இயற்கை – நிலம் – இசை [ 5 ] T .சௌந்தர்

பிற மொழிகளில் இயற்கை, நிலம் பற்றிய குறிப்புகள்

காளிதாசன் கவிதைகள்:

உலகெங்கும் இந்தியப்பண்பாடு என்றதும் முதலில் சமஸ்கிருதப்பண்பாடே தலைநீட்டும் அளவுக்கு அதற்கான பிரச்சாரம் மிகவும் கைகொடுத்துள்ளது. 17ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கு வருகை தந்த போது ஆட்சியதிகாரங்களிலிருந்த பிராமணர்கள் சமஸ்கிருதம் தான் முதன்மையான மொழி என ஆங்கிலேயர்களுக்கு அறிமுகம் செய்தனர்.

அதுமட்டுமல்ல சமஸ்கிருதத்திலிருந்தே மற்றைய இந்திய மொழிகள் எல்லாம் கிளைத்தன எனவும், தத்துவம்,கலை, இலக்கியம், சமயம் எல்லாம் சமஸ்கிருத்தத்திலிருதே பெறவும்பட்டன என அவர்களை நம்பவும் வைத்தனர்..

சமஸ்கிருதம் தான் இந்தியாவின் ஆதியும், தொன்மையும் மிக்க ஒரே மொழி என நம்பிய ஐரோப்பியர்கள், அதில் தங்கள் மொழிகளின் சாயல் தென்படுவதாலும், சமஸ்கிருதம் தங்களுக்கும் பாத்தியதை உடைய மொழி எனவும் கருதத் தலைப்பட்டனர்.

மாக்ஸ் முல்லர்

இந்த அடிப்படையில் மாக்ஸ் முல்லர் போன்ற ஐரோப்பியர்களின் ஆய்வுகள் சம்ஸ்கிருத மாயைக்கு வலுச்சேர்த்தன. இதில் அன்றைய பார்ப்பனர்களுக்கும் உடன்பாடு இருந்தது ஐரோப்பியரும் நாமும் ஆர்டிக் பகுதியிலிருந்து வந்த வர்கள் என்று திலகர் கூறியதாகக் கூறுவார்கள்.

பின், தென்னிந்திய பகுதிகளுக்கு வருகை தந்த ஆங்கிலேயர்கள், அப்பகுதிகளில் வேறு மொழிகள் இருப்பதையும், பேச்சுவழக்கிலிருந்த அம்மொழிகள் குறித்த ஆராய்ச்சி செய்த போது தான் சம்ஸ்கிருத மொழி அல்லாத, தனித்துவமான வேறு மொழிகள் இருப்பதையும் சமஸ்கிருதம் அதில் கலந்திருப்பதையும் கண்டுபிடித்துக் கூறினர் என்பது வரலாறு! இக்காலங்களைத் தொடர்ந்து சிந்துநதியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள் மிகப்பெரிய அதிர்வுகளை உண்டாக்கியதுடன் சம்ஸ்கிருத பண்பாட்டிற்கு அப்பால் ஒரு கலாச்சார மரபு இருந்ததையும் கண்டு பிடிக்க உதவியது.

இவ்விதம் சமஸ்கிருதம் பற்றிய கற்பிதங்கள் இருந்தாலும், நீண்டகாலமாக இந்திய உபகண்டத்து மொழிகள் என்ற ரீதியில் தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஒற்றுமைகள் இருப்பதும் தவிர்க்க முடியாதுமட்டுமல்ல, இரண்டு மொழிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் இருக்கும் என்பதும் தவிர்க்க முடியாததே!

இரண்டு மொழிகளின் அமைப்பு, சொல்லியல் மட்டுமல்ல, அவற்றில் தோன்றிய கலை, இலக்கியம், மொழியியல் ஒப்பியலாய்வுகளும், திறனாய்வுகளும், கல்வியாளர்களால் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல அவை பற்றிய சர்ச்சைகளும் நடந்துள்ளன.

அந்தவகையில் கவிதைத்துறை பற்றிய சர்ச்சைகளும், விமர்சனங்களும் நடந்துள்ளன.

அப்துல்ரகுமான்

கவிதையில் குறிப்பால் உணர்த்தும் தொனி மற்றும் ரசம் போன்ற கோட்பாடுகள் பற்றிய கருத்தாக்கங்கள் சமஸ்கிருதக் கோட்பாடு என்று பொதுவான கருத்தோட்டம் நிலவுகிறது. அதை ஆமோதிப்பது போல, கவிதையில் தொனி, ரசம் போன்ற கோட்பாடுகள் சமஸ்கிருத்திலிருந்து வந்ததென கவிஞர் அப்துல்ரகுமான் தனது நூல் ஒன்றில் குறிப்பிடுவார்.

ஆனால், இத்துறையில் ஆய்வுசெய்த அமெரிக்க மொழியியலறிஞர் ஜார்ஜ் ஹார்ட் தமது பண்டைத்தமிழ்க் கவிதைகள் (The Poems of Ancient Tamil) என்ற நூலில் ”வடநூலின் தொனிக்கோட்பாடு தென்னிந்தியாவில் தோன்றிய கவிதையின் தாக்கத்தினால் விளைந்த கவிதை உத்தி என்று கருதுவது தவிர்க்க முடியாததாகும்; சமஸ்கிருத பிராகிருத இலக்கியங்களில் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அது அக்கவிதைகளில் இடம் பெற்றிருக்கக் காணலாம்” என்று கூறுவதோடு அமையாது தொனிக்கு ஆனந்த வர்த்தனர் தரும் சான்றுகள் யாவும் பொருத்தமற்றவையென்றும் தக்க சான்றுகளுக்கு நாம் சங்கக் கவிதைகளையே நாட வேண்டுமென்றும் விளக்குவார்.

சமஸ்கிருதத்தில் இயற்கையின் விரிந்த அழகையும், குணங்களையும் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியதில் முதன்மை மிக்கவர் மகாகவி காளிதாசர். உலகப்பெரும் கவிஞர்களுடன் ஒப்பிடப்படுபவர். அவர் எழுதிய கவிதைகளில் மேகதூதம் என்பது இயற்கை வர்ணனைகள் நிரம்பியது என்பர். இயற்கை பற்றிய காளிதாசன் கவிதைகளில் ஒன்று.

சிப்ரா நதியின் தென்றலை வர்ணித்தல் :

போதவிழ் கமல் வாசம் புணர்ந்தசிப் பிராவின் தென்றல்

சீதளங் கால மேனி சிலிர்த்திட்டுஞ் சிவந்த தாளின்

ஓதிமம் உவகை பொங்கி யொல்லென ஒலிக்கும் : அன்புக்கு

காதலை றுரைபோ லின்பங் கவர்ந்த களைப்பு நீக்கும்.

[ சிப்பிரா நதியின் தென்றலை வர்ணித்தல் – மேகதூதம் ]

பாடலின் பொருள்: விரிந்த தாமரை மலர்களின் நறுமணங் கலந்த சிப்பிரா நதியிற் பிறந்த காற்றுக்கு குளிர்ச்சியைத் தருதலினாலே உடல் சிலிர்க்கும் சிவந்த காலினுடைய அன்னங்கள் மகிழ்ச்சி பொங்கி இனிதாகக் கூவி ஒலிக்கும். இன்றும் அக்காற்றுப் போகம் வேண்டி நிற்கும் காதலர் மங்கையரிடம் இன்மொழி கூறுவது போல இனிதாக பேசி .முயங்கும்.

