ஒரு மனிதனை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என்றால் அவனுடைய நோயெதிப்பு மண்டலம் வலுவாக இருக்க வேண்டும். நோயெதிப்பு மண்டலம் என்பது இரத்த அணுக்கள், நோயெதிப்பு செல்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான அமைப்பாகும். இந்த சிக்கலான அமைப்பு தான் நோய்களிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. இதுவே உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு மண்டலம் இருந்தால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும். நம்முடைய உடலில் உள்ள வெள்ளை மற்றும் இரத்த அணுக்கள், ஆன்டிபாடிகள், உறுப்புகள் மற்றும் நிணநீர் கணுக்கள் உள்ளிட்ட பாகங்கள் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றன. நம்முடைய நோயெதிப்பு மண்டலம் வலிமையானதாக இருக்கிறதா இல்லை பலவீனமாக இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதை அறிந்து கொண்டு எப்படி நோயெதிப்பு சக்தியை பலப்படுத்தி நோய்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம் என்பதற்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.
பலவீனமான நோயெதிப்பு மண்டலத்தின் அறிகுறிகள்
சோர்வு : உங்களுக்கு சளி, காய்ச்சல் ஏற்படும் சமயங்களில் ரொம்ப சோர்வாக இருப்பீர்கள். இது உங்க உடலில் நோயெதிப்பு சக்தி குறைவாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
தொடர்ச்சியான தொற்றுகள்
நாள்பட்ட சைனஸ் நோய்த்தொற்றுகள், காது நோய்த்தொற்றுகள், நிமோனியா போன்ற நோய்த்தொற்றுகள் அடிக்கடி தோன்றுதல்.
சளி, இருமல் மற்றும் ப்ளூ போன்ற உடல் உபாதைகள் மீண்டும் மீண்டும் தோன்றுதல்
அதே மாதிரி சீரண பிரச்சனைகளாக வயிற்றுப் போக்கு, வாயுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஏற்படுதல்.
இதர அறிகுறிகள்
டைப் 1 டயாபெட்டீஸ், முடக்கு வாதம், லூபஸ் போன்ற உடல் உபாதைகள் உண்டாகுதல்.
உள் உறுப்புகளில் அழற்சி உண்டாதல்.
இரத்தம் சம்பந்தமான நோய்கள் அல்லது அனிமியா போன்ற பாதிப்புகள் உண்டாகுதல்.
குழந்தைகளுக்கு வளர்ச்சி குறைபாடுகள், தாமதமான வளர்ச்சி போன்றவை ஏற்படுதல்.
சரும பிரச்சினையாக சரும வடுக்கள், எரிச்சல், அரிப்பு, வறட்சி மற்றும் சிவந்து போதல் ஏற்படுதல்.
மேற்கண்ட அறிகுறிகள் பலவீனமான நோயெதிப்பு சக்தியை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோயெதிப்பு மண்டலத்தை பலப்படுத்துவது எப்படி
சுத்த பராமரிப்பு
பல நோய்கள் நம்மளை அண்டுவதற்கு சுத்தமற்ற கைகள் தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே நோய்கள் அண்டாமல் இருக்க நாம் கை சுகாதாரத்தை மேற்கொள்ள வேண்டும். எனவே எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்பொழுது எல்லாம் கைகளை கழுவ வேண்டும்.
உணவு மற்றும் சிற்றுண்டி தயாரிப்பதற்கு முன் மற்றும் பிறகும், சாப்பிடுவதற்கு முன்பும் கைகளை கழுவ வேண்டும் . இருமல், மூக்கில் இருந்து சளி வெளிவரும் சமயங்களில் தொட்டால் கைகளை கழுவ வேண்டும்
நோய் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொள்வதை தவிருங்கள்
உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு சக்தி இருந்தால் சளி, இருமல் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு வைத்திருப்பதை தவிருங்கள். ஏனெனில் நோய்த்தொற்று உங்களுக்கு எளிதாக தொற்ற வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளியேறும் நீர்த்துளிகள் வழியாக நோய் பரவ வாய்ப்புள்ளது.
நோய்த் தொற்று இருப்பவர்களிடம் இருந்து எப்போதும் தள்ளியே இருப்பது நல்லது. வீட்டிலேயே தனித்திருப்பது நல்லது. ஒருவேளை வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் மட்டும் செல்லுங்கள். கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்ல மறக்காதீர்கள்.
வீட்டு பொருட்களை கிருமி நீக்கம் செய்ய வேண்டும்
நோய்களை பரப்பும் கிருமிகள் வீட்டுப் பரப்பில் இருப்பது, கதவுகள், ரிமோர்ட் கண்ட்ரோல்கள் போன்றவற்றில் கிருமிகள் வசிக்கலாம். எனவே அந்த மாதிரியான பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்யுங்கள்.
மன அழுத்தத்தை போக்க வேண்டும்
உங்களுக்கு மன அழுத்தம் இருந்தால் நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய ஆரம்பித்து விடும். எனவே மன அழுத்தம் நீங்க யோகா, தியானம், உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு இவற்றை செய்து மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
போதுமான தூக்கம்
தூக்கம் இல்லாமல் இருப்பதும் உங்க உடல்நலத்தை பாதிப்படைய செய்யும். உங்களுக்கு இருக்கும் தூக்கமின்மை பிரச்சனை உங்க உடம்பில் உற்பத்தியாகும் வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அழிக்கிறது. இதனால் உங்க நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய அதிக வாய்ப்புள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே ஒரு மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். போதுமான தூக்கம் மிக மிக அவசியம். போதிய தூக்கமிக்மையால் தான் நிறைய நோய்கள் உண்டாகின்றன.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான உணவு மட்டுமே ஆரோக்கியமான நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு பலவீனமான நோயெதிப்பு அமைப்பு இருந்தால் உங்க உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த ஆரோக்கியமான உணவு உங்களுக்கு ஊட்டச்சத்துக்களையும் , ஆன்டி ஆக்ஸிடன்கள் தன்மைகளையும் வழங்கும்
வைட்டமின் சி நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், முட்டைகோஸ், ப்ரக்கோலி போன்ற காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் மேம்படுததவும் உதவும்.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
தினசரி உடற்பயிற்சி உங்க உடம்பை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. மன அழுத்தத்தை கொடுக்கும் கார்டிசோல் ஹார்மோன் அளவை குறைத்து எண்டோர்பின் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டுகிறது. இதனால் மன அழுத்தம் நீங்கும். உங்க நோயெதிப்பு மண்டலம் வலுப்படும். இருப்பினும் பலவீனமான நோயெதிப்பு அமைப்பு உடையவர்கள் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டாம். இது உங்க நோயெதிப்பு அமைப்பை மேலும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே உங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.
விட்டமின் பற்றாக்குறை
சில விட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறை உங்க நோயெதிப்பு மண்டலத்தை பலவீனமாக்கும். விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நோயெதிப்பு மண்டலம் பலவீனம் அடைய வாய்ப்புள்ளது. இதே மாதிரி விட்டமின் ஏ, டி, ஈ, இரும்புச் சத்து, போலிக் அமிலம் மற்றும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையும் நோயெதிப்பு அமைப்பை பலவீனப்படுத்துகிறது.
எனவே இந்த விட்டமின் பற்றாக்குறையை கண்டிப்பாக போக்க முயல வேண்டும். மருத்துவர் பரிந்துரை பேரில் இதற்கான விட்டமின் மாத்திரைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இது உங்க நோயெதிப்பு அமைப்பை வலுப்படுத்த உதவி செய்யும்.