சாரல்நாடன் எழுதிய வானம் சிவந்த நாட்கள் >>>பகுதி 9

Visits of Current Page:172
GlobalTotal: 207026

ஐந்து வருடங்களுக்கு முன்னர் நாவலப்பிட்டி நகரில் நடந்த கூட்டம் அவனது நினைவுக்கு வந்தது.

ஜயதிலக பார்க்கில் நாவலப்பிட்டி நகரம் அதுவரை காணக்கிடைக்காத ஜனத்திரள் குவிந்திருந்தது.

பச்சை, வெள்ளை, சிவப்பு என்ற மூவர்ணக் கொடிகள் பட்டொளி வீசி பறந்துக் கொண்டிருந்தன என்றாலும் சிவப்பு வண்ணக் கொடிகளே மைதானத்தில் நிறைந்திருந்தன.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கென்றே இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வந்திருக்கின்றனர்.

கம்யூனிஷ்ட் கட்சியின் பேச்சாளர் கமலாதேவி சட்டோபாத்யா கைலாகு கொடுத்து மேடையிலேறி அனைவரையும் பார்த்து கையசைக்கிறார்.

அவரது மலர்ந்த முகம் அத்தனைப்பேரையும் வசீகரிக்கிறது. “காம்ரேட்ஸ்” என்று ஆரம்பித்து ஆற்றொழுக்கான அழகான, எளிமையான, இதயத்தைத் தொடுகிற ஆங்கிலத்தில் அவரது பேச்சு விரிகிறது.

அவரது ஆங்கிலப்பேச்சை சாரநாதன் தமிழில் தருகிறார். மூலத்திலும், மொழிபெயர்ப்பிலும் கமலாதேவி உணர்ச்சியின் கொந்தளிப்பாகவே இருக்கிறார்.

பேசுகிற மொழி புரியாவிட்டாலும், சொல்லுகிற கருத்து விளங்காவிட்டாலும் நம்மைப்பற்றி, நமது நிலைமையைப் பற்றி பேசுகிறார் என்று மக்கள் உணர்ச்சி வயப்படும் அதிசயம் நிகழ்கிறது.

மேடையிலே வீற்றிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் கமலாதேவியின் கருத்துக்களை நன்றாக விளங்கிக் கொண்டார்.

அவரது பேச்சின் ஒவ்வொரு சொல்லுக்கும் அவரது முக பாவம் மாறத் தொடங்கியது. தன் உணர்வுகளை அடக்க முடியாது தவித்தார்.

கைகளைத் தட்டி ஆர்ப்பரிக்கத் தொடங்கினார். சினிமா பார்ப்பதைப் போலிருந்தது, கூட்டத்தில் இருந்த பார்வையாளருக்கு.

அடுத்து அவரைப்பேச அழைத்து, கூட்டத்துக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.

தோட்டத்து துரை ஒருவர் உங்கள் முன்னிலையில் பேச இருக்கிறார் என்ற அறிமுகத்துக்குப் பின்னால் அவர்பேச எழுந்தார்.

பொதுமக்களிடையே எழுந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. துரை ஒருவர், தோட்ட மக்களுக்கான கூட்டத்தில் பேசுவதா? இப்படி இதற்கு முன்பு நடந்திருக்கிறதா? நாங்கள் கேள்விபட்டதே இல்லையே, தங்களுக்குள்ளாகவே இப்படி பேசிச்கொண்டாலும், வெள்ளைக்காரத் துரையின் பேச்சைக் கேட்பதற்குத் தயாராயினர்.

“காம்ரேட்ஸ்” என்றுதன் பேச்சை ஆரம்பித்தார்.

எனக்கு அரசியலில் நாட்டம் இருந்ததில்லை. இங்கு வந்து உங்களது வாழ்க்கையைக் கண்டறிந்த பின்னால், என்னுடைய ரத்தம் கொதிக்கத் தொடங்கியது என்றார். அவருக்கு எப்படி நம் வாழ்க்கைத் தெரியும் என்று விழித்தனர் மக்கள்.

தோட்டத்தில் துரையாக ஐந்து மாதங்கள் கடமை செய்துள்ளேன். தோட்டங்களில் நடைபெறுகிற அக்கிரமங்கள் எனக்குத் தெரியும். அநீதியான சட்டங்கள் அவர்கள் மீது பிரயோகிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். உணர்ச்சியும் கருத்தும் அவரது பேச்சில் கலந்திருந்தன.

“எங்கள் நாட்டினர் அட்டையைப் போன்றவர்கள். உங்கள் ரத்தத்தை உறிஞ்சிக்குடிப்பதற்கென்றே அவர்கள் வந்திருக்கின்றனர்.” கூட்டத்தினரால் அதற்கு மேல் அவரது பேச்சைக் கேட்பதற்கு பொறுமையாயிருக்க முடியவில்லை. கட்டுக்கடங்காத உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடினர். சாமி… சாமி…. சாமி என்று அவரைப் பார்த்து அழைத்தனர்.

கூட்டத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் சாமி.. சாமி என்ற சத்தம் தான். கூட்டம் முழுக்க அவரையே பார்த்துக் கொண்டிருந்தது

கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேலாயுதத்தின் நாடி நரம்புகள் புடைக்கத் தொடங்கின. கூட்டத்தில் பேசும் வெள்ளைக்காரத் துரைக்கு அதிகம் போனால், என்னை விட வயது அதிகமாயிருக்க முடியாது. அந்த வெள்ளைக் காரனுக்கு தெரிந்த அளவுக்கு நாம் நமது மக்களைப் பற்றி அறியாமல் இருக்கிறோமே என்று கவலைப்பட ஆரம்பித்தான். மேடையில் துரையின் பேச்சுதொடர்ந்தது.

உங்களுடைய உழைப்பைத் திருடி அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து தான் துரைமார்கள் கிளப்களில் குடித்து களிக்கிறார்கள். கிளப்களுக்குப் போகாத துரைமார்கள் இருக்கிறார்களா? என்று கேட்டு விட்டு சற்று தாமதித்து பின் உச்சத் தொனியில் அங்கே இருக்கிற பங்களாவைப் பாருங்கள் என்று கூறி பக்கத்தில் தெரிந்த ஒரு துரை பங்களாவைக் கை கட்டினார்.

அவர் கை காட்டிய திசையில், மலைகளைக் கடந்து, நாவலப்பிட்டியைச் சேர்ந்த தோட்டத்துரையின் பங்களா ஒன்று பச்சை நிற கூரையுடன் பளிச்சென்று தெரிந்தது.

“அங்கேதான்…. அந்த பங்களாவில் தான் என்னுடைய நாட்டினரைச் சேர்ந்த நச்சரவங்கள் இருக்கின்றன” என்று கூறி முடித்தார்.

கடல் கடந்து வந்து தேயிலைத் தேட்டங்களில் எல்லா வசதிகளுடனும் வாழுகிற ஒரு துரைமகனுக்கு இருக்கிற அக்கறை நம்மிடம் இல்லாமல் போனதே.

தோட்டத்து ஏழை தமிழ் மக்களைப் பற்றி சிங்களத்தலைவர் களுக்கு இருக்கிற அக்கறை நம்மில் யாருக்கு மில்லையே இப்படி எண்ணி வேலாயுதம் குமுறினான்.

தன் அருகில் நின்று கொண்டிருந்த வீராசாமியைக் கவனித்தான். அவர்களிருவரும் நாவலப்பிட்டியில் நடந்த அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

எதைப்பற்றியும் கவலைப்படாத உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் அக்கறையுடன் விசாரிக்கும் ஒரு மனித ஜீவனை அவனில் கண்டான்.

வீராசாமியின் கண்கள் கலங்கியிருந்தன. கதைகளைக் கேட்டே கலங்குகிறானா?

வேலாயுதத்துக்கு வீராசாமியின் மீது பூரண நம்பிக்கை ஏற்பட்டது. அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். தான் தனியனாக இல்லை என்று அவன் மனம் கூறியது.

கூட்டம் முடியும் வரைகாத்திருந்தனர். கூட்டம் முடிந்தது. மீண்டும் சாமி.. சாமி.. சாமி என்று மக்களின் குரல் வானைப் பிளந்தது.

அவர்களிருவரும் கூட்டத்தோடு கூட்டமாக அங்கிருந்து வெளியேறினர்.

போகும் வழியில் அவர்களின் சிந்தனை, எண்ணம், யோசனை என்று எல்லாமே அவர்களின் தோட்டத்தைப் பற்றியே இருந்தது.

தேயிலைத் தோட்டங்களில் நெற்றிவேர்வைச் சிந்தி வாழும் இந்திய கூலிகளின் வாழ்க்கையைக் கவ்விப்பிடித்திருக்கும் அச்சத்தையும் அடிமைப்புத்தியையும் உடைத்தெறிந்து விட்டு புதுக்கணக்கைத் தொடங்கும் துடிப்புடன் அவர்கள் ஆனைமலைக்குத் திரும்பினர்.

இப்படி எத்தனைச் சம்பவங்கள்? வேலாயுதமும் வீராசாமியும் இணைந்து செய்திருக்கின்றனர், கூடி தீர்மானித்திருக்கின்றனர். இன்று அவையெல்லாம் வெறும் கேள்விக்குறியாக முன்னே நிற்க அவர்கள் கொலைக் கேசில் மாட்டி போகம்பர சிறையிலே அடைக்கப்பட்டிருக் கிறார்கள்.

போலீசார் கொலை சம்பந்தமாக தீவிரமாக புலன் விசாரணைகளை மேற்கொண்டபோது, தோட்டத்திலும் சிலர் முறுக்கிக் கொண்டு திரிந்தனர்.

போலீசார் அறிவித்திருந்த நூறு ரூபா சன்மானம் பலரிடத்திலும் சபலத்தை ஏற்படுத்தியிருந்தது.

அந்தப் பலரில் குப்புசாமியும் ஒருவன்.

நடந்த சம்பவத்தைப்பற்றி அவனுக்கு எதுவும் தெரியாது.

தெரிந்து வைத்திருப்பவன் போல் பம்மாத்து செய்தான்.

போலீஸ் ஸ்டேசன் சென்று தானாகவே சில தகவல்களைச் சொன்னான்.

அவற்றால் வழக்குக்கு எதுவும் நடைபெறப் போவதில்லை. வேலாயுதமும் வீராசாமியும் துரைக்கு எதிராக தோட்டத்தில் பிரசாரம் செய்தார்கள், என்பதே பிரதானமாக இருந்தது. அவர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற தன்னுடைய அனுமானத்தைக் கூறி வைத்தான். அவ்வளவுதான் அவன் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் ஒருவரை அரச சாட்சியாக்க முயன்றனர். முதலில் ஒருவரும் அதற்கு மசியவில்லை., கடைசியில் அய்யன் பெருமாளை ஒருவாறு சரிசெய்தனர்.

அய்யன் பெருமாள் அரசசாட்சியாக மாறிய மறுநாள் அவன் வாக்கு மூலம் பெறப்பட்டு அவனைப் பிணையில் வெளியே விட்டனர்.

இச்சம்பவம் தொழிலாளர்களிடையே பரபரப்பை ட்டண் பண்ணியது, பயத்தையும் உண்டு பண்ணியது.

வெளியே வந்த அய்யன் பெருமாளுக்குத் தோட்டத்தில் வேலை கொடுக்கப்படவில்லை.

போலீசுக்கு வேண்டியவன் என்ற காரணத்தால் அவனிடமிருந்து ஒதுங்கியே இருக்க தலைப்பட்டனர்.

சிறையிலிருந்துவெளியில் வந்தவன் என்ற பந்தா அவனை சாத்தையா கங்காணியிடம் மாத்திரம் பழக அனுமதித்தது.

கங்காணியாரும் அவனும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பர். ஏதோ சதி செய்கிறார்கள் என்று மற்றவர்கள் நினைத்தார்கள்.

நினைத்துப் பயப்படுவதும், பயந்து நினைப்பதுமாக அவர்களின் காலம் ஓடிக் கொண்டிருந்தது.

மாடசாமியின் மூளைக்கு நடக்கும் சங்கதிகள் வேறொன்றை தந்தி அடித்தன.

அய்யன் பெருமாளை வீட்டுக்கழைத்தார். அய்யன் பெருமாள் மூலம் தகவல்களைப் பெறமுயற்சித்தார்.

அவனை மாலைக் கருக்கலில் வீட்டுக்கழைத்துப் பேச்சுக் கொடுத்தார்.

“நான்தான் பங்களாவுக்குப் போகிற டெலிபோன் வயர்களை வெட்டினேன். இரவு ஒன்பது மணி இருக்கும். எனக்கும் கொலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.”

அவன் மூலம் பெற்றுக்கொண்ட தகவல்கள் இவ்வளவுதான்.

துரையைக் கையில் வைத்திருந்த இரும்புக்கம்பிகளைக் கொண்டு அடித்துக் கொண்டவர்கள் அவர்களிருவருந்தானாம்.

தொடரும்…

Leave a Reply