இன்னுமொரு பாடலில்..

கந்தவதி ஆறு

விதுப்புற வதன மாதர் மஞ்சச் சாந்தும் வீற்றுக்

கதுப்புறு வசந்தாப் பூவுங் காவியில் துணருங் கொண்டு

நுதுப்புறப் பாயுங் கத்த வதிநுகர் காற்றுப் பட்டு

மதுப்பழி மதனச் சோலை வளப்பமுங் கண்டு செல்வாய்,

விளக்கம்:

நீர் விளையாடும் மகளிரது மஞ்சன்ப் பொடிகளாலும் அவர்கள் கூந்தலிலணிந்த மலர்களாலும் நறுமணமுற்றுக்,குவளை மலர்களின் தாது பொருத்திக் கந்தவதி யாற்றின் குளிர்ச்சியை நுகர்ந்து, வீசும் இனிய காற்றுப் படுத்தலினாலே அசைந்து மதுவைப் பொழியும் விரும்பத்தக்க சோலை ஒன்று அங்கே உள்ளது. அதன் வளப்பத்தையுங் கண்டு செல்வாய்.

கடவுளையும், புராணங்களையும் அடிப்படையாகக் கொண்ட சம்ஸ்கிருத இலக்கியங்களிலிருந்து மாறுபட்டு இயற்கையையும், மனித உணர்வு நிலைகளையும் வெளிப்படுத்தும் தமிழ் இலக்கிய மரபு முற்றிலும் வேறுபட்டது என்பதை அறிஞர்கள் பலர் விளக்கியிருக்கின்றனர்.

வடமொழியில் எழுதப்பட்ட இலக்கிய வர்ணனைகளில் இயற்கை பற்றிய வெளிப்பாடுகளில் காளிதாசன் எழுதிய கவிதைகள் மிக வித்தியாசமானவையாகவும், அழகுமிக்கவை என்றும் கருதப்படுகிறது. உலக மொழிகள் பலவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசரின் இலக்கியங்கள் மேலைநாடு மற்றும் பிற நாட்டு அறிஞர்களாலும் பாராட்டுக்களை பெற்றன.

” இயற்கையின் தோற்றம், காதலர் கருத்தில் உண்டாக்கும் கிளர்ச்சிகளை வர்ணிக்கும் முறையில் காளிதாஸருக்கு ஒப்பாரும் மிக்காருமில்லை; உணர்ச்சிகளை மிக இனிமைபயக்க கூறுவார். கற்பனைக்கு அவர் களஞ்சியம், இதனால் காளிதாசர் உலகமகா கவிஞர்களுள் சிறந்த இடத்தைப் பெற்றுவிட்டார். – என்பார் கம்போலுத்து.

சிந்துவெளிக்கும், தமிழுக்கும் உள்ள தொடர்பை பல்துறைகளின் உதவியுடன் ஆராய்ந்து வரும் ஆய்வாளரான ஆர்.பாலகிருஷ்ணன்

இலக்கிய ரீதியான குறிப்புகளிலிருந்தும் தனது ஆய்வை விரிந்த அளவில் நிறுவ முயன்று வருகிறார். அவர் தனது சொற்பொழிவொன்றில் பின்வருமாறு விவரிக்கின்றார்.

//…இந்தியாவில் பழைய மொழிகளில் பெங்காலி, ஒரியா, மகாராஷ்டிரா, குஜராத்திமார்வாடி, மைதிலி, போஜ்பூரி என பல மொழிகள் இருந்தன. இவை எப்போதும் ஆணவப்படுத்தப்படவில்லை. சமணமும், பௌத்தமும் சில முயற்சிகள் எடுத்தன. அந்தவகையில் தற்போது கிடைக்கக்கூடிய மகாராஷ்டிராவில் பிராகிருத மொழியில் கிடைக்கின்ற மொழியில் மதம் சாராத இலக்கியம் . அந்த நூல் சப்தசாஜி என்று அழைக்கப்படுகிறது. சப்த என்றால் ஏழு, ஷாஜி என்றால் நூறு என்று அர்த்தம்! அதை நான் அகம் எழுநூறு என்று பெயர் கொடுத்துள்ளேன். தமிழின் அகநானூறு என்பதை போல இதை நாம் கருதலாம். இதைத் தொகுத்தவர் ஹாலா என்ற ஒரு மன்னர் ஆகும். ஹாலா என்பதன் அர்த்தம் உழுகின்ற ஏர் அல்லது கலப்பை ஆகும்.ஓரியாவில் இதை ஹலுவா என்று சொல்வர். ஹாலா என்பதை ஆங்கிலத்தில் Super Human என்று சொல்வர். அவன் உழுபவன் மட்டும் கிடையாது. அதீதமனிதன் [ Superman ] என்பதற்கு ஒப்பானது. சங்ககாலத்தில் சொல்லப்படுகின்ற கிழார் – நிலக்கிழார் என்று சொல்வது போல! கிழார் என்றாலே உழுபவன் என்று அர்த்தம்!

பிராகிருத மொழியில் கி.பி. 170ல் சாதவாகனர் வெளியிட்ட நாணயம் ஒன்றில் ஒருபுறம் தமிழும் மறுபுறம் பிராகிருதம் மொழியிலும் இருந்தது. அந்தப்பகுதியில் எழுதப்பட்ட ஓர் இலக்கியம் சமயசார்பற்றது. வடமொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மரபை கொண்டது. காளிதாசன் இலக்கியங்கள், படைப்பின் மீது செல்வாக்கு செலுத்தியது. இதிகாச இலக்கியங்களில் காவிய மரபுகளுக்கு வெளியே சமயசார்பற்ற வர்ணனையும், காதல் மரபுகளும் ஓரளவு தொனிக்கிறது என்றால் அது காளிதாசர் பாடல்களில் தான் வரும். அந்தக் காளிதாசர் மஹாராஷ்டிரா பிராகிருத மொழியின் தாக்கத்தை ஏற்றுக் கொண்டு தான் வடமொழிக்கு கடத்துகிறார். அதற்கான சாயலைக் கொண்டு வருகிறார். ஆனால் அது வேரூன்றவில்லை.

சங்க இலக்கியத்தில் வரும் உவமைகள் , காட்சிப்படிமங்கள் காட்டும் சில படிமங்களை இந்த இலக்கியத்திலும் காணலாம். சங்க இலக்கியத்தின் உவமை, காட்சிப் படிமம் இதனுடைய தொடர்சியைப் பார்த்தால் இந்த இரண்டு இலக்கியனாகிலும் எப்படிப்பட்ட ஓர் மரபில் தோன்றியிருக்கிறது என்பதை நாம் பார்க்கலாம்! அது எந்த மரபு? எதனுடைய தொடர்பு ? என்று முடிக்கின்றார்….// [ சங்க இலக்கியம் அறிந்ததும் அறியாததும் – ஆர்.பாலகிருஷ்ணன். சொற்பொழிவு ]

ஆர்.பாலகிருஷ்ணனின் கருத்துக்களை உறுதிப்படுத்துவது போல வே வரலாற்று பேராசிரியரான கருணானந்தன் ” சம்ஸ்கிருத மொழி இலக்கியங்கள் ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட போது காளிதாசர் எழுதிய இலக்கியங்கள் தான் இருப்பதில் கொஞ்சம் நன்றாக இருப்பதால், அதை மொழிபெயர்க்க அனுமதித்தார்கள் ” என்றார். அது மட்டுமல்ல..

“ செவ்வியல் சமஸ்கிருதத்தின் தலைசிறந்த கவிஞரான காளிதாசன் கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் 2 மொழிகள் அறிந்தவராக இருந்திருக்க வேண்டும். தம்முடைய இலக்கியப்படைப்பிலும், அரசவையிலும் சமஸ்கிருதத்தையும் குடும்பம், அன்றாட நடவடிக்கை ஆகியவற்றில் உஜ்ஜையினியின் கிளைமொழி ஒன்றையும் பயன்படுத்தியிருப்பார். “ என மொழியியலறிஞரான ஏ.கே.ராமானுஜனின் கூற்றை மேற்கோள் காட்டுவார் பேராசிரியர் ப.மருதநாயகம். [ வடமொழி ஒரு செம்மொழியா? – பேராசிரியர் ப. மருதநாயகம் சிறப்புரை ]

இவ்விடத்தில் இன்னுமொரு முக்கிய செய்தி ஒன்றையும் கூற வேண்டும். தொல்காப்பியத்தின் ஐந்திணைகள் [ நிலங்கள் ] பற்றிய செய்திகளில் இன்று நாம் காண முடியாத செய்திகளை தொல்காப்பியம் பேசுவதை அறிஞர்கள் தொட்டுக்காட்டுகின்றனர். குறிப்பாக பாலைநிலம் பற்றிய குறிப்புகளில் ஒட்டகம் பற்றி தொல்காப்பியர் பேசியிருப்பதை குறிப்பிடலாம். இன்றைய, நாம் அறிந்த தமிழ் நிலப்பரப்பில் ஒட்டகத்தை நாம் காண முடியாது என்பது எல்லோரும்அறிந்த செய்தியே ! ஆனால் தொல்காப்பியம் ஒட்டகம் பற்றி பேசுகிறது. இந்த செய்திகளை ஆர் பாலகிருஷ்ணன் பின்வருமாறு விளக்குகிறார்

“ தொல்காப்பியத்தில் ஓட்டகம் பற்றிய செய்திகள் வருகின்றன. ஆண்,பெண் ஒடடகத்தை எப்படி சொல்ல வேண்டும், பொதுவாக எப்படி சொல்ல வேண்டும் என குறிப்பிடுவதுடன் குட்டி ஒட்டகத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதுடன் கவரி என்ற மானை பற்றிய செய்திகளும் பேசப்படுகின்றன. அவை இரண்டும் எப்படி இந்தப் பண்பாட்டுக்குள் [ தமிழ் ] இரண்டறக்கலந்தன என்பதை கவனிக்க வேண்டும்.

1950களில் நாகு என்பவர் பாலைத்திணை பற்றிய முனைவர் ஆராய்ச்சி செய்தார். அதில் தொல்காப்பியத்தில் பேசப்பட்ட விவாதமே இல்லை. மு.வரதராஜன், தனது Treatment of the Nature என்ற நூலில் ஒட்டகம் குறிப்பிடுகிறார் தவிர ஒட்டகம் எப்படி வந்தது என்பது பற்றி குறிப்பிடவில்லை. தனிநாயகம் அடிகள் பேசியிருக்கிறார். சங்க இலக்கியத்தில் ஒட்டகம் வருகிறது என்பதை குறிப்பிட்ட சிலர் அதுபற்றி அதிகம் சொல்லாமல் விலகிச் சென்றதை பார்க்கின்றோம். எலும்பு தின்னும் ஒட்டகம் எப்படி வந்தது பற்றி யாரும் கேட்கவில்லை.

சங்க இலக்கியப்பாடல்களேயே அதிகமான பாடல்கள் பாலைத்திணைப்பாடல்கள் தான்! அகநானூற்றில் முதல் பாடலே பாலைத்திணைப்பாடல்கள். ஆனால் பாலைநிலம் நமக்கு சொந்தமில்லை. குறிஞ்சி என்றால் மலையும் மலைசார்ந்த இடமும் . கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல் என்பது நமக்குத் தெரியும் . விளக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஆனால் பாலையை மட்டும் விளக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முல்லையும்,குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்பியல்பிழந்து நடுங்கு துயர் உற்று பாலை என்பதோர் படிவம் கொள்ளும். என்று ஒரு நிலம் எப்படி உருவாகிறது என்ற Process பற்றி சொல்கிறார், ஏனென்றால் அது நமக்கு பரீட்சயமில்லை.// ஆர்.பாலகிருஷ்ணன். சொற்பொழிவு ]

பாலை நிலம் பற்றி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் கூறுவதை ஏற்றுக் கொள்வது போல ஓர் கருத்தை முனைவர் ராசதிருமாவளவன் பின்வருமாறு கூறுகின்றார்.

//..ஒட்டகத்தைப் பற்றிய ஒரு நூற்பா தொல்காப்பியத்தில் இருக்கிறது. ஒட்டகத்திற்கு தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு ? இங்கே அதற்கான சான்று இல்லை. இங்கே இருப்பவர்கள் பாலை என்றால் மணலும் மணல் சார்ந்த இடமும் என்பார்கள். தமிழ்நாட்டில் அப்படி ஒரு பாலை கிடையாது.

குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொள்ளும் ” என்பது அதற்கான இலக்கியச் சான்று. ஆனால் பாலை நிலம் என்று தனியே கிடையாது. நச்சினார்கினியர் கருத்துப்படி நானிலம் திரிந்தால் பாலை ! அப்போ ஒட்டகம் எப்படி வந்தது? ஒட்டகம் சரியான சிறப்பான தமிழ் சொல் ! அதற்கு அவர் [ தொல்காப்பியர் ] நூற்பாவே செய்திருக்கிறார். ஒட்டகம் சரியான தமிழ் சொல் என்பதற்கு தொல்காப்பியம் தான் சான்று; அதற்கான நூற்பா தான்! // – [ முனைவர். ராசதிருமாவளவன் – தொல்காப்பியம் மரபியல் ]

தமிழகத்தில் இல்லாத ஒட்டகம், சிங்கம், கவரி [YAK] போன்ற செய்திகளை சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. எலும்பு தின்னும் ஒட்டகம் பற்றிய செய்தியை ” செல்சாத்தெறியும் பண்பில் வாழ்க்கை ” [ அகம் 245 – திணை பாலை ] எனவும் நர்மதை நதியின் வடக்கு பகுதியைத் தாண்டாத சிங்கம் பற்றிய செய்தியில் ” அறுகோட்டியானை பொதினி அறுகை ” [ அகம் : 1 : 4 திணை ] சிங்கத்தை துரத்திய யானை பற்றிய செய்தியையும், யானையைக் கொன்ற சிங்கம் பற்றிய செய்தியை ” அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை ” [ நற்றிணை – 112 ] என்றும் , இமயமலையின் உச்சியில் வாழும் கவரி [ YAK ] பற்றிய செய்தியில் அது புல் மேய்ந்த காட்சியை ” நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி ” [ புறம் – 132 ] பற்றிய செய்திகளை விவரிப்பார். ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன்.

சங்க இலக்கியம் அதில் கூறப்படுகின்ற இயற்கை, நிலம் பற்றியவை குறித்து புதிய கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளைக் கண்டறிய முனையும் ஆய்வாளர்களின் கருத்துக்கள் நமது கவனத்திற்குரியது. இன்று நாம் அறியாத பல புதிய செய்திகளை ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் பின்வருமாறு விளக்குகிறார்.

” காற்று பற்றி பேசும் சங்க இலக்கியம் மிக முக்கியமானது. வடக்கிலிருந்து வீசும் காற்று வாடைக்காற்று; குளிர்காற்று 55 இடத்தில், அதில் 49 இடத்தில் வாடை என்று பேசுகிறது. வடபுல வாடை என்று வடக்கிலிருந்து வீசும் காற்றை பேசுகிறது. மேற்கிலிருந்து வீசுகின்ற காற்று கோடைக்காற்று என்று 42முறை பேசுகிறது. அதில் 25முறை பாலைத்திணை.

இந்த மேற்கிலிருந்து வீசும் காற்று எப்படி சொல்லப்படுகிறது என்றால்

” அனல் வாய் கோடை ” என்கிறது சங்கப்பாடல். Fire Mouth Wind என்கிறது. வேறு ஓர் இடத்தில் அந்த அனல்காற்று மணலை அள்ளிக்கொண்டு போகிறது; அப்படி அள்ளி வீசிய போது பனைமரத்தின் உயரம் பாதியாகக் குறைந்து விடுகிறது என்கின்றார். அப்படிப்பட்ட சாத்தியம் இங்கே [ தமிழ்நாட்டில்] இருக்கிறதா? ஆக சங்க இலக்கியம் இன்னுமொரு நிலப்பரப்பையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மத்தையும் உள்ளடக்கிப் பேசுவதுடன் நிகழ்காலத்தையும் உள்ளடக்கியிருக்கிறது. இன்றுவரை நமக்கு உகந்ததாகவும், புரிந்து கொள்ளவும் கூடியதாகவும் இருக்கிறது.//

//..சங்ககால தமிழ்மொழி அரசியல் பரப்பின் எல்லைகளும் சங்க இலக்கியப்பாடல்களில் வரும் நிலப்பரப்பின் எல்லைகளும் ஒருசேர, ஒன்றின் மீது ஒன்றாகப் பொருந்துவனல்ல. சங்க இலக்கியத்தின் நிலப்பரப்பு சங்ககால அரசியல் எல்லைகளை விட அகன்றது. சங்க இலக்கியங்கள் அக்கால நிகழ்வுகளின் குறிப்பு அல்ல. மீள் நினைவுகளின் ஆவணப்பதிவு.// [சங்க இலக்கியம் அறிந்ததும் அறியாததும்- ஆர்.பாலகிருஷ்ணன் ]

சங்க இலக்கியம் என நாம் இன்று அறிகிற இலக்கியம் என்பது இன்றைய தமிழ் நிலப்பரப்பை மட்டுமல்ல, அது அதையும் தாண்டி பிற நிலப்பரப்பையும் உள்ளடக்கியதென்பதையும், அது மட்டுமல்ல, இவை முற்பட்டதோர் காலத்தின் நினைவுகளின் தொகுப்பு என்பதனையும் ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

இன்றைய தமிழ் நிலப்பரப்பைத்தாண்டி வட இந்திய மாநிலங்கள் மற்றும் இன்றைய பாகிஸ்தான் நிலப்பரப்புகளில் பரவிக் கிடக்கும் பழங்குடிகள் ஒற்றுமை மற்றும் அங்கே புழக்கத்தில் இருக்கும் தமிழ் பெயர்கள் இந்திய உபகண்டத்தின் பொதுமையை காட்டுவதாய் உள்ளன. தமிழ் பெயர்கள் குறித்தும் ஆர். பாலகிருஷ்ணன் விரிவாக ஆராய்ந்து ஆதாரங்களை முன் வைத்துள்ளார்.

பழங்குடிகள் பற்றி புலவர் கோவிந்தன் என்பவர் எழுதிய “ஆரியம் முற்பட்ட தமிழர் பண்பாடு” என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்..

வேதகி என்ற சொற்தொடர் ஒன்று மக்கள் ஐந்து பழங்குடியினராக பிரிவுண்டிருந்த வரலாற்றுப் பழஞ்செய்தியொன்றை நினைவூட்டுவதாக உள்ளது. ” பங்கஜனகாஜ் ” என்பது அத்தொடர், பழைய, புதிய எழுத்தாளர் பலரால் பொருள் காண முற்பட்டுள்ளது. ஆனால் மனநிறைவு கொள்ளும் வகையில் பொருள் விளக்க எவராலும் இயலவில்லை. அது ஆரியத்திற்கு முற்பட்ட ஐந்து பழங்குடியினரைக் குறிக்க வேண்டும் என்ற ஊக்கத்தை நான் கூறினேன். ஆனால் தமிழிலிலக்கியம் பற்றி ஏதும் அறியாத , ஆரியத்துக்கு முந்தைய இந்தியாவுக்கும் , ஆரிய இந்தியாவுக்கும் இடையில் வரலாற்றுத் தொடர்பின் இன்றியமையாமையைப் மதிக்க மறுக்கும் வரலாற்று வல்லுநர்களால் என்னுடைய ஊகத்தின் மதிப்பீட்டை மதிக்க முடியவில்லை. [ ஆரியம் முற்பட்ட தமிழர் பண்பாடு – புலவர் கோவிந்தன் ]

இன்றைய நிலையில் தமிழ் ஆய்வுச் சூழல் என்பது பலவிதமான துறைசார்ந்த ஆய்வுகளுடன் ஒப்பிட்டு விஞ்ஞான ரீதியில் செய்யும் விதமாக அகழ்வாராய்ச்சி, கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில் புது நிலை எய்தியுள்ளது.

ஆனால் இதற்கு முந்தைய காலத்தில் இன்று கிடைக்கின்ற தொல்லியல் ஆதாரங்களற்ற நிலையில், தமிழர்களது வரலாறு குறித்த பார்வை என்பது பல சமயங்களில் போலி மயக்கத்திலிருப்பதை காண்கிறோம். தமிழர்களுக்கு உண்மையில் பெருமை தரக்கூடிய ஆழமான விஷயங்கள் இருப்பினும், அவற்றிற்கு மாறாக உணர்ச்சி வசப்படுத்தக்கூடிய வீரப்பிரதாப, போலிப்பிரமைகளை பிழைப்புவாத அரசியலாக்கி, அர்த்தமற்றவற்றை ஊதிப்பெருக்கி, அதனை வைத்து குறுகிய அரசியலை நடத்தி கேலிக்குரியவை ஆக்கியதையும் நாம் காண்கிறோம். இதனால் விளைந்த அனர்த்தங்கள் அநேகம். இவை அதீத தமிழுணர்வு சார்ந்த ஆய்வுகள் அகசார்புநிலை சார்ந்த ஆய்வுகள் எனவும், விஞ்ஞானப்பார்வை இல்லாத ஆர்வக் கோளாறுகள் என கருதும் நிலை ஏற்பட்டது.

இது ஒருபுறம், என்றால் மறுபுறம் அறிவியல், இலக்கியம், கலை எல்லாம் வேதத்திலிருந்தும், சமஸ்கிருதத்திலிருந்தும் தான் தோன்றியது என்று காலங்காலமாக தமது அதிகாரநிலை கொண்டு மிக்க கடுமையாக நிறுவமுனைந்து செயல்பட்டுவருவதையும் நாம் காண்கிறோம். பார்ப்பனர்கள் தமிழர்களுக்கு பெருமை தரும் விடயங்களை, அவற்றின் உண்மையான காலத்தை மறைத்து அவற்றை வரலாற்றிற்கு மிக பிந்தைய காலத்துக்கு தள்ளுவதையும் தந்திரமாக பிரச்சாரம் செய்தார்கள்.

பொதுவாக தமிழகத்தில் கண்டெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சிகள் பற்றிய ஆய்வுமுடிவுகளை குறித்த காலத்திற்குள் வெளியிடாமையும், இருட்டடிப்பது செய்வதும், அவ்விதம் கண்டெடுக்கப்பட்ட புதைபொருட்களின் கால நிர்ணயத்தை தமது இஷடப்படி சொல்வதுமான ஒரு போக்கு இதுவரை காலமும் தமிழ்நாடு அகழ்வாய்வாராச்சித்துறையால் கைக்கொள்ளப்பட்டு வைத்துள்ளது. கண்டெடுக்கும் பொருள் எதுவானாலும் அவை கி.மு 100 ஐத் தாண்டுவதில்லை.

கிடைக்கும் ஆதாரங்களை முதன் முதலில் சங்கராச்சாரியின் பார்வைக்கு தொல்லியல்துறையின் நிர்வாகியான நாகசாமி எடுத்து செல்லும் வழமை கொண்டிருந்தார் என அவரின் உதவியாளர், முனைவர். இராசேந்திரன் தனது உரை ஒன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சங்கராச்சாரிக்கும் தொல்லியலுக்கும் ஏது சம்பந்தம்.? அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் கிடைக்கும் தொல்லியல் கலைப்பொருட்கள் , மண்பாண்டங்கள் எல்லாம் கர்நாடகத்திலுள்ள தொல்லியல் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு விடுகின்றன. தமிழ்நாட்டுமக்களின் பார்வைக்கு அவை காட்டப்படுவதில்லை. அது குறித்த அறிக்கைகளும் வெளியாவதில்லை என்பதும் முக்கியமான வருந்தத்தக்க செய்திகள் ! இவையெல்லாம் அதிகாரவர்க்கத்தின் தமிழர் விரோதப் போக்குகளின் வெளிப்பாடுகளே! தமிழ் ஒரு தொன்மையான பாஷை என்பதை மறைக்க அவர்கள் படும் பாடு பெரும்பாடுபடுவதும் நாம் அறிந்ததே!

பழந்தமிழ் இலக்கியம் தனியே இயற்கையை மட்டும் பேசவில்லை பல இடங்களில் நகரத்தைப் பற்றியும் பேசியுள்ளன. சங்க இலக்கியங்களில் காணப்படும் நகரம் பற்றிய வர்ணனைகள் பற்றி பேசும் பொது அவை எழுதிய புலவர்களின் கற்பனை என்றே எள்ளிநகையாடப்பட்டன. அதற்கான புதைபொருள் ஆய்வு ஆதாரங்களிலில்லாததால் சங்க இலக்கியம் வெறும் கற்பனை என்றும் ஆய்வாளர்களால் புறம் தள்ளப்பட்டன.

வரலாற்று விடயங்களுக்கான தொல்லியல் ஆதாரங்கள் முறையாக கிடைக்காமையும், கால நிர்ணயம் செய்வது என்பது முறையாக அல்லாமல் இருந்ததாலும் மேற்படி நிலை ஏற்பட்டது.

சரியான அகழ்வாய்வுகள் இல்லாத சூழ்நிலையில் தமிழர் விரோத போக்கு ஒரு புறம் என்றால், அரசியல் அரசியல் அரங்கில் குறிப்பாக தேர்தல் அரசியலுக்காக தமிழ் மக்களை உசுப்பிவிடும் வகையில் ” கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து ” என்ற பாடலை வைத்து தமிழ் மக்களை வேறு வகையில் உணர்ச்சியூட்டி, பதவி மோகம் கொண்ட அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் சுயநலன்களுக்காக தவறாக வழி நடத்தியதுடன், அவர்களை ஆய்வு நெறிகளை நம்பமுடியாத / நம்ப கூடாத ஒரு மக்கள் கூட்டமாகவும் ஆக்கினர். இதை ஒரு கலாச்சார முறையாக கைக்கொண்ட நிலையில், தமிழர்கள் எதையும் மிகப்படுத்திய சூழ்நிலையில், சமநிலையற்ற இந்தவிதமான முன்சாய்வு ஆய்வு மனப்பான்மை, ஆர்வ மேலீட்டால் நேர்கின்றன என கூறும் பேராசிரியர் கைலாசபதி, ஆய்வு என்பது எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.

//…தமிழைத் தாய்மொழியாகக் கொள்வோரின் ஒப்பியல் இலக்கிய ஆராய்ச்சிகள் இவ்வாறிருக்க, மேனாட்டார் சிலரின் முயற்சிகளைக் குறிப்பிடுதல் அவசியம். “தமிழிலக்கியத்திலும் இந்தோ-ஆரிய இலக்கியத்திலும் கார்காலம்” என்ற ஒப்பியற் கட்டுரையைப் படித்தார், ஜோர்ஜ் எஸ்.ஹார்ட் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர். ஒப்பியல் இலக்கிய ஆய்வுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியது அவரது கட்டுரை, தமிழ் பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிற் காணப்படும கார்காலத்தைப் பற்றிய அகப்பொருட்பாக்களை ஒப்புநோக்கி, அவற்றின் ஒற்றுமை வேற்றுமைக்குக் காரணங்களைக் காட்டி, தமிழிலிருந்தே வட மொழிக்கு இத்துறையைச்சார்ந்த பொருள் சென்றிருத்தல் வேண்டும் எனத் தக்கபடி அவர் விளக்கினார்.

தொகை நூல்களிற் காணப்படும் அகத்திணைச் செய்யுட்களைச் சிறப்பாகக் கற்க இத்தகைய ஆய்வு வழி காட்டும் என்பதில் ஐயமில்லை. ஹார்ட் போன்ற இளைய தலைமுறையைச் சேர்ந்த மேனாட்டுத் தமிழாராய்ச்சி மாணவரிடத்திற் காணப்படும் சிறப்பியல்பு யாதெனில் தமிழபிமானத்தையும் நிதானத்தையும் ஒருங்கிணைக்கும் உணர்வமைதியாகும். வடமொழியிலக்கியங்களையும் தமிழிலக்கியங்களையும் ஒப்பு நோக்குமிடத்து உணர்ச்சி நிலையில் அன்றி அறிவு நிலையினின்று நோக்கும் சமநிலை அவர்களிடத்துக் காணப்படுகிறது. கார்கால வரவையொட்டிப் பிரிவுத் துயரினால் வாடும் தலைவியரையும் அவர்தம் அகநிலைகளையும் இயற்கையோடு இணைத்துக் காட்டும் கவிப்பொருள் மரபு வடமொழித் தொகை நூல்களிலும் குறிப்பாகப் பாகதச் செய்யுட்களிலும் உள்ளன. இம்மரபு ஏறத்தாழ கி.பி.நான்காம் நூற்றாண்டளவிலேயே தமிழிலிருந்து அவ்விலக்கியங்களுக்குச் சென்றிருத்தல் வேண்டும் என்று திரு.ஹார்ட் கூறிய போது, அது வெறும் தமிழபிமான மாகவன்றி ஒப்பியல் ஆய்வின் வௌிப்பாடாக விருந்தது. கால ஆராய்ச்சியும் குணநல ஆராய்ச்சியும் ஒருங்கிணைந்த பார்வை அவர் ஆய்வை வழிநடத்தியுள்ளது. – [ பேராசிரியர் க.கைலாசபதி – அடியும் முடியும் ]

உலக மொழிகளிலும், மிகப்பழமையான நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் பைபிளிலும் நாடு குறித்த தேடல் மற்றும் இயற்கை – நிலம்சார் வர்ணனைகள் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.

பைபிளில் இயற்கை வர்ணனை:

பொதுவாகவே உலக மக்கள் அனைவரும் புலம் பெயர்தலை வெவ்வேறு காரணங்களுக்காக செய்து வந்துள்ளனர். அவர்களில் யூத இனமக்களின் புலம்பெயர்வு பிரசித்தமானதொன்றாகக் கருதப்படுகிறது. எகிப்து நோக்கிய அவர்களின் புலம் பெயர்வும், பின்னாளில் ஐரோப்பாவுக்கான புலம்பெயர்வும் குறிப்பிடத்தக்கன. அவர்களின் தொன்மக்கதைகளிலே நிலம் பற்றிய வேட்க்கையை நாம் காண முடியும்.

ஆதிகாலத்திலிருந்த யூதகுலத்தலைவன் காலத்திலேயே இஸ்ரேலியர்கள் தங்கள் நாடு பற்றிய கருத்தாக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை பைபிளின் பழைய ஏற்பாட்டில் காணக்கூடியதாக உள்ளது. பழைய ஏற்பாட்டின் இடம் சார்ந்த ஆழ்நோக்கு இருப்பதை நாம் காண்கிறோம்.

அவர்களது பயணங்கள் நிலம் ஒன்றை தேடியதாகவும் உள்ளன. பைபிளில் கூறப்படுகின்ற புகழ்பெற்ற வாசகம் The God Promised Land [ கடவுளால் வாக்களிக்கப்பட்ட நாடு ] என்பதாகும்.

பலநூற்றாண்டுகள் தாண்டி, பிற்காலத்தில் யூதர்கள் தங்களுக்கான ஓர் நிலத்தை அல்லது நாட்டை பெற உருவாக்கிய அமைப்பான சியோனிச அமைப்பின் [ Zionist Movement ] பிரதான நோக்கமாக நிலம் / நாடு தான் இருந்தது.

பைபிளில் பூமியின் பகுதி புனித பூமி என்று அறியப்படும் அல்லது, அதற்கு மாற்றாக, பாலஸ்தீனம் அல்லது இஸ்ரேல் என, புனித புத்தகங்களில் அவ்வப்போது குறிப்பிடப்படுவதையும் காணலாம். அதன் நீட்சி நிலம் குறித்த உரிமைப்போராட்டமாக இன்றும் தீவிரநிலையில் வடிவம் பெற்றுள்ளதை நாம் கண்கூடாகப்பார்க்கின்றோம்.

நிலம் வரலாற்றின் இன்றியமையாத, மையப்பொருளாக கருதப்பட்டாலும், நிலம் சார்ந்த எண்ணக்கூறுகள் இருந்தாலும் அது இடம்சார்ந்த இறையியலாக உருவாகவில்லை என்றும் பைபிளின் புதிய ஏற்பாட்டிலேயே நிலம்சார்ந்த கருத்தாக்கம் அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்டதாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

இன்று கிடைக்கின்ற ஆதி நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் பைபிளில் நிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. தெய்வீக வரம் பெற்ற தேசத்தில் இறைவனின் முன்னிலையில் வாழும் மனிதர்களுடன் ஆதியாகமம் தொடங்குகிறது. கதையோட்டத்துக்கேற்ப இயற்கை சார்ந்த வர்ணனைகளும் அமைந்துடன் பைபிளின் பழைய ஏற்பாட்டில் SONG OF SOLOMON அல்லது SONGS OF SONGS என அழைக்கப்படும், தமிழில் உன்னதப்பாட்டு என்ற பகுதியில் இயற்கை பற்றிய குறிப்புகள், வர்ணனைகள் வருகின்றன.

உன்னதப்பாட்டு 4

உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச்செடிகளும், நளதச்செடிகளும் [13]

நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும் சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும் சகலவித கந்தர்வ செடிகளும் உள்ள

சிங்கார வனமாக இருந்தது.[14]

தோட்டங்களும் நீரூற்றும், ஜீவதண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாகியிருக்கிறது. [14]

வாடையே! எழும்பு, தென்றலே! வா கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு, என்னுடைய நேசர் தமது தோட்டத்திற்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக. [15]

Come, my beloved,

let us go forth into the fields,

and lodge in the villages;

let us go out early to the vineyards,

and see whether the vines have budded,

whether the grape blossoms have opened

and the pomegranates are in bloom.

There I will give you my love. 7:11-12

நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது.

வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம்.

அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்;

திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,

மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்;

அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன்.

பைபிளின் பழைய ஏற்பாடு நூலில் Song of Songs [ உன்னதப்பாட்டு ] என்ற பகுதியில் வரும் பாடல்கள் தமிழ் இலக்கிய மரபின் அடிப்படையைக் கொண்டதாக அமைந்திருப்பதாக பேராசிரியர் மருதநாயகம் பின்வருமாறு விளக்குவார்.

// “ பைபிளில் வருகின்ற “உன்னதப்பாட்டு” [Song of Songs ] 5000 வருடத்திற்கு முந்தைய முதல் சங்ககாலத்தை சேர்ந்தது. 52 பாடல்களைக் கொண்ட இந்த இந்தப்பாடல்கள் தலைவி கூற்று, கண்டோர் கூற்று என்பதாக வரும். இது வேறு எந்த மரபிலும் கிடையாது. தமிழ் அகமரபு இலக்கியமரபுக்கே சொந்தமானது. அந்தக் கூறுகள் இந்தப்பாடல்களிலே இடம் பெறுகின்றன. இந்தக் கூறுகளையெல்லாம் Chaim Rabin என்ற இஸ்ரேலிய பேராசிரியர் Solomon Songs & Tamil Poetry என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

நற்றிணையிலிருந்தும், குறுந்தொகையிலிருந்தும், ஐங்குறுநூறிலிருந்தும் பாடல்களை எடுத்துக் கொள்கிறார். இந்தப்பாடல்களில் இருக்கும் கூறுகள் அங்கே இருக்கின்றது என்று கூறுகிறார். இவை எப்படி இந்த அகஇலக்கிய மரபு அங்கே சென்றது என்பதையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்கிறார். அவர் சொல்கிறார் …. ” விவிலியத்தில் பழைய ஏற்பாட்டில் வணிகத்தைப் பற்றி வருகின்றது. ஓபிர் என்ற இடத்திலிருந்து என்னென்ன பொருட்கள் கப்பலில் எடுத்துச் செல்லப்படுகின்றன. அப்படி எடுத்துச் செல்ல ஓராண்டாகியது என விவிலியம் குறிப்பிடுகிறது. ஓபிர் என்ற துறைமுகம் தென்னிந்திய துறைமுகமாகத்தான் இருக்க வேண்டும் “ என்கிறார். அது பற்றி பல ஆராய்சசிகள் உள்ளன. அந்தக்கப்பலில் தந்தம், மயில், குரங்கு மற்றும் வாசனைப்பொருட்களும் எடுத்துச் செல்லப்பட்டன என்கிறார். இந்த வாசனைப்பொருட்கள் அரேபியாவிலிருந்து வந்தது என்று யூத அறிஞர்களே முதன்முதலில் நம்பினார்கள்.

வாசனைப்பொருட்கள் முத்தும், தந்தமும், மயிலும், குரங்கும் அரேபியாவிலிருந்து வந்திருக்க வழியில்லை என்று முடிவு செய்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு எழுதும் Chaim Rabin இந்தப் பொருட்களை குறிப்பிடும் தமிழ் சொற்கள் எபிரேயமொழிக்கு கொண்டு செல்லப்பட்டன என்கிறார். அகில், தொகை [ மயில்] போன்றவை சென்றிருக்கிறது என்பதை சொல்லி விட்டு, அந்த வணிகர்கள் தான் இந்த தமிழ் அகஇலக்கிய இலக்கியத்தை கொண்டு வந்திருக்க வேண்டும் என்கிறார். இலக்கிய ஈடுபாடுமிக்க வணிகர்களால் கொண்டுவரப்பட்டது என்கிறார்.

3000 ஆண்டு பழமைமிக்கவர் சாலமன். ஆனால் இங்கே சங்ககாலத்திற்கே கால அளவை குறித்து தடுமாறுகிறார்கள். வையாபுரிப்பிள்ளை போன்றவர்கள் காலத்தை பின்னுக்கு இழுப்பதில் முன் நிற்கிறார்கள். கி.பி இரண்டு என்பதைக் கூட ஏற்க மாட்டேன் என்கிறார்கள்.

பொருந்தல் என்ற இடத்தை ஆய்வு செய்த ராஜன் என்பவர் அது கி.மு.500 என சொல்கிறார். 5000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகஇலக்கியம் மரபு இங்கே இருந்திருக்க வேண்டும் என்றால் அதற்குரிய காரணம் இந்த இந்த அகமரபு இலக்கியம் முதற்சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். எனவே இறையனார் களவியல் கூறுகின்ற முதற்சங்க காலத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்கிறார்.

பேராசிரியர் சிவத்தம்பி இதை மறுத்து எழுதினார். ஆனால் அவர் [ Chaim Rabin ] தலைச்சங்க காலத்திலேயே இந்த அகமரபு எபிரேய மொழிக்கு சென்றிருக்க வேண்டும். அதன் தாக்கம் “உன்னதப்பாட்டு” அதாவது “பாடல்களிலேயே சிறந்த பாட்டு ” இல் தெளிவாகத் தெரிகிறது என்று பலதுறைகளிலும் இருந்து மொழியியல், வரலாறு, தொல்லியல் போன்ற துறைகளிலிருந்தும் ஆதாரத்துடன் Chaim Rabin நீண்ட கட்டுரை எழுதினார். அதை நம்மவர்கள் இருட்டடிப்பு செய்துவிட்டார்கள். ஆனால் அதை நான் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். // என்பார் பேராசிரியர் மருதநாயகம்.

*** [ Chaim Rabin என்பவர் இஸ்ரேலிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுபவர். Studies in Religion என்ற இதழிலில் Solomons Songs of Songs and Tamil Poetry கட்டுரையை எழுதினார். ]

உலகின் பழம்பெரும் நாகரீகங்களில் ஒன்றான சீன நாட்டினர் எழுத்து, ஓவியம், சிற்பம், கவிதை, கண்டுபிடிப்புகள் என அனைத்து துறைகளிலும் தங்களின் திறமையையும், தனித்துவத்தையும் பேணுவதிலும் பெருமை பெற்றவர்கள். மேலைப்பண்பாடு. சீனப்பண்பாடு, இந்தியப்பண்பாடு ஆகிய மூன்று பண்பாடுகளும் இயற்கையழகில் நாட்டம் கொண்டவை என்பர்.

செவ்வியல் மொழிகளில் ஒன்றான சீனமொழியிலும் இயற்கை குறித்த கவிதைகள் மனித வாழ்வின் பின்னணிகளோடு இணைத்து பாடப்பட்டுள்ளன. கி.பி. 5ம்நூற்றாண்டைச் சேர்ந்த தாவோ யுவானமிங் [ Tao Yuanming ] போன்ற கவிஞர்கள் இயற்கைமீதான இன்பத்துய்ப்பினையும், நேர்மையான உழைப்பையும், மது பற்றியும் புகழ்ந்து பாடியதுடன் சீனமக்களின் தொன்மையையும் படம் பிடித்துக் காட்டியுள்ளனர் என்பர்.

நெடுங்காலத்திற்கு முன்பே லத்தீன், கிரேக்கக் கவிதைமரபு நிலம்சார் [ Pastoral Poems ] கவிதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதுடன் இசைக்கும் இயைந்த அமைப்பையம் கொண்டுள்ளன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞனான தியோகிரிடஸ் [ Theocritus ] நாட்டுப்புற, கிராமிய இனக்குழு வாழ்வின் கூறுகளை மேய்ச்சல் நில [ Pastoral Poem ] கவிதைகளாக எழுதிய முன்னோடியாவார். அவருக்குப் பின்வந்த இத்தாலிக்கவிஞரான வர்ஜில் [ கி.மு.2 ] இக்கவிதைமரபில் பெரும் புகழபெற்றார்.

வர்ஜிலின் முல்லைநிலக் கவிதையான , இக்லாக் [ Eclough 2 ] என்ற கவிதையில் வரும் கீழ்வரும் வரிகளை தனிநாயகம் அடிகள் பின்வருமாறு தருகிறார்.

Huc ades o formose puer; tibi lilia plenis,

Ecce, ferunt Nymphaea calathis; tibi candida Nais,

Pallentes violas et summa papavera carpes, ….. [ Eclough 2 : 45 ]

” அழகிய சிறுவனே, இங்கே வா; உனக்காகத்தானேஇயற்கையின் தெய்வக் கன்னியர் அல்லிமலர் நிரம்பிய கூடைகளைக் கொண்டு வருகிறார்கள். ஆற்றின் வெண்ணிற அலைமகள் உனக்காகத்தான் வெண்ணிறம் கலந்த வயலட் பூக்களையும் கஞ்சாப்பூக்களையும் கொண்டு வருகிறாள். அவற்றுடன் நார்சிஸ் மலரையும் மணமிக்க அனைஸ் மலரையும் சேர்க்கிறாள். அவற்றை காசியா மற்றும் இனிய மணமுள்ள சிறு செடிகளுடன் சேர்த்து மெல்லிய ஹயசிந்த் பூக்களையும் மஞ்சள் மேரிகோல்டு பூக்களையும் அலங்கரிக்கிறாள். கனிந்த பழங்கள் இருப்பினும் நானே மென்மையான வெள்ளிநிற மொட்டுக்கள் கொண்ட குவின்ஸிகளையும் மாறிலிஸ் நேசித்த செஸ்நட்டுக்களையும் சேகரிப்பேன். இந்தக் கனியும் அவன் கௌரவத்தை பெறும். ஓ லாரல்களே ! உங்களையும் பறிப்பேன், வெளியிலிருக்கும் மிர்ட்டிலே ! உன்னையும் தான், இப்படிச் சேர்க்கும் பொது உங்கள் இனிமையான மனத்தைக் கலந்திடுவீர்கள்.” – [முல்லை நிலக்கவிதை – வர்ஜில், இக்லாக் 2 – 45 ]

மேற்கண்ட வாஜிலின் கவிதையை தமிழ் முல்லைப்பாடல்களில் ஒன்றான கவிதையுடன் ஒப்பிடுவார் தனிநாயகம் அடிகளார்.

மெல்லுணர்க் கொன்றையும் மென்மலர்க் காயாவும்

புல்லிலை வேதசியும் பிடவமும் தளவமும்

குல்லையும் குருந்தும் கூடலும் பங்காரும்

கல்லவும் கடத்தவும் கமழ்கண்ணி மலைந்தனர் [ கலி. 103 : 1 – 4 ]

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது போல இயற்கை குறித்த எழுத்துக்களை எழுதி, இந்தவகை எழுத்தின் நவீனமுன்னோடிகளாக இருந்தவர்கள் 16 ம் நூற்றாண்டைச் சேர்ந்த மறுமலர்ச்சிக்கால ஐரோப்பிய கலைஞர்களும், கவிஞர்களும் எழுத்தாளர்களுமே! அவர்களது பெயர் பட்டியல் நீண்டு கிடக்கிறது. அவர்களில் மிக முக்கியமானவர்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

William Shakespeare – [ 1564 – 1616 ] / Percey Bysshe Shelley – [ 1792 – 1822 ] / Emily Dickson – [ 1830 – 1886 ] / Alfred Lord Tennyson – [ 1809 – 1892 ] / Robert Frost – [ 1874 – 1963 ] / John Keats – [ 1795 – 1821 ]

/ Stopford Brooks [ 1832 – 1916 ] / William Wordsworth – [ 1770 – 1850 ] / Ralph Waldo Emerson – [ 1803 – 1882 ] / Johann Wolgang Von Geothe – [ 1749 – 1832 ] / Baruch Spinoza – [ 1632 – 1677 ] / Jacob Bohme – [ 1575 – 1624 ] / Robert Burns – [ 1759 – 1796 ]

இவர்களில் William Shakespeare – William Wordsworth – Ralph Waldo Emerson – Robert Burns – Johann Wolfgang Von Goethe – போன்றவர்கள் இயற்கையியம் குறித்து மிக முக்கியமான படைப்புகளைத் தந்தவர்கள். ஐரோப்பிய பருவகாலங்களில் மாற்றங்களை, அதன் பன்முகத்தன்மையை அற்புதமாக வெளிப்படுத்தினர்.

இயற்கையின் அழகையும், கிராமப்புறம் மற்றும் அனைத்து அம்சங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியவர்களில் கவிஞர் William Wordsworth முக்கியமானவர்.

1.“Come forth into the light of things, let nature be your teacher.”

2.“ Nature never did betray the heart that loved her.” – William Wordsworth

மேற்கண்ட இரு இயற்கை மேற்கோள்களும் விவிலியம் வேட்ஸ்வெத் தினுடையது.

இயற்கை பற்றிய எழுத்துக்களில் மிக முக்கியமானதொரு நூலாகக் கருதப்படும் நூல்களில் மிக முக்கிய நூல் எமர்சன் [ Ralph Waldo Emerson -1802 – 1882 ] என்பவர் எழுதிய Nature [ இயற்கை ] என்ற நூல் ஆகும்!

எமர்சன் எழுதிய இந்நூல் 1836ல் வெளிவந்து அவரது சமகாலத்திலேயே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இயற்கையில் மனிதனின் இடத்தையும், மனிதன் இயற்கையை பார்ப்பதிலுள்ள சிரமத்தையும், இயற்கையுடன் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அழகு, தத்துவம், அதை அனுபவிக்கும் தனிநபருக்கான உரிமையையும் பேசுகிறார்.

“கவிஞர், ஓவியர், சிற்பி, இசைக்கலைஞர், கட்டிடக் கலைஞர், ஒவ்வொருவரும் இந்த உலகின் பிரகாசத்தை ஒரு புள்ளியில் குவிக்க முயல்கிறார்கள், மேலும் தங்கள் ஒவ்வொரு செயல்களின் மூலமும் அழகின் மீதான காதலை திருப்திப்படுத்துவதுடன் அதுவே அவர்களை படைக்கவும் தூண்டுகிறது.” என்பார் எமர்சன் [ Ralph Waldo Emerson, Nature ]

மேலைத்தேய கவிதைமரபில் கவிதை சிந்தனையை வளப்படுத்த இயற்கையை அடிப்படையாக வைத்ததுடன் தங்கள் படைப்பின் பின்னணியாக இயற்கையின் அம்சங்களையும் வைத்தார்கள். இதற்கு சிறந்த உதாரணமாக சேக்ஸ்பியரின் மேகபத் நாடகத்தை சான்று காட்டுவர்.

பழந்தமிழர்கள் போலவே கிரேக்கர்களும், யூதர்களும் சீனர்களும் இயற்கையை தமது கவிதைகளில் பிரதிபலித்தனர். கிரேக்கக்கவிதைகளையும், தமிழ்கவிதைகளையும் ஓப்பாய்ந்த தனிநாயகம் அடிகளார் பின்வருமாறு எழுதுகின்றார்.

//..ஹோமர், ஹெசாய்டு, தியோகிரிடஸ் ஆகியோர் சங்கப் புலவர்களுக்கு முந்தையவர்கள். இயற்கையை இவர்கள் ஒருபோல விரும்பி உள்வாங்கினாலும் தமிழ்ப் புலவர்கள் அளவிற்கு முதிர்ச்சியாகவும் நேர்த்தியாகவும் வெளிப்படுத்தவில்லை. காப்பியக் கவிஞரான ஹோமர் இயற்கை விளக்கங்களுக்கு நேரமில்லாத அளவிற்கு மிக வேகமாக கவிதைகளை நகர்த்திச் செல்வார். எனினும் தமது நாயகர்களின் அசைவுகளை/இயக்கங்களை இயற்கையோடு இயைந்தவாறே படைத்துள்ளார். “ஹோமரின் ஒவ்வொரு இயற்கை விளக்கமும் ஒரு நீருற்று, ஒரு பசுமை நிலம், நிழலடர்ந்த சோலைகளைக் கொண்டு மிக அழகாகக் கட்டமைக்கப் படுவதாகக் கருதப் படுகிறது.” என்கிற ரஸ்கின் கூற்று விமர்சனத்திற்குரியது. ஒடிசியிலும் இலியட்டிலும் இடம்பெற்றுள்ள இயற்கை நலன்களையும் உணர்வு நிலைகளையும் யாராலும் மறுக்க முடியாது எனினும் கிரேக்கக் கவிஞன் இயற்கையை விளக்கியுரைப்பதில் வளமாக இல்லை என்பது வியப்புக்குரிய ஒன்றல்ல. ஏனெனில், கிரேக்க நாட்டுப்பகுதியின் இயற்கை நலன்கள் வெப்ப மண்டலங்களில் உள்ள இயற்கை நலன்களைப் போல வளமானதாக / செழுமையானதாக இல்லை. மேகங்களற்ற நீல வானத்தில் நிகழும் சூரியனின் மறைவு ஏதேனுக்கும் வெப்ப மண்டலப் பகுதிகளுக்கும் இடையே எந்த அளவிற்கு வேறுபாடுடையனவோ அந்த அளவிற்கு ஹோமரின் எளிமையான இயற்கைச் சித்திரிப்புகளுக்கும் சங்க இலக்கியச் சித்திரிப்புகளுக்குமிடையே வேறுபாடுகள் உள்ளன. // – [ நிலைக்கிடக்கையும் கவிதையியலும்- இயற்கை பாடல்களின் ஒப்பீடு- தனிநாயகம் அடிகள் ]

மேற்படி அடிகளார் குறிப்பிடும் ஐரோப்பிய மரபில் இயற்கை குறித்த காத்திரமான கருத்துக்களை கூறியதில் மனம் கவரும் மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஆறுகளும், ஏரிகளும் நிறைந்த ஸ்கொட்லான்ட் பகுதியில் வாழ்ந்த, அந்த இயற்கையால் கவரப்பட்ட கவிஞர்களையும் கலைஞர்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *