சீனா மீண்டும் ஒரு சாதனை

Visits of Current Page:915
GlobalTotal: 358687

7 கோடி டிகிரி வெப்பத்தில் செயற்கை சூரியன்

சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்னை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து வருகிறது. இந்த சாதனைக்கு அணி சேர்க்கும் விதமாக சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது. சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கினர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *