சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 10

“துரையை அடிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருந்தது. அதைச் செய்தவர்கள் அவர்களிருவருந்தாம். அவர்கள் இருவருடன் நாங்கள் நான்கு பேர்கள் சென்றது, எங்களுக்கிருக்கும் ஒற்றுமையால் தான்.

மேலும் மேலும் அய்யன் பெருமாளைப் பேசவைப்பதன் மூலம் மாடசாமியால் பெறமுடிந்த தகவல்கள் இவை.

ஆக, தொழிலாளர்கள் அனைவரிடமும் துரைத்தனத்துக்கெதிராக அனல் பூக்கும் உணர்வுகள் அரும்பிவருகின்றன. மாடசாமி இதைத்தானே எதிர்பார்த்தார்.

உணர்வுகள் மலர்ந்து செயல்வடிவம் பெறுவது ஓரிருவர் கைகளில்தான்.

கண்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றப்பட்டது.

தொழிலாளர்கள் முதலில் திகைத்தனர். அவர்கள் விசாணையில் காட்டிய ஆர்வம், போலீஸ் ஸ்டேசனுக்கு அடிக்கடி சென்று வருதல், ஆகியவைகள் அவர்களிடையே மெல்ல மெல்ல ஏற்பட்டு வரும் மாறுதல்களை போலீசாருக்கு இனம் காட்டியது.

பாதுகாப்பாக இருக்குமே என்று கொழும்புக்கு மாற்றினர். குற்றவாளிகள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தப்பிவிடக்கூடாதே என்பது அவர்களின் கவலை.

அரசதரப்பு சாட்சியாகிவிடுவதால் ஒருவரின் குற்றம் முற்றாக இல்லாமல் போய்விடுவதில்லை. தண்டனை கொடுப்பதில் சில சலுகைகள் காட்டப்படலாம்; இது மாடசாமியின் கருத்து.

இப்படிச் சலுகைகள் கிடைக்கின்றன என்பதால் எத்தனை போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கின்றன?

போகம்பரைச் சிறைச்சாலையில் வேலாயுதத்தையும், வீராசாமியையும் தனித்தனியே போய் பார்த்து வந்தனர். வேலாயுதத்தைச் சந்திக்க புவனேசுவரியும் மெய்யனும் பேயிருந்தனர்.

வேலாயுதத்தைக் கண்டதும் சில விநாடிகள் ஒன்றும் பேசவரவில்லை. அவனது கண்கள் அருவியைப் பிறப்பித்தன.

மச்சான் நீங்கள் கட்டியிருந்த கறுப்புகயிறும், செப்புத் தாயத்தும் உங்களிடமிருக்கிறதா? என்றாள்.

பௌத்தகுரு ஒருவர் மந்திரித்து கொடுத்த தாயத்து. அதை அணிந்திருப்பவரைவெளியுலகத்து சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று மக்கள் நம்பினர். ஆண்மக்கள் அதை நம்பியே வாழ்ந்தனர்.

அப்படி ஒரு தாயத்தை அணிந்து கொண்டுதான் சரதியல் என்ற அசகாயசூரன் உடுவாங்கந்தை காட்டில் வாழ்ந்து இலங்கை பொலிசாரை நடுங்க வைத்தான். அவனது கதை தோட்டம் முழுக்க பரவியிருந்தது.

வேலாயுதம் செப்புத்தாயத்தை அணிந்து வந்து அதை புவனேசுவரியிடம் கதைகதையாய் முன்பு சொல்லியிருக்கிறான். அந்த நினைவில்தான் அவனைக் கண்டதும் முதன் முதலாகக் கேட்கத் தோன்றியது.

வேலாயுதத்தின் உடல் நலத்தின்மீது புவனேசுவரிக்கு அக்கறையில்லாமல் இருக்க முடியுமா?

பௌத்த துறவியிடம் அவன் அணிந்து வந்த தாயத்து அவனை விட்டுப் போய் எத்தனை நாட்களாகிறது? அவனிடமிருந்து அதற்கு பதிலேதும் கிடைக்கவில்லை. அவள் தன்னை மறந்து விட்டு வேறொருவனை மணம் செய்ய வேண்டும் என்று அவன் கூறியபோது அவள் அந்த யோசனையைக் கேட்க மறுத்தாள். கண்ணீரை ஆறாகப் பெருக்கிக் கொண்டு தலையைக் கீழும் மேலும் ஆட்டினாள்.

அது மாத்திரம் சொல்லாதீங்க, நீங்க வெளியில் வருவீங்க, நீங்கதான் என் கழுத்தில் தாலி கட்டுறீங்க, வேலாயுதத்தால் அவளை மறுத்துப் பேசத் தோன்றவில்லை. சரி சரி இப்படி அழுதுகிட்டிருந்தா சரியா வந்திடுமா என்றவன் அந்தப்பேச்சை திசைமாற்ற நினைத்து மெய்யனிடம் கதைக்க ஆரம்பித்தான்.

மெய்யா, நாம் என்ன செய்தோ மென்று உனக்குத் தெரியும்? மெய்யன் வேலாயுதம் பேசுவதைக் கேட்க ஆரம்பித்தான்.

என் வாயிலிருந்து இது வரையிலும் அவர்களால் ஒன்றையும் பெற முடியவில்லை. உண்மையாயினும் சரி பொய்யாயினும் சரி ஒன்றை கூட நான் சொல்லவில்லை. நம்முடைய சங்க காரியதரிசி இதைப்பற்றி கண்டிப்பாக என்னிடம் சொல்லியிருக்கிறார் என்றாள்.

முடிந்தவரை நம்மைக் காப்பாற்றி வெளியில் கொண்டு வருவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள் என்று கூறிய அவன் தொழிற்சங்கத்தையும் அதற்காக உயிர் கொடுக்க முனைந்திருக்க தொழிலாளர்களையும் எண்ணி பெருமிதம் கொண்டான்.

மெய்யா, திருநெல்வேலியில் உள்ள என் அண்ணனுக்கு என்னுடைய போட்டோ ஒன்றை அனுப்பிவிடு, விஷயம் அத்தனையும் குறித்து அவருக்கு ஒரு கடிதம் போட்டுவிடு என்று கூறியவன் உள்ளே போய் வீராசாமியை அனுப்பி வைத்தான். வேலாயுதத்தை விட ஒரு வயது குறைந்த வீராசாமி சிறைச் சாலைக்குள்ளும் அதே இளமைத் துடிப்பு குறையாமல் இருந்து வந்தான்.

வெளியில் வந்தவன்

புவனேசு, மெய்யன் இருவரும் கடைசியாக எங்களைப் பார்க்க வந்தீர்களா? தோட்டத்தில் நம்முடைய தோழர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்று குரலில் எவ்வித தடுமாற்றத்தையும் காட்டாமல் கேட்டான். கொலை நடந்த அடுத்த நாள் மேமலை தோட்டத்து கண்டக்டர் சபர்டீன் தம்மைக் கண்டு கதைத்தப்போது காட்டிய அதே தீரத்துடன், அதே துணிவுடன், இன்னும் அவன் விளங்குகிறான். அன்று மாலை ஸ்டோருக்கும் பங்களாவுக்கும் இடையில் நடந்த அந்த சம்பவம் மெய்யனுக்கு நினைவில் நிழலாடியது. வேலாயுதனும், வீராசாமியும் தடி சகிதம் துரையை அடித்து வீழ்த்தியது அவன் அருகிலிருந்த போது தான். அடிமேல் அடி வீழ்ந்து துரை பயங்கர ஓலமிட்டு கீழே சாய்ந்ததை அவன் பார்த்தான். துரை கீழே சாய்ந்ததும் அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர்களிருவரும் இருளினில் மறைந்தனர். அதன்பின்னர் அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாயத்தையும், கறுப்பு நூலையும், சிவப்பு கைலேஞ்சியையும் அதன் முனையில் முடிந்திருந்த சாவியையும் கைபற்றி விசாரணைகள் மேற்கொண்ட பொழுது அவை வேலாயுதத்தினுடையது என்பதை அவன் தெரிந்து கொண்டான். துரையை கீழே விழுத்தி அவருடன் தரையில் கட்டிப் பிடித்து சண்டையிட்டவன் லோயுதந்தானே.

நடப்பது நடக்கட்டும் என்று தானறிந்திருந்ததை தனக்குள்ளாகவே வைத்திருந்தான்.

தன் தங்கை புவனேஸ்வரிக்குக் கூட இது பற்றி அவன் பிரஸ்தாபிக்கவில்லை.

மாடசாமி சிறைச்சாலைக்கு வந்து அவர்களை பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டார்.

அவர்கள் வாயில் உண்மை வெளிவராது என்பதில் அவருக்கு திருப்தி. அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அவர்கள் அங்கத்துவம் வகித்த தொழிற்சங்கமே.

அதன் பொருட்டுதானே பலாத்காரத்தில் அவர்கள் நம்பிக்கையுடன் ஈடுபட்டார்கள்.

வேலாயுதமும் வீராசாமியும் தாம் எதிர்பார்த்ததைப் போல காரியசித்தி யுடையவர்கள், அவர்கள் தம் பங்குக்கு காரியம் ஆற்றிவிட்டனர்.

அசைக்க முடியாத ஆலமரம் அடியோடு வீழ்ந்து விட்டது. இனி என்னென்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்?

சாத்தப்பன் கங்காணி தம்மை மீறி காரியங்கள் நடந்து விட்டன என்பதில் கவலைப்பட்டாலும் இன்னும் கொஞ்ச நாட்கள் தம்முடைய வேலையில் நிலைக்கலாம் என்பதில் மகிழ்ச்சி காண்கிறார்

டேவிட் மனக்கிலேசம் மிகுந்தவராக அலைந்து திரிகிறார். தமக்குத் தெரிந்த தொழிற்சங்க தந்திரங்களை யெல்லாம் கடைப்பிடித்தார்.

கேரளத்து மண்ணில் படித்தவைகளை மலையகத்து மண்ணில் விதைத்து மரமாக்கி பார்க்க முனைகிறார். அவருக்கு ஒன்று மாத்திரம் உறுதியாய் தெரிந்தது. அவர்களிருவரும் தொடக்கிய போராட்டம் வீண்போகாது. அவர்களிருவரையும் வெளியில் கொண்டுவர முடிந்தவரை முயற்சிப்போம்.

நீதிமன்றம் கூடியிருந்த காலைவேளை. தோட்டத்தொழிலாளர் களும், அவர்களைப் பிரதிநிதித்துவப் பண்ணிய தொழிற் சங்க பிரமுகர்களும், நியாயம் கேட்டு வாதாடிய வக்கீல்களும் ஒன்றாகக் குழுமி இருக்கின்றனர்.

பத்திரிகைகள் இவ்வழக்கைப் பற்றி முக்கியச் செய்திகளைப் பிரசுரித்தால் இவ்வழக்குக்கு எங்குமில்லாத பிரபல்யம் உண்டு பண்ணப் பட்டிருந்தது.

நீதிமன்றம் நிரம்பி வழிந்தது.

நீதிபதி தன் ஆசனத்தில் வந்தமர்ந்தார். சுற்றிலும் பார்த்துவிட்டு தன் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினார்.

“தோட்டமென்பது பனியும் குளிரும் நிறைந்த பிரதேசம். உடல் நலத்துக்கு ஒத்துவராத இந்த சூழ்நிலையில், தனிமையில், இரவில் ஒன்பது மணிக்குமேல் இவர்கள் ஓரிடத்தில் கூடியிருப்பதே ஏதோ ஒரு திட்டத்தை நிறைவேற்றதான் என்பது ஆரம்பத்திலேயே நமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று சம்பவம் நடந்த ஆனைமலை தோட்டத்துக்குப் போய் அந்த இடத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் ஜூரிகளுக்கு கிடைத்தது.

இப்போது ஜூரிகளின் மனதிலே எந்தவித மயக்கமும் இல்லை. அன்று வெசாக் பூரண பௌர்ணமி தினம். என்னனுபவத்தில் இந்த நாள் வரையில் இப்படி ஒரு கொலை இந்தப் பிரதேசத்தில் இடம் பெறவில்லை. படுபாதகமான மிருகத்தனமான கொலை. முன்னுக்குப் பின் முரணாக அய்யன் பெருமாள் அளித்த வாக்கு மூலம் இந்த நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

சாட்சியமளிக்காமல் இருப்பதைவிட பொய்சாட்சியம் அளித்து இந்த மன்றத்தை திசைதிருப்ப முனைந்த அவனை எச்சரிப்பதுடன் நான்கு வருட சிறைத்தண்டனை அளிக்கிறேன். பொய்சாட்சி கூறுவதற்கு இனியாரும் முன் வரமாட்டார்கள்.

இந்த இடத்தில் நீதவான் சற்று தாமதித்து, மன்றத்தின் மின் விளக்குகளை அணைக்கச் செய்தார், மின் விசிறிகள் நிறுத்தப்பட்டு மயான அமைதி நிலவியது. வழங்கப் போகும் தீர்ப்பை முன்கூட்டியே சபையினர் விளங்கிக் கொண்டனர்.

நீதவான் வாயிலிருந்து அது வரவேண்டுமே.

ஜூரிகள் ஒரே குரலில் தீர்ப்பளித்திருக்கிறார்கள். தீரமாக வாதிட்ட வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்த நாடு கண்ட அகோரமான மனித கொலை இது. இதில் ஒரு முடிவை தான் சட்டம் தர முடியும். கொலையை செய்ததில் நேரடியாக ஈடுபட்ட இருவருக்கும் தூக்கு தண்டனை வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை. அவ்விதம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னர். வோயுதத்தையும் வீராசாமியையும் அவர்களின் கடைசி ஆசையைக் கூறும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வீராசாமி எதுவிதமான பதிலையும் தரவில்லை. சபையைப் பார்த்தான்.

என்னுடைய விருப்பத்தைக் கூறுவதால் யாருக்கு என்ன லாபம்? என்றான்.

“எப்படி அப்படி கூற முடியும்? வெள்ளைக்கார நீதவான் நாயைத் தூக்கிடுவதானாலும் தீர விசாரித்து தான் தூக்கிலிடுவான். அந்த முறைப்படி உன்னுடைய கடைசி ஆசையைக் கூறு.”

வீராசாமி சற்று யோசித்தான்.

“நம்முடைய எல்லா நடவடிக்கைகளும் இப்படிக்கேள்விக் குறியாய் மாறி விட்டிருப்பது எதனால்

உலகில் அடக்குவோர் என்று ஒருசாராரும் அடங்கிப் போவோர் என்று மறுசாராரும் இருக்கும் வரை இவ்விதம் கொலை நிகழ்வது நடந்து கொண்டு தானிருக்கும். அதற்கு ஓரிருவரைப் பிடித்து அவர்களுக்கெதிராக சாட்சிகளை ஜோடித்துக் கொண்டிருக்க அரசாங்கம் முயற்சி செய்து கொண்டு தானிருக்கும். போலீசார் அடித்து, உதைத்து வாங்கிய வாக்கு மூலங்களை எங்களுக்கெதிராகப் பாவிக்கின்றனர்.

இந்த வழக்கில் நான் கொலை செய்ததைப் பார்த்தவர்கள் யார்?

“ஆண்டவன் நம் எல்லாரையும் ஆசிர்வதிக்க வேண்டும்” அவனது வாக்கு மூலம் வேலாயுதத்தின் வாக்கு மூலத்தால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

போலீசார் தங்களிடமிருந்து தடயங்களை என்னிடம் காட்டி, இவைகள் உன்னுடையவைகள் எனக்கூறி என் வயிற்றிலடித்து ஒப்புக் கொள்ளச் செய்தனர். தோட்டமக்கள் அன்றாடம் அச்சத்தில்தான் வாழுகின்றனர். அவர்களின் அச்சத்துக்கு அளவில்லை. துரை, கங்காணி, கிளாக்கர், டீமேக்கர் என்று அவர்களை அச்சப்படுத்துவதற்கு பலர் இருக்கின்றனர்.

இவைகள் எல்லாவற்றிலுமிருந்து அவர்கள் விடுதலை பெறவேண்டும். நான் சார்ந்திருக்கும் சங்கம் அந்த விடுதலையைப் பெற்றுக் கொடுக்கும் எந்த சாவியைக் கொண்டு என்னை இந்த வழக்கில் சம்பந்தப் படுத்தினீர்களோ அதே சாவி அவர்களின் சங்கத்தின் அடையாளமாக இனி இருக்கும். விடுதலைக்காக உழைக்கும் சகோதரர்கள் வாழ்க. நான் வணங்கும் சிவ பெருமான் அதற்கு துணை நிற்பார். ஆண்டவன் ஒருவன் தான் எங்களுக்குத் துணை. ஆண்டவன் கூட அநியாயங்களை அழிப்பதற்கு பலாத்காரத்தை பயன்படுத்தி இருக்கிறார். பொறுக்க முடியாத அளவுக்கு எங்கள் மீது அநியாயங்கள் நடைபெறும் பொழுது இப்படியான சம்பவங்கள் நடைபெறுகின்றன.

வானம் எங்கள் மீது இடிந்து விழ நேர்ந்தாலும் அது சிவப்பு வண்ணத்தில் தான் மிளிரும். அதன் வண்ணத்தை மாற்றுவதற்கு யாரும் துணிவதில்லை. யாரும் முனைவதில்லை. வெளியே வானம் வண்ணம் பெறத் தொடங்கியது.

வானம் சிவந்த நாட்கள் நிறைவடைந்தது.

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *