பெண்களுக்கு சிறந்த பலனை தரும் கூர்மாசனம்

நாம் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், நல்ல பண்புள்ளவனாக இருக்க வேண்டும். மனதில் எழும் எண்ணங்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் அவயங்களை ஒடுக்கி, புத்திபூர்வமாக வாழ்வதற்கு முதலில் பயில வேண்டும்.

நமது உடலில் தமோ குண அதிர்வலைகள் சோம்பல், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, காமம் போன்ற குணங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் யோகாசனம் செய்தால் ஓடிவிடும். அவயங்களை ஒடுக்கி, புலன்களையும் தன் ஆட்சியில் கொண்டு வரும் கூர்மாசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.

கூர்மாசனம் செய்முறை:

 1. முதலில் தரையில் விரிப்பு விரித்து உட்காரவும்.
 2. இரண்டு கால் பாதங்களையும் ஒன்றாக சேர்த்து இரண்டு குதிகால்களும் ஆசனவாயிற்படுமாறு பொருத்தி வைத்துக் கொள்ளவும்.
 3. கைகளினால் இரண்டு கணுக்கால்களை பிடித்துக் கொண்டு மூச்சை வெளியில் விட்டு குனிந்து இருகால் பெருவிரல்களின் மத்தியில் தலையை வைத்து இரு கைகளையும் தலைக்கு முன்பாய் வைக்கவும்.
 4. இந்நிலையில் சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும்.
 5. இதேபோல் இரண்டு முறைகள் செய்யவும்.

பலன்கள்:
மனிதனின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது மனம். இந்த மனம் தான் புலன்களின் வழியாக இயங்குகின்றது. ஒவ்வொரு புலன்களையும் மனிதன் அடக்க முடியாமல் அல்லல்படுகிறான். இந்த ஆசனம் செய்வதால் மனதடங்குகின்றது. புலன்கள் அடங்குகின்றது. அதன் பின் அறிவைப் பயன்படுத்தி வளமாக வாழலாம்.

நமது உடலில் உள்ள பிராண சக்தி கண்கள், காதுகள், வாய், மூக்கு, மனதில் எழும் எண்ணங்களினால் வெளியேறிக் கொண்டேயிருக்கின்றது. இதனால் உடலில் பிராண ஆற்றல் குறைகின்றது. என​வே உடல், மன சோர்வு ஏற்படுகின்றது. இந்த ஆசனம் செய்வதால் புலன் அடக்கம் ஏற்படுகின்றது. தேவையற்ற சிந்தனைகள் குறைகின்றது. இதனால் உடலில் பிராண சக்தி சேமிக்கப்படுகின்றது.

உடல் இயங்குவதற்கு தேவையான பிராண சக்தி குறைவதால் தான் வியாதி வருகின்றது. இந்த ஆசனத்தால் புலன் ஒடுக்கம் ஏற்படுகின்றது. அதனால் பிராண சக்தி சேமிப்படைந்து உடல் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்க பிராண ஆற்றல் எப்பொழுதும் உடலில் இருக்கின்றது.

கிட்னி
இந்த ஆசனம் கிட்னி சிறப்பாக இயங்க பயன்படுகின்றது. மேலும் கிட்னியை நன்கு திடப்படுத்தி அதன் முழு செயல்பாட்டையும் உடல் பெற்றுக் கொண்டு உழைக்க பயன்படுகின்றது.

பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்
இந்த ஆசனம் பெண்களுக்கு மிகச் சிறந்த பலனை அளிக்கின்றது.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மனசோர்வு, கவலை, மன அழுத்தத்தை நீக்கி மன அமைதியைக் கொடுக்கின்றது.
மாதவிடாய் தள்ளிப்போதல், ஒழுங்கின்மையை நீக்குகின்றது.
அதிக ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் நீக்குகின்றது.
பெண்கள் இளம் வயதிலேயே பயிற்சி செய்தால் கர்ப்பப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.
பெண்களின் அதிக இடுப்பு சதை, வயிறு சதை, கால் தொடை சதைகளை சரிப்படுத்தி மிடுக்கான, இளமையான தோற்றத்துடன் திகழலாம்.
குழந்தை பிறந்த பின் முதுகுவலி வராது. அதிக சதை போடாது. நீரிழிவு வராது.
சரியான நேரத்தில் பிரசவ வலி ஏற்படும். பிரசவமும் சுகமாக நிகழும். முதுகில் ஊசி போடுவதைத் தவிர்க்கலாம்.
சிறுநீர்ப்பையில் கற்கள், பித்தப்பையில் கற்கள் வராது. இருந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்தால் கரைந்து விடும்.
கழுத்து, முதுகுவலி வராது.
குழந்தை பிறந்த பின்பும் இந்த ஆசனத்தை மூன்று மாதம் கழித்து பெண்கள் பயிற்சி செய்யலாம். அதனால் மிக இளமையான உடல் தோற்றம் கிடைக்கும். மனமும் அமைதி பெறும்.

அஞ்சனம் போன்றுடல் ஐ அறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே
– திருமூலர்

விளக்கம்
உடலுக்குள்ளே இருக்கின்ற கபநோய் மாலை வேளையில் செய்யப்படும் யோகாசனப் பயிற்சியினால் தீரும்.

நடுப்பகலில் (மதியம்) யோகாசனம் செய்தால் வஞ்சகமான வாத நோய் நீங்கும்.
அதிகாலையில் யோகாசனப் பயிற்சிகள் செய்தால் பித்த நோய் நீங்கும். இது மட்டுமல்ல மூன்று வேளை பயிற்சி செய்தால் ந​ரையும், திரையும் நீங்கி இளமையுடன் வாழலாம் என்கிறது திருமூலர் வாக்கியம்.

யாருடைய உடலில் வாதம், பித்தம், சிலேத்துமம் சம அளவில் உள்ளதோ அவருக்கு வியாதியே வராது. மனிதன் 120 வருடம் இளமையுடனும், சுறுசுறுப்புடன் வாழ முடியும். அதனால் தான் 60 வயது வரும் பொழுது வாழ்வில் பாதி தான் முடிந்துள்ளது. இன்னும் 60 வருடம் வாழ்வார் என்று சஷ்டியப்த பூர்த்தி என்று கொண்டாடுகிறார்கள்.

அன்பர்களே இந்த ஒரு ஆசனத்தை மட்டும் காலை, மதியம், மாலை மூன்று வேளை மூன்று தடவை செய்யுங்கள். உடலில் வாத, பித்த, சிலேத்துமம் சமமாக இருக்கும். 60 வயதிலும் சுறுசுறுப்பாக திகழ்வீர்கள். உங்கள் குழந்தையிடம் உனது ஆயுட்காலம் 120 வருடங்கள் என்பதைக் கூறுங்கள். அப்படி வாழ வேண்டுமெனில் இந்த ஆசனத்தைப் பயிலச் சொல்லுங்கள்.

உணவு
இதனுடன் உணவில் தினமும் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, கருப்பு திராட்சை பழம், பேரீச்சம் பழம் சாப்பிடுங்கள். பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள். மாமிசம் தவிர்ப்பது மிக நலம். இரவு 7.00 மணிக்குள் அரை வயிறு சாப்பிடுங்கள். வளமாக நலமாக 120 வருடங்கள் வாழலாம்.

இத்துடன் முஷ்டி முத்திரையும் பயிற்சி செய்யவும்.
மனிதனும் உணர்ச்சி வயப்பட்டு கோபப்படுகின்றான். அதனால் இதயபாதிப்பு, ரத்த அழுத்தம் வந்தபின் உணர்கின்றான். இனி கோபப்படக்கூடாது என்ற உணர்வில் வாழ முயற்சி செய்கின்றான். ஆனால் அந்த உணர்வு தொடர்ந்து நிற்பதில்லை. ஏன்? ஏற்கனவே பல வருடங்கள் கோபப்பட்டதால் அந்த அனுபவங்கள் உடலில் வாசனையாக பதிந்துள்ளது. அந்த மனிதப் பண்புகள் மீண்டும், மீண்டும் ​கோப உணர்வலைகளைத் தூண்டுகின்றது. கோபத்தை முதலில் படிப்படியாக குறைத்து, பின்பு முழுமையாக கோபத்தை அழிக்கும் ஓர் முத்திரைதான் முஷ்டி முத்திரை.

முஷ்டி முத்திரை எப்படி செய்வது

 1. விரிப்பில் கிழக்கு திசை நோக்கி, பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
 2. உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
 3. கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளியிடவும்.
 4. மூச்சை வெளியிடும் பொழுது நமது உடல், மனதிலுள்ள அழுத்தங்கள் (டென்ஷன்) விலகுவதாக எண்ணவும்.
 5. இப்பொழுது உங்கள் கட்டைவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் இறுக்கமாக உள்ளங்கையில் படுமாறு வைக்கவும்.
 6. அந்த விரல்களில் அழுத்தம் கொடுக்கவும்.
 7. பின் கட்டை விரலை மடித்து, மோதிர விரலின் மேல் வைத்து அழுத்திப் பிடித்துக் கொள்ளவும்.
 8. அ​னைத்து விரல்களையும் இறுக்கமாக வைத்து இம்முத்திரையைச் செய்யவும்.

எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்
தினமும் பத்து நிமிடங்கள் செய்யலாம். முதலில் பயிற்சி செய்பவர்கள் ஐந்து நிமிடங்கள் செய்து, படிப்படியாக ஒரு மாத முடிவில் பத்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் செய்யுங்கள். அடிக்கடி கோபம் அடைவது குறையும். நம் உடல் பாதுகாக்கப்படும்.

மலச்சிக்கல் நீங்கும்
பெரும்பாலான வியாதிக்குக் காரணம் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாததுதான். நம் உடலில் தினமும் காலை, மாலை மலம் சிரமமில்லாமல் வெளியேறினால் உடலில் வியாதியே வராது. ஆனால் இன்று மன இறுக்கத்தினாலும், தகாத உணவுப் பழக்கத்தினாலும், சரியான நேரத்தில் உணவை எடுத்துக் கொள்ளாததாலும், மன பதட்டத்தாலும், இடைத்தீனி அதிகம் உண்பதாலும் மலச்சிக்கல் நி​றைய மனிதர்களுக்கு வருகின்றது. இந்த முஷ்டி முத்திரையைச் செய்தால் நிச்சயமாக மலச்சிக்கல் என்ற நோயிலிருந்து படிப்படியாக விடுதலை அடையலாம்.
உண்ட உணவு ஜீரணமாகாமல், வயிறு உப்பிசத்துடன் நிறைய மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த முத்திரை அஜீரணக் கோளாறுகளை நீக்குகின்றது. பசியின்மை நீங்கும்.

எப்பொழுதும் படபடப்புடன் இருப்பவர்கள் செய்யும் காரியத்தில் தவறுகள் இருக்கும். தெளிவான முடிவை எடுக்க முடியாது. இந்த முத்திரை படபடப்பை நீக்குகின்றது. மன அமைதியைத் தருகின்றது. அதனால் தெளிந்த சிந்தனையுடன் வாழலாம்.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *