இயற்கை – நிலம் – இசை : தொடர் 11 – T.சௌந்தர்

ஐரோப்பிய நாடுகளின் தேசிய எழுச்சிகளும் நிலம்சார் இசைகளும்:

மற்றெல்லாக்கலைகளையும் விட இசையும், ஓவியமும் உலகமொழியாகவும் கலாச்சார, பண்பாட்டு எல்லைகளையும் தாண்டிய கலைகளாகவும் விளங்குகின்றன. அதிலும் பூடகமான இசைக்கலை ஒன்றே மனித உணர்வுகளின் நுண்மையான, பல சமயங்களில் அறிவுநிலைகளுக்கு சவால் விடக்கூடிய, நுண்ணுணர்வு மேலோங்கிய கருத்துக்களையும் உணர்த்தக்கூடிய ஊடகமாகவும் இருக்கிறது.

இசையுடன் இயற்கை எவ்வாறு தொடர்புடையது?

நம் உணர்வுகள் ஒலிகளுடன் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இயற்கையுடன் ஆழமாக வேரூன்றிய உணர்வுபூர்வமான தொடர்பும் உள்ளது. இயற்கை உலகின் இசையானது மனித பரிணாம வளர்ச்சியின் முக்கிய அம்சங்களுக்கு அடித்தளமாக அமைத்ததுடன், நிலம், இயற்கை ஆகிய இரண்டுடனும் நமது தொடர்புகளை இசை உள்ளார்ந்ததாக ஆக்கியது.
இசை, மனித இருப்பின் மையமாக இருப்பதுடன் பிற உயிரினங்களின் மீதும் தனது ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. மிருகங்கள், பறவைகள், தாவரங்களும் இசையின் வல்லமைக்கு ஆட்படுகின்றன என்பதை நவீன ஆய்வுகள் நிரூபிக்கின்றன
இன்று இசை என்பது ஓர் மயக்கும் போதை அல்லது இன்பநுகர்ச்சியின் ஒரு ஊடகம் என்று உணரப்படும் நிலையைப் போலல்லாமல், நமது ஆரம்பகால மூதாதையர்களின் ஆழமான உணர்வுகளின் வெளிப்பாடாகவும், மொழி உருவாக்கத்திற்கு முன்பே உடல் மொழியின் குறீயியீட்டுத் தன்மை மிக்கதாகவும், மொழிக்கு முன்பே சொற்கள் இல்லாத மொழியாகவும் இசை பயன்பட்டுள்ளது.
இயற்கையின் மர்மமும், அதனுடனான மனித உறவுகளும், அது மனித மனங்களில் தரும் சொல்லுக்கடங்காத ஆழ்மன உணர்வுகளின் ஊடுருவலும், அறிவு நிலைகளுக்கு ஒப்ப புதிய, புதிய ரசவாதங்களை உருவாக்குகிறது.

இயற்கையில், அதன் வனப்பில், அழகில் தன்னை இழப்பது என்ற வகையில் அதன் தாக்கத்தின் எதிர்வினையாக, மனிதர்களிடமிருந்து வெளிப்படும் ஆற்றல் கவிதையாக, பாடலாக, இசையாக மலர்கிறது. இந்த ஆர்வ எழுச்சியை புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தனது கவிதை ஒன்றில் பின்வருமாறு எழுதுவார்.

ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட
என்னை எழுதென்று சொன்னது வான்
ஓடையும் தாமரைப் பூக்களும் தங்களின்
ஓவியந் தீட்டுக என்றுரைக்கும்
காடும் கழனியும் கார்முகிலும் வந்து
கண்ணைக் கவர்ந்திட எத்தனிக்கும்
ஆடும் மயில் நிகர் பெண்களெல்லாம் உயிர்
அன்பினை சித்திரம் செய்க என்றார். [ பாரதிதாசன் ]

இந்த ஆர்வ மலர்ச்சியின் ஆழம் இசையிலும் அதிகம் வெளிப்பட்டுள்ளது.

கட்புலனுக்குட்பட்ட காட்சியை, கட்புலனுக்குள் அகப்படாத இசை மற்றெல்லாக் கலைகளையும் விட அதிகம் வெளிப்படுத்தும் என்பது இசையின் பூடகமான, மிகச்சிறப்பான செயல்திறனாகும். இந்த பூடக ஆற்றலே இசையின் தனித்துவமுமாகும். அது இயற்கை எழுப்பும் மன விநோதங்களை மட்டுமல்ல, மனித ஆன்ம, ரகசிய மூலை முடுக்குளிலெல்லாமும் மனநிழல்களாய் மறைந்து உட்புதைந்திருக்கும் உயிரின் ரகசியக்கதவுகளையும் திறந்து விடவும் உதவுகிறது.

இசை என்ற பூடகமான கலையால் இயற்கையை பிரதிபலிக்கலாம் என்பது ஒரு சவாலான விஷயமே! கவிதையில் சூரியனை, பூவை, பறவைகளை நேரடியாக பாடுவது, கூறுவது போலல்லாமல், அதை இசையால் அல்லது வாத்திய இசையால் வெளிப்படுத்துவதென்பது மிகவும் கடினமான செயலாகும். ஏனென்றால் இயற்கையில் இசை என்பது இல்லாத ஒன்று. அது மனிதனின் அகவயம் சார்ந்த கலையாகும். இசை என்பது கேட்கும் கலை; பார்க்கும் கலையல்ல என்பதால் அதை காட்சியில் வெளிப்படுத்த அதிக கற்பனை வளம் தேவைப்படுகிறது!

எனினும் இயற்கை பற்றிய மனிதர்களின் கலைச்சித்தரிப்பு, குறிப்பாக இசை என்பது இயற்கையுடனான ஆழ்ந்த தொடர்பின் விளைவால் ஏற்படுகின்ற பேராவலின் வெளிப்பாடாக பீறிட்டு எழுகிறது என்றே சொல்ல வேண்டும்! இயற்கையால் ஈர்க்கப்பட்டு மனிதன் இசையை உருவாக்குவது என்பது பேரார்வத்தின் உச்ச உந்துதலேயாகும்.

ஓசை, ஒலி பற்றி பேசும் போது அதன் எதிர்திசையில் இருக்கும் மௌனமும் பற்றி பேசுவது வழமை. அந்த மௌனம் என்ற ஒன்று இந்தப்பூமியில் இருப்பதில்லை என்பதே உண்மை. இந்தப் பிரபஞ்சமே ஓசைகளாலும், ஒலிகளாலும் நிறைந்ததாகும். மனிதனின் கேட்கும் சக்திக்கப்பாலும் ஒலி அசைந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இசையில் மௌன இடைவெளிகள் அர்த்தம் தருபவையாகவும், மேலதிக புரிதலைத் தருவதாகவும் கருதப்படுகிறது .

எனினும் அந்த மௌனத்தைக் கூட இசை ஒன்றினால் தான் சரியாக விளக்க முடியும் என்கிறார் தாமஸ் பீச்சாம்அவரின் புகழபெற்ற மேற்கோள் கூற்று ஒன்று:
” மௌனம் முழுமையாக சூழ்ந்துவிட்ட நிலையில் வெளிக்கொணர முடியாத உணர்வுகளை இசை ஒன்றினால் தான் சரியாக வெளிப்படுத்த முடியும் “


மற்றக்கலைகளைப் போல இசையிலும் இயற்கையை வெளிப்படுத்தும் முயற்சியை ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் தொடக்கி வைத்தனர். அவை, வழமை போலவே
இயற்கை அல்லது நிலக்காட்சிகள் குறித்த மொழிச் சித்தரிப்புகளுடன் பாடுவதாக இருந்த நிலையில், அவற்றையும் தாண்டி வாத்திய இசையால் வெளிப்படுத்தலாம் என்ற ஒரு முறையையும் உருவாக்க இசைக்கலைஞர்கள் முனைந்தனர்.

உலகங்கும் இசை மொழியுடன் ஒன்றிய கலையாகவே நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தது. மொழிக்கும் அப்பாலும் இசை இயங்கக்கூடியது என்பது மறுமலர்ச்சிக்காலத்திற்கு பின்னர் உணரப்பட்டது. ஐரோப்பிய இசை இதை நிரூபித்து விட்டது எனலாம்.

புலன்களின் ஆற்றல் கேட்கும் ஒலிகளின் அல்லது இசைகளின் ரஸத்துளிகளை காட்சிகளுடன் இணைத்து ரசிக்கும் ஒரு அனுபவத்தை தருகிறது. இதை இப்படி சொல்வது நன்றாக இருக்கும்; அதாவது இசை என்பது காட்சிகளை மனக்கண்முன் காணத் தூண்டுகிறது!

ஒரு கலைஞனின் ஆற்றல் என்பது அவனின் அறிவுப்புலன்களுக்கேற்பவும், சில சமயங்களில் அவர்களின் உடல்நிலைக் குறைபாடுகளும் கலைகள் சிறப்புற வெளிவர உதவியுள்ளன. இவை மூளையின் வினோத செயல்பாடுகளுக்கமைய அமைகிறது என இன்றைய விஞ்ஞானம் விளக்குகிறது.

உதாரணமாக ஓவிய உலகில் இம்பிரஷனிசம் [ Impressionism ] என்ற இயக்கத்தின் முக்கிய ஓவியரான மோனே [ Monet ] படைத்த தாமரைக்குள ஓவியங்கள் [ Blue Water Lilies ] அதிக புகழ் பெற்றவை. அந்த ஓவியங்களின் சிறப்பு என்பது, பழைய மரபு போல உருவங்களை தெளிவாகக் காட்டாமல், எளிமையான நிறப்பூச்சுக்கள், தெளிவற்ற முறையில் அதன் முழுமையை வெளிப்படுத்துவதுடன், அதுவே அந்த இயக்கத்தின் நோக்கமாகவும் கருதப்பட்டது. சில வருடங்களுக்கு முன்னர் மோனே பற்றி வெளிவந்த செய்தியில் அவருக்கு தெளிவாக பார்க்க முடியாத கண்பார்வைக் குறைபாடு இருந்ததாக கூறப்பட்டது.

கண்ணில் ஏற்படும் cataracts நோயால் பாதிக்கப்பட்ட மோனெட் [ Monet ], டெகாஸ் [ Degas ] போன்றவர்களின் ஓவியங்கள் ஸ்தூலமற்ற, சற்று மங்கிய பார்வை கொண்ட ஓவிய வெளிப்பாடுகள் ஆக இருந்தன. ஆனால் அதுவே அந்த இயக்கத்தின் [ Impressionism ] சிறப்பாகவும், தனித்துவமாகவும் அமைந்தது.

உலகப் புகழ்பெற்ற பீத்தோவன் காது முழுமையாக செவிடாகிப் போனதையும், அதே போல இயற்கையை அதீதமாக நேசித்து, தனது இசையில் வெளிப்படுத்திய இசையமைப்பாளர் டெலியஸ் [ Frederick Delius ] பார்வையை முற்றாக இழந்த நிலையிலும், இயற்கை மீதான அதிதீவிரமான ரசிப்பால், அவரது இசை மிகச் சிறப்பாகவே அமைந்தததையும் அவர்களது வரலாறுகள் பதிவு செய்துள்ளன. .

இசையைக் கேட்கும் போது நிறங்களைக் காண்பது, மரபணு வழியாக உண்டாகும் நரம்பியல் சம்பந்தமான ஒரு நிலையாக Synesthesia என்ற நிலை ஏற்படுகிறது என
மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். ஐம்புலன்களின் செயல்பாடுகளால் தூண்டப்படும் போது மூளையின் வெவ்வேறு பகுதிகள் செயலாற்றுகின்றன. அதில் ஒரு குறிப்பிட்ட பகுதி தீவிரமாகச் செயற்படும் போது Synesthesia என்ற நிலை ஏற்படுவதால் இசையை கேட்பவர்கள், அவற்றை நிறங்களாகப் பார்க்கும் ஆற்றல் உண்டாகிறது. இவ்விதம் உடலின் சில குறைபாடுகள், அல்லது மூளையின் சில வினோதமான செயற்பாடுகள் கலை முயற்சிகளை தீர்மானிக்கும் சக்தியாகவும் விளங்குகின்றன.

இயற்கையில் இயல்பாக உள்ள ஒலிகளின் அதிர்வுகள், பாதிப்புகள் போன்றவற்றிலிருந்து புதிய அனுபவம் பெறும் மனிதன் இயற்கையின் உள்ளார்ந்த ஒலி அனுபவத்தை , உள்ளத்தில் பொங்கி எழுகிற அலைகளை உள்வாங்கி, தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தத் துடிக்கும் உந்துதலே இவ்வகை இசைக்கான முன்னீடாகும். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவனது தனிப்பட்ட உணர்வனுபவமே இசையாக அல்லது வேறு கலையாகவோ வெளிப்படுகிறது. இதுவே மனிதர்களது படைப்பாற்றலின் அடிநாதமுமாகும்.

அரூபமாக இருக்கும் ஒரு கலைவடிவம் ரூபமாக இருக்கும் இயற்கையைச் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது என்பது ஆச்சரியமான அதிசயம் தான்!

தமிழ் சூழலில் திணைப்பாடல்களில் அல்லது நாட்டார்பாடல்களில் வெளிப்பட்டிருப்பதை போல மேலைநாடுகளில் கவிதையில், நாட்டார்பாடல்களில் நிலம் அதிகம் பாடுபொருளாகப் பயன்பட்டிருக்கிறது. ஆனாலும் இசையிலும் அதன் தாக்கம் அதிகம் என்றே சொல்லலாம்.
இசைக்கான ஆதாரங்கள் பணடைக் காலம் முதல், கிரேக்க, இந்திய நிலங்களில் அதற்கான சான்றுகள் இருப்பதை ஆரம்பத்தில் சுட்டினேன்.

நிலத்தின் மீதான தாக்கம் பிற்காலத்தில் உலகெங்கும் நாட்டுப்பற்றாக வளர்ந்தது. ஐரோப்பாவில் அது பெரிய அலையாக எழுந்தது. நாடு என்றால் தமக்கென இறையாண்மை கொண்டவையாக மாறத தொடங்கிய காலத்தில் ஐரோப்பாவிலே தனித்தனியாக தேசிய உணர்வு பெற்ற நாடுகள் உருவாகின. 18ம் நூறாண்டில் தேசியவாத உணர்ச்சி மேலெழுந்ததெனினும், அதற்கான விதை 17ம் நூற்றாண்டிலே போடப்பட்டது.

நமது சூழலிலும் தேசிய உணர்ச்சி – நாட்டுப்பற்று போன்றவை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றின. நாட்டுப்பற்று பற்றிய பாடல்களும் எழுந்தன.

“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவியதும் இந்நாடே ” என்றும்

செந் தமிழ்நாடென்னும் போதினிலே – இன்பத்து
தேன் வந்து பாயுது காதினிலே
என்று பாரதியும்,

“ இலங்கை மணித்திருநா டெங்கள் நாடே – இந்த
இனிய உணர்ச்சி பெற்றால் இன்ப வீடே..”

என்று பெரியதம்பிப்பிள்ளையும்

“ தெள்ளுதமிழ் சிங்களஞ் சிறந்தொளிரும் நாடு
செல்வா வளம் நான்குமலி சீரிலங்கை நாடு “

என நாட்டுப்பற்று பலவிதமாக புலவர்களால் பாடப்பட்டுள்ளன.

நவீன காலத்திலும் நிலம், அதன் தாக்கம் என்பது ஐரோப்பிய இசையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

“An artist has his country, in which he must have firm faith and an ardent heart ” என்றார் Antonin Dvorak [ 1841 – 1904 ] என்றார் செக் நாட்டு இசையமைப்பாளர்.

ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், அதன் பின்வந்த பிரெஞ்சுப் புரட்சி அதற்கான பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்ததுடன், ஐரோப்பியர்களின் முழுமையான வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது. அப்புரட்சி பாரிஸ் இசை வரலாற்றை மட்டுமல்ல புதிய தேசிய எழுச்சிகளுக்கும் உந்துதல் வழங்கியது. தேசிய எழுச்சிகளின் ஓர் அங்கமாக ஒவ்வொரு தேசத்தவரும் தங்களுக்கென தேசிய இசைகளை உருவாக்கவும் முனைந்தனர்.

நீண்ட மரபாக இருந்த கவிதைகளுடன் இணைந்த பாடல்களில் நிலம் பற்றிய வெளிப்பாடுகளும், அக்கால புதிய கண்டுபிடிப்புகளின் விளைவாக உருவான வாத்தியங்களும், அவற்றிற்கு என தனியே அமைக்கப்பட்ட இசை வடிவங்களிலும் அவை உருப்பெற்றன. நாட்டார் இசையின் உள்வாங்கலின் மூலம் புதிய இசைமொழியாகவும் உருப்பெற்று வளர்ந்தது.

16ம் நூற்றாண்டில் தோன்றிய நிலம் சார் ஓவிய இயக்கம் Landscape என்ற சொல்லை உருவாக்கியது போல, இயற்கைகாட்சி பற்றிய இசை வர்ணனனை என்பது ஐரோப்பாவில் தோன்ற பிரஞ்சு புரட்சியே அடித்தளம் அமைத்தது. எனினும் 18ம் நூற்றாண்டு வரை வளர்ந்து வந்த, குறிப்பாக வாத்திய இசையில், அதன் உச்சம் என்று கருதப்பட்ட பெற்ற சிம்பொனி [ Symphony ] இசை வடிவம் முழுமை பெற்றதும் இக்காலத்திலேயே ஆகும்.வாத்திய இசையின் வளர்ச்சி அதிகமான இசைப் படைப்பு சாத்தியங்களை நிறுவியுள்ளது.

இந்த வளர்ச்சி 19ம் நூற்றாண்டின் [ 1830 – 1900 ] நிலப்பரப்புடன் நேரடியாக இசையை தொடர்புபடுத்திக்காட்டும் இசைவடிவங்கள் அதிகம் உருவாகத் தொடங்கின. அது குறிப்பாக ஜெர்மன் நாட்டு இசை மற்றும் தேசிய அடையாளத்துடனும் பிணைத்துப் பார்க்கப்பட்டது என்பது நம் கவனத்திற்குரியது. தேசிய எழுச்சிகள் ஆரம்பமாகிய இக்காலத்தில் இயற்கைக்கும், சூழலுக்கும், உயிரினங்கள் மற்றும் கலைகள் தொடர்பான தனிமனிதரின் உள்ளார்ந்த உணர்வுகளும் பின்னிப்பிணைந்து ஒருபுதிய போக்கு உருவாகக் காரணமாயிற்று.

குறிப்பாக இசையில், இசைக்கலைஞர்கள் அதுவரை, தாம் தங்கியிருந்த மத நிறுவனங்கள், மற்றும் மன்னர்களின் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு, மற்றவர்களின் அபிலாசைகளுக்கேற்ப இசை வழங்குதலிலிருந்து விடுபட்டு, தமது விருப்பங்களுக்கேற்ப பயணிக்க தொடங்கிய ஓர் சுதந்திரம் பெற்றவர்களாக இருந்ததும் முக்கியமாக இருந்தது.

இந்த சுதந்திர உணர்ச்சி நிலக்காட்சிகளை இசையில் வெளிப்படுத்தும் ஓர் புதிய அலையை உருவாக்கிக் கொடுத்ததில் பீத்தோவன் மிக முக்கியமானவராகக் கருதப்பட்டார். வாத்திய இசையில், சிம்பொனி இசையில் தனக்கென தனியிடம் பிடித்த அவர், தான் இயற்கையில் எவ்விதம் மனம் பறிகொடுத்தார் என்பதை வெளிப்படுத்திக் காட்டிய சிம்பொனி இசைவடிவமான Pastoral Symphony , பின்வந்த பல இசையமைப்பாளர்கள் மீது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இத்துறையில் பீத்தோவன் அதிக புகழ் பெற்றாலும் அவருக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே வியத்தகு முன்னோடி சாதனையாளனாக விளங்கியவர் அண்டனியோ விவால்டி [ Antonio Vivaldi ] என்ற இத்தாலிய இசைக்கலைஞர்.
நிலத்தை அல்லது பருவக்காலங்களை முதன் முதலில் தனது இசையில் வெளிப்படுத்திய இசையமைப்பாளர் விவால்டியின் The Four Seasons என்கிற இந்த இசைவடிவமே முன்னோடியாகாகும்.

இயற்கை, நிலம், காலம் போன்றவற்றை பிரதிபலிக்கும் இசைப்படைப்புகளை ஐரோப்பிய இசைக்கலைஞர்கள் ஏராளமாகப் படைத்துள்ளனர். அவர்களுக்கு முன்னோடியாகவும், படைப்பாற்றலில் இன்றுவரை ஓர் மிகப்பெரும் ஆளுமையாக விளங்குபவர் விவால்டி!

நாடு 1 :

இத்தாலி :

மேற்கத்தேய இசையில் இத்தாலிய இசை நீண்ட மரபைக் கொண்டது. பலவகைகளில் முன்னோடியுமானது. அந்தவகையில் அவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இத்தாலிய இசைக்கலைஞரான விவால்டி என்பவரது நான்கு பருவ காலம் என்ற இசை வடிவம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

நான்கு பருவ நிலைகள்: – விவால்டி
Four Seasons – Antonio Vivaldi [ 1618 – 1741 ]
ஐரோப்பிய இசையில் குறிப்பிடத்தக்கதாக விளங்கும் இந்தப்படைப்பு வருடத்தின் பருவ நிலைகள் குறித்த இசையாக்கம் ஆகும். இதைப்படைத்த விவால்டி [ Antonio Vivaldi ] என்ற இசையமைப்பாளரின் பெயர் ஐரோப்பிய இசையுலகில் நிரந்தர இடம் பிடித்துள்ளது. அவர் இசையமைத்த நான்கு பருவங்கள் [ Four Seasons ] என்ற இந்த இசைப்படைப்பு 300 வருடங்கள் தாண்டியும் ஏகோபித்த புகழ்பெற்று விளங்குகிறது. கேட்கும் பொழுதெல்லாம் இனம்புரியாத அதிர்வுகளையும், மன எழுச்சியையும் தரும் இந்த படைப்பு, கேட்பவர்களின் காதுகளில் இனிமையையும் பாய்ச்சுவதுடன் ஐரோப்பிய நிலப்பரப்பின் நினைவுகளையும் மனதில் எழவைக்கும் ஆற்றல் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

1716 – 1717 களில் எழுதப்பட்ட இந்த இசைவடிவம் 1725 இல் வெளியிடப்பட்டது. இயற்கையில் இயல்பாய் இருக்கும், உறைந்த நிலம், குளிர், வெப்பம், சிற்றோடைகள், பறவை ஒலிகள், புள்ளினங்களின் ஒலிகள், இயற்கையில் ஒன்றி திரியும் இடையர்களின் ஒலிகள் என எல்லாவிதமான ஒலிகளையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் இசைப்படைப்பாகும்.

நான்கு பருவநிலையை வெளிப்படுத்து இந்தப்படைப்பு வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என வகுக்கப்பட்டு, ஒவ்வொரு பருவமும் கிடடத்தட்ட 10 நிமிடங்களுக்கு ஓடக்கூடிய இசையாக அமைக்கப்பட்டுள்ளது. வாத்திய இசையில் ஒன்றாக விளங்கும் கொன்செட்டோ [ Concerto ] என்ற அமைப்பில் அமைந்துள்ள இசைவடிவமாகும்.
அந்தக்கால இசை வழமைக்கு மாறான புதுமைமிக்க இசையாக, காலநிலைகளைப் பிரதிபலிக்கும் இந்த இசைப்படைப்பு, அதை விவரிக்கும் கவிதைகளுடன் வெளியிடப்பட்டதாகும். அந்தக் கவிதைகளையும் எழுதியவர் இந்த படைப்பின் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை மீதான மனப்பதிவை, முதன் முதலில் தனது இசையில் வெளிப்படுத்தியதில் விவால்டியின் இந்த இசைவடிவமே முன்னோடியாகாகும்.

நாடு 2:

ஜெர்மனி:

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கங்களை வைத்து உருவான பிரெஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து எழுந்த தேசியவாத அலை ஐரோப்பிய இசையிலும் ஓர் இயக்கமாக உருவாக உதவியது. இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற இசைப்பாரம்பரியமிக்க நாடுகளில் இவை வலுவாக இருந்தாலும், பரந்துபட்ட ஐரோப்பிய நாடுகளிலும் தாக்கத்தை ஏற்ற்படுத்தியது.
19ம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிகளில் இசையும் முக்கிய பங்கை வகித்தது. தங்கள் தனித்துவங்களைக் காக்கும் தேசிய அடையாளங்களான கதைகள், நாட்டுப்புறப்பாடல்கள், இதிகாசங்கள், இசைக்கவிதைகள் போன்றவற்றை தங்கள் தேசியவாதத்திற்கு உரம் ஊட்டும் வகையில் கலைஞர்கள் எடுத்தாண்டனர்..

அதில் இசைப்பாரம்பரியம் மிக்க, மிகத்திறமைவாய்ந்த இசைக்கலைஞர்களை உலகுக்கு வழங்கியதில் ஜெர்மனி முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக Ludwig Van Beethoven, Richard Wagner, Richard Strauss, Felix Mendelssohn, Robert Schumann போன்ற பலரைக் குறிப்பிடலாம், இயற்கை, நிலம் சார்ந்து அவர்கள் பல முக்கிய இசைப்படைப்புகளை உலகுக்கு வழங்கியுளார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.


நாட்டுப்புற சிம்பொனி – பீத்தோவன்,
Pastoral Symphony – Beethoven [ 1770 – 1827 ]
இளமைக்காலம் முதல் இயற்கையில் தனது மனதை பறிகொடுத்தவராக வளர்ந்த பீத்தோவன், தன் கண்முன் கண்ட காட்சிகளையும், இயற்கையின் நாட்டுப்புறம், நீரூற்று இடி,மின்னல், புயல் ஒலிகள், எல்லையற்ற தாள அசைவுகள், மக்களின் கூடல் என ஒரு முழுமையான, இயல்பாக இயற்கையுடன் இசைந்த இசைக்கோலமாக இந்தப்படைப்பை படைத்தளித்திருக்கின்றார்.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இசைக்கக்கூடிய இந்த இசைவடிவம் இசையமைப்பாளரின் மகிழ்ச்சியையும், தெளிவுமிக்க ரசனையையும் அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த இசைப்படைப்பை ஐந்து தலைப்புகளில் அளவறிந்தும், சுவையறிந்தும் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 12 நிமிட அளவில் தந்துள்ளமை சிறப்பானது!

அவை பின்வருமாறு :

1.Awakening of cheerful feelings on arrival in the countryside
2.Scene by the brook
3.Merry gathering of country folk
4.Thunder, Storm
5.Shepherd’s song. Cheerful and thankful feelings after the storm.

பீத்தோவனின் 6வது சிம்பொனி அல்லது Pastoral Symphony என்று அழைக்கப்படும் இசைவடிவமாக அமைக்கப்பட்ட இந்த இசைவடிவத்தின் முதல் ஆரம்பம் ” Awakening of cheerful feelings on arrival in the countryside ” என்ற தலைப்பில் கால அளவுகளை வரையறுத்துக் கொண்டு Motif என்று சொல்லப்படுகின்ற சில சிறு இசைத் துளிகளை மீண்டும், மீண்டும் தந்து இயற்கையின் எல்லையற்ற தாள அசைவுகளூடே நகர்த்தி செல்கிறார்.

Scene by the brook என்ற இந்த இசைப்பகுதி நீரூற்றை பற்றியதாக, நரம்பு வாத்திய இசையில் அமைக்கப்பட்ட ரம்மியமான இசையாகும். கண்ணை மூடிக் கேட்டால் நீர்வீழ்ச்சியின் நீர் தூசிகளாக பறந்து போகும் காட்சியை மனக்கண் முன் நிறுத்துவதுடன் ஹார்ன், ஓபோ, வயலின் , கிளாரினெட் , குழல் போன்ற இசைக்கருவிகளை வைத்து ஜாலம் காட்டுவதுடன், பறவைகளின் தூரத்துப்பாடல்களையும் கேட்பது போன்ற உணர்வை வெளிப்படுத்துகிறார்.

Merry gathering of country folk என்ற இந்த பகுதியில் ஹார்ன், வயோலா, வயலின் ஓட்டங்களையும் மிக எழுச்சியுடன் தரும் இசைப்பகுதி என்று சொல்லலாம். திடீரென இவை நாட்டுப்புறப்பாடலுக்குத் திரும்பி விடுவதையும் காண்பிக்கிறார். இந்தப்பகுதியில் தலைகாட்டும் கிளாரினெட் இசைக்கருவி அதனூடே ஹார்ன் கருவிகளையும், மென்மையான வயலின்களையும் இணைத்து, முடிவில் குதூகலமான நாட்டுப்புற நடனத்தையும் காண்பிக்கிறார்.

Thunder, Storm இடியும், புயலும் என்ற இந்த பகுதியில் படைப்பில் தனது காலத்திற்கு மீறிய படைப்பாற்றலைக்காட்டுகிறார். இயற்கையின் விநோதங்கள் மனித ஆற்றலுக்கு இன்னும் கட்டுப்படாத தன்மையை இந்த இசைப்பகுதியில் வெளிப்படுத்துகின்றார். வீச்சான காற்றையும் , மழையடிப்பதையும், மின்னல் வெட்டுக்களையும், தூரத்தில் இடிஒலித்து மறைவதையும் மனக்கண்ணில் நிறுத்துகிறார் பீத்தோவன்.

Shepherd’s song. Cheerful and thankful feelings after the storm. இடையனின் பாடல். புயலுக்குப் பின் மகிழ்வும் என்ற பகுதி, இந்த இசைப்படைப்பின் இறுதிப்பகுதியாகும். இப்பகுதியில் வாத்தியங்களின் தன்மைகளை வெளிப்படுத்திக் காட்டும் பாங்கில் தனது பேராற்றலைக் காட்டுகிறார் பீத்தோவன். மூன்று விதமாக ஒரே இசையை வாசிப்பதன் மூலம் ஆரம்பிக்கின்றார். மூன்றாவது முறை கிளாரினெட், செல்லோ, வியலோ போன்ற வாத்தியங்களுடன் ஆரம்பித்து வயலினினால் ஒன்று சேர்த்து இழுத்து செல்லுப்படுகின்றது இந்த இசை வெள்ளம்! மெட்டின் பலவிதமான பாங்குகளையும் [ Variations ] காட்டும் இசைப்படைப்பு ஆகும்.

இந்தப்படைப்பு பற்றி பீத்தோவன் பின்வருமாறு கூறினார். ” The Sixth Symphony is “more the expression of feeling than painting”.

3. அல்ப் மலைகளின் சிம்பனி – ரிச்சர்ட் ஸ்ட்ரோவ்ஸ் [ 1864 – 1949 ]
An Alpine Symphony – Richard Strauss
இயற்கை, நிலம்,பொழுது சார்ந்து அமைக்கப்பட்ட இன்னுமொரு முக்கிய படைப்பு இதுவாகும். பீத்தோவனின் 6வது சிம்பொனி அல்லது Pastoral Symphony இதற்கு முன்னோடியான படைப்பாகும். பதினோரு வருட உழைப்பில் பிறந்த இசையில் தன்னை தானே சித்திரவதை செய்ததாக இசையமைப்பாளரான Richard strauss எழுதினார். பத்துவருடங்களுக்கு மேலாக சிந்தனையில் ஊறிய இந்தப் படைப்புக்கான, இசைக்குழுவுக்கான பணிகள் தொடங்கிய மூன்று மாதத்தில் நிறைவு செய்தார்.

இந்த இசைக்கான உந்துதல் என்பது இயற்கையாக அவரிடம் [ Strauss] இருந்த இயற்கை நேசிப்பால் விளைந்தது. மலையை ரசிப்பதிலும், மலை ஏறுவதிலும் ஆர்வம் கொண்ட அவரின் அனுபவ தொகுப்பாக அல்லது அதன் விளைவால் எழுந்த உள்ளார்ந்த உணர்ச்சிபூர்வமான இயற்கைத் தழுவல் என்று சொல்லத்தகக்க படைப்பாகும்.

Karl Stauffer-Bern என்ற தனது [ ஓவியர் ] நண்பரின் நினைவுக்காக இந்தப்படைப்பை எழுதியதாகக் கூறிய Strauss இதற்கான உந்துதல் அல்லது அகத்தூண்டுதல் தத்துவவாதி நீட்ஸே யின் சிந்தனையால் உருவானது என்றும் கூறினார். மலையில் தான் அனுபவித்த ஒரு நாளின் பதினோரு மணித்தியாலங்களை வர்ணிப்பதாக அமைக்கப்பட்ட இந்த இசை வடிவம், காலை உதயத்தில் ஆரம்பித்து இரவு முடியும் வரையான கால அளவை வெளிப்படுத்துகிறது. மிகப்பெரிய அளவிலான இசைக்குழுவைக் கொண்ட படைப்பாக அமைந்த இந்த இசைவடிவத்தில் 125 இசைக்கலைஞர் பங்கெடுத்தனர். இந்த இசைவடிவத்தில் பின்வரும் கால, நேரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.Night
2.Sunrise
3.The Ascent
4.Entry into the Forest
5.Wandering by the Brook
6.At the Waterfall
7.Apparition
8.On Flowering

என எட்டு தலைப்புகளில் இசை அமைக்கப்பட்டுள்ள இந்த இசை, “ ஒலியின் கவிதை “ என்று அழைக்கப்படுகிறது.

இது சூரிய உதயத்திற்கு முன் சில மணிநேரங்களில் தொடங்குகிறது, அவை காட்டுக்குள் நுழைந்து, மூடுபனி, நீரோடை, நீர்வீழ்ச்சி, பூக்கள் நிறைந்த ஆல்பன் மலைகளில் ஆநிரைகளை மேய்க்கும் இடையர்கள், மாட்டின் மணி ஒலி போன்றவற்றை இப்படைப்பில் வெளிப்படுத்துகிறார்.

“ஒலியின் கவிதை” என்று வர்ணிக்கப்பட்ட இந்த இசை வடிவம், இசையின் ஊடாக நிலப்பரப்பினை பிரதிபலிக்கும் சிறந்த இசையாகவும், ஒரு சகாப்தத்தின் நிறைவாக கருதப்பட்ட நிலையில், நாஜிகளுடன் இசையமைப்பாளருக்கு இருந்த தொடர்பாலும், உலக யுத்தத்தின் பின்னர் நடந்த அனர்த்தங்களாலும் தனது செல்வாக்கையும், மகிமையையும் இழந்து போனதும் அதன் வரலாறாகும்.


Felix Mendelssohn – [ 1809 – 1847 ]
இவர் ஜேர்மனியில் பிறந்தாலும் இங்கிலாந்திலேயே அதிகம் புகழ் பெற்றார் என்று சொல்லலாம். இசை நிகழ்ச்சிகளுக்காக பலதடவைகள் இங்கிலாந்து வந்த இவர், அந்த நாட்டு இயற்கையின் அழகில் மனம் பறிகொடுத்தவர் என்கிற ரீதியில் அவர், ஸ்கொட்லாந்தின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்திருக்கும் ஹைபிரிட்ஜ் தீவுகள் பற்றி அமைத்த இசை வடிவம் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாகும்.

Felix Mendelssohn :- The Hebrides [ Fingal’s Cave ] – Overture

ஸ்காட்லாந்தில் உள்ள Staffa என்ற தீவில், அங்கே அவர் பார்த்த இயற்கையான பாறைகள் மற்றும் இயற்கை குறித்த இவரது மனப்பதிவின் வெளிப்பாட்டு இசையாகும். முதன் முதலில் இப்படைப்பு To the Lonely Island என பெயரிடப்பட்டது. மீண்டும் எழுதப்பட்ட இப்படைப்பு The Hebrides என் பெயரிடப்பட்டது. ஸ்காட்லாந்து இயற்கை அழகால் உந்துதல் பெற்ற இவர் கடல் அலையின் வீரியத்தையும், பனிபடிந்த புகை மூட்டத்தையும், அதற்குள் பதுங்கி, பதுங்கி எழும் அலைகளையும் இந்த இசைப்படைப்பில் செனட்டோ இசைவடிவில் மெல்லிசையாக வடித்து தந்துள்ளார்.

அதுமட்டுமல்ல Scottish Symphony என்று அறியப்பட்ட, அவரது 3வது சிம்பொனியில் ஸ்காட்லாந்தின் இயற்கை எழிலை வெளிப்படுத்தியிருப்பார். ஸ்காட்லாந்தில் அவர் பார்த்த ஒரு தேவாலயத்தில் உடைந்த பொருட்கள் சிதறிக்கிடந்த ஓர் மண்டபத்தில்
உள்ளே பிரகாசித்த ஒளியில் தனது சிம்போனிக்கான உதயம் ஆரம்பமானது என்றார்.

Robert Schumann [ 1810 – 1856 ]

பீத்தோவன், ஸ்டராவ்ஸ் போலவே இவரும் ஒரு புகழ் பெற்ற ஜேர்மனிய இசைக்கலைஞர். புகழ்பெற்ற ஓர் பியானோ இசைக்கலைஞராக விளங்கிய இவரை அதையும் தாண்டி, வாத்திய இசையிலும் சாதிக்க வல்லவர் என்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அவரது மனைவி கொடுத்த உற்சாகத்தால் இந்த இசையை [ Symphony No1 ] அவர் படைத்தார்.

Robert Schumann : Symphony No1 – [ Spring Symphony ]
இந்த இசைக்கான உந்துதல் Bottger என்ற கவிஞரின் ஒரு கவிதையின் இறுதிப்பகுதியை அடியாகக்கொண்டு படைக்கப்பட்டது. [ ” O, turn and change your course in the valley. Spring blooms forth “]

இந்த இசை பற்றி சுமான் [ Schumann ] தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
” இந்த இசைவடிவத்தின் அறிமுகத்தில் வரும் Trumpet வாத்திய ஒலி உயரத்திலிருந்து இறங்கி வருவதை போல ஒலிக்க விரும்பினேன். அதைத் தொடர்ந்த அறிமுகத்தில் உலகின் பச்சை வண்ணமாக இந்த இசைவடிவம் மாற வேண்டும் என விரும்பினேன். வண்ணத்துப்பூச்சி ஒன்று காற்றில் பறப்பது போலவும், Allegro வில் வசந்தத்தோடு எப்படி எல்லாம் உயிர் பெறுகின்றன என்பதை காட்ட வேண்டும் என்ற எண்ணம் இதை எழுதி முடித்த பின் தோன்றிய கருத்துக்களாக இருந்தது”.

நான்கு பகுதிகளாக அமைக்கப்பட்ட இந்த இசைவடிவம் இயற்கையுடன் இசைந்த தலைப்புகளாகவும் அமைந்தன.

1. The Beginning of Spring [ வசந்தத்தின் தொடக்கம் ]
2. Evening [மாலை ]
3. Merry Playmates [ களிப்பூட்டும் விளையாட்டுத் தோழர்கள்]
4. Spring of Bloom [ வசந்தத்தின் மலர்ச்சி]

நாடு 3 :
England:

நிலம் சார்ந்த இசையில் இங்கிலாந்தின் பங்களிப்பு:
உலகம் இயற்கை எழிலால் அமைந்த ஒன்று. ஒவ்வொரு பகுதிகளும் அதனதன் தனித்தன்மைகளால் சிறப்புப் பெற்று விளங்குகின்றன. அந்த மாறுபாடே இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஈர்ப்பையும், உத்வேகத்தையும் அளிக்கிறது. இன்று நாடுகளின் எல்லைகள் வெவ்வேறு நாடுகளாக்கி வைத்திருப்பினும், பல நாடுகளின் நீண்ட, நெடிய நில, இயற்கை அமைப்பு அதனியல்பான போக்கில் பொதுத் தன்மையையும் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணமாக ஐரோப்பிய நிலப்பரப்பில் இன்று பல நாடுகள் இருப்பதையும், அவற்றின் பொதுத்தன்மைகள் ஒரேவிதமாகவும் இருப்பதைக்காண முடியும் !

இந்த நாடுகள் பலவற்றில் ஒரே தன்மை இருப்பினும், அதற்கு மாறாக ஐரோப்பிய நிலப்பரப்பிலிருந்து சற்று விலகி, அத்திலாந்திக் கடலில் தீவாக இருக்கும் இங்கிலாந்து தனிச் சிறப்புமிக்க இயற்கை, நில அமைப்புகளைக் கொண்ட நாடாக விளங்குகின்றது.

இங்கிலாந்து, பலவிதமான இயற்கை, நிலஅமைப்பில் மலைகள், நதிகள், பள்ளத்தாக்குகள், பரந்த புல்வெளிகள், ஆழமான, அழகான ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், அற்புதமான கடற்கரைகளைக் கொண்ட ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடாக இருக்கிறது.

ஐரோப்பாவிலிருந்து கடல்வழியே பயணம் செய்யும் ஒருவர் இங்கிலாந்து நாட்டில் நுழையும் போதும் காணும் கடற்கரைகளை ஒட்டிக் காணப்படும் வெள்ளை மதில் போன்ற இயற்கையின் அரண் அமைப்பே முதலில் புதியதோர் உலகத்தில் நுழைகிறோம் என்ற உணர்வைத் தரக்கூடியது. அதுமட்டுமல்ல லண்டன் பகுதியை நோக்கி செல்லும் வழியில் தென்படும் பரந்துவிரிந்த பச்சை வயல் வெளிகள், காட்டுப்பகுதிகள் மனதுக்கு குளிர்ச்சி தருபவை. அவை மட்டுமல்ல வேல்ஸ், ஸ்கொட்லான்ட் , மேற்கு இங்கிலாந்து என பரந்து கிடக்கும் வெவ்வேறு விதமான நிலப்பரப்புகளின் அழகுகளை வார்த்தையில் எளிதாக வர்ணிக்க முடியாது.

இயற்கை வனப்பில் இங்கிலாந்து ஓர் தனி உலகமாகவே உள்ளது. இவ்விதம் இயற்கை ஏழில் கொஞ்சும் இங்கிலாந்தின் நிலப்பரப்பு கலைஞர்களுக்கு எழுச்சியையும், உத்வேகத்தையும் அளித்தது வியப்பில்லை என்று அடித்துக் கூறலாம். அதை நிரூபணம் செய்யும் வகையில் பல இசைக்கலைஞர்கள் நிலம், இயற்கை குறித்த இசைப்படைப்புகளை மிகத் திறம்பட வழங்கியுள்ளனர்.

இயற்கை வளம் நிறைந்த இங்கிலாந்தின் தென்கிழக்குப்பகுதியிலுள்ள ஏற்றத் தாழ்வானதும் ,நீண்டு பரந்திருக்கும் நிலப்பகுதியுமான மேய்ச்சல் நிலப்பகுதியை டான் [Down] என அழைக்கின்றனர். சாஷேக்ஸ் வீல்ட் [ Sussex Weald ] பகுதியில் உள்ள இந்நிலப்பரப்பு மிக அழகானதும் மக்களை எளிதில் கவரும் அழகு கொண்டதுமாகும்.பலவிதமான கலைஞர்களும் இந்நிலப்பரப்பின் அழகால் கவரப்பட்டிருக்கிறார்கள். எட்கர் எல்கர் [Edgar Elgar ] என்ற மிகவும் புகழ் பெற்ற இசையமைப்பாளர், தனது புகழபெற்ற செலோ கொன்செட்டோ [ Cello Concerto in E minor op 85 ] இசை வடிவத்தை, Fittleworth, Sussex பகுதியில் தங்கியிருந்து போது எழுதுவதற்கான உந்துதலைப் பெற்றார்.

இங்கிலாந்தின் தெற்கில் அமைந்துள்ள West Sussex பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரமான பிரைட்டன் [ Brighton ] தனித்துவம் மிக்க அழகுவாய்ந்த , உல்லாசப்பயணிகளைக் கவரும் இடமாக விளங்குகிறது. ஒரு பக்கம் நீண்டு நெடிது பரந்திருக்கும் புல்வெளிகளும், மறுதிசையில் நீண்ட நெடிய வெள்ளைமணற்பரப்பைக் கொண்ட இந்நகரத்தில் பிறந்தவர், இங்கிலாந்தின் இன்னுமொரு முக்கிய இசை ஆளுமையாகப் போற்றப்படும் இசையமைப்பாளர் Frank Bridge [1879 – 1941] என்பவர். தனது சொந்த பிரதேசமான இப்பகுதி பற்றிய மிக அழகான, கட்டற்று பாயும் உணர்ச்சிகற்பனை வாய்ந்த இசைவடிவங்களை அமைத்துள்ளார். அதில் அவர் இசையமைத்த The Sea என்கிற இசை மிகவும் புகழபெற்றதும், உணர்ச்சி ததும்பும் இசையாகும்.

செவ்வியல் இசைவடிவத்தில் மட்டுமல்ல நாட்டுப்புற இசைக்கலைஞர்களையும் இந்நிலப்பரப்பு [ Brighton ] கவர்ந்திருக்கிறது. 15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த இடைப்பையனான Cooper என்பவர், நாட்டுப்புறப் பாங்கில் இந்நிலம் குறித்து பாடும்மரபை ஏற்படுத்தினார். வாய்மொழிப்பாடல்களாக இருந்து வந்த இப்பகுதியின் நாட்டார் பாடல்களை 1924 இல் தொகுத்தார்கள். அதில் Shepherd of Down என்ற பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடலாகும்.


Ralph Vaughan Williams [ 1872 – 1958 ]
ரால்ப் வாஹ்கன் வில்லியம்ஸ்

இயற்கை மற்றும் நிலம் சார்ந்த இசை மரபில் [ Pastoral Tradition ] இங்கிலாந்தை சேர்ந்த இசையமைப்பாளரான Ralph Vaughan Williams என்பவர் மிக முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். இங்கிலாந்தின் இயற்கை, கிராமப்புற அழகுகளை தனது இசையில் மிக அற்புதமாக வெளிப்படுத்திய முக்கிய கலைஞர் இவர். ஜேர்மனிய இசையின் தாக்கத்திலிருந்து விடுபட்டு இங்கிலாந்திற்கான தனித்துவமிக்க ஓர் இசையை மீட்டெடுத்தவர் வாஹ்கன் வில்லியம்ஸ்.

இயற்கையின் ஆழ்மனத்தாக்குதலை, அது தரும் மனக்கிளர்ச்சியை மிகத்திறம்பட வெளிப்படுத்தி சில முக்கிய இசைத் தொகுதிகளை இவர் வெளியிட்டுள்ளார். கீழ் காணும் அவரது இசைப் படைப்புகள் முக்கியம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

1. Norfolk Rhapsody [1905 ]
2. A Sea Symphony [ 1910 ]
3. A Pastoral Symphony
4. The Lark Ascending
5. A London Symphony
6. In the Fen Country
7. Fantasi of Sussex Folk
8. Folk Songs of Four Seasons.

1. Norfolk Rhapsodies [ 1905 ]
இங்கிலாந்து பல அழகிய நிலக்காட்சிகளைக் கொண்ட நாடு. எங்கு திரும்பினாலும் அழகு தான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அந்தவகையில் இந்த இசைக்கான மூல வடிவம் East Anglia என்ற பகுதியைச் சேர்ந்த கிங்ஸ்லின் நகரத்தைச் சேர்ந்த மீனவர் நாட்டார் பாடலிலிலிருந்து பெற்ற இசையாகும்.

Rhapsody – என்றால் உணர்ச்சியும் உற்சாகமும் தரும் பரவசமான வெளிப்பாடு.
ஒன்று , இரண்டு என ஐந்து பகுதிகளாக எழுதப்பட்ட இசைவடிவங்கள் இவையாகும்.கேம்பிரிஜ் நகரிலிருந்து கிங்ஸ்லின் பகுதிக்கு பயணம் பொழுது காணும் காட்சிகள் கண்ணுக்கு ரம்மியமானவை, சொக்க வைப்பவை. எங்கு திரும்பினாலும் அழகு. அதை வாகனின் இசையோடு ரசிப்பது பேரின்பம் தரக்கூடியது. அது மட்டுமல்ல கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றதும் அதன் மூலம் அபபகுதிகளின் அழகுகளில் அவர் மனம் பறிகொடுத்ததுமே இந்த இசைகளுக்கான அடிப்படைகளாக விளங்கின.

இவை மட்டுமல்ல புகழ்பெற்ற கவிதைகளிலும் ஆழ்ந்து அவற்றிற்கான இசையையும் வழங்கியுள்ளார். சில உதாரணங்கள்…
1. Five Variants of “Dives and Lazarus”
2. Fantasia on a Theme” by Thomas Tallis
3. The Lark Ascending – Ralph Vaughan Williams.

15 நிமிட கால அளவைக் கொண்ட இந்த இசைவடிவம் George Meredith என்பவரது கவிதையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. போன்ற மிக முக்கிய படைப்புகளைத் தந்து சென்றுள்ளார்.

1. Fantasia on a Theme” by Thomas Tallis
பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த ஆங்கில இசையமைப்பாளரான தாமஸ் டலிஸ் என்பவரின் இசைப்படைப்பொன்றை ஆதாரமாக வைத்துக்கொண்டு Ralph Vaughan Williams எழுதிய வாத்திய இசை இதுவாகும். Vaughan பழைய ஆங்கிலப்பாடல்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்ததும் கவிதை இலக்கியம் நாட்டுப்புற-இசை மற்றும் ஆரம்பகால தேவாலய இசை ஆகியவற்றில் அவர் மூழ்கியதன் விளைவாகவும் , ஆரவ மேலீட்டாலும் அவற்றில் தனது தாக்கத்தை வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் அவர் அந்த இசையை அடிப்படையாக வைத்து எழுதிய இந்தப்படைப்பு என்பது வாஹனின் படைப்பென்றே சொல்ல வேண்டும் என்றும் வாழ்நாள் முழுவதும் அந்தப்படைப்பின் கருப்பொருளில் அவருக்கு இருந்த மோகத்தால் அந்த படைப்பு நாடகமாக்கப்பட்ட போது அதற்கான இசையை அவர் வழங்கினார் என்கிறார் வாஹனின் சரிதத்தை எழுதிய மைகேல் கென்னடி என்ற ஆய்வாளார்.

2. Five Variants of “Dives and Lazarus”
இந்த இசையில் , ஒரே இசையில் வெவ்வேறு விதமான அசைவுகளைக் காண்பிக்கும் முறையைப் பயன்படுத்திக்காண்பிக்கும் ஒரு முறையில் அழகு படுத்திக்காண்பிக்கின்றார்.

நாட்டார் பாடலின் நான்கு பருவங்கள் :
Folk Songs of the Four Seasons – Ralph Vaughan Williams
Ralph Vaughan Williams இசையமைத்த முக்கிய படைப்புகளில் ஒன்று. நாட்டுப்புற இசையில் ஆர்வம் காட்டிய இவர் பல நாட்டார் பாடல்களை தானே சேகரித்தவர் என்ற வகையில், இந்த படைப்பு இங்கிலாந்தின் ஆறு நாட்டுப்புற பாடல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அதிகம் புகழ்பெறாத படைப்பாகவும். பெண்கள் ஹோரசுடன் வாத்திய இசையும், பியானோ இசையும் கலந்த Cantata என்னும் அமைப்பில் அமைந்தது. கீழ்கண்ட தலைப்புகளில் அவை தரப்பட்டுள்ளன.
1. Prologue: To the Ploughboy
2. Spring: Early in the Spring, The Lark in the Morning, May Song
3. Summer: Summer is a-coming in and The Cuckoo, The Sprig of Thyme, The Sheep Shearing,
The Green Meadow
4. Autumn: John Barleycorn, The Unquiet Grave, An Acre of Land
5. Winter: Children’s Christmas Song, Wassail Song, In Bethlehem City, God Bless the Master


பிராங்க் பிரிட்க்ஹ்:
Frank Bridge – [ 1879 – 1941 ]
புகழ் பெற்ற ஆங்கில இசையமைப்பாளர். The Sea என்ற தலைப்பில் சிம்பொனி அமைப்பில் நான்கு பகுதிகளாக தனது இசையை அமைத்துள்ளார்.

1. The Sea – Suite For Orchestra [ 1910 – 1911 ]
இந்த இசைத்தொகுப்பில் கீழ்கண்ட தலைப்புகளில் அவை தரப்பட்டுள்ளன.
1. Seascape – கடல் காட்சி
[ கோடைகால கடற்கரையில் சூரிய ஒளியில் விரிந்து பரவும் நீர் பற்றிய வர்ணனை]
2. Sea Foam – கடல் நுரை
கரையில் பாறைகளுக்கிடையே விளையாடும் நுரை.
3. Moonlight – நிலவொளி
இரவின் அடர்த்தியான நிலவொளியில் துலங்கும் கடல்
4. Storm – புயல்
காற்று , மழை மற்றும் கொந்தளிப்பான கடல் பற்றிய வர்ணனை.

2. Suite on English Folksongs
இவரது இன்னுமொரு முக்கிய படைப்பான ” Suite on English Folksongs ” என்கிற இசைத்தொகுப்பும் வெளிப்படையாக நாட்டார் இசை சார்ந்து நில அமைப்பை சித்தரிக்கும் இசையாகும். இதில் ” Lord Melbourne ” அவர் சேகரித்த நாட்டார்பாடல்கள் சார்ந்த இசையாகும்.

3. A Spring Song – Frank Bridge
Spring Song என்ற ஓர் இசையை 4 Short Pieces, H.104 2. என்ற இசை படைப்பில் ஒரு பகுதியாக தந்தார்.

4. Enter Spring [Rhapsody for Orchestra ] [1926/1927 ] – Frank Bridge
ஆங்கிலேய நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய இசைப்பாடல் [ Pastoral ] வகைக்குள் அடங்கும் இப்படைப்பு சக்திவாய்ந்த இயற்கை , நிலம் சார்ந்த பருவங்களை வெளிப்படுத்தும் சிம்பொனி இசைக்கவிதை என்பதுடன் பிராங்க் பிரிட்ஜ் படைத்த மிகச் சிறந்த படைப்புகளிலும் ஒன்றெனவும் கருதப்படுகின்ற இசைவடிவம்.

5. Three Miniatures Pastoral .இந்த இசை தொகுப்பும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


பெஞ்சமின் பிரிட்டன் : [ 1913 – 1976 ]
Benjamin Britten:
இங்கிலாந்தின் வடக்கடல் பிரதேசத்தில் வாழ்ந்த இசையமைப்பாளர். தனது Peter Grimes என்ற ஓபெராவில் அவர் கடல் பற்றிய தனது உணர்வுகளை இசையாக The Four Sea Interludes என்ற பெயரில் பலவிதமான சித்தரிப்புகளைக் காண்பிக்கிறார். நான்கு தலைப்புகளில் அவை தரப்பட்டுள்ளன.
A. Four Sea Interludes – Dawn
B. Four Sea Interludes – Storm
C. Four Sea Interludes – Moonlight
D. Four Sea Interludes – Sunday morning

இங்கிலாந்தின் Suffolk பகுதியின் கடற்கரைப் பகுதியில் வாழ்ந்த பிரிட்டன் தனது இசையின் அடிப்படை குறித்து பேசும் பொது பின்வருமாறு கூறுகிறார்.

“ I feel at home in this kind of scenery … the marshes, the small villages, the fishermen in their boats – that is all part of my life without which I cannot seem to do. I cannot work and live without roots.”

Fritz Delius [ 1862 – 1934 ]
டெலியஸ்
இவரும் ஒரு புகழ் பெற்ற ஆங்கில இசையமைப்பாளர். அவரது முன்னோர்கள் ஜேர்மனிய வம்சாவழியை சேர்ந்தவர்கள். அவரது இசை ஜேர்மனிய வாத்திய இசையை அடிப்படையாகக் கொண்டது. மிகுந்த இயற்கை நேசிப்பாளன். தனது விடுமுறைக்காலங்களை நோர்வேயின் மலைப்பிரதேசங்களில் சஞ்சரித்தவர். நிலவியல் சார்நத நினைவுகளை, இழப்புகளை அதிதீவிரமாகத் தனது இசையில் பிரதிபலித்த முக்கிய கலைஞர். பாரவைக்குறைவும், உடல் இயங்க முடியாத நிலையிலும் இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வ மேலீட்டால் உதவியாளரை வைத்துக் கொண்டே, தள்ளுவண்டியில் அமர்ந்து மலைகளில் இருந்து வீசும் சுத்தமான காற்றை தனது இசையின் அடிப்படையாக உணர்ந்தவர்.

இயற்கை பற்றிய இசைச் சித்தரிப்புகளில் இவரது நான்கு படைப்புகள் மிகவும் முக்கியம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

1. In a Summer Garden (1908),
2. Life’s Dance (1911),
3. Summer Night on the River (1911)
4. On Hearing the first Cuckoo in Spring [ 1912 ]

இவர் பற்றிய திரைப்படம் ஒன்று ” Song of Summer ” என்ற பெயரில் 1968 ம் வருடம் வெளி வந்துள்ளது.

Edward Elgar: Cantata – [ Caractaracus ]
எல்கார் இங்கிலாந்தின்இன்னுமொரு புகழ் பெற்ற ஓர் இசைக்கலைஞர். இவரைப்பற்றி எழுதுபவர்கள் அவரது காலத்தில், அவர் வளர்ந்த காலத்து நடைமுறைகளிலிருந்து எவ்வாறு மாறுபட்டிருந்தார் என்றும் குறிப்பாக நிலம் சார்ந்து அல்லது இடம் சார்ந்த உணர்வு மிகுந்தவர் என்பதையும் குறிப்பிடுவர்.

தனது வீட்டிலிருந்து இருமருங்கும் மரங்கள் நிறைந்த ஒழுங்கையில் நடந்து போகும் நேரங்கள் குறித்து எல்கர் பின்வருமாறு எழுதினார். “ The trees are singing my music. Or have I sung theirs? ”

இங்கிலாந்தின் இயற்கை எழில் மிக்க Worcestershire பகுதியில் பிறந்த அவர், தான் வாழ்ந்த அப்பிரதேசத்தை மிகவும் நேசித்தார். இப்பகுதி Malben மலைகளால் புகழ்பெற்றதுடன் Severn என்ற நதியினாலும் புகழ் பெற்றது. இன்று இப்பகுதி சூழலியல் [ Ecological ] சார்ந்த சிறப்புப்பகுதியாகவும் அறிவிக்கப்பட்டு சிறப்பு பெற்றுள்ளது.
அழகுமிக்க இந்த பிரதேசத்தில் பிறந்த எல்கர், கால்நடைப்பயணங்கள், மற்றும் சைக்கிள் பயணங்களை உற்சாகத்துடன் மேற்கொண்டவர். இப்பகுதியின் மலைகளும், இயற்கையும் இவரது இசையின் ஆதாரமாமாக, உந்துதலாக இருந்துள்ளன. அந்தவகையில் வேறு சில இசையமைப்பாளர்களும் இவரின் இசையை சிலர் பின்பற்றினர்.

இயற்கை, நிலம் குறித்து இவர் படைத்த படைப்புகளுக்கு சில உதாரணங்களாகக் கீழ் உள்ளவற்றை இங்கே குறிப்பிடலாம்

1.The Dream of old man Gerontius – [ Edward Elgar ]
2.Elegy For Spring – [ Edward Elgar ]
3.To Spring – [ Edward Elgar ]
4.Peace of the Wood – [ Edward Elgar ]

Gustav Holst [ 1874 – 1934 ]
இவரும் ஓர் ஆங்கில இசையமைப்பாளர்.The Planet என்ற சிம்பொனி உலகப்புகழ் பெற்ற ஒன்றாகும். அது போலவே இவரின் Egdon Heath என்ற இசைவடிவம் நில காட்சிகளின் மர்மத்தினூடாக பயணிப்பது போன்ற உணவைத்த தரும் அற்புதமான படைப்பாகும்.

இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பாவின் தேசிய இன எழுச்சிகளின் மைய அம்சங்களில் ஒன்றான நாடு, நாட்டுப்பற்று மற்றும் இயற்கையோடு ஒன்றிய நுணுக்க இசை பற்றிய சிறப்புகளை, அதுகுறித்த இசைச் சித்தரிப்புகளை வேறு சில ஐரோப்பிய நாடுகளின் இசைக்கலைஞர்களும் உயிரின் இன்னிசையாய் வெளிப்படுத்திருப்பதையும் நாம் காண்கிறோம்.


[ தொடரும் ]

Loading

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *