சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் பகுதி 2

Visits of Current Page:395
GlobalTotal: 263115

வானம் சிவந்த நாட்கள்

பொட்டு என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளப் பெண்ணும், ராமையா என்ற அவளது மகனும் வழக்கு விசாரணைக் கென்று நடந்த நடையை இன்னும் அவர்களால் மறக்க முடியவில்லை. நிராயுத பாணியான தொழிலாளி மீது துப்பாக்கி கொண்டு வெடிவைத்தது, கொலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பு வெளியானவுடன் ஆர்த்து மகிழ்ந்தது தொழிலாளவர்க்கம். அம்மகிழ்ச்சி அடங்கும் முன்னதாகவே, அக்கொலைக்கு காரணமாகவிருந்த சார்ஜண்ட் சுரவீர சன்மானம் கொடுத்து பதவி உயர்வு செய்யப்பட்ட செய்தி வெளியானது. விசித்திரமான நடைமுறைகள். தலையை நிமிர்த்தி திரிகிற ஆமைகளாக தொழிலாளர்கள் நடக்கத் தலைப்பட்டனர்.

தாம் மேற்கொண்ட போராட்டம் தம்முடைய ஓருயிரை அநியாயமாகப் பறித்துக் கொண்டாலும், தொழிலாளவர்க்கத்துக்கு நியாயம் செய்யாமல் இல்லை.
சகல தொழிலாளர்களுக்கும் பதினாறு சதம் சம்பளத்தை உயர்த்துவதற்கு வழி செய்து கொடுத்திருக்கிறது.
போப்துரையின் கொலையிலும் தொழிலாளிகளின் ஒன்றுபட்ட சதி ஏதும் இருக்கிறதா?நூறு ரூபா சன்மானம் தருவதாகக் கூறும் போலீசாரின் நோட்டீஸ்கள் தோட்டப்பகுதி எங்கும் பரவலாக விநியோகிக்கப் பட்டது. நோட்டீஸ்களை பலரின் கைகளிலும் காணக்கிடைத்தது. மெல்ல வெளிரும் மலைப்பள்ளத்தாக்குகளிடையே தொழிலாளர்களிடையே ஒரு பதட்டமும் தொடங்கியது. நூறு ரூபாவுக்கு யார்யாரெல்லாம் எவர் எவரைப் பற்றி யெல்லாம் எப்படி எப்படியெல்லாம் கதை பரப்பப் போகிறார்களோ? மேமலைத் தோட்டத்தில் காலை மலை ரவுண்ட் வந்து கொண்டிருந்த கண்டக்டரின் பார்வையில் அவன் அகப்பட்டான். பிரதான ரோட்டைவிட்டு காட்டுத் தொங்கலுக்கு அழைத்துச் செல்லும் ஒற்றையடிப்பாதையில் அவன் நடந்து கொண்டிருந்தான்.
அவனது நடையில் ஒரு தளர்ச்சி காணப்பட்டது. சுற்றுமுற்றும் பார்வையைச் செலுத்திய வண்ணம், மெது மெதுவாக காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். கூப்பிட்டு விசாரித்ததில் அவன் பெயர் மெய்யன் என்றும் மேமலை தோட்டத்துக்கு விருந்தாளியாய் வந்திருப்பவன் என்றும் தெரியவந்தது. அதை உறுதி செய்ய வேண்டும். ‘அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்றாகி விடுவதைப்போல, நூறு ரூபா சன்மானம் தரும் போலீசாரின் நோட்டீஸ், கண்ணில் அகப்படுபவர்களை யெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைக்கிறதே என்று கண்டக்டர் சபர்டீன் ஒரு தரம் நினைத்தார். சர்வ வல்லமை படைத்த தனது தோட்டத்து எல்லைக்குள் வைத்து ஒரு கொலையாளி தப்பிவிட இடம் கொடுக்கக் கூடாதென்று அவர் கரிசனைப்படுவதில் நியாயமிருந்தது.
தன் அரைக் காற்சட்டை பாக்கெட்டுக்குள் கைவிட்டு அதிலிருந்த நோட்புக்கை வெளியில் எடுத்தார். மலையைச் சுற்றிவரும்போது தன் கண்ணில் படுவதை யெல்லாம் குறித்துக் கொள்ளவும் துரையை ஆபிஸில் சந்திக்கும்போது தன் ஞாபகத்துக்காகவும் அந்த நோட்புத்தகம் தான் அவருக்கு பக்கத் துணையாக இருக்கிறது.
அந்த நோட்புத்தகத்து இடுக்கிலிருந்து நான்காக மடித்து வைத்திருந்த ஒரு நோட்டீஸை எடுத்துப் படித்தார். நூறு ரூபா சன்மானம்தரும் போலீசாரின் நோட்டிஸ் அது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீராசாமியாக அவன் இருப்பானா, அல்லது வேலாயுதனாக இருப்பானா, இல்லாவிட்டால் அய்யம் பெருமாளாக இருப்பானா என்று அவர் மனம் தனக்குள்ளாகவே கேள்விகள் கேட்கத் தொடங்கியது.
மிரளமிரள விழிக்கும் அவனது பார்வை, அடர்ந்து வளர்ந்து அடங்காது முன் நெற்றியில் விழும் கேசம், நெற்றி நிறைந்த மூன்று விரல்களால் நீட்டி பூசப்பட்ட விபூதி என்று அவன் முகம் நினைவில் நிற்கிறது.
அவனை இதற்கு முன்னர் தோட்டத்தில் ஒருநாளும் பார்த்த ஞாபகமில்லை, சபர்டீன் யோசித்து யோசித்துப் பார்த்தார். அவனை இதற்கு முன்னம் எங்குமே பார்த்ததில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
மெயின் ரோடிலிருந்து காட்டுத் தொங்கல் செல்லும் வழியில் அவன் ஏன் நடக்க வேண்டும்? பாதைக்குப் பழக்கமில்லாதவன் அவன் என்பதை அது காட்டுவதாகாதா?
சபர்டீன் ஏதோ நினைத்துக் கொண்டு தன் கையிலிருக்கும் நோட்டீஸை அவனுக்குக் காண்பித்த வண்ணம் இப்படி நோட்டீஸ் அடித்து, போலீசாரால் பல இடங்களிலும் தேடப்படும், கடைசியில் பிடிபடுபவர்கள் சிறையில் அடைப்பட்டு சித்ரவதைக் காளாவதை அவர் அவனிடம் விளக்கினார். சிறையில் கொடுமைகள் தாங்க முடியாததாக இருந்தமையால் தானே என்னெம் பெரேராவும், கொல்வின் ஆர்டி சில்வாவும், பிலிப் குணவர்தனாவும் சிறையுடைத்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றனர் என்று உரத்த குரலில் ஒரு பிரசங்கமே செய்தார். இது எல்லாவற்றிலும் அகப்படாமல் தப்பிப்பதற்குத் தாமாகவே சரணடைவது தான் வழி என்று கூறி அவனை ஒரு நோட்டம் விட்டார்.
அவர் கூறியது போலீஸ் நடைமுறைகளை பிரித்தானிய ஆட்சி நடக்கும் இலங்கை தேயிலைத் தோட்டங்களில் போலீஸ் என்றாலே சிறைக்குள் நடக்கும் கொடுமைகள் தாம் ஞாபகம் வரும், இந்திய சுதந்திரப் போராட்டமும், மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு அனுபவித்த கஷ்டங்கள் தாம் நினைவுக்கு வரும். திரும்ப திரும்ப அவைகளே நினைவிற்கு வரும் காட்சிகளாயிருந்தன.
சபர்டீன் தன் முன் நிற்கும் மனிதனிடம் கேள்வி கேட்கத் தொடங்கினார்.
“நோட்டீரைப் படிச்சாத்தான்” “ஆமாம்…” உனக்கு இந்த சம்பவத்தைப் பற்றி எதுவும் தெரியுமா?
ஆம், தெரியும். அவன் அளித்த பதிலால் கண்டக்டர் திடுக்கிட்டார். அவன் இப்படி பதில் தருவான் என்று அவர் எதிர்பார்க்க வில்லை.
தெரியுமா? எப்படி?
நான் தான் வீராசாமி. சொல்லி விட்டு எந்தவித பயமுமின்றி கண்டக்டரை நிமிர்ந்து பார்த்தான், எதற்கும் நான் தயார் என்பதைப்போல,
சபர்டீனுக்கு மின்னல் அடித்ததைப் போலிருந்தது. கூடவே ஒரு குதூகலம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக் கெதிராக இலங்கையில் எழுந்த முதல் எழுச்சியின் அடித்தளத்தைக் காண்பதில், இராமருக்குதவிய அணிலாகத் தானும் சேர்ந்திருப்பதை எண்ணி சுற்றிநின்ற தொழிலாளர்கள் மூவரையும் பார்த்து இவனைக் கூட்டிக் கொண்டு தோட்டத்து ஆபீசுக்கு வாருங்கள் என்று கட்டளையிட்டார். எவ்வித மறுப்புமின்றி அவர்களுடன் அவரைப் பின்பற்றி ஆபிசுக்கு எல்லோருடனும் சேர்ந்து புறப்பட்டான் வீராசாமி.
சபர்மனுக்கு ஆயிரம் ஆயிரமாய் சிந்தனைகள் வந்து குவிந்தன. இவனை அழைத்துப் போய் ஆபிசுக்குள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்; கம்பளைப் போலீசுக்கு செய்தி சொல்ல வேண்டும், அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறவேண்டும், இப்ப ஒவ்வொன்றையும் தன் நெஞ்சுக்குள்ளாகவே கேட்டு பதில் சொல்லிக் கொண்டே நடந்தார்.
இவன்தான் வீராசாமி என்பதற்கு என்ன ஆதாரம்? அதை முதலில் ஆனைமலைத் தோட்டத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும், அத்தோட்டத்து ஆபிசுக்கு கதைக்க வேண்டும். தனது தோட்டத்துரை ஹமில்டன் என்ன அபிப்பிராயத்தை வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை .
இவ்விதம் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத, ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புமாறாத சிந்தனை அவரைச் சுற்றி வட்டமடித்தது. ஆபிசுக்குப் போய் தகவல்களையெல்லாம் அனுப்பிவிட்டு அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு, மெதுவாக வீராசாமியின் மீது பார்வையைச் செலுத்தினார். நடக்கக்கூடாத ஒன்று நடந்து விட்டதென்ற பதட்டம் அவனிடம் காணப்படவில்லை .
மாறாக, தீர்மானித்த ஒன்றை தீர்மானித்த விதமே செய்து முடித்துவிட்ட பெருமிதம் அவனில் தென்பட்டது.
அந்தப் பெருமிதம் தருகிற, நடந்துவிட்ட பயங்கரத்தை செய்து முடித்தவன் தான் தான் என்கிற நினைப்பு, அவனைச் சுற்றி யோடுவது தெரிந்தது.
நேற்றுவரை நிமிர்ந்து பார்க்கத் தைரியமில்லாத ஓர் ஏழைத் தொழிலாளியாக இருந்த வீராசாமி எப்படி தோட்டத்துரையை அடித்துக் கொலை செய்யும் அளவுக்கு மாறினான்? ஒரே இரவில் இது நிகழ்ந்திருக்கும் சாத்தியம் இருக்கிறதா? அவன் ஒருவன் மாத்திரம் இக்கொலையில் சம்பந்தப்பட்டிருப்பானா? அவனுடன் இந்த கொலைக்கு உடந்தையாயிருந்தவர்கள் வேறுயார் யார், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறாார்கள் என்ற பல கேள்விகள் சபர்டீன் மனதிலும் எழுந்து பதிலில்லாமலே போய்க் கொண்டிருந்தது.
போலீஸ் வேன் வந்தது. இன்ஸ்பெக்டர் உட்பட வேறு நான்கு கான்ஸ்டபிள்கள் அதில் வந்திருந்தனர்.
வீராசாமியின் வாக்குமூலத்தை பதிந்து கொண்டு மேல் விசாரணைக்காக அவனை வேனில் ஏற்றினர். சபர்டீனும் வாக்குமூலம் கொடுத்தார்.
இரவு பத்தரை மணி அளவில் ஆனைமலைத் தோட்டத்து துரை போப் மேமலை தோட்டத்து பங்களாவில் இரவு தீனியை முடித்துவிட்டு திரும்பும் போது, தொழிற்சாலைக்கு சற்று தள்ளி மூன்றாவது முடக்கில் தனது தொழிலாளர்கள் சிலரால் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைத் தாக்கியவர்களில் வீராசாமி என்பவன்பிடிபட்டுள்ளான். மற்றவர்களைக் கைது செய்வதற்கு போலீசார் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற பத்திரிகைச் செய்திகள் வெளியாயிற்று.
வெளியான பத்திரிகைச் செய்திகள் தோட்டமக்களிடையே பரபரப்பை உண்டு பண்ணியது. வீராசாமியின் கூட்டாளிகள் சற்று கவலையுடன் காணப்பட்டனர்.
தங்களுடைய பெயரையும் சம்பந்தப்படுத்தியிருப்பானோ என்று அவர்கள் சந்தேகப்படத் தொடங்கினர்.
அப்படி குறிப்பிட்டிருந்தால் அதனால் தங்களுக்கு ஏற்படப் போகும் சங்கடங்கள் அவர்களை அச்சம் அடையச் செய்தது, தங்களுக்கும் வீராசாமிக்கும் ஏற்பட்ட தொடர்புகள் குறித்து அவர்கள் கவலைப்படத் தொடங்கினர்.
இப்படி அவரவர் மனநிலைக்கேற்ப அன்றைய பொழுது மறைந்து இரவு வந்து சேர்ந்தது.

தொடரும்..

Leave a Reply