தனது நோக்கத்தை பூர்த்தி செய்யும் ஓவியன் போல் இசையிலும் வெவேறு சாயல்களை தன்னகத்தே கொண்ட ராகங்களையும் பயன்படுத்தி மெல்லிசைமன்னர்கள் இசையோவியங்களைப் படைத்துக்காட்டினார்கள்.

ஹிந்துஸ்தானி இசையில் கலைத்துவமிக்க அழகுடன் பல்வேறு விதங்களிலெல்லாம் நுண்மையுமிக்க பாடல்களாகவும், அவற்றை அந்தந்த உணர்வுகளின் குறியீடுகளாக்கவும் தாமே அவற்றை புதிதாய்ப் படைத்துக்காட்டவும் மெல்லிசைமன்னர்கள் தயங்கவில்லை என்பதையும் அவர்கள் நமக்கு தந்த அருமையான பாடல்களில் கேட்கிறோம். ராகேஷ்ஸ்ரீ ராகத்திலமைந்த சில பாடல்களைக் கேட்கும் போது உள்ளத்தில் எத்தனை, எத்தனை அற்புத உணர்வுகள் மேலெழுகின்றன என்பதை வார்த்தையால் வர்ணிக்க முடிவதில்லை. கர்னாடக இசை கேட்டு பழகியவர்கள் கீழ்வரும் பாடல்கள் பாகேஸ்வரி ராகத்தின் சாயலோ என்ற எண்ணமும் எழலாம்.

ராகேஷ்ஸ்ரீ ராகத்தின் அடிப்படையில் மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த சில பாடல்கள்:

01 நாளாம் நாளாம் திருநாளாம்   – காதலிக்க நேரமில்லை 1964 – பாடியவர்:  பி .பி.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி   : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

02 நான் ஒரு குழந்தை – படகோட்டி 1964 – பாடியவர்:  டி. எம்.எஸ் – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி  : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

03 மாம்பழத்து வண்டு – பந்தபாசம் 1963 – பாடியவர்:  பி .பி .எஸ் + ஜானகி – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

04 மல்லிகை முல்லை பூப்பந்தல் – மன்னவன் வந்தானடி 1974 – பாடியவர்:  வாணி – இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

05 பாரதி கண்ணம்மா – நினைத்தாலே இனிக்கும் 1978 – பாடியவர்:  எஸ்.பி  .பி  + வாணி  – இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

06 பொன் எழில் பூத்தது   – கலங்கரை விளக்கம் 1965 – பாடியவர்:  டி. எம்.எஸ் + சுசீலா  – இசை : விஸ்வநாதன் : ராகம் : ராகேஷ்ஸ்ரீ

இந்தப்பாடல்கள் அனைத்தும் ஒன்று மாறி ஒன்றாகத் தொடர்ச்சியாக பாடிக் கொண்டே இருக்கலாம். அற்புதமாக இருக்கும்.

ராகம்: திலங்

01 பல்லவன் பல்லவி பாடட்டுமே   – கலங்கரை விளக்கம் 1965 – பாடியவர்:  டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன்  : ராகம் : திலங் 

02 இது உந்தன் வீட்டு கிளி தான்   – ஷங்கர் சலீம் சைமன் 1978 – பாடியவர்:  வாணி – இசை: விஸ்வநாதன்: ராகம்: திலங்

03 அபிநய சுந்தரி ஆடுகிறாள்    – மிருதங்க சக்ரவர்த்தி 1983 – பாடியவர்:  சீர்காழி சிவசிதம்பரம் + வாணி – இசை: விஸ்வநாதன்: ராகம்: திலங்

04 நல்லதோர் வேனை செய்தே   – வறுமையின் நிறம் சிவப்பு 1982 – பாடியவர்:  எஸ்.பி. பி   – இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலங்

ராகம் : சுமனீச ரஞ்சினி / சமுத்ரபிரியா

01 மதுரா நகரில் தமிழ் சங்கம்   – பார் மகளே பார் 1963 – பாடியவர்:  பி.பி. எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  : ராகம் : சுமனீச ரஞ்சினி

02 நான் பாடிய பாடலை   – வாழ்க்கை வாழ்வதற்கே   1963 – பாடியவர்:  பி.பி.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  : ராகம் : ஜனசமோகினி

03 அந்தமானைப் பாருங்கள் அழகு    – அந்தமான் காதலி   1975 – பாடியவர்:  ஜேசுதாஸ் + வாணி  – இசை : விஸ்வநாதன்  : ராகம் : சுமனீச ரஞ்சினி

ராகம் : ஜனசமோகினி

01 கேள்வி பிறந்தது அன்று    – பச்சை விளக்கு 1964 –   பாடியவர்:  டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி  : ராகம் : ராகம் : ஜனசமோகினி

02 தத்தி செல்லும் முத்து கண்ணன் – தங்கப்பதக்கம்   1973 –   பாடியவர்:  சுசீலா   – இசை : விஸ்வநாதன்   : ராகம் : ஜனசமோகினி

கலாவதி , வலஜி போன்ற ராகங்கள் நெருக்கமான சாயல்களைக் கொண்டவை.

ராகம் : கலாவதி

 01 உன்னை எண்ணி என்னை மறந்தேன் – ரகசிய போலீஸ்115   1968  –  பாடியவர்:  சுசீலா   – இசை : விஸ்வநாதன்  : ராகம் : கலாவதி

ராகம் : வலஜி

 01 உன்னை ஒன்று கேட்பேன் – புதிய பறவை    1963 –  பாடியவர்:  சுசீலா   – இசை : விஸ்வநாதன்   : ராகம் : வலஜி

02 பொட்டு வைத்த முகமோ     – சுமதி என் சுந்தரி   1971 –  பாடியவர்:  எஸ்.பி.பி + வசந்தா   – இசை : விஸ்வநாதன்  : ராகம் : வலஜி

03 சுமைதாங்கி சாய்ந்தால் – தங்கப்பதக்கம்   1973 – பாடியவர்:  டி.எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன்   : ராகம் : வலஜி

ராகம் : திலக் காமோத்

இந்த ராகம் தேஷ் ராகத்தின் சாயலை கொண்டது. இந்த ராகத்தை ரவிசங்கர் பிரபலப்படுத்தினார்.

01 அன்று வந்ததும் இதே நிலா – பெரிய இடத்து பெண் 1963 – பாடியவர்: டி.எம்.எஸ் + சுசீலா – இசை : விஸ்வநாதன் : ராகம் :திலக் காமோத்

02 மௌனமே பார்வையால் – கொடிமலர் 1966 – பாடியவர்:  பி.பி.ஸ்ரீனிவாஸ் – இசை :விஸ்வநாதன் : ராகம் : திலக் காமோத்

03 தண்ணீரிலே தாமரைப் பூ – தங்கை 1971 – பாடியவர்:  டி.எம்.எஸ் – இசை : விஸ்வநாதன்: ராகம் : திலக் காமோத்

04 ஆயர்பாடி மாளிகையில் – பக்திப்பாடல் – பாடியவர்:  எஸ்.பி.பி. – இசை: விஸ்வநாதன்: ராகம் : திலக் காமோத்

05 இறைவன் உலகத்தை படைத்தானாம் – உனக்காக நான் 1974 – பாடியவர்:  ஜேசுதாஸ் – இசை: விஸ்வநாதன்: ராகம்: திலக் காமோத்

ராகம் : காளிங்கரா /

இந்தராகம் மாயாமாளவ கௌளை ராகம் போல ஒலிக்கும். ஒரே சுரங்களைக் கொண்ட ராகம் 

01 பொன் மகள் வந்தாள்  – சொர்க்கம்   1971  –  பாடியவர்:   டி.எம்.எஸ்      – இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலக் காமோத்

02 நினைத்தேன் வந்தாய் நூறு வயது  – காவல்காரன்   1968 –  பாடியவர்:  டி.எம்.எஸ்  + சுசீலா     – இசை : விஸ்வநாதன்   : ராகம் : திலக் காமோத்

ராகம் : மிஸ்ர மாண்டு 

01 நெஞ்சம் மறப்பதில்லை     – நெஞ்சம் மறப்பதில்லை 1963  –  பாடியவர்:  பி.பி.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு

02 அழகே வா அறிவே வா   – ஆண்டவன் கட்டளை 1963  –  பாடியவர்:  பி.பி.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு

03 குமரிப்பெண்ணின் உள்ளத்தில்    – எங்க வீட்ட பிள்ளை  1963  –  பாடியவர்:  டி .எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : மிஸ்ர மாண்டு 

ராகம் : ஜோன்புரி

01 சொன்னது நீதானா  – நெஞ்சில் ஓர் ஆலயம்   1963 –  பாடியவர்:  சுசீலா   – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : ஜோன்புரி

ராகம் : காளிங்கரா

01 நினைத்தேன் வந்தாய்  – காவல்காரன் 1967 –  பாடியவர்:  டி .எம்.எஸ் + சுசீலா   – இசை : விஸ்வநாதன்   : ராகம் : காளிங்கரா

02 பொன்மகள் வந்தாள்    – சொர்க்கம் 1964  –  பாடியவர்:  டி .எம்.எஸ் – இசை : விஸ்வநாதன்   : ராகம் : காளிங்கரா  

ராகம் :  மாரு பெஹாக்

கல்யாணி ராக குடுமபத்தைச் சேர்ந்த ராகம் என்பதால் கல்யாணி ராகத்தின் சாயல் மாரு பெஹாக் என்கிற இந்த இனிமையான ராகத்தில் இருப்பதை நாம் கேட்கமுடியும்.

01 பாவாடை தாவணியில்   – நிச்சய தாம்பூலம் 1963 –  பாடியவர்:  டி .எம்.எஸ்   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : மாரு பெஹாக் 

ராகம் :  பிலஸ்கானி தோடி

01 எட்டடுக்கு மாளிகையில்   – பாதகாணிக்கை  1962 –  பாடியவர்:  சுசீலா    – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் :  பிலஸ்கானி தோடி 

02 கண்ணிலே அன்பிருந்தால் – படம்: ஆனந்தி  1965 – பி.சுசீலா – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   – ராகம் : பிலஸ்கானி தோடி

03 என்னை மறந்ததேன் – கலங்கரை விளக்கம்  1965 –  பாடியவர்:  சுசீலா    – இசை : விஸ்வநாதன்  : ராகம் :  பிலஸ்கானி தோடி

௦4 ஊர் எங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்  – சாந்தி  1969 –  பாடியவர்:  சுசீலா    – இசை : விஸ்வநாதன்  : ராகம் :  பிலஸ்கானி தோடி 

05 அன்னமிட்ட கைகளுக்கு – இருமலர்கள் 1967 – பி.சுசீலா – இசை : விஸ்வநாதன்  – ராகம் : பிலஸ்கானி தோடி

சில ராகங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமானதாகவும் ,மிக நுண்ணிய வேறுபாடுகளையும் கொண்டிருப்பதையும்  காண முடியும்.குறிப்பாக  ராகேஷ்ஸ்ரீ என்கிற ராகம் பாகேஸ்வரி யாகத்திற்கு நெருக்கமானதாக இருப்பதையும் காண முடியும். இந்த இரண்டு ராகங்களும் கலந்ததொரு இனிய ராகமாக மால்குஞ்சி என்று ஒரு ராகம் காணப்படுகிறது.அழியாத கோலங்கள் திரைப்படத்தில் சலீல் சௌத்ரியின் இசையில் ” நான் என்னும் பொழுது ”  என்ற பாடல் மால்குஞ்சி ராகத்தில் இம்மிந்ததது என்பது குறிப்பிடத்தக்கது.

அது போலவே ” முத்துக்களோ கண்கள் ” என்ற பாடல் மத்யமாவதி ராகம் என்றும் பிருந்தாவனசாரங்கா ராகம் என்றும் சிலர் இது “மல்கர்” ராகம் என்றும் ,சிலர் “மேக் மல்கர்” ராகம் என்றும் கூறுகின்றனர் . இந்த ராகங்கள் எல்லாம் மிக, மிக நெருக்கனான ராகங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போலவே ஆரபி ராகம் பாடும் போது ஒருகணம் தவறின் சுத்த சாவேரி ராகத்தின் சாயல் தென்படுவதும் , மத்யமாவதி ராகத்தில் பிருந்தாவனசாரங்க சாயல் வருவதும் என  பல ராகங்கள் மிக நெருக்கமானமுறையில் பின்னிப்பிணைந்துள்ளன.

சினிமா இசையை பொறுத்தவரையில் மெல்லிசை அமைப்பு மற்றும் வாத்திய இசையின் கலப்பால் அது ஓர் புதிய இசைவடிவமாக உருவெடுத்துள்ளது. இந்திய சினிமா இசை என்பது உலக இசைக்கு ஒரு புது இசை என்று சொல்லலலாம். அதுமாத்திரமல்ல இந்த இசைவடிவம் என்பது வெகுமக்கள்   சார்ந்துள்ளதும்; காலங்காலமாக இசைமறுக்கப்படட சாதாரணர்கள் சினிமாவிற்குள் நுழைய வாய்ப்பு பெற்றார்கள். மக்களின்   இசைவளங்களை அறிந்தவர்கள் உள்நுழைந்தது மட்டுமல்ல வெளியிசையை அனுபவித்தவர்களும் வந்து சேர்ந்தார்கள். 

பெரும்பாலான சினிமா   இசையமைப்பாளர்கள் முறைசார்ந்த கல்விக்கூடங்களிலிருந்து வந்தவர்களல்ல என்பதும் நாடக மரபிலிருந்து, மக்கள் இசை வழக்குகளை, அவர்களது ரசனைகளை நன்கு அறிந்தவர்காளாக இருந்தனர். இவையே அவர்களுக்கு எல்லை கடந்த   எந்தக் கட்டுக்குள்ளும் அடங்காத ஒரு கலக இசையை உருவாக்குபவர்களாக வந்தார்கள்.

பெரும்பாலும் வாத்திய இசையைக் கேட்டு பழக்கமற்ற தமிழ் மக்கள் சினிமாவின் புண்ணியத்தால் இசைக்குழு [ Orchestra ] வாசிக்கும் சினிமா இசையைக் கேட்கும் படியானது.குறிப்பாக ராகங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட பாடல்களில்  வாத்தியங்களின் இணைவு புதிய கோணங்களில் உருவாகவும், அதன் மூலம் மக்கள் மத்தியில் புதிய ரசனையையும் உருவாக்கியது. முனையளவும் மாற முடியாது என்றிருந்த தமிழ் இசையுலகில் திரையிசை மக்கள் திரளின் கொண்டாட்ட இசையானது!

பொதுவாக ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தினார்கள் என்று கூறியதும் பெரும்பாலானோர் உடனடியாகவே கர்ணன் படப்பாடல்களையே கூறுவது வழக்கம். வட இந்தியப் புராணக்கதை என்பதால் அப்படத்தில் அவர்கள் அதிகமான ஹிந்துஸ்தானி ராகங்களை பயன்படுத்தியது உண்மை எனினும் வேறு   படங்களிலும் பல ராகங்களை பயன்படுத்தி இனிய பாடல்களைத் தந்து புதுமை படைத்தார்கள்.

கர்ணன் பாடல்களும் ராகங்களும்:

01   உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது = ராகம் : ஆஹிர் பைரவி  //  02  போய் வா மகளே போய் வா = ராகம்: ஆனந்த பைரவி.

03   இரவும் நிலவும் வளரட்டுமே = ராகம்: சுத்த சாரங்கா //   04  மகாராஜன் உலகை ஆளுவான்  ராகம் : கரஹரப்ரியா  //  05  என்னுயிர் தோழி கேளொரு சேதி = ராகம்: ஹமீர் கல்யாணி  //   06  கண்ணுக்கு குலம் ஏது = ராகம்- பஹாடி

07   ராக மாலிகை – 1

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்–= ஹிந்தோளம் / நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் = கானடா / என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்= ஹம்சானந்தி / ஆயிரம் கரங்கள் நீட்டி = ராகம் : ரேவதி

08   ராக மாலிகை – 2 [ மஞ்சள் முகம் நிறம் மாறி ]

மஞ்சள் முகம் நிறம் மாறி = காபி /  மலர்கள் சூட்டி  = சுத்தசாவேரி

09   ராக மாலிகை – 3 [மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா]

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா = நாட்டை : / என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் = சஹானா ; / புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால்  =மத்யமாவதி

10  குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ = மாயா மாளவ கௌளை

11  பரித்ராணாய சாதூனாம் =மத்யமாவதி

ஏனைய இசையமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்தாத அபூர்வ ராகங்களில் தமது தனித்துவமான இசைநடைகளை பயன்படுத்தி, மறைந்திருக்கும் இனிமைகளை தேடிக்கண்டு பிடித்து இசையின்ப அனுபவத்தை புத்தாக்கம் செய்தார்கள். தனியே ராகங்களில் மட்டுமல்ல ராகமாலிகை அமைப்பிலும் வியக்கத்தக்க பாடல்களை அமைத்து தந்து ஆற்றலை வெளிப்படுத்தியவர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி!

01 வில்லேந்தும் வீரர் எல்லாம் – படம்: குலேபகாவலி  [1955] – பாடியவர்: லோகநாதன் + பி.லீலா – இசை :விஸ்வநாதன் -ராமமூர்த்தி

அமைந்த ராகங்கள்: கமாஸ் + கல்யாணி + மத்யமாவதி +ஸ்ரீராகம் + சுத்தசாவேரி +மோகனம்

02 காளிதாஸ மகாகவி காவியம்  – எங்கிருந்தோ வந்தான் 1971 – பாடியவர்: சீர்காழி + லீலா – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : ரேவதி  + சாகேசி + சுத்தசாவேரி

03 மழை கொடுக்கும் கொடையும் – கர்ணன் 1964 – பாடியவர்: சீர்காழி + டி. எம் எஸ் + லோகநாதன் =+ பி.பி.எஸ்    – இசை : விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் : ஹிந்தோளம் + கானடா + ஹம்சானந்தி ராகம் +ரேவதி

04 மஞ்சள் முகம் நிறம் மாறி – கர்ணன் 1964 – பாடியவர்:  சுசீலா   – இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி: ராகம்: காபி + சுத்தசாவேரி

05 மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா – கர்ணன் 1964 – பாடியவர்:  சீர்காழி – இசை: விஸ்வநாதன்  ராமமூர்த்தி : ராகம் := நாட்டை + சஹானா + மத்யமாவதி

06 உலகின் முதல் இசை – தவப்புதல்வன் 1973 – பாடியவர்: டி.எம்.எஸ் + ஸ்ரீனிவாஸ்    – இசை : விஸ்வநாதன்  : ராகம் : ஸ்ரீராகம் + பகாடி + சிந்துபைரவி.

07 ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் – படம்: அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர்: வாணி ஜெயராம் – இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

 பந்துவராளி, ரஞ்சினி, சிந்துபைரவி, காம்போதி

08   அதிசய ராகம் ஆனந்த ராகம் – படம்: அபூர்வ ராகங்கள் [1975] – பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ் – இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

மகதி + பைரவி

மெல்லிசைமன்னர் இசையமைத்த பாடல்களில் மேலும் சில தமிழ் ராகங்கள்:

ராகம் :  ஆரபி

01 உதடுகளில் உனது பெயர் – தங்கரங்கன் 1978 –  பாடியவர்:  ஜெயசந்திரன் + சுசீலா    – இசை : விஸ்வநாதன்  : ராகம் :  ஆரபி

02 எங்க வீட்டு ராணிக்கு இப்போ – கிரகப்பிரவேசம் 1978 –  பாடியவர்:  டி.எம்.எஸ் + சுசீலா    – இசை : விஸ்வநாதன்  : ராகம் :  ஆரபி

ராகம் : செஞ்சசுருட்டி

01 தமிழுக்கும்   அமுதென்று பேர்    – பஞ்சவர்ணக்கிளி 1965 –   பாடியவர்:  பி.சுசீலா   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி       : ராகம் : செஞ்சசுருட்டி

02 கட்டோடு குழலாட ஆட    – பணக்காரக்குடும்பம் 1965 – பாடியவர்: டி.எம்.எஸ் + பி.சுசீலா + ஈஸ்வரி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : செஞ்சசுருட்டி

03 ஒருவர் வாழும் ஆலயம்     – நெஞ்சில் ஓர் ஆலயம்   1965 –   பாடியவர்: டி.எம்.எஸ் +  ஈஸ்வரி   – இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி   : ராகம் : செஞ்சசுருட்டி

04 ஒரே பாடல் உன்னை அழைக்கும்      – எங்கிருந்தோ வந்தான்   1971 –   பாடியவர்: டி.எம்.எஸ்    – இசை : விஸ்வநாதன்   : ராகம் : செஞ்சசுருட்டி

05 நான் பாடிக் கொண்டே இருப்பேன்   – சிறை 1984  – பாடியவர்:  வாணி – இசை : விஸ்வநாதன்  : ராகம் : சாமா

06 மௌனத்தில் விளையாடும்   – நூல்வேலி 1982  – பாடியவர்:  பாலமுரளி – இசை : விஸ்வநாதன்  : ராகம் : சாமா

07 வேண்டும் வேண்டும் உந்தன் உறவு   – வசந்தத்தில் ஓர் நாள்   1982   – பாடியவர்: எஸ்.பி.பி +வாணி  – இசை : விஸ்வநாதன்  : ராகம் : சிவரஞ்சினி

08 காஞ்சி பட்டுடுத்தி   –   வயசுப் பொண்ணு 1979  – பாடியவர்:  ஜேசுதாஸ் – இசை : விஸ்வநாதன்  : ராகம் : கல்யாணவசந்தம்

09 நான் கடவுளைக் கண்டேன்    – கல்லும் கனியாகும்    1967 – பாடியவர்:  டி.எம்.எஸ்  – இசை : விஸ்வநாதன்    : ராகம் : மத்யமாவதி

10 கை விரலில் பிறந்தது     – கல்லும் கனியாகும்    1967 – பாடியவர்:  டி .எம் .எஸ்  – இசை : விஸ்வநாதன்    : ராகம் : மிஸ்ர சிவரஞ்சனி

11 தீர்க்க சுமங்கலி வாழ்கவே    –   தீர்க்க சுமங்கலி 1973  – பாடியவர்:  வாணி  – இசை : விஸ்வநாதன்  : ராகம் : ரேவதி

இதுபோல பல பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொதுவாக தமிழ் ராகங்களையும், ஹிந்துஸ்தானி ராகங்களையும் ஒப்பிட்டு பேசுபவர்கள் அவற்றின் நெருக்கத்தையும் , வேறுபடும் தன்மைகளையும் அறிந்தாலும் சில பாடல்களின் அமைப்பு  பற்றிய குழப்பத்தால் வெவ்வேறு கருத்துக்களைக் கூறுவதை பார்த்திருக்கின்றோம்.சில பாடல்கள் பல ராகங்களின் பிரயோகங்களைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டுவர்!

அந்தவகையில் சில குழப்பங்களைத் தரும் பாடல்களை இசையமைத்தவர் அவை என்ன ராகத்தில் அமைக்கப்பட்டன என்று கூறினால்தான் உண்மையை அறிய முடியும்.  அந்த வகையில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதனிடம் அவை என்ன ராகம் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அது ” சினிமா ராகம் ” என்று கூறி அதை தவிர்ப்பதையும், அப்படி சில சமயங்களில் சிலர் அது “இந்த ராகம் தானே”  என ஒரு ராகத்தைக் குறிப்பிட்டு கேட்கும் போது “ஆம்”  என்று தலையாட்டி நகர்வதையும் கண்டிருக்கின்றோம். இந்த விஷயத்தை அவர் தவிர்த்து வந்ததாகவே தெரிகிறது.

ஹிந்துஸ்தானி ராகங்களில் மெல்லிசைமன்னருக்கு இருந்த ஈடுபாடு என்பதை அவரது பாடல்களில் வரும் சங்கதிகளிலும் நாம் துல்லியமாகக்   கேட்க முடியும். சங்கீத   வித்துவான்கள் செவ்வியலிசையில் நுட்பமான சங்கதிகளை அதிகம் பிரயோகிப்பது வழக்கமாக இருந்த நிலையில் மெல்லிசையிலேயே அசாத்தியமான இனிய சங்கதிகளையும், ஓசைநயங்களையும்   தரமுடியும் என விஸ்வநாதன் நிரூபித்தார். கேட்ட ராகங்களையே கேட்டு, கேட்டு பழகிய நிலையில் புதிய , புதிய ராகங்களில் ஆனந்திக்கத்தக்க புதிய ,புதிய சங்கதிகளிலும் பாடல்களை மெருகேற்றினார். 

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *