முகப்பொலிவை தரும் கிரீம்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வு

முகம் பொலிவுடன் விளங்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படும் ஒன்று! தங்கள் முகம் மாசு மருவின்றி அழகாக , வெள்ளையாக பளிங்கு போல மினுங்க வேண்டும் என்பது தான் 90 % பெண்களின் அவா! தங்கள் முகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட பளிச் என்று வெள்ளையாக இருக்க வேண்டும் என்றே பலரும் ஆசைப்படுகின்றனர்! இந்த ஆசையை மென்மேலும் தூண்டி தங்கள் வியாபாரத்தை பெருக்கி கொள்கின்றனர் முகப்பொலிவு கிரீம் தயாரிப்பாளர்கள்!

இந்த முகப்பொலிவு கிரீம்கள் நிஜமாகவே நம் சருமத்தை வெள்ளையாக்குதா?? இது எப்படி வேலை செய்கின்றது என்று பார்க்கலாம்.

மெலனின் வயதாவதை மெதுவாக்குகிறதா? - Quora

நம் சருமத்தில் மெலனின்(Melanin) என்று ஒரு நிறமி உண்டு.நம் தோலுக்கு நிறத்தை கொடுப்பது இந்த மெலனின் தான்! வெயிலில் நம் தோல் கறுத்து போவதற்கு முக்கிய காரணம் இந்த மெலனின் தான். மெலனின் அளவு அதிகரிக்கும் போது தோல் கறுத்து போகும்.. மெலனின் அளவு கம்மியாக இருக்கும் போது தோல் வெளுப்பாக தெரியும்! இந்த முகப்பொலிவு கிரீம்கள் எப்படி வேலை செய்கிறது என்றால் , நம் சருமத்தில் மெலனினை அதிகரிக்க செய்யும் தைரோசினேஸை(Tyrosinase ) தடுப்பதன் மூலம் வெள்ளையாக்குது! இவ்வாறு தைரோசினேஸை தடுப்பதற்காக கிரீம்களில் சேர்க்கப்படும் வேதியல் பொருள் ஹைட்ரோகுவினோனை(Hydroquinone ). அது போக விட்டமின் A  வை வழங்கும் ரெட்டினால்(Retinol ), நம் தோலில் உள்ள பழைய செல்களை அப்புறப்படுத்துவதோடு நில்லாமல் , மெலனின் அதிகம் இருக்கும் செல்களையும் அப்புறப்படுத்துவிடுகிறது . இவற்றோடு  சேர்க்கப்பட்டிருக்கும் சன் ஸ்க்ரீன் லோஷன் , புற ஊதா கதிர்களை தடுத்து நிறுத்தி விடுகிறது. ஆக , நம் சருமத்தின் நிறம் இந்த முகப்பொலிவு கிரீம்களால் சிறிது அதிகரித்தது போன்ற தோற்றத்தை தருகிறது! நாம் இந்த முகப்பொலிவு கிரீம்களை உபயோகம் செய்வதை நிறுத்தி விடும் போது , நம் சருமம் திரும்பவும் பழைய நிறத்துக்கு திரும்புகிறது! ஆக , முகப்பொலிவு கிரீம்கள் தருவது தற்காலிக தீர்வு மட்டுமே!

ஆனால் ஒன்றை இந்த நிமிடத்தில் புரிந்து கொள்வது நலம். நம் சருமத்தின் இயற்கையான நிறத்தை கண்டிப்பாக மாற்ற முடியாது! இந்த முகப்பொலிவு கிரீம்கள் நம் சருமத்தின் மேலோட்டத்தில் மட்டுமே செயல் புரிகின்றது! இது போல மெலனின் அதிகரிப்பை வேதியல் பொருட்களால் தடுத்து நிறுத்தி விடும் போது ,சருமத்தில் கேன்சர் போன்ற புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்! இந்த ஹைட்ரோகுவினோனை(Hydroquinone) நிறைய நாடுகள் தடை செய்து உள்ளன! நிறைய முகப்பொலிவு கிரீம்களில் ஹைட்ரோகுயினோனோடு(Hydroquinone ), ஸ்டீராய்டுகள் (Steroid ) சேர்க்கபடுகின்றன. அதனை நாம் நம் சருமங்களில் உபயோகிக்கும் போது , ஆரம்பத்தில் நன்றாக  வேலை செய்வது போல இருந்தாலும் , நெடுங்காலம் உபயோகிக்கும் போது  தோல் புற்று நோய் வருவது உறுதி! மேலும் கல்லீரல் பாதிப்புகள் உண்டாகும். பெட்னோவேட்(Betnovate ) போன்ற ஸ்டீராய்டுகள் உள்ள முகப்பொலிவு கிரீம்களை உபயோகிக்கும் போது நாளடைவில் முகம் பாழாய் போய் விடும். மருத்துவரின் அறிவுறுத்தல் இல்லாமல் இதனை முகத்திற்கு உபயோகிக்கவே கூடாது!

இந்த ஹைட்ரோகுயினோனை(Hydroquinone ) இல்லாது தயாரிக்கப்படும் முகப்பொலிவு கிரீம்களில் மெர்குரியை (Mercury )அதிக அளவு சேர்க்கின்றனர்! இது மிகக்  கொடுமையானதொரு விஷயம். மெர்குரி சேர்த்த கிரீம்களை உபயோகிப்பவர்களுக்கு தோல் நிற மாற்றம் உண்டாகும் . சரும எரிச்சலும் , அரிப்பும் உண்டாகி , காலத்துக்கும் அழியாத வடுக்களை முகத்தில் உண்டாக்கி விடும். மேலும் , மெர்குரி ஒரு நச்சு பொருள். அது நம் நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் உண்டாக்கி விடும். அதனால் பதட்டம், மன அழுத்தம் , மன நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்!

முகப்பொலிவு கிரீம்கள் , நாளடைவில் நம் சருமத்தை  ஒளியினால் கூச்சம் ஏற்படும் நிலைக்கு(Photo  Sensitive  Skin ) தள்ளி விடும்.அத்தகைய நிலைக்கு ஆளாகும் போது , வெயிலில் வெளியே சென்று வருவது சிரமத்திற்குரிய காரியமாகி விடும்.  சரும எரிச்சல் , பருக்கள் , அதனால் உண்டாகும் வடுக்கள் என்று நம் சருமத்தை ஒரு வழி பண்ணி விடும்!

அப்போ முகப்பொலிவு கிரீம்களை உபயோகிக்கவே கூடாதா என்று கேட்டால் நான் சொல்லுவேன்.. உபயோகியுங்கள் , ஆனால் என்னென்ன பொருட்கள் சேர்த்து தயாரித்து இருக்கிறார்கள் என்று உற்று பார்த்து வாங்குவது நலம் தரும். ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள்(Alpha -Hydroxy Acid ) என்று புதியதாய் ஒரு பொருள் கொண்டு முகப்பொலிவு கிரீம்களை  தயாரித்து வருகின்றனர். கரும்பு , மோர் போன்றவற்றில் இருந்து இந்த அமிலம் எடுக்கப்படுகின்றது. இயற்கையான பொருட்களில் இருந்து எடுக்கபடுவதால் , சருமத்திற்கு  எந்த வித பாதிப்பும் இல்லை. இவை சருமத்தில் இறந்த செல்களை அப்புறப்படுத்துவதோடு நில்லாமல் மெலனின் உற்பத்தியையும் தடுக்கிறது .

சிகப்பழகு/முகப்பொலிவு கிரீம்கள் உபயோகிப்பதால் சருமத்தின் இயற்கையான நிறம் மாறுவதில்லை. கிரீம் தயாரிப்பாளர்கள் தாங்கள் என்னென்ன மூலப்பொருட்கள் உபயோகம் செய்து இருக்கிறோம் என்ற முழு விவரத்தை அச்சடித்து தருவதில்லை. மெலனின் அதிகமாக காணப்படும் சருமம் , அதாவது கறுத்த நிறமுடைய சருமமே ஆரோக்கியமான சருமம்! கறுத்த நிறமுடைய சருமத்தினரை தோல் வியாதிகள் அண்டுவதில்லை.

சரும பிரச்சனைகளை  தீர்ப்பதற்கு சரும மருத்துவரை  அணுகி பயன் பெறுங்கள்! நீங்களாக எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்! ஸ்டீராய்டு  உள்ள கிரீம்களை உபயோகித்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதை தலையை சுற்றி தூக்கி எரிந்து விடுங்கள். இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு உங்கள் சருமத்தை பாதுகாத்து கொள்ள முயலுங்கள்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *