மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்… கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்… இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்…
‘குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே… அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி… மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
குப்பையான மேனியைக் குணப்படுத்தும்! ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ… என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு.
குப்பைமேடுகளில் வளர்வதால்… இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பூனைவணங்கி! இதை, ‘மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். ‘மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும். பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. ‘குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது’ என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது.
குடற்புழு நீக்க மருந்து!
குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்… பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது. வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி.
அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்… ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும். தோல் நோய் குணமாகும்!
ஆஸ்துமா, சைனஸ்… போன்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்… இருமல், இரைப்பு, கபம் குணமடையும்.
சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை 15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்… ‘ஸ்கின் பிராப்ளமா… எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு ‘அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்… என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.
இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.